02. உனது விழியில் எனது காதல்




பேராசிரியர் நடத்தும் பாடம் கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதிய விடாமல் பக்கத்தில் புழு போல் நெளிந்து கொண்டிருக்கும் மஹிமாவை அனல் பார்வை பார்த்தாள் வனிதா.

 “ஏன்டி.. இந்த புழி புழியர? கொஞ்சம் அடக்கி வாசியேன்”

 “என் கவலை எனக்கு தான் தெரியும்... பசி  உயிர் போகுதுடீ.. இப்போ இந்த ஆளு பாடம் நடத்தலனு யார் அழுதா?” என்றவளின் குரல் தான் அழுவது போல்  தோன்றியது.

 “மணிக்கு ஒரு தரம் எதாச்சும் கொறிக்கலைனா உன்னால இருக்க முடியாதே...”

 “ஏன்? சொல்லமாட்ட ரிஷிகா, உன்னை அப்போவே கூப்ட்டேனே நீயும் பேசாம என் கூட வந்திருந்தா இந்த அறுவைல இருந்து தப்பிச்சிருக்கலாமே? ஏன் வர மாட்டேன்னு சொன்ன? இப்போ பாரு இவர் பாடம் நடத்தி முடிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கை படம் முடிஞ்சிடும் போல இருக்கே...” சத்தமில்லாமல் சிரிக்கும் தோழிகளை கோபமாக பார்த்தாள் மஹிமா.

 “சிரிக்காதிங்கடீ... கடவுளே உனக்கு கண்ணே இல்லயா?? எப்படியாச்சும் மணி அடிக்க வச்சு என் வாய்க்கு போஜனம் இட்டு காப்பாத்தேன்!!”

 “உன் வாய்க்கு போஜனம் இடனும்னா கடவுள் கூட ஜர்க் ஆவார்.” 

ஆசிரியரை முறைக்க முடியாத கடுப்பில் தன்னை கேலி செய்த ரிஷிகாவை முறைத்தாள் மஹிமா.

 கடவுளுக்கு இரக்கம் வந்தது கோவில் மணி போல் கல்லூரி மணி ஒலிக்க விடை பெற்ற ஆசிரியரை விட வேகமாய் கேன்டீன் நோக்கி ஓடினாள் மஹிமா. 

பின்னோடே சிரித்து கொண்டே வனிதாவும் ரிஷிகாவும். 
இருவரும் வந்து சேர்வதற்குள் தேவயானவற்றை கடை பரப்பி இருந்தாள் மஹிமா.
 பேசியபடியே உண்டு கொண்டிருந்தனர்  தோழிகள்.
 “ரிஷிகா, வீட்டுல சொல்லிட்டியா? நாளைக்கு க்ளாஸ் இருக்கு அதோட காலேஜ் முடிஞ்சி நாம நேரா அங்க தான் போறோம் மறந்துடாத.”

 “மறக்கலை வனிதா, இன்னக்கி நைட் வீட்டுல சொல்லணும்.” 

“அப்புறம், அட்மிஷன் போடுறதுக்கு அப்பா கூட வந்தே தீருவேன்னு சொன்னதால உன்னை மட்டும் தனியா விட்டோம்.. இல்லனா அன்னக்கே மூணு பேருமா போய் இருக்கலாம்.  அந்த மாறி எதையும் சொல்லி நாளைக்கும் தனியா போய்டலாம்னு வச்ச கொன்றுவேன்... ஆமா”
 விரல் நீட்டி எச்சரித்த மஹிமாவை ஆசையாய் கன்னம் தடவியவள், “மாட்டேன் செல்லம்மா, கண்டிப்பா இந்த கோர்ஸ் முடியும் முழுக்க உங்க கூட தான் வருவேன்... என்னை பத்தி தெரியும்ல.. அப்பாவ நான் சமாளிச்சுப்பேன்” என்றாள்.

 சொல்லியபடியே இரவு உணவின் போது தாய் மீனாவிடமும், தந்தையிடமும் மறு நாளுக்கான தங்கள் திட்டமிடலையும் கூறினாள். 

ரகுராமன் எதோ கூற வாய் எடுக்க... 

“அம்மா, இன்னக்கி சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” 

‘பிடிச்சிருக்கு.. என்ற வார்த்தையில் மகள் அழுத்தம் கொடுத்தாளோ’ என்று ரகுராமனுக்கு தோன்றியது. 

“அப்படியாமா இன்னும் கொஞ்சம் வச்சிக்கோ” என்று அவளின் தட்டில் மேலும் உணவு வைக்க அதையும் திருப்தியாய் உண்டு விட்டு எழுந்து சென்றாள். 

“உங்க மக அப்படியே உங்கள மாதிரிங்க... எப்படி உங்கள பதில் பேச விடாம வாயடைக்க வச்சா பார்த்தீங்களா” என்று கூறினார் மீனா.

 “ நானும் கவனிச்சேன்.. ஒத்த மகள்னு  அவளோடு விருப்பத்துக்கு மாறா எதயும் செய்ய மாட்டேனு ரொம்ப வாலாட்டுறா” சிரிப்போடு ஒலித்தது அவர் குரல். 

Post a Comment

0 Comments