13. உனக்காக நான் இருப்பேன்




 மதன் அனுப்பி இருந்த வசந்த் முகவரியை கேப் டிரைவரிடம் காட்டிவிட்டு மதுவும் கதிரும் சுற்றி இருந்த இயற்கையை ரசிக்க ஆர்மபித்தனர். 


இயற்க்கையின் வனப்பும் குளிர் காற்றின் வாசமும் அருகில் மஞ்சள் சரடு மின்ன கட்டியவளும் கதிருக்குள் பூகம்பம் உண்டாக்க அவன் அவளின் தோளை சுற்றி கைகளை படரவிட்டான். 


அவனின் தொடுதலில் வித்யாசம் உணர அவனை திரும்பி பார்த்தாள். 

அவன் கண்கள் சொன்ன செய்தியில் பெண் இவள் தாமரை கன்னியாய் ஆகிட வெட்கத்தோடு முன் இருக்கை மூன்றாம் நபரை சுட்டினாள். 


அவனும் செல்ல சிரிப்போடு அவளிடம் வம்பு செய்து கொண்டே வர,


“ போதும்  கதிர்” என்றாள் வெட்க சிணுங்கல் கொண்டு. 


சீண்டல் தீண்டல்களுடன் வசந்தின் வீட்டை வந்து அடைந்தனர். 


வாசலில் திடீரென வந்து நின்ற மதுவை கண்டு ஆனந்த அதிர்வு கொண்ட வாணி,


“ மது, எப்டி இருக்க? அட கல்யாணம் ஆகிடுச்சா… வாங்க தம்பி… வா மது” என்று புன்னகையோடு வரவேற்றார்.


“ நல்ல வேலை அத்தை உள்ளே கூப்ட்டீங்க,  எங்க வாசலோட பேசி அனுப்பிடுவீங்களோன்னு பயந்துட்டேன்..”  என்று மது கூற சிரித்தவர்


“ கேடி… கல்யாணம் ஆனாலும் வாய் மட்டும் குறையவே இல்ல. ஆனா வெளிய இவளுக்கு ரொம்ப அமைதியான பொண்ணுன்னு பேரு” என்று கூறினார். 


“ அத்தை, இது கதிர்…” என்று கூறி இடைவெளி விட


“ உன் வெட்கம் சொல்லுதுடா… வணக்கம் தம்பி” என்றவருக்கு பதில் வணக்கம் கூறினான் கதிர். 


“ அத்தை, வசந்த் இல்ல…”  என்று மது கேட்க


ஓர் நொடி மாறிய அவரின் முகம்,

“ உள்ளே இருக்கான்டா… எஸ்டேட்க்கு கிளம்பிட்டு இருக்கான்” என்று அவர் கூறவும் வசந்த் படியில் இறங்கி வரவும் சரியாக இருந்தது. 


“ அட மது… வா.. எப்டி இருக்க? இவரு…”  கதிரை ஒரு நோட்டம் விட்டவன் பின்பு புரிய,


“ ஓஹ், வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்”  என்றான் புன்னகை குறையாமல். 


இருவரும் ஒரு சேர “தேங்க்ஸ்” என்க மதுவிடம் கேட்டான். 


“ எப்டி இருக்க மது?”


“ நல்ல இருக்கேன் வசந்த்” 


“ அப்பா அம்மா எப்டி இருக்காங்க?”


“ ம்ம், நல்ல இருக்காங்க” என்று அவள் அமைதியாக அவனும் மேலும் பேசாமல் அந்த அமைதியை தொடர்ந்தான். 


அந்த அமைதியை உணர்ந்த வாணி மனம் கலங்க அமர்ந்து இருந்தார். 


சிறிது அமைதிக்கு பிறகு மது தான் கேட்டாள். 


“ ஏன் வசந்த்? கடைசி வரை இப்படியே இருந்துட போறீங்களா.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க வேணாமா?” என்று.


ஓர் நொடி வாணியை ஏறிட்டவன், “ என்னோட வாழ்க்கை எப்போவோ முடிஞ்சு போச்சி மது. என் வாழ்க்கையே ஒருத்தி இருந்தா அவ என் மனசை புரிஞ்சுக்காம பாதியிலே விட்டு போனா… அதோட என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு… என் விருப்பம் தான் நிறைவேறல அதுக்காக என் அம்மாவை தண்டிக்குறது தப்புன்னு பட்டுச்சு… அவங்க விருப்பம் கூட நிரந்தரம் ஆகலை. இது தான் எங்களுக்கு விதிக்க பட்டு இருக்குன்னு முடிவு பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு மது. அதனால அதை பத்தி பேசுறது வீண்.” என்று அவன் கூறி முடிக்கவும் வாணியின் கேவல் வெடித்தது. 


எந்த தாயும் தன் மகன் வாயால் கேட்க கூடாத வார்த்தையை அவன் உதிர்க்க அதற்கு முழு முதற் காரணம் அவராகி போன விதியை என்ன சொல்ல? 


அவரின் எண்ணம் மகனின் திருமண வாழ்விற்குள் பயணமாக  அதோடு நாமும் போய் வரலாம். 


              *** 


தனிமையில் அமர்ந்திருந்த வசந்தின் மனதில் ஓராயிரம் கேள்வி. 

'தாயின் விருப்பத்திற்காக திருமணத்திற்கு சம்மதம் சொல்லியாகி விட்டது. 


ஆனால் மனதில் மாலினி நீங்காமல் இருக்க ராகவியோடு எப்படி அவனின் வாழ்க்கை சிறக்கும். அது ராகவிக்கு செய்யும் துரோகம்’ என்று நெடுநேரமாகியும் மனம் தெளியாமல் இருந்தவன் நீண்ட நெடு நேர முடிவில்  


‘ எப்பாடு பட்டேனும் மாலினியை மறக்க முயன்று ராகவியோடு தன் வாழ்வை அமைக்க வகை செய்ய வேண்டும்’ என்ற முடிவில் வந்து நின்றான். 


ஆனால் அவன் அப்போது ஊகிக்கவில்லை. 


அவன் மாறினாலும் ராகவியின் மனம் என்ன வேண்டுகிறது? என்பதை அவன் அறியவில்லை. 


‘மாலினியையும் வசந்த்தையும் பிரிக்கவேண்டும்’ என்று எண்ணி வந்தவளுக்கு வாணி நொடியில் கூறிய செய்தியை எப்படி கையாள வேண்டும் என அப்போது எண்ணமிடவில்லை. 


அவளின் அப்போதைய எண்ணம் எல்லாம்,

‘இது இந்த இருவரின் நிரந்தர பிரிவுக்கு வித்து’ என்று எண்ணிக்கொண்டாள். 


ஆகவே திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு விழும் அந்த இனிய விலங்கை அவள் ஏற்க மறுத்தாள். 


திருமணமான ஒரே மாதத்தில் அவையெல்லாம் அவளுக்கு அலுப்பை கொடுக்க.. 


‘ ஓ காட்.. இப்டி டெய்லி விடிய முன்ன எந்திரிச்சு எல்லாருக்கும் காபி போட்டு… அது காணாதுன்னு காலை டிபன் செய்யணுமா?’


“இப்டி இருக்காதே.. அப்படி நடந்துக்கோ… நைட் கிளப் போய் சுத்திட்டு பிந்திய நேரம் வீட்டுக்கு வராதே… கல்யாணத்துக்கு முன்னாடி நீ அப்டி இப்டி இருக்கலாம். ஆனா கல்யாணம் ஆனா பொண்ணுங்களுக்கு சில கடமைகள் இருக்கு. அதை செய்யத்தான் வேணும். ஒழுங்கா புரிஞ்சு நடந்துக்கோ…” என்று தாயின் நீள பொழிப்புரை வேறு கடுப்பை கிளப்ப 


ஒரு மாதம் பொறுத்து பார்த்தவள் அடுத்த நாளே தனக்காக போடப்பட்டதாய் அவள் எண்ணிய அந்த சிறையில் இருந்து வெளியே வந்தாள். 


முதல் வேலையாக இரவு 11 மணியை தாண்டி வீடு வந்தவளை கேட்ட வாணியின் மேல் பாய்ந்தாள்.


“ என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? நா என் இஷ்டப்படி தான் இருப்பேன். நான் என்ன உங்க அடிமையா?” என்று பேசிக்கொண்டே போக வாணி தான் அதிர்ந்து நின்றார். 


அறையில் இருந்து வெளியே வந்த வசந்த் தாயின் அதிர்முகம் கண்டு ராகவியை அதட்ட அவனிடமும் வார்த்தை போர் முட்டியது. 


‘ சின்னப்பெண் திருந்தி விடுவாள்’ என்று இருவரும் தேற்றி கொண்டிருந்த சமயம் ஒரு நாள் அவள் வந்து நின்றாள். 


உடலை ஒட்டிய மேல் ஆடையும்… முட்டிக்கு மேல் வரை தொட்ட பாவாடையுமாக… அவள் நின்ற கோலம் வாணியை முகம் சுழிக்க செய்ய வசந்த் அவளிடம் குரல் உயர்த்த தொடங்கினான். 


“ ராகவி, என்ன இது கோலம்? இதுலாம் குடும்ப பொண்ணுக்கு அழகில்லை… போய் ட்ரஸ்ஸை மாத்து?” என்று அவன் கர்ஜிக்க அவள் சளைக்காமல் சொன்னாள். 


“ஏன் என் ட்ரஸ்க்கு என்ன குறை? பாக்குற உங்க கண்ல குறைய வச்சிக்கிட்டு சும்மா என்னை அடக்குற வேலை வேணாம்” 


‘ ஒரு பெண் நாகரிக ஆடை உடுத்துவதை தடுக்கும் பத்தாம் பசலி இல்லை அவர்கள்… அந்த ஆடையும் ஆடவர் கண்களை உறுத்தாமல் இருக்க வேண்டும்’ என்று எண்ணுபவர்கள் வசந்த்தும் வாணியும் அப்படி இருக்க ராகவி மேலும் மேலும் பேசும் விதம் அவனை ஆத்திரம் கொள்ள செய்ய அவன்


“ ஒரு பொண்ணு எப்போவுமே தன்னை அந்நிய ஆண் கிட்ட இருந்து காப்பாத்த தான் நினைப்பா… இப்டி என் மேல வந்து மேயுனு சொல்ற மாறி எவளும் நடக்க மாட்டா… அப்டி நடந்துகிட்ட அவளுக்கு பேரே வேற…”


“ பளார்” என்ற அறையை வாணியிடம் இருந்து வாங்கி இருந்தான். 


“ வார்த்தைய கவனமா வெளிவிடனும்… இப்படியா உன்னை வளர்த்தேன்..” என்று. 


தலையை தொங்க போட்டு கொண்டபடி அவன் நகர தன் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள் ராகவி. 

             

நாட்களும் இவர்களோடு சண்டையிட்ட படி நகர  


ஒரு நாள் மது தன் அக்கா வீட்டை பார்க்க வந்திருந்தாள். 


லட்ஷ்மி தான் அனுப்பி வைத்து இருந்தார். 


அவரும் தொடர்ந்து ராகவியிடம் திருமண வாழ்க்கை குறித்த நல்ல தகவலை பெண்ணிடம் மறைமுகமாக கேட்டு பார்த்தார். 


பதில் தான் இல்லை. ஆகவே மதுவை நேரில் அனுப்பி இருந்தார். 


“ வா மது, எப்டி இருக்க?இப்போ தான் எங்க நினைவுலா வருதா என்ன?” வாணி வரவேற்க அதிசயமாய் வீட்டில் இருந்த ராகவியும் அவளை பேருக்கு அழைத்துவிட்டு அறைக்குள் போய் கொண்டாள். 


மதுவும் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை. 'அவளுக்கு தான் தன் சகோதரியை பிறந்த முதலே தெரியுமே’  என்பதால். 


“ நல்ல இருக்கேன் அத்தை…"

எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் வாணியிடம் நன்றாக ஒட்டி கொண்டாள். வசந்திடம் வம்பிலுப்பாள். 


ஏனோ அவனை  'மாமா' என்ற நிலையில் வைக்காமல் அவனை ஒரு அண்ணனாகவே எண்ணி கொண்டாள். அதனால் அவனை மாமா என்று அழைக்காமல் பேர் சொல்லியே அழைப்பாள். 


அவளும் வந்த சில நாட்களில் கண்டு கொண்டாள். அந்த வீட்டின் அசாதாரண சூழ்நிலை.. மேலும் வசந்த் மற்றும் ராகவியின் தனித்தனி படுக்கை அறை. அவளை நெற்றி சுருங்க செய்தது. 

அக்காவின் நடவடிக்கை குறித்து தாயிடம் மறைமுகமாக கூறி இருந்தாள். 


“ அம்மா உன் பொண்ணை… புகுந்த வீட்ல எப்டி நடக்கணுமோ அப்டி நடக்க சொல்லு… ஒரு நல்ல மனுஷனுக்கு பொண்டாடியா நடக்குற வழிய பாக்க சொல்லு… என்னால அவ்ளோ தான் உனக்கு சொல்ல முடியும்… புரிஞ்சு இருக்கும் நம்புறேன்” என்று வைக்கவே அந்த தாயும் தன் மகளுக்கு தேவையான அறிவுரை கூறினார். 


சில நாட்களாகவே தாய் தொல்லை கொடுத்து கொண்டிருப்பதாய் ராகவிக்கு தோன்ற  வந்த கோவம் அப்படியே வசந்தின் மீது திரும்பியது. 


‘இவன் இன்னும் அந்த மாலினியை தான் நினைச்சுட்டு இருக்கான். அதனால தானே என் கூட வாழ தயங்குறதே. ஆனா இந்த அம்மா அதுக்கும் என்னையே குத்தம் சொல்லுது’ என்று அவன் மேல் கருவ அதை எதுவும் உணராத வசந்த்தின் மனம், 


‘ இனியேனும் தன் மனைவியிடம் சண்டையை வளர்க்காமல் அவளோடு இணைந்து வாழ பழகுவோம்’ என்று எண்ணி கொண்டு அதற்கான முதற்கட்டமாக அவளுக்கு ஒரு புடவையை வாங்கி அதை அவளிடம் நேரடியாக கொடுக்க தயங்கி  அறையில் கட்டிலின்  மேல் வைத்துவிட்டு வந்திருந்தான். 


ஆனால் ராகவியின் மனமோ அந்த புடவையின் கலர்… 


அடர்சிவப்பு…  


‘ மாலினியின் விருப்ப கலர்’ என்று அறிய வேகமாக அதை எடுத்து கொண்டு வந்தவள் அவனின் முகத்தின் மேல் வீசினாள். 


ஏற்கனவே அவன் மேல் ஆத்திரத்தில் இருந்தவள் இப்போதோ உச்ச பட்ச கோபத்தில் கத்தி கொண்டிருந்தாள். 


அவளின் எண்ணமெல்லாம் 

‘ அவன் இன்னும் மாலினியை மறக்கவில்லை’ என்றதிலே நிற்க அவனின் சட்டையை கொத்தாக பிடித்து கத்தி கொண்டிருந்தாள். 


“ என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… கட்டிகிட்டது என்னை… ஆனா மனசுல குடும்பம் நடத்துறது வேற எவளோடையுமா?” என்று கத்தினாள். 


“ ராகவி, என்ன பண்ற?” என்று இடையில் புகுந்த மதுவை,


“ இதோ பார், இது என்னோட தனிப்பட்ட விஷயம்… உளவு பாக்குற வேலை எல்லாம் என் கிட்ட வேணாம்… இல்ல நடக்கிறதே வேற?” என்று அவளை பிடித்து தள்ள மது அருகில் இருந்த சோபாவில் போய் விழுந்தாள். 


“ ராகவி, ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ற…” என்று வசந்த் பொறுமையை கடைபிடித்து கேட்க, 


“ சொல்லு… இன்னும் சொல்லு… பைத்தியம் வேற என்ன?” என்று அவள் பொரிய 

நடுவில் வாணி வந்து அமைதி படுத்தினார். 


“ ராகவி, இப்போ என்னமா நடந்து போச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க?” என்று அவர்  கேட்க 

கோபம் தலைக்கேறியவளாய் கத்தி கொண்டிருந்தாள். 


“ எல்லாரும் என்ன என்னையே சொல்லிட்டு இருக்கீங்க… என்னை பார்த்தா எப்டி இருக்கு உங்களுக்கு” என்று அவர் மேலும் பாய்ந்து விட்டு வசந்திடம் திரும்பினாள். 


“ சொல்லு, இன்னும் அந்த வீணா போனவள் கூட தான் கனவுல வாழ்ந்துட்டு இருக்கியா? இல்ல கனவுல மட்டும் இல்லாம நிஜத்துல கூடயுமா? எங்க வச்சிருக்க உன் சின்ன வீட்ட?” என்று அளந்து கொண்டே சென்றவள் இடியென அடியை கன்னத்தில் வாங்கி வாய் மூடி அதிர்ந்து நின்றாள். 


“ வசந்த்….” என்ற வாணி போட்ட அதட்டலில் மேலும் அவள் மேல் பாய போனவன் மட்டுப்பட்டான். 


அப்படியே அமர்ந்து  தலையை பிடித்து கொண்டவன் மனதில் அவன் மறக்க துடிக்கும் மாலினியின் முகம்…. 


அவன் அடித்த அடியுடன் நின்று கொண்டிருந்த ராகவி விடுவிடுவென வெளியேறினாள்.


Post a Comment

0 Comments