08. உனக்காக நான் இருப்பேன்

 





“ஹாய் ஆன்ட்டி”


பின்னால் கேட்ட குரலில் திரும்பினார் வாணி.


மீண்டும் ராகவி,

“ஹாய் ஆன்ட்டி, நீங்க வசந்த் அம்மா தானே?”


அவரும் சிரித்து கொண்டே,

“ஆமா மா, நீ?” என்க


“ நானு அதே காலேஜ் தான் ஆன்ட்டி. வசந்த் எங்களோட சீனியர்” 


“அப்டியா? சரிமா”என்றபடி அவர் சுற்ற தொடங்க கூடவே ராகவியும் சென்றாள். 


நீண்ட நேரம் கழித்து வாணி அந்த கோவிலை சுற்றி வரும் முன் அவரோடு ஒன்றி இருந்தாள் ராகவி. 


“ வசந்த் அப்டியே உங்கள மாறி இல்ல ஆன்ட்டி?” 


“ இல்லமா, அவன் அப்பா மாதிரி” என்று கூறினார்.


“ ஓஹ், அங்கிள் மாதிரியா…. அங்கிள் இப்போ..இல்லன்னு…” 


அவள் கூறும் போதே வாணி முகம் வாட ‘ஆம்’ என்று தலையாட்டினார்.


“ உங்களுக்கு வசந்த் ஒரே பையனா ஆன்ட்டி” 


“ ஆமாமா”


இருவரும் என்ன என்னவோ பேசியபடி விடை பெற்றனர்.


“ சரி ஆன்ட்டி… நான் கிளம்புறேன். பாக்கலாம்” என்று ராகவி விடைபெற்று கிளம்ப அவரும் புன்னகைத்து கொண்டே

‘ சரி’ என்று தலையாட்டினார்.


தொலைவில் இருந்த மேக்னா உடன் இணைந்து கொண்டாள் ராகவி.


“ ராகவி, நீயா அது? என்னால நம்ப முடியல.  என்னா நடிப்புடா சாமி??” 

மேக்னாவின் மெச்சுதலில் ஒரு கர்வ சிரிப்பை சிந்தினாள்.


அவளின் மனம், 

‘ என் இலக்கை சீக்கிரம் அடைவேன்’ என்று கூறி கொண்டது. 


அந்த வார இறுதியில் வாணியை ஒரு பூங்காவில் சந்தித்தாள் ராகவி. 


“ஹாய் ஆன்ட்டி வாட் அ சர்ப்ரைஸ்?? நீங்க இங்க… உங்க வீடு இங்கேயா இருக்கு?” 

ஒன்றும் அறியாதவளாய் அவள் கேட்க

வாணி சிரித்து கொண்டே,


“ ஆமா ராகவி… இங்க பக்கத்துல தான். தனியா வீட்ல இருக்க போர் அடிச்சுது… அதான் பக்கத்து வீட்டு பசங்களோட இங்க வந்தேன்.” என்றார். 


‘ கடவுளே, இந்த அம்மாவை கைக்குள்ள போட என்னலாம் பண்ணணுமோ?’ என்று எண்ணியபடி வந்திருந்த குழந்தைகளை கொஞ்சினாள். 


“ உங்களுக்கு தெரியுமா ஆன்ட்டி? எனக்கு பசங்கனா அவ்ளோ இஷ்டம்” 


“ குழந்தைங்களை பிடிக்காதவங்க உண்டா??” என்று அவர் வெள்ளந்தியாய் கூறினார். 


ஆனால் அவரிடம் யார் சொல்ல??

வீட்டிற்கு உறவினர்கள் குழந்தைகள் வந்தாலே சிடுசிடுக்க செய்பவள் இவள் என்று.


பேசி கொண்டே சாலையின் எதிர்புறம் பார்த்தவள் கண்ணில் மாலினி பட்டாள். 

மனம் ஏனோ கறுவியது. 


அவளின் பார்வை சென்ற திக்கை கண்ட வாணியும் மாலினியை பார்க்க

அவள் எவனோ ஒருவனின் தோளை பிடித்து கொண்டபடி ரோட்டை கடந்து போய் கொண்டிருந்தாள். 


அதை கண்ட அந்த பெரியவர் மனம் அந்த சமயம் தப்பாய் கணக்கு போட்டது. 


“ ச்ச, இந்த காலத்து பொண்ணுங்க ஏன்தான் இப்டி இருக்காங்களோ? பாரு ஒரு பையன் கூட இவ்ளோ நெருக்கமா… அதுவும் ரோட்ல… இவள பெத்தவங்க பார்த்தா மனசு கஷ்டப்பட மாட்டாங்க?” என்று சொல்ல


அதை சரியாக உபயோகப்படுத்தி கொண்டாள் ராகவி. 


“ அவ அப்டி தான் ஆன்ட்டி… கொஞ்சம் வசதியான பசங்கள பாத்துட்டா போதும்… பின்னாடியே நாக்கை தொங்க போட்டுட்டு போவா?” என்று கூறினாள். 


அதை கேட்ட வாணியின் முகம் அருவருப்பாக,


“ உனக்கு இந்த பெண்ணை தெரியுமா ராகவி?” என்றார். 


“ எங்க காலேஜ் தான் ஆன்ட்டி… எனக்கு இவள சுத்தமா பிடிக்காது” என்று கூற 


ஏனோ அந்த   பெண்ணை பிடிக்காது என்று கூறியதாலோ ஏனோ அந்த நொடி ராகவியை அவருக்கு பிடித்து போனது. 


பாவம் அவர் கண்ணில் காமாலை என்பதை அவர் அறியவில்லை. 


அதனாலேயே அவருக்கு மாலினியின் அந்த,

ரோட்டில் நடக்க முடியாமல் தடுமாறி விழ போனவன் கையை தாங்கி பிடித்து அவனை ரோடு கடத்தி விட்டது’ மஞ்சளாகி போனது.




Post a Comment

0 Comments