பூவும் நானும் வேறு




 




அந்த இதமான காலை பொழுது சூரியனின் கதிர்கள் முகத்தில் வீச மெல்ல திறந்த மலரின் விழிகள் கூச்சத்தில் லேசான பட்டாம்பூச்சியாக சிறகடித்தது. 

கலைந்த ஓவியமாக எழுந்து சோம்பல் முறித்தவள் அன்றைய தினசரிகளை கவனிக்க தொடங்கினாள்.

அடுத்த இருபது நிமிடங்கள் அவளின் கடிகாரத்தில் சக்கரமாய் சுழல வேகமாக வேலைக்கு தயாராகி கையில் மதிய உணவு கூடை சகிதம் பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருக்கும் தன் தோழியிடம் கூறிவிட்டு 

காற்றோடு கலக்கும் சிறு தென்றலாக

  அந்த காலை வேலை பரபரப்புடன் ஓடி கொண்டிருக்கும் சாலையின் மக்கள் நெரிசலில் தன் ஆக்டிவாவையும் செலுத்தினாள். 

இனி இதே சத்தம் மற்றும் தூசியோடு இடைப்படும் நெரிசலில் சிக்கி  வளைவில் வளைந்து ஒடிந்து நுழைந்து என  அவள் பணிபுரியும் சூப்பர் மார்க்கெட் வந்து சேர அடுத்த அரைமணி நேரம் பிடிக்கும். 

***

 "ஏய் எல்லாரும் எந்திரிச்சாச்சா? இன்னும் யாரெல்லாம் எழுந்திரிக்கல… கொஞ்ச நேரத்துல  ப்ரேயர் ஹால் கூடிடும்… யாராவது தப்பிக்க நினைச்சீங்க!! தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்ருவேன்… ஜாக்கிரதை… அடியே எவடி அவ? இந்தாடி  147ம் நம்பர்  உனக்கு தனியா கிடந்து கத்தணுமா? எந்திரி… எந்திரிச்சு போய் ரெடியாகு… நைட்டெல்லாம் கிடந்து அரட்ட அடிக்க வேண்டியது… பகல்ல நம்ம உசுர எடுக்க வேண்டியது… நீங்க பண்றதுக்கெல்லாம் அந்த அம்மாட்ட நான் திட்டு வாங்க வேண்டி இருக்கு…" 

காலையில் வழக்கமாக பாடும் ராகத்தை பாடியபடி 

தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் மேலும் போர்வைக்குள் தலையை விட்டு தூங்கும் ஒவ்வொருவரையும் கையில் இருக்கும் மூங்கில் பிரம்பால் தட்டி எழுப்பிய படி நடந்து கொண்டிருந்தார் அந்த ஆசிரமத்தின் செவிலி. அவர் குறிப்பிட்ட அந்த 147ம் நம்பரும் எட்டு வயது சிறுமியுமானவள் எழுந்து படுக்கையில் சோம்பலை முறித்து கொண்டாள். 

வழக்கம் போல இரு கையையும் கூப்பி இறைவனை தொழுதவள்  அதே கைகளை முகத்தில்  தேய்த்து கொண்டு ப்ரேயர் ஹாலுக்கு செல்ல தயாராகினாள்.  அந்த வெட்ட வெயிலில் சுடும் மணலில் முப்பது நிமிடங்கள் கால் பதிய காலை உண்ணும் இட்லியின் கடுமையும் காற்றில் வேர்வையாக வெளியேற அசராமல்  நின்று அவர்களின் அறிவுரைகளை கேட்டு கொள்ள வேண்டும். 

அதிலும் தவறாது யாரேனும் ஒருவர் மயக்கம் போட்டு விழ அவர்களை மரங்களின் நிழலில் அமர வைத்து கேட்க சொல்லுவர். இதற்கு வேண்டியே 'தனக்கும் மயக்கம் வராதா?'  என்று பலரும் எண்ணி கொண்டிருக்க 

சிலரும் மெய்யோ பொய்யோ என எண்ணும் அளவிற்கு மயங்கி சரிய 

வழக்கம் போல அந்த பெரிய அம்மாள் செவிலியிடம்இ 

"குழந்தைங்க ஒழுங்கா சாப்டாங்களானு கவனிக்காம என்ன பண்ணுறீங்க?" என்று அதற்கும் அவரை சாடிவிட்டு ப்ரேயரை முடித்து கொண்டு செல்வார். 

 இனி அந்த செவிலியும் மொத்த கூட்டத்தையும் வாயில் வந்தபடி திட்டி தீர்க்க ஒவ்வொருவரும் அவர் தம் அறைக்குள் சென்று ஒளிந்து கொள்ளுவர். 

அவர் கண்ணில் மாட்டிக்கொண்டால் 'இனி இந்த நாள் முழுக்க நம்மையே வச்சு செய்வார்' என்பதால் தங்களின் கைத்தொழில் பொருட்கள் செய்யும் பகுதிக்குள் புகுந்து மறைந்து கொண்டாள் 147 ம் நம்பர். 

***


மனம் வருடும் குளிர் காற்றுடன் முந்தைய நாளில் பெய்த மழையின் மண் வாசனையும் சேர்ந்து கொள்ள படுக்கையில் இருந்து எழவே மனம் வரவில்லை அவளுக்கு. 

"ஏய் பார்பி லேட் ஆகுது பாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் வேன் வந்துடும்…" 

சோம்பல் முறித்து மேலும் படுத்து கொண்டவளை அவளின் தாய் வேணி எழுப்ப

" ம்மா ப்ளீஸ்… இன்னும் கொஞ்ச நேரம்… நான் இன்னிக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போறேனே?" என்று கொஞ்சி கேட்க 

அவளின் கொஞ்சலில் மனம் கரைந்தாலும் விடாமல்

"எப்போ பாரு இதே சொல்ல வேண்டியது… அப்பா வேலைக்கு போவாங்களா இல்லை உன்னை கொண்டு ஸ்கூல்ல விடுவாங்களா? நீ இப்டி தினமும் அப்பா கூட போக எதுக்கு தெண்டமா வேன் ஃபீஸ் கட்டணும்… அதனால நீ இன்னிக்கு ஸ்கூல் வேன்ல தான் போற…"  என்று கூறிவிட்டு அவர் செல்ல அந்த செல்ல மகள் தந்தையை கட்டிக்கொண்டாள். 

" அப்பா அப்பா… என் செல்லம்ல… நான் உங்க கூடவே வரேனே…" இன்னும் சில பல கொஞ்சல்கள் பின் 

தவமிருந்து பெற்ற ஒரே செல்வ மகள்  பேச்சுக்கு மறு பேச்சு தான் உண்டா…

துள்ளியோடும் மானாய் பள்ளிக்கு தயாராகி வந்தாள் பார்பி. 


***


மலர் அந்த சூப்பர் மார்க்கெட் உள்ளே நுழையும் போதே எதிர்ப்பட்ட சீதாஇ

"உன்னை மேனேஜர் வர சொன்னார்" என்று கூறிவிட்டு செல்ல இவளுக்கு உள்ளுக்குள் தீயாய் கோபம் பொங்கியது. 

வயது வித்தியாசம் கூட பாராமல் அந்த பெரிய மனிதன் இவளிடம் செய்யும் சில்மிஷம். 

'ஏதோ போக்கிடமே இல்லாத எனக்கு வாழ்வு கொடுக்க போகும் பெரு வள்ளல்' என்ற தொனியில்  கொஞ்ச நாளாக அவன் கொடுக்கும் தொல்லைகள் எல்லை மீற 

'போயா… நீயும் வேண்டாம்… உன் வேலையும் வேண்டாம்…  என்று அவன் முகத்தில் காறி உமிழும் வேகம் வெடிக்க அதை உடனே செய்து அடுத்த வேளை உணவுக்கு அவள் என்ன செய்வது?

அதனாலேயே அமைதியாக வேறு இடத்தில் வேலை தேடி கொண்டிருக்க வாய்ப்பு அமையும் போது சுமூகமாக கூறிவிட்டு வெளியேறலாம்' என்று திட்டமிட்டு கொண்டு இருக்கிறாள். 

இது தெரியாமல் எதிர்ப்பட்ட சீதாவோ இவளின் முதுகிற்கு பின்இ

" எல்லாம் கண்டிக்க ஆளில்லைன்ற மெத்தனம்… அப்பாவோ அம்மாவோ இல்ல கூட பிறந்ததுங்க இருந்தாலோ இவ இப்டி அந்த ஆளை கட்டி அழுறதுக்கு முதுகுலயே நாலு போட்டு வீட்ல அடக்கி வச்சு இருக்க மாட்டாங்க…" என்று கூறி செல்ல 

அவள் சொல்லி சென்ற வார்த்தையின் வீரியத்தில் மனம் தைத்தாலும்

எதிர்பேச முடியாமல் செய்த விதியை நொந்த வண்ணம் கடந்து சென்றாள். 

இவளுக்கு இந்த மாதிரி பேச்சுகளும் ஏச்சுகளும் ஏன் மேனேஜர் போன்ற சில கம்பளி பூச்சிகளின் இம்சைகளும் புதிதில்லையே… 


***


அந்த ஆசிரமத்தில் மட்டும் பிரத்யேகமாக செய்யப்படும் பொருட்கள். சிறு குறு தொழிலர்கள் வீடு வீடாக சென்று விற்கும் மெழுகுவர்த்தி ஊதுபத்தி வாசனை பொருட்கள் செய்யும் பிரிவில் ஒவ்வொரு மெழுகுவர்த்தியாக சரிபார்த்து அவற்றை ஒரு அட்டை பெட்டியில் அடுக்கி ஸ்டிக்கர் ஒட்டி மொத்தமாக சேர்த்து பெரிய அளவு பெட்டியில் வைத்து அடக்க வேண்டும்.. 

அந்த வேலையை தான் செய்து கொண்டு இருந்தாள் 147ம் நம்பர். 

அன்றைய நாள் முழுக்க அந்த அறையிலேயே கழிக்க இடையில் சிறிது நேரம் உணவு இடைவேளை.. 

மேற்பார்வையாளர் சொன்ன படி சீக்கிரமே பெட்டிகளை அடுக்கி வைத்தால் மட்டுமே கொஞ்ச நேரம் விளையாட அனுமதி. அதனாலேயே அந்த இளம் மொட்டுகள் வேகவேகமாக வேலையை முடித்து கொண்டு வந்து நிற்க அதன் பின் கிடைக்கும் விளையாட்டு இடைவெளியில் வேகமாக வேலை செய்த களைப்பில்  ஓய்வு எடுக்க மட்டுமே முடியும். இதற்கு அவர்கள் மெதுவாகவே வேலையை செய்து இருக்கலாம் என்ற  ஞானோதயம் பிறக்கும். 

ஆனால் கிடைக்கும் அந்த சிறு இடைவேளையில் தனியே அமர்ந்து தனிமையை தன்னோடு அழைத்து மனதில் ஆயிரம் கதை பேசி கொண்டு இருப்பாள் அவள். 

சில நேரங்களில் அவள் விழி உதிர்க்கும் கண்ணீரை துடைக்க தான் ஒரு கரமும்  வராது அங்கு. 

'ஏன் இந்த நிலை எனக்கு இறைவா?' வழக்கம் போலவே தானே தன் கண்ணீரை துடைத்து கொண்டு தனக்குள் கேட்டுக் கொண்டும் இருப்பாள். 

அதற்குள் மேலாளர் அழைக்க அவசரமாக அங்கு ஓடுவாள்.


***

இவ்வுலகில் இந்த நொடி சந்தோசமாக இருப்பவள் யார் என்று கேட்டால் அவளை தான் காட்ட வேண்டும். 

காண்போர் கண்ணுக்கு அழகு மயிலாட தோன்றும் 

அது போல துள்ளி குதித்து பள்ளிக்குள் வந்து கொண்டிருந்தவளிடம்

"ஏய் பார்பி டூர் போறது பத்தி வீட்ல சொல்லிட்டியா? என்ன சொன்னாங்க? ஓகே தான…" என்று தோழி கேட்க

"அப்பாகிட்ட நேத்தே சொல்லிட்டேன்... சரி சொல்லிட்டாங்க… நான் கேட்டு மாட்டேன்னு சொல்லுவாங்களா? அது மட்டும் இல்ல… டூர்க்கு போட்டு போக நல்லதா நாலு ட்ரெஸ் எடுக்கணும். அதுக்கு இன்னிக்கு ஈவ்னிங் ஷோ ரூம் போறேன்" என்று கூறி சிரித்தாள் பார்பி. 

தோழியிடம் சொன்ன படியே அன்று மாலை அப்பாவோடு ரெடிமேட் ஷோரூம் சென்றாள். 


***


"இந்த வாரம் வர வேண்டிய துணியெல்லாம் வந்துடுச்சு… பசங்களா!! சண்ட போட்டுக்காம போய் எடுத்துக்கோங்க.." செவிலி கூற  தேனீக்கள் போல பறந்து சென்று குமித்து கிடக்கும்  குவியலில் இருந்து பொறுக்கி எடுத்தனர் சிறுவர்கள்.

"இந்தா போன வாரமே… நீ போட்டு இருந்த நைட்டி ரொம்ப இத்து போச்சு சொன்னியே? உனக்காக தான் எடுத்தேன்.." 

147ம் நம்பரின் அருகில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த துணியை கொடுத்தாள் மற்றொரு சிறுமி. இது தான் இவர்களின் வாடிக்கை. தனக்கு வேண்டிய அத்தியாவசிய பொருளை சொல்லி வைக்க அது யார் கண்ணில் பட்டாலும் அவர்களுக்கு கொடுத்திட வேண்டும் என்ற நல் எண்ண உடன்படிக்கை. அதன் படி தனக்கு கிடைத்த துணியை பத்திரப்படுத்தி கொண்டாள் அந்த சிறுமி. 


***


அந்த ரெடிமேட் ஷோரூமில் பெண்களுக்கான பகுதியில் தோழியோடு நுழைந்தாள் மலர்.

புதிய இடத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் தன்னிடம் இருப்பவை போக சில சுடிதார்கள் வாங்க வந்து இருந்தாள். 

தனக்கு தேவையானவற்றை அவள் எடுத்து கொண்டிருக்க அருகில் நின்ற பெண்மணிஇ

"ஏய் பார்பி அங்கேயும் இங்கேயும் ஓடாம ஒழுங்கா ஒரு இடத்துல நில்லு.." என்று குரல் கொடுக்க இவள் ஆவலாக திரும்பினாள். 

யாரையோ தேடிய அவள் மனம் யாருமில்லாமல் போக முகம் வாட நின்றவளை அருகில் இருப்பவள் தோள் தொட்டு விசாரித்தாள்.

"ஒன்னுமில்ல யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான்…" என்று கூறிவிட்டு தன் துணிகளில் பார்வையை விட்டாள். 

"உன்னை யார் கூப்பிட போறாங்க?" என்று பதில் கூறிவிட்டு அவளும் திரும்பி கொள்ள 

'அதானே என்னை யார் கூப்பிட போறாங்க.. எனக்கு யார் இருக்கா? அதுவும் பார்பின்னு கூப்டுறவங்க எப்போவோ என்னை விட்டு போயிட்டாங்களே..' என்று  தனக்குள் கூறி கொண்டு விழி சிந்திய நீரை துடைத்து கொண்டாள். 

"ஏய் 147 இதுக்கெல்லாம் அழுவாங்களா? நான் ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்.." அவளின் அழுகையை பார்த்து தன் தவறை உணர்ந்து அருகில் நின்றவள் கூற 

மெல்ல தான் இருக்கும் சூழல் உணர்ந்த பார்பி 

"ச்ச ச்ச உன் மேல எந்த தப்பும் இல்ல.. எனக்கு தான் அப்பாம்மா நியாபகம் வந்துருச்சு.." என்று கூறினாள். 

அவளின் நிலையை உணர்ந்த தோழியிவள் ஆதுரமாய் அவளின் தோள் அணைத்தாள். 

என்ன தான் இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டாலும் 

வீட்டிற்கு வந்து தோட்டத்தில் அடைந்து கொண்டவள் மனம் ஏனோ தாய் தந்தையை தேடி அலைந்தது. 

பள்ளியோடு டூர் செல்லும் போது தான் கடைசியாக அம்மாவையும் அப்பாவையும் சிரித்த முகமாக ஒரு சேர பார்த்தது. 

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்கும் போது  அருகில் இருந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. 

அது மெல்ல ஆலையை ஒட்டிய இவர்களின் வீட்டின் பின் புறம் பரவ அங்கு நின்று கொண்டிருந்த மலரின் தாய் மேல் விழுந்தது. 

சத்தம் கேட்டு ஓடிவந்த மலரின் தந்தை செய்வதறியாது திகைத்து அவரை நோக்கி ஓட அவர் மேலும் சூறை காற்றாக சுருண்டு அடித்தது. 

கண் இமைக்கும் நொடியில் இவை எல்லாம் நடந்து முடிய டூரில் இருந்து பாதியிலேயே வரவைக்கப்பட்ட மலர் புரியாமல் விழித்து பின் தாயையும் தந்தையும் கட்டி அழுதாள்.

அதன் பின்  நெருங்கிய உறவினர் சிலர் இருவருக்கும் இறுதி சடங்குகளை செய்து முடித்து கொண்டு அப்படியே ஒதுங்கி கொண்டனர். 

'எங்கே இந்த சிறு பிள்ளையின் சுமை தன் தோளில் சுமத்தப்படுமோ?'  என்ற ஐயம். 

அதிலும் சில நல்ல உள்ளங்கள் தான் அவளை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு சென்றது. 

அந்த வயதில் அதுவரை கண்டிராத கேட்டிராத அனுபவித்திராத மொத்த சோகங்களையும் அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. இரவின் பல சமயங்களில் தாயை தேடி அவரின் அணைப்பை தேடி பதறி விழிக்கும் மலரை இப்போது உடன் இருக்கும் தோழி தான் தேற்றுவது. 

ஒவ்வொரு நாளும் அன்றைய பொழுதில் தனிமையில் தன் தாய் தந்தையோடு பேசுவதாக எண்ணி கொண்டு அழுது கண்ணீர் வடித்து என அவள் கடந்த பக்கங்களை திரும்பி ஒரு முறை பார்க்கவும் முடியாது.

அவளை பொறுத்த மட்டிலும் அவள் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறந்த நாட்களோடு அவள் வாழ்க்கை முடிந்து விட்டது. அதற்கு பிறகு கிடைத்த ஆசிரம வாழ்க்கையும் ஓர் அளவிற்கு தான். வளர்ந்த குழந்தைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் அவரே அவரின் தேவையை பார்த்து கொண்டு செல்ல வேண்டும். 

குறிப்பிட்ட காலத்தில் அவளிடம் கூறப்பட மலரும் வளர்ந்து தனியாக வர உடன் வந்தவள் தான் இந்த தோழி. 

தனியே வாழ்ந்து வருபவர்கள் மீது விழும் தப்பர்த்த பார்வையையும் கடந்து என மலரின் கஷ்ட காலம் தொட்டு கை கோர்த்து வருபவள் இந்த தோழி. 

 ***

அவள் மனம் சத்தமில்லாமல் அந்த பாடலை முணுமுணுத்தது.


பூமியிலே மீண்டும் வந்து

புன்னகைக்க வாய்க்குமா?

நான் தொலைத்த நாட்களெல்லாம்

மறுபடியும் மலருமா? 

எந்தன் உள்ளம் ஏங்குதே!

தந்தை தாயை தேடுதே!

வலிகள் கூடுதே..

துள்ளி திரிந்த காலங்கள்

பள்ளி சென்ற நேரங்கள்

நெஞ்சம் கேட்குதே???


அவளின் உணர்வை பிரதிபலிக்கும் பாடலாகவே இருந்தது.

தன் உணர்வில் இருந்து மீண்டவள் கண் முன்  நாளைய விடியல் பொழுதில் விரிய காத்திருக்கும்  பூ மொட்டுப் பட்டது. 

பூக்கும் பூவிற்கு அதன் சேர்விடம் மணவறைக்கா? இல்லை பிணவறைக்கா? என்பது தெரியாது என்பார்கள் 

அதே போல தானோ தன் வாழ்வும்.. 

வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் அள்ளி தந்த விதி நொடியில் அவற்றை பறித்து கொண்டு விட்டதே… 

என் விதியை கணக்கிட்டு கூறுவார் ஒருவரும் இல்லையே… 

ஓர் நாள் பொழுதேனும் வாழும் பூவின் வாழ்க்கை  அதற்கு சந்தோஷத்தை கொடுத்திடும். 

ஆனால் எனக்கு??? 

'பூவும் நானும் வேறு.'


***


Post a Comment

0 Comments