நீண்ட தார் சாலையின் இருபுறமும் பச்சை புல்ச்செடிகள் பரந்து விரிந்து பார்ப்போரை பரவசப்படுத்தும்.
எழுந்து நிற்கும் மதில் சுவரின் மேலே அலைகளை போல வரைந்த ஓவியம் பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த அலை சித்திர சுவற்றின் நடுவே இருந்த பெரிய பலகையில்,
“Vithyen Primary – Matriculation and Higher Secondary School” என்று பொறிக்க பட்டிருந்தது.
இரு நீண்ட சுவற்றிற்கும் நடுவே பிரம்மாண்ட வாயிற்கதவு திறந்திருக்க
ஒரு மெல்லிய பாதம் அந்த பள்ளியுனுள் அடியெடுத்து வைத்தது.
அவளை வரவேற்பது போலவே பூங்காற்றும் இதமாய் வீசியது.
அதன் சிலிர்ப்பில் காற்றோடு சேர பறந்த சேலையின் தலைப்பை தன்னோடு இறுக்கி கொண்டாள் அவள்..
பெண்ணிவளின் பெயரோ சுற்றும் சூழ்நிலைக்கு பொருந்தி போகும் வசந்த நிலாவாகும்.
அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசந்தம் எப்போதும் அவளிடம் கொழித்து செழிக்கும்.
மாந்தரை ரசிக்க வைக்கும் நிலவினை போல ஓர் முறையேனும் பார்ப்போரின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பாள்.
M.A educational leadership படித்து விட்டு அவளின் கனவான அமெரிக்க பல்கலை கழகத்தில் வேலைக்கு பதிவு பண்ணி இருப்பவள்.
எஞ்சி இருக்கும் நாட்களை கழிக்க சொந்த ஊரான புதுக்கோட்டை வந்திருப்பவள்.
இன்று ஏனோ அவள் படித்து சென்ற பள்ளியை பார்க்க வேண்டும் போல எண்ணம்.
ஆக மறுகணம் இங்கு வந்திருந்தாள்.
விடுமுறை தினமாதலால் பள்ளியே ஆள் அரவமின்றி வெறிச்சென கிடக்க ஒற்றை பெண் இவள் மெல்ல நடை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
இது போன்ற சுகந்ததை தனிமையில் அனுபவிப்பதே தனி சுகமல்லவோ…
பள்ளிக்காலம்…
எல்லாருமே ஒரு முறை மீண்டும் செல்ல வேண்டும் என எண்ணி ஏங்கும் பருவம் இல்லையா??
அங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியும் நமக்குள் நீங்கா ஒரு தடத்தை ஏற்படுத்தி இருக்கும்..
‘ஏன்தான் படித்து முடித்தோம்?’ என்று ஒவ்வொரு முறையும் நாம் எண்ணாமல் இருப்பதில்லை.
என்றேனும் ஒருநாள் நாமும் நம் பள்ளிக்கு சென்றோமானால் அங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் நம்மோடு ஆயிரம் கதை பேசும் காவியமாய் அல்லவா??
நீண்டிருக்கும் வராண்டா நாம் நின்று கதை பேசும் காட்சியை கண் முன் கொண்டு வரும்..
நம் வகுப்பறையிலோ நமக்கே நமக்கென பட்டயம் போட்டு தந்த மேசையும் நம்மை ஆசையாக அழைக்கும்.
நீண்டு செல்லும் நெடு மரமும் நாம் தினம் ஊற்றி சென்ற தண்ணீருக்கு பகரமாக குளிர் காற்றை அள்ளி வீசும்..
“ஏய் வசீ… நில்லு….”
என்ற குரல் வர திரும்பி பார்த்த வசந்தியின் பிரமையில்
குட்டி வசந்தியை அவளின் தோழி துரத்தும் காட்சி.
“வசீ… ஏய் வசீ… நில்லு…” என்று குரலை காதில் வாங்காமல் ஓடி சென்றவள் அங்கிருந்த பச்சை வண்ணம் பூசிய பெஞ்சில் போய் அமர்ந்தாள்.
ஓடிய களைப்போடு நெடிய மூச்சுக்கள் வெளியேற துரத்தி வந்தவள் அமர்ந்தவாறே அவளை அடித்து துவைத்தாள்.
“எருமை எவ்ளோ தடவ சொல்லிருக்கேன்… இப்டி ஓடி வராதனு கேக்கவே மாட்டியா? அப்டி என்ன இந்த பெஞ்சு மேல உனக்கு உசுரு… யாரும் வந்து கொத்திடவா போறாங்க…?”
“இல்லையா பின்ன… மணிய பாரு லஞ்ச் விட்டாச்சு நாம மட்டும் ஸ்பீடா வரலைன்னா இந்த இடம் போயிருக்கும்” கண்ணடித்து கூறிவிட்டு தன் கேரியர் பாக்ஸை திறந்து சாப்பிட தொடங்கினாள்.
அந்த இடம் ஏனோ வசீக்கு மிகவும் பிடித்தமானது.
அவள் படிக்கும் சமயமாகட்டும் கொறிக்கும் சமயமாகட்டும் சந்தோஷத்தில் திளைக்கும் சமயமாகட்டும் அழுகையில் மூழ்கும் சமயமாகட்டும் இந்த இடமே அவளுக்கு எல்லாமும்.
நினைவில் இருந்து மீண்ட வசீயின் கண்கள் இரு துளி நீரை சிந்தியது.
ஆசையாய் அந்த இடத்தை தேடிட விரைந்து சென்று
அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள். பின்னால் துரத்தி வரத்தான் தோழியை காணவில்லை.
ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்தியது அவளுக்கு.
உண்மையில் இது எல்லாருக்கும் உண்டாகும் வலி தானே…
ஒரே ஒரு முறையாவது தன் பள்ளி கால நினைவுக்குள் செல்ல தானே துடிப்போம்.
அவளுக்கும் அப்படி தான்.
சுற்றி தன் பள்ளியை பார்க்க அது முற்றிலும் புதியதாக தோன்றியது.
நேற்று பிறந்து பார்த்த குழந்தை இன்று கண் முன் வளர்ந்து நிற்கும் போது தெரியும் ஆயிரம் வித்தியாசம் போல் இருந்தது காணும் காட்சி.
இந்த பச்சை பெஞ்சில் இருந்து பத்தடி தொலைவில் அதோ அந்த பெரிய மரத்தின் அடியில் தான் பத்து மேசைகளை அடுக்கி ஒரு சிறு கேன்டினாக இருக்கும் அப்போதெல்லாம்.
ஆனால் இன்று…
அந்த மரத்தை சுற்றி பெரிய அளவில் கட்டப்பட்டிருக்கிறது கேன்டின்.
பார்க்க உண்மையில் பிரமிப்பு.
படிக்கும் போது வகுப்பறையில் இருந்த நாட்களை விட கேன்டீனை ஒட்டி இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தில் இருந்த நாட்களே அதிகம்.
அவர்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம் பள்ளியின் பரப்பளவை விட இரண்டு மடங்கு.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இங்கு தான் ஜெகஜோதியாக நடக்கும்.
இப்போது அதில் கால் பகுதியில் கிண்டர் கார்டன் பசங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
“பள்ளி பொறுப்பு இப்போ விஜயன் சார் மகன் கையில போயிடுச்சு.. அவர் வந்ததுக்கு அப்புறம் ஸ்கூலே தலைகீழா மாறிட்டுனா பாத்துக்கோயன்…”
ஒரு சில தெரிந்த முகங்கள் மட்டுமே இருக்கும் வாட்சப் குழுவில் அவளுக்கு தெரிவிக்க பட்ட தகவல்…
‘உண்மையிலேயே அவருக்கு ரசனை அதிகம் போல’ மனதிற்குள் மெச்சிக் கொண்டாள்.
ஒவ்வொரு பகுதியையும் ரசனையோடு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள் பின்னால் கேட்ட காலடி ஓசையில் திரும்பினாள்.
செல்வம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.
“சார் எப்படி இருக்கீங்க?”
“அட வசீ, நீயா? நானும் யாரோ புது ஆள் வந்திருக்கேன்னு பார்க்க வந்தேன்? நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கமா? எப்ப ஊர்ல இருந்து வந்த?”
“நல்லா இருக்கேன் சார் நேத்து தான் வந்தேன்”
“நல்லதுமா எப்ப வேலையில ஜாயின் பண்ணனும்?”
செல்வம் வசீயின் தந்தை சரவணனின் நெருங்கிய நண்பரும் கூட.
“இன்னும் 10 மந்த்ஸ் இருக்கு சார்… வீட்ல நேரம் போகல.. அதான் ஸ்கூலுக்கு வந்தேன்… நம்ம ஸ்கூல் முன்ன மாதிரி இல்ல சார் ரொம்ப மாறிட்டு... பாக்க அழகா இருக்கு..” என்று விழிகளை சுற்றி ரசித்த வண்ணம் கூற அவரோ அமைதியாக கேட்டு கொண்டார்.
“ஆமா வசீ, எல்லாமே மாறிடுச்சு..” என்று கூறினார்.
சில நிமிடங்கள் அவரோடு பொதுவாக பேசிவிட்டு பின்,
“சரி சார், நான் கிளம்பறேன்…” என்று விடை பெற
“சரி வசீ, அப்பாவ கூட்டிட்டு வீட்டுக்கு வா… யூ.எஸ். போக முன்னாடி..”
“கண்டிப்பா சார்…” அவள் கூறி கொண்டிருக்கும் போதே அந்த உயர் ரக கார் பள்ளி வளாகத்தில் நுழைந்தது.
இங்கோ இவளுக்கு எங்கிருந்தோ வந்த மெல்லிய பூங்காற்று மேனியில் பட அந்த சுகத்தில் சுகித்தவளின் மனம் சுற்றும் முற்றும் எதையோ தேடியது.
இருக்கும் இடம் விட்டும் ஓடி சென்று எதை தேடுகிறோம் என்று கூட தெரியாமல் கானல் நீரில் மீனை தேடுவதாய் அலை பாய்ந்து அவளிடமே திரும்பியது.
"என்ன ஆச்சு வசீ?"
செல்வம் கேட்க சடுதியில் தன்னை மீட்டவள்,
"ம்ம், ஒன்னும் இல்லை சார்… திடீர்னு காத்து வீசவும் ஒரு அமைதியான உணர்வு கிடைச்ச மாதிரி இருந்துச்சு.." என்று கூற அவர் சிரித்தார்.
"சரி சார் அப்போ நான் வரேன்.." என்று அவள் கூறத் தான் தாமதம்.
திடீரென ஏதோ ஒரு உணர்வு அவளுக்குள்…
சற்று முன் வரை கூட இருந்த சுகம் மாறி மெல்லிய வலியோ என்று எண்ணம்.
வலிக்கும் நெஞ்சை லேசாக பிடித்து கொண்டாள்.
எதையோ பறிகொடுத்து செல்வது போன்ற பிரமை..
பள்ளியை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள்.
‘இனி இங்கு தன்னால் வர முடியாதோ?’ என்று சிறுப்பிள்ளையாய் கண்கள் கசிய கால்கள் பின்ன அடுத்த அடியும் எடுத்து வைக்க தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்.
'அவளுக்குள் சரியில்லை' என உணர்ந்து கொண்ட செல்வமும்
"என்ன வசீ? உடம்புக்கு எதும் பண்ணுதா?" என்று கேட்டார்.
“சார்…?” என்று தயக்க குரலில் அழைத்தாள்.
“என்ன வசீ?” சிறு பிள்ளை தொட்டு பார்த்து வந்தவள் திடீரென ஏதோ போல் நிற்க 'என்னவானதோ?' என்கிற பயத்தில் அவர் கேட்க,
“ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டிங்களே?” குரல் உள் செல்ல மெல்ல கேட்டாள்.
“கேளு… கோவம் வர மாதிரி என்ன கேக்க போற?” என்றார்.
“இல்ல… எப்படியும் நா வேலைக்கு போக பத்து மாசம் டைம் இருக்கு… அது வர இங்க நான் டெம்ப்ரவரியா ஒர்க் பண்ணட்டுமா சார்?”
விட்டால் குரலே வெளி வராது போன்ற தொனியில் அவள் கேட்க அவளை கண்டு சிரித்தவர்,
“நாளைக்கு வேலைக்கு இன்டர்வியூ எடுக்கிறேன் வந்துடு வசீ…” என்றார் அதே புன்னகையோடு.
“சார் நிஜமாவா??? தேங்க்ஸ் சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று கூறி துள்ளி குதித்து ஓடும் மானை ஒப்ப நடந்து சென்றாள்.
இந்த பக்கம் உயர் ரக காரினை விட்டும் வெளியே வந்தவன்
செல்வத்தை தேடி அவர்கள் அறைக்கு சென்றவன் அவர் அங்கில்லாது போக அவரை தேடி வந்தான்.
வந்தவன் அவர்களுக்குள் நடுவே நடந்த உரையாடலில் அமைதியாக அங்கேயே தேங்கிட
செல்வம் தொடர்ந்து அவளை வேலைக்கு வர சொல்வதை கேட்டும் கோபத்தில் கொதித்தான்.
யாரிவன்??
இந்த கோபம் எதற்கு?
வசீயின் வருகையால் இனி என்னென்ன மாற்றம் நிகழும்?
விடைகள் இனி வரும் அத்தியாயங்களில்.
0 Comments