08. நீல இரவில் நின் முகம்



"இடியட்… என்ன பழக்கம் இது? இப்டி தான் பசங்களுக்கு சொல்லி கொடுக்கறதா? எல்லாம் உங்களை சொல்லணும்? நான் வேணான்னு சொல்லியும் செஞ்சீங்கள்ல.. அதான் இப்டி..” 


அலுவலக அறையில் கொதிநிலைக்கு வைக்கப்பட்ட நீர் போல கொதித்து கொண்டிருந்தான் ரகு. 


‘நான் என்ன பண்ணேன்?’ என்ற கேள்வியோடு அருகில் செல்வம் 

ஒன்றும் விளங்காமல் அவனையே பார்த்திருந்தார்.


“உங்க கிட்ட தெளிவா தானே சொன்னேன்? அவங்கள ரூல்ஸ் படி நடக்க சொல்லுங்கன்னு? அதை செய்றத விட்டுட்டு இதென்ன புதுசா??” அவன் மீண்டும் கத்தியபடி இருக்க 

இவருக்கு பளிச்சென்று விளங்கியது. 


‘ஆக, இந்த வசீ தான் என்னவோ பண்ணி வச்சிருக்கா? அதான் பய இவ்ளோ டென்ஷனா இருக்கான்.. என்னவா இருக்கும்?’ என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே வாயிலில் வசீயின் குரல்,


“சார், மே ஐ கமின்?” என்று. 


அவனோ பதில் கூறாமல் அவளை முறைத்து கொண்டிருக்க செல்வம் தான் அழைத்தார். 


“வா வசீ,” என்று வாய் அழைத்தாலும் கண்கள், ‘ என்ன பண்ணி வச்ச?’ என்று கேட்க அவளோ அசடாக சிரித்து வைத்தாள். 


அவனும் விடாமல் அவளை முறைத்து கொண்டே.. 


“என்ன வசந்தி இதெல்லாம்? பசங்களுக்கு தேவையில்லாதது எல்லாம் சொல்லி கொடுக்குறீங்க.. அதுவும்.. அதுவும் ரூல்ஸ் பிரேக் பண்ணுங்க அப்டின்னு… ஒரு டீச்சர் நீங்களே இப்டி சொல்லி கொடுக்கலாமா? உங்களுக்கு என்ன நீங்க டெம்பரவரியா இருக்க போறது என்னவோ கொஞ்ச நாள் தான்.. நீங்க போனதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சினைனா எங்க தலை தான உருளும்? முதல்ல போய் பசங்க கிட்ட எதையாவது சொல்லி சமாளிங்க.. அதவிட்டுட்டு தேவையில்லாம எதுவும் பண்ண வேணாம்..” என்று அவன் பொரிந்து தள்ளினான். 


அருகில் அமைதியாக கேட்டு கொண்டிருந்த செல்வத்திற்கும் கொஞ்சம் ஷாக் தான் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தார். 


ஒருவகையில் அவரும் இதை எதிர்பார்த்தது தான் என்றாலும் வசீ இப்படி தடாலடியாக இறங்கி இருப்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை. 


‘சரி, எது நடந்தாலும் நல்லதே நடந்தா சந்தோசம்..’ என்று அமைதி காத்தார்.


அவனின் பொருமலுக்கு அவள் அமைதியாக, 

“கவலையே படாதீங்க சார், நான் முன்னமே சொன்ன மாதிரி என்னாலயும் என் செயலாலயும் இந்த ஸ்கூலுக்கு எந்த ப்ராப்ளமும் வராது. ஆனா அதுக்காக இங்க என் கண்ணுக்கு சரியில்லைனு படுறத அப்டியே சகிச்சிக்கிட்டு போற பழக்கம் எனக்கு இல்லை. அதனால நான் இருக்குற வரை என் க்ளாஸ் என் கன்ட்ரோல்ல தான் இருக்கும்.. இல்லையா நான் இப்போவே வேலையை விட்டு விலக தயார். ஆனா அது என்னை இங்க வேலைக்கு அனுமதிச்ச செல்வம் சார் சொன்னா மட்டும் தான் நடக்கும்..” என்று அழுத்தமாக கூறினாள். 


அவன் அவளை விடுத்து இப்போது செல்வதை முறைக்க அவரோ, ‘கெட்டது குடி..’ என்று அவசரமாக வாயை திறந்தார். 



“சரி வசீ, நீ சொல்ற மாதிரி உன் க்ளாஸ் உன் கன்ட்ரோல்ல இருக்கட்டும்.. ஆனா நீ எடுத்த முடிவால இங்க எந்த தப்பும் நடக்க கூடாது. அப்டி நடந்தா உன்னை சும்மா விட மாட்டேன்..” 

மிரட்டி வைக்கிறாராம்.. 


அவர் மிரட்டிய தோரணையில் அவன் தான் மானசீகமாக தலையில் அடித்து கொண்டு நகர வேண்டி இருந்தது. 


ஏதாவது கேட்டால், ‘ இது என்னோட கடைசி வருடம்.. இந்த ஒரு விஷயம் மட்டுமாவது என் விருப்பப்படி நடக்கட்டுமே.. என்று என்னவோ இத்தனை காலம் அவரை கட்டி வைத்து வேலை வாங்கியது போல சொல்லுவார்.. எதற்கு வாக்குவாதம்? இன்னும் கொஞ்ச நாள் தானே’ என்று அவனே இறங்கி வரவேண்டியதாகி போனது. 


எதுவும் பேசாமல் சிடுசிடுவென வெளியேறி சென்றவனை பார்த்து கொண்டிருந்தவள் மனதில், ‘சரியான சிடு மூஞ்சி’ என்று சலித்தபடி நிற்க அவளின் எண்ணம் உணர்ந்த செல்வம்,


“நீ நினைக்கிற மாதிரி அவன் இயல்பே இது இல்லை வசீ, ஒரு மனுஷன் அடுத்து அடுத்து சோதனைக்கு ஆளாகும் போது அதை விட்டும்.. அதை குற்றம் சாட்டி பேசும் ஜனங்களை விட்டும் விலக தன்னை சுத்தி ஒரு வேலி போட்டுக்குவாங்க தெரியுமா? அதை தான் அவனும் போட்டுகிட்டான்.. நான் எவ்வளோ முயற்சி பண்ணியும் என்னால அவனை அந்த வேலிய உடைச்சு வெளி கொண்டு வர முடியலை..” என்று கூற அவள் கேள்வியாக பார்த்தாள். 


“ஆனா சார், இங்க நடந்த குழப்பத்தை நானும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.. எல்லாமே ஓரளவுக்கு சரியானதுக்கு அப்புறமும்.. எதுக்காக இவ்ளோ கடுமை.. ஸ்டூடன்ஸ் பாவம் சார்.. பொதுவான அவங்களோட இயல்பே மறந்து போய் ஏதோ ஜெயில்ல இருக்கிற மாதிரி உணறுறது ரொம்ப கொடுமை.. அவங்க கிட்டயும் எதுக்காக இந்த பொய் வேலி நாடகம்?” என்று கேட்டாள். 


“அனுபவம் தான் வசீ, அது நமக்கு கத்து கொடுக்குற பாடத்தால நாம அடுத்த அடி எடுத்து வைக்கவே யோசிக்கிறது இல்லையா?? இதுவும் அப்டி தான்..” 


அப்போதும் அவள் விழியில் கேள்வியை தாங்கி நிற்க 


செல்வம் ஒரு பெருமூச்சுடன், 

“தன்னை சுத்தி நடந்த பிரச்சினைகளை சரிசெய்துட்டு ரகு நிமிருறதுக்குள்ள தன்னையே தொலைச்சுட்டான்மா..” என்றார் பூடகமாக. 


“புரியலை சார்..” என்றாள் குழப்பமாக.


“ஒரு மனுஷனுக்கு அவனோட வாழ்க்கை எவ்ளோ முக்கியம்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேணாம். அப்டி அவன் இங்க அடுத்து அடுத்து பத்திரிகை பள்ளியோட ரெப்பிடுஷன்னு பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் செஞ்சிட்டு அவனோட வாழ்க்கையை தேடி போகும் போது அது அவன் கையை விட்டு போயிட்டுமா..” என்றார்.


“சார், நீங்க எப்பவும் போல விஷயத்தை நேரடியா விளக்காம தலைய சுத்தி சுத்தி வரிங்க..” என்றாள் அவள். 


பள்ளி காலத்தில் இருந்தே.. நடத்த வேண்டிய பாடத்தை விடுத்து வேறு பொது விஷயங்களுக்கு அவர் தாவி செல்வதை குறித்த கேலியில் அப்போதும் அவள் கூற அவரும்,


“இது அவரவரோட இயல்புமா.. அது எப்போவும் மாறாது..” என்று அந்த நினைவில் சிரித்தார்.

அவள் அவரை இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள். 


“சரி, நேராவே சொல்றேன்.. ரகு ஒரு பெண்ணை விரும்பினான்மா.. ஆனா அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புறதா ஒரு நாள் வந்து சொன்னான்.. அதுக்கு அப்புறம் மொத்தமா மாறிட்டான்.. யார் கிட்டயும் அவ்ளோவா பேசுறது கிடையாது.. அளவா தான் பேசுவான்.. அதனாலேயே அவனை பார்க்குற எல்லார் கண்ணுக்கும் அவன் ஒரு முரடனா தெரியிறான். ஆனா அவன் உள்ளுக்குள்ள எவ்ளோ நொறுங்கி போய் இருக்கான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவன் அப்பாக்கு கூட தெரியாது.. பாவம் விஜயன் நினைச்சுட்டு இருக்கான்.. 


தன்னோட பொறுப்புகளை திடீர்னு ஒரு நாள் மகன் தலையில விழுந்ததும் இல்லாம தன்னை கவனிக்க கூடிய பொறுப்பும் சேர்ந்ததால தான் மகன் இப்டி மாறிட்டான்னு நினைச்சு என் கிட்ட புலம்புவான்.. அவனுக்கும் என்ன ஆறுதல் சொல்லணும் எனக்கு தெரியாது? அதே சமயம் ரகுவுக்கும் என்ன சொல்லி ஆறுதல் சொல்லணும் எனக்கு தெரியாது.. அதனால தான் எப்போமே அவன் பக்கம் நிப்பேன்..” என்று நீண்ட விளக்கமாக கூறினார். 


ஏனோ அந்த நொடி அவள் கண்ணுக்கு ரகுவின் மேல் ஒரு இரக்கம் தோன்றியது என்று தான் சொல்ல வேண்டும்.. 


காதல் தோல்வி.. 


எத்தனை பெரிய வலி என்பதை அவளால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. 

ஏனென்றால்??


சிந்தை சென்ற விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ரகுவை எண்ணினாள். 


அவளும் அந்த நொடி வரை அவனை ஒரு முரடனாக தானே எண்ணி இருந்தாள். 

ஆனால் அவனின் மறுபக்கம் தெரிய வர ‘அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தோன்றிய மனதில் 


அவனின் முழு உருவம் விரிய இவனை விட்டுவிட்டு ‘அந்த பெண்ணால் எப்படி வேறு ஒருவனை நேசிக்க தோன்றியது?’ என்று எண்ண தொடங்க 

தன் எண்ணத்தை எண்ணி தானே திட்டியும் கொண்டாள். 


“காதல் ஒன்னும் வெளி அழகை பார்த்து வரதில்லையே.. அது மனசோட ஆழத்திலிருந்து வரும் உணர்வு.. ஒருத்தரை ஒரு முறை பார்த்தாலும் சரி.. பார்க்காம போனாலும் சரி.. அந்த குறிப்பிட்ட நபர் மேல நமக்கு வர கூடிய நம்பிக்கை.. ஒரு பாதுகாப்பு உணர்வு.. ஏன் அவர் இல்லாத ஒரு நிலையை எண்ணி பார்க்கும் போதே வரும் பாரு ஒரு வலி.. அது தான் காதல்.. அதே உணர்வு..” 


 மெல்ல தலையை சிலுப்பி கொண்டாள். 

அவளின் செய்கையை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த செல்வம், “என்ன?” என்று வினவ 


அவள், “அது வந்து சார், யார் அந்த பொண்ணு? ரகு சார் கூட படிச்சவங்களா?” என்று ஏதோ சமாளிப்பது போல கேட்பதாய் எண்ணி கேட்டு விட 


கேட்ட பின்பே தன் அதிக பிரசங்கி தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாள். 


ஆனால் செல்வம் அப்படி எதுவும் எண்ணாமல் மெல்ல சிரித்து விட்டு,

“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது வசீ, இங்க பத்திரிக்கை.. அப்புறம் சில பல பிரச்சனைகள்னு எல்லாம் சரி பண்ணிட்டு நிமிரவும் கொஞ்ச நாள் கழிச்சு ரகு ரொம்ப சந்தோஷமா நடமாடிட்டு இருந்தான். என்னனு கேட்டப்ப முதல்ல தயங்கி அப்புறம் தான் ஒரு பெண்ணை விரும்புறதா சொன்னான்.. எனக்கு அதை கேட்கவும் ரொம்ப சந்தோசம்.. அடுத்து அந்த பெண்ணை பத்தி டீடைல்ஸ் கேட்டேன் அதுக்கு நேரம் வரும் போது சொல்றேன்னு சொன்னான்.. ஆனா கடைசி வரை நேரம் வரவே இல்லை.. கொஞ்ச நாள் கழிச்சு வந்து சொன்னான் அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புறதா.. எனக்கு ரொம்ப ஷாக்.. நான் போய் பேசுறேன் நீ யாருன்னு சொல்லுன்னு சொல்லவும் அவன் மறுத்துட்டான்.. 

தன்னால எந்த வகையிலயும் அவளுக்கு தொந்தரவு வர கூடாதுன்னு சொல்லி என் கிட்டயும் இதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டான்.. 


ஆனா வசீ, கொஞ்ச நாள் தான்னாலும் அந்த இடைப்பட்ட நாட்கள்ல ரகு எவ்ளோ ஹேப்பியா இருந்தான் தெரியுமா? 

சந்தோஷத்தை அள்ளி கொடுத்துட்டு சந்தர்ப்பம் பார்த்து பறிச்சிக்கிறது தான் இறைவன் வேலை போல..” என்று அவர் விடாமல் புலம்பி தீர்க்க இவள் அமைதியாய் கேட்டு கொண்டாள்.



சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவ கொஞ்ச நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவர், 

“சரி வசீ, விட்டா நான் பாட்டுக்கு பேசிட்டே இருப்பேன்.. பாரு உனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆச்சு.. நீ போ..” என்று அவளை அனுப்பி வைத்தார். 


வழியெங்கும் செல்வம் சொன்ன செய்தியிலேயே மனம் 

அலை பாய வகுப்பறையை வந்து அடைந்தாள்.

மாணவர்களின் முகம் ஆவலாய் அவள் மேல் விழுந்தது.




Post a Comment

0 Comments