வீட்டினரிடம் தன் அனுபவ விவரங்களை கூறி பின் தனிமையில் அன்றைய நாளினில் நடந்தவைகளை எண்ணி கொண்டவள் தன் செய்கையை நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டாள்.
எண்ணவோட்டங்களிடையே தூங்க முயன்றவளுக்கு தூக்கம் வர மறுத்தது. காரணம் ‘புருவம் உயர்த்தி அவன் வினவிய முகமே கண் முன்’ தோன்றியது பதறியடித்து கொண்டு எழுந்து கொண்டாள்.
நகங்களை கடித்து துப்பி கொண்டே, ‘என்ன மாதிரியான எண்ணமிது?’ தன்னை தானே இரவு முழுதும் திட்டி தீர்த்து விடியல் நெருங்கும் வேளையில் கண் உறங்கி போனாள்.
“என்னமா கண்ணு சிவந்திருக்கு?” தாய் மீனா கேட்ட கேள்விக்கு எதேதோ காரணம் கூறி நழுவி விட்டாள். ஆனால் தோழியர்களிடம் அப்படி தப்ப முடியவில்லை.
“என்ன ஆச்சுடீ? முகமெல்லம் டல்லா இருக்கு எதும் உடம்பு சரியில்லையா?”
“இல்லை வனிதா, நைட் சரியா தூங்கல அதான்.”
“சரியா தூங்கலயாக் அப்படி யார் கூட டூயட் பாடிட்டு இருந்த?” மஹிமா இயல்பாய் தான் கேட்டாள்... ஆனால் ரிஷிகாவோ பேயை பார்த்தது போல விழித்தாள்.
“ஏய், அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை”
‘ இது மஹிமாவுக்காக கூறியதா இல்லை தனக்கு தானே கூறியதா?’ என்று தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் கூறி கொண்டாள். ‘ அப்படி ஒன்றும் இல்லையென்று..’
அன்றிலிருந்து அவள் அவன் பார்வையை தவிர்த்தாள்.
‘ ஒரேயொரு முறை அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தியதே தன்னை இந்த அளவு பாதிக்குமானால் இனி அவனை தினமும் கண்ணோடு கண் நோக்கினால் அவ்வளவு தான்..’
அவள் என்ன தான் உருபோட்டாலும் அவன் அறியாத சமயங்களில் அவன் முகம் பார்க்கும் கண்களை அவளால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
‘இது வெறும் மாயை’ என்று எத்தனை தரம் தான் தனக்குள் கூற முடியும்.
அடுத்து வந்த நான்கு நாட்கள் அவன் வகுப்பெடுக்க வராது, அங்கு பணி புரியும் ஷைலா வகுப்பெடுக்க வந்ததால் அவள் அவனை பிரிந்து வாடுவது அவள் மனதுக்கு புரிந்து விட்டது.
தினமுன் அவன் முகம் பார்த்து விடும் கண்கள் ஏனோ நான்கு நாட்களில் தன் பொலிவை இழந்தது போல் தோன்றியது.
‘அப்படியென்றால் அவள் அவனை விரும்புகிறாளா?’ என்று தனக்குள்ளே கேட்டு பார்த்தவளுக்கு வானில் பறப்பது போன்று தோன்றியது.
அனுதினமும் அவனை பார்த்திருந்தவளுக்கு அவனை காணாது நேர்ந்த துயரம்.. அவள் மனதினை அவள் விரும்புவதை கோடிட்டு காட்டியது. நினைக்கும் போதே இனித்தது.
‘இப்போதே அவனை காண வேண்டும்’ என்ற ஆவல் மேலெழுந்தது.
தோழியின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றங்களை மனதில் குறித்து கொண்டாலும் அவளிடம் எதுவும் கேட்காது வனிதா மௌனம் சாதிக்க மஹிமாவோ கேட்டுவிட்டாள்.
“என்னடி? திடீர்னு சிரிக்குற திடீர்னு அப்செட் ஆகுற .. வேற எதோ உலகத்துல இருக்குற மாறி நடந்துக்குற என்ன விஷயம்..?”
‘சொல்லிவிடலாமா?’ என்று ஒரு கணம் யோசித்தவள், பின் மறு நொடியே
‘இல்லை வேண்டாம் என்னை பற்றிய அவனின் எண்ணம் எதுவென்று தெரியாமல் எதையும் உலற வேண்டாம்’ என்று எண்ணி கொண்டு,
“ஒன்னுமில்லையே நான் எப்பவும் போல தானே இருக்கேன்” என்று பொய்யுரைத்தாள்.
தன் வாழ்வில் ஒளிவு மறைவில்லாது அனைத்தையும் பகிர்ந்து கொண்ட தோழிகளிடம் முதல் முறையாக தன் மனதை மறைத்தாள்.
‘காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்துவிடும் போல’ என்று எண்ணி கொண்டவளுக்கு கள்வனை எண்ணி காதல் பெருகியது.
***
0 Comments