08. உனது விழியில் எனது காதல்




கட்டிலில் படுத்து கண்மூடி கிடந்தவனின் தலையில் ஒரு கை விழ விழி திறந்தான். கருணையே உருவாய் அவன் தாய் தேவி.
 “அம்மா...”

 “என்னப்பா? இன்னக்கி சீக்கிரமே வந்துட்ட! உடம்பு சரி இல்லயா.?”

 “இல்லமா” என்றவன், மஹிமா  கூறியதை தாயிடம் விவரித்தான்.

 “ஆமா சார், அவ நீங்க கொட்டுனதுக்காக அழல.. அவளுக்கு சின்ன வயசுல இருந்து ஒரு பழக்கம் உண்டு. அது வந்து…” என்று ஒரு கணம் தயங்கி வனிதாவை பார்க்க, அவளும் ‘என்ன செய்வது? சொல்’என்ற ரீதியில் தலையசைத்தாள்.

 “அவ நோட்ல இருந்து பேப்பர கிழிச்சா அவளுக்கு பிடிக்காது சார். ஒன்னு அழுவா இல்ல திட்டி தீர்த்துடுவா” என்கவும்

 “வாட்?” என்று ஒரு சேர நண்பர்கள் திகைத்தனர்.

 “எப்பவோ சின்ன வயசுல அவ நோட்ல இருந்து ஒரு பேப்பர் கிழிச்சிருக்கா.. அது சும்மா இல்லாம அதுக்கு நேர் எதிரா இன்னொரு பேப்பர இழுத்துட்டு வர.. அப்படியே ஒவ்வொன்னா கிழிந்து கடைசியா நோட்டே கிழிந்து போற அளவுக்கு ஆகவும் ரொம்பவே கதறிட்டா.. அதுவும் அவளோட ஃபேவரைட் ட்ராயிங் நோட் .. அவள எங்களால சமாதானம் பண்ணவே முடியல... வேற நோட் வாங்கிக்கலாம்னு அவ அப்பா சொல்லியும் கூட..  “இந்த நோட் போனது போனதுதானே”னு சொன்னா.. ‘இனிமே நோட்ல இருந்து பேப்பரே கிழிக்க மாட்டேன்’னு  சொல்லி அழுது சமாதானம் ஆனாள்... 

சரி, சின்ன வயசுல எதோ புரிஞ்சிக்காம பேசுறனு விட்டா… 

பெரியவளானதும் அவ சொல்ற ரீசன்.. கொஞ்சம் ஷாக் தரும்... ‘ஒரு குடும்பத்துல இருந்து யாரையாவது ஒருத்தர பிரிச்சா எப்படி குடும்பமே சிதையுமோ.. அப்படித்தான் இதுவும்’னு சொல்றவ கிட்ட என்னனு சொல்லி புரிய வைக்க.. சரி அப்படியே இருக்கட்டும்னு நாங்களும்.. அவளோட இந்த மைன்ட் செட்ட கலைக்காம விட்டுடோம்.. இப்போ கூட நீங்க அவ நோட்ல இருந்து பேப்பர கிழிச்சதுக்காக தான் அழுதுட்டு போறா...”

 “சாரி சார், அவளுக்காக நாங்க உங்கள்ட்ட மன்னிப்பு கேட்டுக்கறோம்.” வருத்தத்துடன் கூறியவர்களை பார்த்து

 “  நான் தான் மன்னிப்பு கேட்கனும்.. அவளோட விஷயம் தெரியாம நடந்துகிட்டேன்” என்று அவன் கூற

 “இருக்கட்டும் சார், அவள பத்தி உங்களுக்கு தெரியாதுல்ல.. தெரிஞ்சா இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க” என்று பல சமாதானங்கள் நடைபெற்று ஓய்ந்தன. 

நடந்தவைகளை கேட்டு கொண்டிருந்த தேவியோ,  “வித்யாசமான பெண்” என கூறினார். 

பின், “ மத்தவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும் சகி... நீ நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட நேரடியா நடந்ததுக்கு வருத்தம் சொல்லிடு” என்று கூறும் தாயை பார்க்கையில் என்றும் போல அன்றும் இரக்கம் பொங்கியது அவனுக்கு.. 

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறும் தாயின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல்.. பாதியிலேயே விட்டு இறையடி சேர்ந்த தந்தையின் மேல் கோபம் பொங்கியது. 

திருமண பந்தத்தில் தாய்க்கு ஒரு குறையும் வைத்ததில்லை என்றாலும்? எல்லாரையும் போல அவரும் எதோ ஒரு போதைக்கு அடிமை ஆகி இருந்தார்.

 சிலர் பணம், சிலர் புகழ்… அதுபோன்று இருந்தாலும் அவனுக்கு கோபம் இருந்திருக்காது.. 

ஆனால் அவரோ, குடி எனும் போதைக்கு அடிமை ஆகி இருந்தார். தேவி எத்தனை முறை எடுத்து கூறியும் அதை விட மறுத்தார். 

விளைவு, சாஹித்யனுக்கு பன்னிரண்டு வயது.. அவன் தம்பி ரவிவர்மனுக்கு எட்டு வயது...
 குடித்து விட்டு வண்டி ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 
அது நாள் வரை தந்தையிடம் கடன் வாங்கி குடித்தவர்கள் 
"என்னிடம் கடன் பட்டுள்ளார்" என்று வாசலில் வந்து நிற்க, 
வங்கி சேமிப்பில் இருந்த தொகையை கொண்டு எல்லா கடன்களையும் அடைத்து... மீத மிஞ்சிய தொகையை கொண்டு குடும்பத்தை நடத்தி.. தன்னையும் தம்பியையும் படிக்க வைத்து என தாய் பட்ட கஷ்டங்களை நினைக்கும் நாளெல்லாம் அவன் மனம் தந்தையின் மீதும்  அவர் இறக்க காரணமாய் இருந்த குடியின் மீதும்  கோபமும் வெறுப்பும் தோன்றும்.

 ரோட்டில் குடித்து விட்டு தள்ளாடும் எந்த குடிமகனையாவது கண்டால் இழுத்து நான்கு அறை அறைய வேண்டும் போல் உத்வேகம் ஏற்படும் அளவுக்கு கோபம் கனன்றும். 

‘நாளை என்னை போன்று என் குடும்பத்தை போன்று மற்றொரு குடும்பம் உருவாகிட கூடாது’ என்பது அதில் தெரியும். 

தாயின் துயரங்களை அவர் வடித்த கண்ணீர் துளிகளை கண்டவன் ஒரு விஷயத்தில் உறுதியாய் இருந்தான். 
‘அது தான் திருமணமே செய்ய கூடாது’என்பது. 

‘ அவன் தாயின் அருகே இறுதி வரை நிற்க வேண்டும்’ என்று எண்ணி கொண்டிருப்பவன். ஆனால் வரும் பெண் தன்னை தன் தாயிடம் இருந்தும் தம்பியிடம் இருந்தும் பிரித்து விடுவாளோ என்ற பயம். 

அவன் அறிந்து வைத்த வரை பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள்.  ரிஷிகாவிடம் தன் மனம் செல்வது புரிந்த போதும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் வசமிழப்பதை அறிந்திருந்த போதும் சரி... 

பல வேலியிட்டு தன் மனதை அடக்கி கொண்டதன் முழு முதற்காரணமும் இதுவே. 
ஆனால், இன்று ரிஷிகாவின் இயல்பு அவனை தன் வசமிழக்க செய்தது. அவன் கண்ணுக்கு தெரியாமல் போட்ட வேலிகளை... வேஷங்களை கலைய செய்தது. 
மனதின் அடி ஆழத்தில் இருந்த காதல் அத்தனை தடைகளையும் தகர்த்திருந்தது. 

‘சொல்லத்தான் போறேன்மா.. ஆனால் மன்னிப்பல்ல, என் மனதை அவளிடம் சொல்ல போகிறேன்’ என்று எண்ணி கொண்டான்.

  ***

Post a Comment

0 Comments