பாரம் இறங்கியது போல் தோன்றியது...
நீண்ட நாட்களுக்கு பின் தன் மனம் அமைதியாகி இருப்பதை உணர்ந்தாள். இதனைவிட மாலையில் அவனே வகுப்பெடுக்க வரவும் அவளின் மனம் இறகை விடவும் லேசானது போன்றே தோன்றியது.
கவலை மறந்து அவள் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்து இருந்தாள்.
மீண்டும் கண்ணில் படாமல் ஓடி விட்டால்?? அதற்கு தான் முன்பாகவே அவனை ஆசை தீர பார்த்து தன் மனதில் அவன் பிம்பத்தை படமெடுத்து கொண்டிருந்தாள்.
அவ்வப்போது அவன் அவளின் பார்வையை சந்திப்பதும் பட்டென்று விலக்குவதுமாய் இருந்த இந்த விளையாட்டை அவள் மிகவும் ரசிக்க தொடங்கி விட்டாள்.
எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ மூடிய பேனாவும் திறக்கப்படாத நோட் புத்தகமுமே சாட்சி...
“சரி வொர்க் பண்ணுங்க” என்றவனின் குரலில்,
‘அய்யோ, இத்தனை நேரமாய் ஒரு குறிப்புமெடுக்காமல் உட்காந்துருக்கோமே’ என்று புரிய மஹிமாவிடம் திரும்பி நோட்டை கேட்க எண்ண…
அவளோ சீரியஸாக டைப் பண்ணி கொண்டிருந்தாள்.
அவளை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் சிஸ்டத்தில் எதையோ நோண்டியவள் வேறு வழி இன்றி அவனை திரும்பி பார்த்தாள்.
புத்தகத்தில் இருந்து கண்களை விலக்கி அவளை பார்த்து புருவம் உயர்த்த,
‘இவன் வேற நேரம் காலம் தெரியாமல்’ என்று வெட்கியபடி,
“டவுட்” என்று மெல்லிய சப்தத்தில் கூற
“ஓஹ்” என்று இரண்டெட்டில் அவளை நெருங்கினான்.
“எதுல டவுட் ரிஷிகா?” என்று அவள் வரை குனிந்து அவள் சிஸ்டத்தின் மவுசை தன் கை பற்றி வினவ...
அவள் பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே அடைபட்டு கொண்டன. கேள்விக்கு பதில் வராததை உணராமல் அவன் திரையில் பார்வையிட்டு கொண்டிருந்தான்.
“என்ன இன்னைக்கு நடத்துனதுல எதையுமே ஓர்க் பண்ணல?” என்றான் அவளை பார்த்து.
அவள் நெளிந்து கொண்டிருப்பது தெரிய சற்று இடைவெளி விட்டு நின்று கொண்டான்.
ஆனாலும் ‘கேள்விக்கு பதில் என்ன?’ என்ற ரீதியில் அவன் பார்க்க ஒன்றும் கூறாது மவுனித்திருந்தாள்.
அவளின் நோட்டை வாங்கி பார்த்தவனுக்கு அதன் வெண்மையான பக்கங்கள் விடை கொடுத்தது.
அவளை முறைத்து பார்த்தவன்.. அவளின் தலையில் மெல்லிய கொட்டு வைத்தான்.
“இவ்வளோ நேரம் நான் மூச்சு பிடிக்க கத்துனது உன் காதுலயே விழலயா” என்று அவளின் கையில் இருந்த பேனாவை வாங்கி கையில் இருந்த அவளின் நோட்டின் கடைசியில் இருந்து ஒரு பேப்பரை கிழித்தான்.
நடந்து கொண்டிருந்த சலசலப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வனிதாவும் மஹிமாவும் “அய்யய்யோ” என்று அலறியது அவன் காதில் விழவில்லை போல.
தான் நடத்தியவற்றை சுருக்கமாய் அதில் எழுதி கொண்டிருந்தான்.
தன் கையில் விழுந்த கண்ணீரை கண்டு,
‘தான் கொட்டியது அவளுக்கு வலித்ததோ? அதனால் அழுகிறாளோ’ என்று எண்ணி,
“வலிக்குதா?” என்றான் பரிவாக.
“உங்களுக்கு வலிச்சா தெரியும்?” என்று கூறி விட்டு அவன் கையில் இருந்தவைகளை பிடுங்கி கொண்டு வேகமாய் வெளியேறினாள்.
கண்ணீரோடு வெளியேறிய ரிஷிகாவை பார்த்து விட்டு உள்ளே வந்த கவுதம்...
‘அடடா, இவன் என்ன பண்ணானு தெரியலயே? ஏன் இப்படி அழுதுட்டு போறா?’ என்றெண்ணி கொண்டே
“என்னடா ஆச்சு.. சகி?”
“தெரியலடா, நோட்ஸ் எடுக்கலைனு லேசா கொட்டுனேன். உண்மையிலேயே லேசா தான்டா கொட்டுனேன். அழுதுட்டே போறா” என்றவன் பார்வை அவள் வெளியேறி சென்ற வாயிலை நோக்கியே இருந்தது...
“அய்யோ நீங்க வேற? அவ ஒன்னும் நீங்க கொட்டுனதுக்காக அழலை” என்ற மஹிமாவின் வார்த்தையில்,
“வாட்?” என்று இருவருமே புரியாமல் நோக்கினர்.
***
0 Comments