“அய்யோ என்னங்க... இங்க பாருங்க பயமா இருக்குங்க.. ரிஷிகா அப்பா வந்தாச்சுமா பாருமா” அவரின் குரல் ஓயவில்லை.
அலுவலகத்தில் பாதி விடுப்பு எடுத்து கொண்டு வந்த ரிஷிகாவை பார்க்க வந்திருந்த வனிதா,மஹிமாவின் செவிகளுக்கும் மீனாவின் குரல் செல்ல
‘என்னவாயிற்று?’ என்ற பதறிய மனதோடு உள் சென்றனர்.
மயங்கி கிடந்த ரிஷிகாவை பார்த்து பேயடித்தது போல் நின்றனர்.
ஆனால் மறு கணமே விறுவிறுவென செயல் பட்டனர். வாசலில் காத்திருந்த மஹேனை துணைக்கழைத்து கொண்டு ரிஷிகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரில் ரிஷிகாவின் இரு புறமும் மீனாவும் வனிதாவும் அமர, தன்னிலைக்கு வந்திருந்த ரகுராமன் சிவந்த விழிகளோடு மஹேனின் அருகில் அமர்ந்து கொண்டார்.
அவன் மஹிமாவை பார்க்க அவளோ, “ சீக்கிரம் போங்க மஹி, நா வனிதாவோட ஸ்கூட்டில வரேன்” என்று வீட்டை பூட்டி சாவியோடு பின் தொடர்ந்தாள்.
மீனாவின் விசும்பல் ஓய்ந்த பாடில்லை... ரிஷிகாவின் கை பற்றி கொண்டிருந்த வனிதா அவள் கை விடாமல் பற்றி கொண்டிருந்த சாக்லேட் கவரை பார்த்து புருவம் சுருக்கினாள்.
‘என்றோ கவுதம் கூறி இருந்த சாஹித்யனுக்கும் சாக்லேட்க்குமான உறவு’ அப்போது அவளின் மூளைக்குள் வந்து போனது.
மெதுவாய் அவளிடம் இருந்து அதை பிரித்து தன் கைக்குள் வைத்து கொண்டாள்.
மருத்துவமனையின் அவசர பிரிவில் ரிஷிகா சேர்க்க பட்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து மருத்துவரிடம் இருந்து அழைப்பு வர ரகுராமனை பார்த்தாள் மஹிமா,
அவரோ, “என்னால் முடியாதுமா” என்ற விசும்பலோடு அங்கிருந்த சேரில் அமர்ந்தார். அவரின் கை பிடித்து மீனாவும் அமர, மஹேனும் மஹிமாவும் சென்றனர்.
“நீங்க..?”
“அவளோட ஃப்ரண்ட் டாக்டர். அவ அப்பா அம்மா ரொம்ப நெர்வசா இருக்காங்க என் கிட்ட சொல்லுங்க..” கையை பிசைந்தாள். அவளின் நடுக்கம் அவருக்கு புரிந்தது.
தாயும் தந்தையும் பயப்படுவது இயல்பு.. ஆனால் ரத்த சொந்தமில்லாத ஒருவன் மற்றவனுக்கு ஆபத்து என்று வரும் போது உயிரளவு பயம் கொள்வது நட்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க மிஸ்...??”
“மஹிமா...”
“ம்ம்ம், மனசுல எதையெல்லாமோ நினைச்சு பயந்துருக்காங்க... மனசளவுலயும், உடல் அளவுலயும் ரொம்பவே பாதிக்க பட்டு இருக்காங்க.. போதாத குறைக்கு ஜன்னி பிடிச்சிருக்கு... அதிகமான நேரம் குளிர்ல உக்காந்து இருக்காங்க ட்ரீட்மெண்ட் கொடுக்குறது ரொம்பவே சிரமமா போச்சு... கொஞ்ச நாளாவே எதையோ நினைச்சு அளவுக்கு அதிகமா ஃபீல் பண்ணிருப்பாங்க போல அவங்களோட மூளை தேவைக்கு அதிகமா யோசிச்சு யோசிச்சு... ஒரு கட்டத்துல தாங்க முடியாம அன்கான்சியஸ் ஆகிட்டாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கோம் பார்க்கலாம். அவங்களுக்கு நினைவு திரும்புனதுக்கு அப்புறம் தான் எதையும் முடிவா சொல்ல முடியும்”
இதை கூறும் அவரின் குரல் கூட கம்மியதோ என்று தோன்றியது.
“டாக்டர்,என்ன சொல்றீங்க? எங்க ரிஷிகாவுக்கு ஒன்னும் இல்லையே..?”
“கடவுள்ட்ட வேண்டிகோங்க... எதுவும் இருக்க கூடாதுனு தான் நானும் வேண்டிக்குவேன். பட் சாரிமா... இத சொல்றதுக்கு... ஏற்கனவே சொன்ன மாதிரி தேவைக்கு அதிகமாகவே வேலை செஞ்சிட்ட மூளை ஒரேயடியாய் ஓய்வெடுத்துட கூடாது. அதான்... கோமா, இன்னக்கி நைட்குள்ள கண் முழிச்சிடாங்கனா பயப்பட ஒன்னுமில்லை. ஆனால் முழிக்கலைனா?..”
“இல்லை டாக்டர் எங்க ரிஷிகாவுக்கு ஒன்னும் ஆகாது” என்று வெளியேறினாள்.
நோயின் முதல் மருந்தே நாம் இதில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற மன வலிமை தான், இது நோயுற்றவருக்கு மட்டும் பொருத்தமல்ல, அவரை சுற்றி உள்ள நலம் விரும்பிகளுக்கும் தான். மஹிமாவிடமும் அத்தகைய மன வலிமை இருந்தது.
ரகுராமனும் மீனாவும் டாக்டர் கூறியதை மஹிமாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள , ‘தன்னால் தானே தன் மகளுக்கு இந்த நிலை’ என்று மீண்டும் சேரில் அமர்ந்து கொண்டார்.
“ரிஷிகா வந்துடுமா... அப்பா இனிமே கல்யாணத்த பத்தி பேசவே மாட்டேன்... நீ எங்க பொண்ணா கடைசி வரைக்கும் எங்க கூட நடமாடிட்டு இருந்தா அதுவே போதும்... வந்துடுமா அப்பா பண்ண தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுமா... ஆனா இது... இந்த தண்டனை வேண்டாம்மா?” மனம் விட்டு புலம்பி கொண்டிருந்தார்..
“ஸ்ஸ்ஸ் அப்பா..என்னதிது..? நீங்களே குழந்தை மாதிரி அழலாமா? ரிஷிகாவுக்கு ஒன்னும் ஆகாது. அவளுக்கு தெரியும். அவளுக்கு எதாவது ஒன்னுனா அதனால பாதிக்க படுறது அவ மட்டும் இல்லை.. அவள சுற்றி இருக்க நாமும் தான்னு.. அப்படி இருக்கும் போது நமக்கு இவ்வளோ பெரிய கஷ்டத்தை கண்டிப்பா கொடுக்க மாட்டா... நீங்க அழாம தைரியமா இருங்க...” அவரை முடிந்த மட்டும் சமாதானம் படுத்தி விட்டு தனியே போய் அமர்ந்தவளின் விழிகள் அத்தனை நேரம் அடக்கிய அழுகையை வெளிகொணர... வனிதா ஆதுரமாய் கை பற்றினாள்.
மருந்து வாங்கி கொடுத்து விட்டு வந்த மஹேனும் அவளின் அந்த பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.
“மஹிமா, எங்களுக்கு தைரியம் சொல்லிட்டு நீயே அழலாமா?”
“பயமா இருக்குடீ? ஊசி ஸ்மெல், மருந்துனாலே அலறுவா இப்போ தன்னையே மறந்து போய் அதுலயே அடங்கி இருக்கா.. அவளுக்கென்ன தலையெழுத்தா இப்படில்லம் இருக்கனும்னு..ஏன்? இப்படி ஆகிட்டா...டாக்டர் சொல்றாரு கொஞ்ச நாளாவே அவ எதையெல்லாமோ நினைச்சு தன்னை தானே கஷ்டபடுத்தி இருக்கா...அது என்னனு நம்ம கிட்ட கூட சொல்லலையே வனிதா.. சொல்லி இருந்தா இவள இப்படி கொண்டு வந்து விட்டுருப்போமா?”
“ஏன் சொல்லல மஹிமா? அவ தான் சொல்லிருக்காளே.”
புரியாமல் விழித்த மஹிமாவிடம் கையில் இருந்த கவரை காண்பித்து தனக்கு தெரிந்த தகவலையும் சொன்னாள்.
“எனக்கு தெரிஞ்சி இவளோட கவலை சகி சார் தான்.”
கண்ணீரை துடைத்து விட்டவள் திரும்பி மஹேனிடம்
“மஹேன், நீ அப்பா அம்மாவ பார்த்துக்கோ நாங்க ஒரு வேலையா வெளிய போய்ட்டு வரோம்.”
“மஹிமா..”
“ஸ்ஸ்..வனிதா நீ வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.
தலையில் கை வைத்து கவுதமின் முன் அமர்ந்திருந்தான் சகி.
“பாவம்டா அவ....” இதை சொன்னது நிச்சயம் கவுதம் இல்லை.
சகியின் இந்த வார்த்தை மற்றவனின் நெற்றி பொட்டை சுருங்க வைத்தது. “ரொம்பவே மெலிஞ்சு போயிருக்காடா...” குரலில் வழிந்த சோகம் நண்பனுக்கு புரிந்திருந்தது.
புயலென உள்ளே புகுந்த மஹிமாவை தொடர்ந்து வந்த வனிதாவையும் பார்த்தவர்கள், ‘என்ன ?’ என்பது போல் தங்களுக்குள் பார்த்து கொண்டனர்.
“என்ன ஆச்சு வனிதா...?” கவுதம் கேட்டான். எதோ கூற வாயெடுத்த வனிதாவின் கை பிடித்து தடுத்த மஹிமா,
“கவுதம் சார், நான் உங்க ஃப்ரண்ட் கிட்ட கொஞ்சம் பேசனும்.” வார்த்தை கவுதமிடம் என்றாலும் விழிகள் சகியை சுட்டு கொண்டிருந்தன.
“என்ன மஹிமா..??” புரியாமல் விழித்து கொண்டே சகி கேட்டு வைக்க..
அதற்காகவே காத்திருந்தாற் போல்
“உங்களுக்கு மனசு என்ன கல்லா...? இல்ல மனசே இல்லையா?”
“மஹிமா என்னதிது.?” கவுதம் கத்த தொடங்கினான்.
“கவுதம் நீ சும்மா இரு” என்றவன் திரும்பி மஹிமாவை பார்த்தான்.
‘எனக்கும் மனசு இருக்கு... அதுல மகாராணியா ஒருத்தி உக்காந்து இருக்கா....’ அவன் மனம் பதில் கூறியது.
“அவ என்ன தப்பு பண்ணினா சார். உங்கள காதலிச்சா ... அதுவும் தப்புன்னு சொல்ல முடியாது. அப்படி இருக்க ஏன் சார் அவள் உணர்வுகளோட விளையாடுறீங்க?”
“மஹிமா...என்ன பேச்சு இது...?” இடையிட்டான் கவுதம்.
‘சகி ரிஷிகாவை எந்த அளவு விரும்புகிறான் என்பது தனக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்க அவன் உணர்வுகளை மதிக்காதவன் என்ற ரீதியில் இவள் பேசி வைக்கிறாளே என்ற கோபம். உணர்வுகளோடு தன் நண்பன் படும் பாடை அவனே அறிவான்.
“கவுதம், உன்ன சும்மா இருன்னு சொன்னேன்ல...”
‘நீ மட்டும் தான் தோழிக்கு ஏற்று பேச வருவாயா? உங்கள் நட்புதான் அவ்வளவு ஆழமானதா? ரிஷிகாவிற்கு மஹிமா போல் சாஹித்யனுக்கு கவுதம் நின்றான்’ ஆனாலும் மஹிமாவை பேச விட்டு கேட்டு கொண்டிருந்தான் சாஹித்யன்.
கவுதமை ஒரு பார்வை பார்த்த மஹிமா சகியிடம் திரும்பி,
“கவுதம் சார உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?”
“என்னோட சின்ன வயசுல இருந்தே அவன் எனக்கு நண்பன்மா..”
"ஹ்ம்.. நண்பன் இந்த நண்பன எந்த அளவுக்கு புரிஞ்சி வச்சிருக்கீங்க.. நீங்க? இந்த உங்க நண்பன் கல்யாணம் பண்ண போறது எங்களோட தோழி வனிதாவைனு உங்களுக்கு தெரியும். ஆனால், அது காதல் கல்யாணம்ன்றது உங்களுக்கு தெரியுமா?”
‘என்ன?’ என்பது போல் சகியும் ‘அய்யோ’ என்ற ரீதியில் கவுதமும் பார்க்க.... வனிதாவின் பார்வையை கணக்கிட முடியவில்லை.
“ஆமா எப்போதுல இருந்துனு எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நாள் வனிதாவை பார்த்த கவுதம் சாரின் கண்ணுல ஒரு ஈர்ப்பு தெரிஞ்சது. அதே சமயம் வனிதா கிட்ட அப்படி எந்த ஒரு மாறுதலும் தெரியலை. காரணம் அவளுக்கு இந்த காதல் விஷயத்துலலாம் நம்பிக்கை இல்லை. வீட்டுல பார்க்குறவனை தான் காதலிக்கனும் கல்யாணம் செஞ்சிக்கனும்னு முடிவோட இருந்தவ.. இது தெரிஞ்ச கவுதம் சார் வனிதா வீட்டுல கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருக்காங்கனு தெரிஞ்சதும் அவருக்கு தெரிஞ்ச தரகர்ட்ட வனிதாவோட போட்டோ கொடுத்து தன் வீட்டுல கொடுக்க சொல்லி தன்னோட அப்பா- அம்மாவ வச்சே வனிதாவோட அப்பாட்டயும் பேசி கடைசயா எங்க வனிதாட்டயும் பேசி இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்காங்க... இது உங்களுக்கு தெரியுமா?”
‘தெரியாதே?’ என்றொரு அடி பட்ட பார்வை அவனிடம்.
ஒரு நாள் வனிதா தங்களிடம் வந்து கவுதமை சந்தித்ததையும்... வீட்டினரின் முடிவையும் கூறும் போது தோன்றிய சிறு சந்தேகம்...
மற்றொரு நாள் வனிதாவின் வீட்டிற்கு வந்திருந்த தரகரிடம் கை குலுக்கி விடை பெற்று கொண்டிருந்த கவுதமை பார்த்ததும் உறுதியாகி இருந்தது.
எல்லாவற்றையும் சேர்த்து நீண்ட விளக்கமாய் இவள் சொல்லி முடித்து கவுதமை பார்க்க,
அவன் பார்வை ‘உனக்கு எப்படி தெரியும்?’ என்று கண்ணாடியாய் காட்டி கொடுத்தது.
0 Comments