16. உனது விழியில் எனது காதல்





உண்மையில் அவன் அன்று வனிதாவிடம் தன் காதலை சொல்லத்தான் வரவழைத்தான். பின் தன் லீலைகளை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருந்தவன் கோடிட்டு கூற தொடங்கும் முன்னரே வனிதா காட்டிய கோபம் அவனை சிந்திக்க வைத்து பின் அவள் வழியிலேயே சென்று விட்டான். 
ஆனால் இந்த இடைபட்ட நாட்களில் அவனே அவளிடம் இதை பற்றி கூறியிருக்க வேண்டும். உண்மையில் மறந்து போனான். எத்தனையோ நேரம் ஏதேதோ பேசியவனுக்கு இதை பேச மறந்து போனது தான் உண்மை.
 இப்போது மஹிமா கூறியதும் இவன் பயந்தது. 
‘வனிதா என்ன நினைப்பாளோ?’ என்று தானே தவிர இந்த விஷயத்தை மறைக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அவன் கவலையோடு வனிதாவை பார்க்க...
 அவள் விழி நீரை துடைத்து கொண்டிருந்தாள். அவசரமாக அவள் அருகில் வந்தவன், 
“வனிதா, என்ன மன்னிச்சுடு... நானே உன் கிட்ட இத பத்தி பேசி இருக்கனும். ஆனால் உண்மையிலேயே மறந்துட்டேன்டி” அவன் குரலில் இழைந்த சோகம் அவளை தாக்க அவனை பார்த்து இயல்பாய் புன்னகைத்து, 
“விடுங்க கவுதம், முடிஞ்சத பத்தி பேசி ப்ரயோஜனம் இல்லை. எனக்கு நம்மளோட கடந்த காலத்த பத்தி கவலை இல்லை. அது போல எதிர் காலத்த பத்தின எதிர்பார்ப்பும் இல்லை. இதோ இந்த நிமிஷம்... இந்த நொடி ... நான் உங்கள காதலிக்கிறேன் அவ்வளவு தான்.” உணர்ச்சி பெருக்குரலில் அவள் கூற அவசரமாய் அவள் அருகில் வந்தவன் அவள் கைகளை பற்றி கொண்டான். 
ஒரு காதலனுக்கு, தான் தன் காதலியால் காதலிக்க படுகிறோம் என்பதை விட மிக பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும். 
அதை ஏற்படுத்தி கொடுத்த மஹிமாவை நன்றியோடு நோக்கினான். அவளும் அதை ஆமோதிப்பதாய் விழியசைத்தாள். 
திரும்பி சகியை பார்த்தவனின் விழிகள் அப்படியே நின்றது. 
“சகி....” 
“கவுதம் மன்னிச்சுடுடா... என்னோட உணர்வுகள்ளயே இருந்த நான் உன்னோட காதலை புரிஞ்சிக்காம போய்டேன்டா.” அவன் விழிகள் கலங்கியிருந்தது. 
“சகி, இன்னொரு முறை இந்த மாதிரி பேசுன உன்ன கொன்னுடுவேன். எனக்கு தெரியும் டா... நீ உன்னோட உணர்வுகளோட எந்த அளவுக்கு போராடிட்டு இருந்தனு... நிச்சயமா நீ வேணும்னே அப்படி இருக்க கூடிய ஆள் இல்லை. அதனால நீ யாருக்கும் உன்னை பத்தி... நம்மளோட நட்பை பத்தி ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்லைடா...” 
அவன் பார்வை சற்று நேரத்திற்கு முன் நன்றியோடு பார்த்த மஹிமாவை இப்போது சுட்டு கொண்டிருந்தது.
 பதிலுக்கு அவளும் முறைத்தாள். 
“என்ன சார்..? உண்மைய சொன்னா உங்களுக்கு கோபம் வருதா?”
 “என்ன உண்மைய நீ சொன்ன மஹிமா?” 
“இதோ உங்க ஃப்ரண்ட் ... என் ஃப்ரண்டோட காதலை புரிஞ்சிக்கலைன்ற உண்மைய சொன்னேன்.” 
அடிப்பட்ட பார்வை சகியிடம் அவன் கையை ஆதரவாய் அழுத்தியவன். “உனக்கு தெரியுமாக்கும் இவன் அவ காதலை உணரவில்லைனு.”
 “ஹ்ம்.. உணர்ந்திருந்தா என் ஃப்ரண்ட இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருப்பாரா?” அவள் குரல் கரகரத்தது.
 “என்ன? நீ என்ன சொல்லுற மஹிமா ? ரிஷிகா ... இப்போ எங்க இருக்கா? அவ ... அவளுக்கு ஒன்னுமில்லையே?” மஹிமாவின் கை பற்றி குலுக்கினான் சாஹித்யன். 
“கைய எடுங்க சார்... இப்போ வந்து கேளுங்க...என்ன ஆச்சுனு?” 
அத்தனை நேரம் மிடுக்காய் பேசியவள் இப்போது அழுகிறாள் குழந்தையாய்.
 “அய்யோ,, மஹிமா, உனக்கு என்னை திட்டனும்னா ஒரு நாள் முழுக்க வேணும்னாலும் திட்டு நா கேட்டுக்றேன். ஆனால், ரிஷிகா இப்போ எங்கனு சொல்லு...?” அவன் விழிகளும்... அவன் குரலும் மஹிமாவிற்கு உரைக்கவில்லை. 
 அவள் செவிகளில் மருத்துவரின் கூற்றே விழ.. விழி நீர் சிந்தி கொண்டிருந்தாள்.
 “வனிதா... நீயாச்சும் சொல்லு?” அவன் குரலில் அத்தனை பரபரப்பு. 
விழி கசிந்து கொண்டே இடையோடு சொல்லி முடித்தாள் வனிதா.
 சிலை போல் அப்படியே அமர்ந்தான் சாஹித்யன். அவன் பின்னோடு சென்று அவன் தோளை பற்றினான் கவுதம்.
 “கவுதம், நான் தப்பு பண்ணிட்டேன்டா.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். மஹிமா சொன்னது போல எனக்கு மனசே இல்லைடா... இருந்திருந்தா என்னோட காதலிய நான் இந்த அளவுக்கு கஷ்டபட விட்டுருப்பேனா? சொல்லு... என் உணர்வுகள மட்டுமே பார்த்து என் தரப்புல இருந்து மட்டுமே யோசிச்சு அவ படுற கஷ்டங்கள் என் கண்ணுக்கு தெரியாம போச்சேடா... இதோ இன்னக்கி கூட அவள பார்க்காம திரும்பிட்டேன். இத நினைச்சும் ரொம்பவே கஷ்ட பட்டுருப்பாளோ... என்னால தான் எல்லாமே என்னால தான்.... எனக்கு மன்னிப்பே கிடையாது கவுதம்... எனக்கு அவள பாக்கனும்டா... இப்பவே...” 
கண்ணீரோடு புலம்பியவனை தூக்கி நிறுத்தி வனிதாவிடம் மருத்துவமனையின் முகவரி கேட்டு காரில் அவர்களை அழைத்து சென்றான். 
வழியில் விடாமல் புலம்பி கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்தாள் மஹிமா... ‘என்னதிது?... தன் தோழியின் காதலை மதிக்காதவனை நான்கு கேள்வி கேட்க வேண்டும்’ என்ற உத்வேகத்தில் வந்தாள். 
ஆனால் இப்போது இங்கு என்னவென்றால்? சாஹித்யனின் செயல்பாடு தலையை சுற்றியது. ‘ஆக இவனுக்கும் அவள் மேல் காதல் உள்ளது. அப்படியென்றால் எது அவர்களை தடுக்கிறது.?’ அருகில் அமர்ந்து சகியையே பாவமாய் பார்த்து கொண்டு வந்த வனிதாவின் செயலும் அவளை குழப்பியது. 
‘ஆக எதோ இருக்கிறது. தனக்கு தான் தெரியாமல் போய் விட்டது. எது எப்படியோ தன் தோழியின் காதல் கை கூடினால் மகிழ்ச்சி.’
 விடாமல் புலம்பியவனை பாவமாய் பார்த்தாள் மஹிமா. 
மருத்துவமனை வளாகத்திற்குள் கார் நிற்க.. நால்வரும் இறங்கி நடந்தனர். எதிர்பட்ட மஹேனிடம், 
“மஹி.. ரிஷிகா...?” என வினவ, உதட்டை பிதுக்கினான் அவன். 
வட்ட வடிவ வாயில் வழியே சகி ரிஷிகாவை பார்க்க... தன் நிலை மறந்து கிடந்தாள். அவசரமாக டாக்டரின் அறைக்குள் நுழைந்தான். 
இது எதுவுமே தெரியாமல் விட்டத்தை வெறித்தனர் ரிஷிகாவின் பெற்றோர். அவர்களிடம் தன்னால் இயன்ற ஆறுதலை கூறி விட்டு டாக்டரின் அறைக்கு சென்றான் கவுதம். 
“டாக்டர், ப்ளீஸ் புரிஞ்சிகோங்க... நா அவள பாக்கனும்... கவுதம் நீயாவது சொல்லுடா..” 
“சார் நீங்க புரிஞ்சிகோங்க பேஷன்ட் ரொம்ப வீக்கா இருக்காங்க இந்த மாறி நேரத்துல அவங்கள டிஸ்டர்ப் பண்றது சரியில்லை.” நண்பனை பார்க்கவும் பாவமாக அதே சமயம். டாக்டரின் கூற்றும் உண்மையாக இருக்க என்ன செய்யவென்று கையை பிசைந்தான். 
எதேதோ பேசி பேசி பின் கடைசியில் .... டாக்டரை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான் சகி.
 “சரிங்க... ரெண்டு நிமிஷம் தான் சீக்கிரம் போய்ட்டு பார்த்துட்டு வாங்க... பட் எந்த விதத்துலயும் பேஷன்ட் டிஸ்டர்ப் ஆகாம பார்த்துகோங்க” என்ற நிபந்தனையோடு உள்ளே சென்றான். 
கட்டிலின் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவளின் தளிர் கரங்களை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன், “ரிஷிகா..” மென்மையாய் அழைத்தான். 
எந்த ப்ரதிபலிப்பும் இல்லை அவளிடம். 
“என்னை மன்னிச்சுடு ரிஷிகா...” கண்ணீரோடு கூறிய அவன் வார்த்தைகளை கேட்க அருகில் இருந்த நர்சுக்கே பாவமாய் இருந்தது. ஆனால் இதை உணரும் கட்டத்தை அவன் கடந்திருந்தான். 
“எனக்கு மன்னிப்பு கேட்கற தகுதி இல்லையோனு தோணுது ரிஷிகா..ஆனாலும் கேக்குறேன். என்னை மன்னிச்சுடு.. இல்லைனா தண்டிச்சுடு... ஆனால் இது?? இந்த உன் கோலம்... எனக்கு பயமாய் இருக்கு ரிஷிகா... இப்படி ஒரு தண்டனைய எனக்கு கொடுத்துடாத... இப்படி உன்னை பார்க்க என்னால முடியலடி... வந்துடு என்கிட்ட ... வந்து என்னை எப்படி வேண்டும்னாலும் தண்டி... நா ஏத்துக்கறேன்.. ஆனால் நீ எழுந்திரிக்கணும்... கண் விழிக்கணும் அது மட்டும் எனக்கு போதும்டி...” குழந்தை போல் கூறிவிட்டு வெளியே சென்றவன் அறையின் வாயிலில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தான். 
அவன் தோளை ஆதரவாய் அழுத்தினான் கவுதம். நடப்பவற்றை புரிந்தும் புரியாமலும் பார்த்து கொண்டிருந்த ரகுராமனின் நெற்றி சுருங்கியது.

 ** 

Post a Comment

0 Comments