02. நட்பெனும் பூங்காற்றே

 



தர்ஷினி, தாரணியோடு ஒன்றாய் கல்லூரியில் படித்தவள்.

தாரணியை விரும்பிய காளையர் வட்டத்தில் கன்னியாய் அவளை… அவள் புன்னகையை விரும்பியவள்.

தர்ஷினிக்கு தாரணியை “ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னால் அது இரு வார்த்தைக்குள் அடங்காது…

வார்த்தையை கோர்த்து வடிவமைக்க முடியாத அளவுக்கு தாரணியை பிடிக்கும்.

எந்த அளவுக்கு? அதை அவளே இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்வாள்.

கிட்ட தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தர்ஷினி தாரணியை பார்க்கிறாள்.

தூரத்தில் வரும்போதே 'தாரணி தானோ!' என்று மனதிற்குள் நினைத்து வந்தவள்,

அருகில் நெருங்கும் போது 'அவளே தான்' என்று உள்ளம் துள்ள அவள் அருகில் வந்து அவளை விசாரித்தாள்.

அதற்குள் தன்னை சரி படுத்தி கொண்ட தாரணி,

“ஹாய்” என்றாள் அமைதியாக.

அருகில் நின்று கொண்டிருந்த பெண்மணியை தர்ஷினி பார்க்க…

இருவரும் அழகாய் புன்னகைத்து கொண்டனர்.

“அய்யோ பஸ் கிளம்ப போகுது… தாரணி வா…” என்று அவளையும் கையோடு பஸ்சுக்குள் ஏற்றினாள் தர்ஷினி.

வந்திருந்த பெண்மணி அவரின் இடம் போய் அமரவே,

தன் இருக்கைக்கு அருகில் தாரணியை அமர்த்தி விட்டு தானும் அமர்ந்து கொண்டாள்.

“ம்ம்ம்… சொல்லு தாரணி நீ எப்படி இருக்க?”

அவளுக்கு விரக்தியாய் புன்னகை சிந்தியவள்,

“நல்ல இருக்கேன். நீ ?”

அவள் புன்னகை கண்ட தர்ஷினி முகம் சுருங்கியது.

‘எப்போதும் அவள் விரும்பும், தாரணியின் சிரிப்பில் இருக்கும் உயிர்ப்பை இன்று காணவில்லையே.'

“என்ன ஆச்சு தரூ? ஏன் ஒரு மாதிரியா இருக்கு உன் முகம்?”

ஓர் நொடி அவள் முகம் தன் நெஞ்சின் வலியை காட்ட மறு நொடி அதை மறைத்தவள்,

“இல்லையே. அப்படி ஒன்னும் இல்லை. நான் எப்போதும் போல தான் இருக்கேன்”

வேதனையை மறைத்து அவள் கூறுவது தர்ஷினிக்கு புரிய,

'அதுசரி, இவளுக்கு ஏதோ கவலை. ஆனால் என்னிடம் தான் கூற மறுக்கிறாள்.

மனதில் இருப்பதை என்னிடம் கூற நான் அவள் அனு இல்லையே ' என்று மனதிற்குள் பேசி கொண்டு,

“ சரி தாரணி, அனு எங்க? எப்பவும் ரெண்டு பேரும் தானே ஒன்னா இருப்பீங்க. இரத்தமும் சதையும் போல. அவளை காணோம்.”

'என்னதான் அவள் இயல்பாய் கூற நினைத்தாலும்…'

கல்லூரி படிக்கும் போது,

' இந்த தாரணி கண்ணுக்கு நாமெல்லாம் தெரிய மாட்டோமா? எப்போவும் அனு மேல் தான் பாசமாவே இருக்காளே ' என்று அனுவின் மேல் சிறு பொறாமை எழும்.

அது இப்போதும் எழுந்தது.

'ஒரு முறையாவது நான் அனுவாய் பிறந்திருக்க கூடாதா?' என்று எண்ணுவாள்.

ஆனாலும் முயன்று தாரணியிடம் பேச்சு கொடுப்பாள்.

தாரணியும் அழகாய் இவளிடம் பழகினாள் தான்.

ஆனாலும் ஏதோ ஒன்று தர்ஷினிக்கு குறைவது போல் தோன்றும்.

தன் எண்ணங்களில் இருந்து மீண்டு அவள் தாரணியை பார்க்க… அவள் கண்ணீரை துடைத்து கொள்வது தெரிந்தது.

அத்தனை நேரம் அழக்கூடாது என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள்,

தர்ஷினி கேட்ட " இரத்தமும் சதையுமா தானே இருப்பீங்க " கேள்வியில் மனதின் காயம் விழி வழி சிதறியது.

தர்ஷினி பதறி போய்,

“ என்ன ஆச்சு தாரணி? ஏன் அழுற?”

மறுநொடி தாரணியை மீறி அவள் கண்கள் கண்ணீரை சிந்த தொடங்கவே அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டாள் தர்ஷினி.

அதற்கு மேல் எதுவுமே கேட்கவில்லை.

‘ தான் கேட்ட ஏதோ ஒன்று தான் அவளின் இந்த அழுகைக்கு காரணம்.

ஆக இனி அதை பற்றி பேச கூடாது '

எண்ணியபடி அவள் தோளை தட்டி கொடுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் தன்னை மீட்ட தாரணி,

' நாம என்ன செஞ்சிட்டு இருக்கோம்? உனக்கு அறிவில்லை தாரணி. எத்தனை முறை பட்டாலும் நீ திருந்தாத ஜென்மம்.

இந்த உலகத்தில் உனக்குன்னு இனி யாரும் இல்ல'

அப்படி அவள் மூளை கூறவும் மனம் முயன்று 'அவன்' முகத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தது.

'அப்போ இவன் யார்?' என்று கேட்டது.

விழியை மூடி திறந்தவள்,

' அவன் எனக்கு யாரும் இல்லை..' என்று மனதிற்கு பதில் கூறி விட்டு…

'மறுபடியும் சொல்றேன்…உனக்குன்னு யாரும் இல்லை. இந்த நொடி முதல்… இதை ஏற்க பழகி கொள்.' என்று திட்ட வட்டமாக கூறி கொண்டாள்.

அருகில் அமர்ந்து தன்னையே பார்த்து கொண்டிருந்த தர்ஷினியை பார்த்து புன்னகைத்தாள்.

அவள் புன்னகையில் இப்போது கொஞ்சம் உயிர்ப்பு வந்தது தர்ஷினிக்கும் சந்தோசம் திரும்பியது.

“ சாரி தாரணி.. நான் தான் உன் கிட்ட ஏதோ கேட்டு.. நீ மறக்க நினைக்குறதை நினைவு படுத்திட்டேன் நினைக்கிறேன்.

இனி அதை பத்தி பேச மாட்டேன். உனக்கா சொல்லணும் தோணுச்சுனா சொல்லு.

ஆனா இப்போ நான் கேக்குற கேள்விக்கு மட்டும் ஆம் இல்லைன்னு பதில் சொல்லு.

இப்போதைக்கு எங்க போகணும்னு தெரியாம இருக்க… அப்படி தானே?”

தாரணி பதில் சொல்லாது தலை குனிந்த படி இருக்கவே,

“ உன்னோட இந்த அமைதியை நான் ஆமான்னு எடுத்துக்குறேன்.”

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த தர்ஷினி திடீரென்று அந்த கேள்வியை கேட்டாள்.

“ ஏன் தாரணி, நீ என் கூட எங்க வீட்டுக்கு வரியா?” என்று.

அதிர்ந்து போய் பார்த்தாள் தாரணி.


Post a Comment

0 Comments