தர்ஷினி அப்படி திடீரென்று “ என் கூட… என் வீட்டுக்கு வரியா?” என்று கேட்பாள் என எதிர் பார்க்காத தாரணி அதிர்ச்சியை தன் கண்ணில் காட்ட,
அவளின் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டினாள் தர்ஷினி.
“ ஏய், நான் என்ன என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னா கேட்டேன்? இப்படி சாக் ஆகுற. என் வீட்டுக்கு வரியானு தானே கேட்டேன்.”
“ இல்ல வேண்டாம்” பட்டென்று பதில் கூறி விட்டு ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்.
அவளுக்கு கல்லூரி முடித்து விட்டு அனு வீட்டில் தங்கியது. அதன் பின் நடந்தவை என்று ஒவ்வொன்றாய் மனதில் சுழன்றது.
தாரணியும் அனுவும் கடைசி தேர்வை எழுதிவிட்டு அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.
“ ஏய் ஹனி , நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா?” என்று துள்ளி குதிக்காத குறையாய் தாரணி கூறினாள்.
“ அப்படியா” என்று அனு அவளை கேலி பேச,
“ ச்சு” என்று அவளை உதறி விட்டு கைப்பையில் இருந்த போனை எடுத்து அழைத்தாள்.
“ யாருக்குடி?” என்ற அனுவின் கேள்விக்கு
“ஸ்ஸ்” என்று வாயில் கை வைத்து விட்டு போனில் பேசினாள்.
“ ஹலோ சித்தி, நான் தாரணி பேசுறேன்”
“சொல்லு என்ன விஷயம்?”
'மருந்துக்கு கூட எப்படி இருக்கானு கேக்க மாட்டங்களா' என்று நினைத்து கொண்டு
“ என்னோட படிப்பு முடிஞ்சது”
மறுமுனை ஒரு நொடி அமைதி பின்,
“ அப்புறம்”
“ இல்ல... அப்பா என் படிப்புக்குன்னு தந்த பணம் பாதிக்கு மேல் அப்படியே இருக்கு. இங்க எனக்கு அவ்வளவா செலவு ஆகல. அதை உங்க கைக்கு சேர்க்க சொல்லி வக்கீல் அங்கிள் கிட்ட போன்ல சொன்னேன். கையோட அதுக்கான பேப்பர்ஸ் கூட அனுப்பிட்டேன்.
இன்னும் ஒரு வாரத்தில உங்க கைக்கு பணம் வந்துடும். அத தம்பி படிப்புக்கு வச்சுக்கோங்க.
எனக்கு இங்க இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்துல வேலை கிடைச்சுடும்.
அதனாலே என்னை பத்தி நீங்க கவலை பட வேண்டாம். நான் வச்சிடுறேன்”
அவ்வளவு தான் என்பது போல் ஒரு பெரிய மூச்சு காற்றை வெளிய விட்டவள் தன்னையே முறைத்து கொண்டிருந்த அனுவை நோக்கினாள்.
“ என்ன ஹனி .. ஏன் இப்படி என்னை சைட் அடிக்க?”
என்றவளை கைகளால் அடிக்க வேண்டும் என்ற வெறியே வந்தது.
“ ஏன்டி லூசா நீ? என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?
அது உங்க அப்பா உனக்குன்னு சேர்த்த பணம்... அது திரும்ப அவங்கள்ட்ட கொடுக்குற!”
கொஞ்சம் நேரம் அமைதியான தாரணி பின் மெல்ல,
“ ஹனி உனக்கே தெரியும். அப்பா எனக்கு பணம் சேர்த்து வச்சது எனக்கு சந்தோசம் தான்னாலும் சித்தி முகம் சுளிச்சது... எனக்கு எப்படியோ இருந்துச்சு... அப்படி இந்த பணத்த உபயோகிக்கணுமா என்று கூட யோசிச்சேன்.
ஏன்? என் குணம் உனக்கு தெரியாதா? என் கிட்ட யாராச்சும் கொஞ்சம் முகம் சுழிச்சாலும் அதுக்கு அப்புறம் அவங்க சொத்தையே எழுதி கொடுத்தாலும் அவங்க முகம் பார்க்க மாட்டேன்னு தெரியாதா?
இருந்தாலும்,
நானும் என் அப்பாவுக்கு மகள் தானே... என்னை படிக்க வைக்க உரிமை அவங்களுக்கு உண்டு தானே என்று மனச தேத்திட்டு... என் படிப்புக்கு மட்டும் அதுல இருந்து செலவு பண்ணேன்.
ஆனா என்னோட தனிப்பட்ட செலவுகளை நான் அதுல செய்யலைன்றது உனக்கு தெரியும்.
எனக்கு அது பிடிக்கவும் இல்லை.
அதான் சின்ன வயசுல எப்போவோ படிச்ச தையல் வச்சி...
அதோட இங்க ஸ்கூல் படிக்க ஆரம்பிக்கும் போதே அந்த திறமையையும் வளத்துக்கிட்டு… அப்புறம் காலேஜ் சேர்ந்த கொஞ்ச நாள்ல இத பத்தியும் மேற்கொண்டு படிச்சிட்டு... இப்போ நம்ம காலேஜ் பொண்ணுங்க மட்டும் இல்ல... அவங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு... கிட்ட தட்ட நிறைய பேர் என் கிட்ட தைக்க துணி தராங்க...”
அவள் சொல்வது உண்மை தான் என்று அனுவும் அமைதியாக இருக்க...
“ இப்போ கைல கொஞ்சம் காசு இருக்கு ஹனி . அதை வச்சி முதல்ல பெண்கள் தனியா வீடு எடுத்து தங்குறாங்களே.. அந்த மாதிரி தங்கி அங்க இருந்த படியே வேலைக்கு போக ஆரம்பிக்கணும். நம்ம சீனியர் அக்கா கிட்ட இத பத்தி பேச நைட் வரேன்னு சொல்லி இருக்கேன்”
அடுக்கடுக்காய் தன் திட்டத்தை கூறி கொண்டே வந்தவள்,
“ அய்யோ ஹனி ... நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா?
இந்த சிறையில இருந்த பறவை, கதவை திறந்து விட்டா அதுக்கு வருமே ஒரு சந்தோசம்... அந்த அளவுக்கு..
இந்த நொடி...
நான்.. என் வாழ்க்கை... என் உலகம்...
தலையில் இருந்த ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு பாரம் இறங்கின மாறி ஒரு ஃபீல்.
அப்படியே எந்திருச்சு கத்தனும் போல இருக்கு...”
சந்தோசத்தில் மூழ்கி கொண்டிருந்த தோழியை கன்னத்தில் கை ஊன்றி பார்த்து கொண்டிருந்த அனு ,
“ சரி கத்து” என்றாள்.
“ என்ன நிஜமாவா?” விழி விரித்து இவள் கேட்க...
“ஆமா” என்று ஊக்கினாள்.
அவ்வளவு தான்...
“ யாயாயாயா ஹூஹூஹூ ஓஓஓ ஏஏஏஏஏ”
வாய்க்கு வந்தபடி இவள் கத்த... சுற்றி உள்ள அனைவருமே இவர்களை தான் பார்த்தனர்.
அதை எதையும் கருத்தில் கொள்ளாமல்,
சேரில் இருந்து வெளியே வந்தவள் அருகில் ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தையை வாங்கி அதை காற்றோடு சேர்த்து சுற்றி திருப்பி அவரிடமே கொடுத்து விட்டு கால் தரையில் பாவாமல் ஓடி வந்தவள் எதன் மேலேயோ மோதி யார் மேலோ விழுந்து...
அந்த நபரின் முகம் கூட பார்க்காமல்,
“ சாரி அண்ட் தாங்க்ஸ்” என்று ஒரு சேர உலரி விட்டு வெளியே வந்தாள்.
விருக்கென்று இவளை கடந்து போன வாகனத்தில் தன் சுயம் மீண்டாள்.
இவளின் பின்னே ஓடி வந்த அனுவும்..
“ எரும... இப்படியா லூசு மாதிரி” என்று இவளை திட்டினாலும் அவளுக்கும் சந்தோசம் தான்.
அதன் பின்...
“ நீ எதுக்கு தனியா வீடு எடுத்து தங்கனும். என் கூட எங்க வீட்டுக்கு வா.
அங்க உனக்கு என் அம்மா தான் உன் அம்மா...
என் அப்பா தான் உன் அப்பா...
என் உறவுகள் எல்லாம் இனி உன் உறவும் தான்” என்று இவளை கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்து தன் வீட்டிலேயே தங்க வைத்தாள்.
'ஆனால் அன்று அப்படி சொன்ன அதே அனு ... இன்று???'
என்ன முயன்றும் இவளால் இதை மறக்க முடிய வில்லை.
எரிமலையாய் கோபம் வெடித்தது.
'இந்த பாழாய் போன காதல்... என் வாழ்க்கையை இப்படி புரட்டி போடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை'
கண்கள் சிவக்க அதை தர்ஷினி அறியாமல் இருக்க விழிகளை மூடி திறந்தாள்.
ஆனால் தர்ஷினியோ ,
“ ஏன் தாரணி வரமாட்டேன்னு சொல்லுற?
எங்க ஊரு ரொம்ப அழகா இருக்கும். உனக்கும் பிடிக்கும்.
விருதுநகர் பக்கத்துல பஞ்சவனம் என்ற ஊர். ஒரு வாட்டி வந்து பாரேன். உனக்கு பிடிக்கும்.”
என்ன கூறியும் இவள் அசைவதாய் தெரியவில்லை.
“ ஏன் தாரணி நான் கூப்பிட்டா வரமாட்ட. இதுவே அந்த அனு கூப்பிட்டு இருந்தா இவ்வளவு யோசிச்சு இருப்பியா.. உடனே சரின்னு தானே சொல்லி இருப்ப”
ஒரு மாதிரியான குரலில் தர்ஷினி சொல்ல தாரணி கோவத்தில் கத்தி விட்டாள்.
“ வாயை மூடு தர்ஷி... எதுக்கு இப்போ அவளை எனக்கு நியாபக படுத்துற. அவ தான் இனி என் வாழ்க்கைல இல்லைனு ஆயிடுச்சே... திரும்ப திரும்ப அவள பத்தியே பேசுற... இப்போ என்ன? நான் உன் கூட உங்க ஊருக்கு வரணும் அவ்வளோ தானே. வாரேன் போதுமா” என்று கத்தி கொண்டே போக,
தர்ஷினியின் மிரண்ட விழியில் கோபம் குறைந்தாள்.
ஆனால் தர்ஷினிக்கு தாரணியின் இந்த கோவம் புதிது.
ஆனாலும் அவள் அதை ரசிக்க மறக்கவில்லை.
' அட தாரணிக்கு கோவம் கூட வருமா? ஆனா இவளோட கோபம் கூட எவ்ளோ அழகா இருக்குல்ல'
தாரணி தன் மேல் கொண்ட கோபத்தையும் நேசம் கொண்ட மனம் அவளுக்கு சாதகமாக யோசித்தது.
“ சரி சரி. இனிமே பேசலை… நீ வரேன்னு சொன்னியே அதுவே போதும் ” என்று கூறி விட்டு கைப்பையில் இருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் தண்ணீர் பாட்டலையும் எடுத்து தாரணியிடம் நீட்டினாள்.
அவளோ “என்ன?” என்பது போல் முறைக்க,
“ நானும் மனுஷி தானே. எனக்கும் பசிக்காது.. அதான்” என்று கூறி விட்டு அவள் கையில் திணித்து விட்டு கைப்பையை கீழே வைத்தாள்.
பாக்கெட்டை பிரித்து சில துண்டுகளை தாரணியிடம் நீட்ட,
“ எனக்கு பசிக்கலை” என்றாள்.
“ ஆனா உன்ன பாக்க வச்சு சாப்பிட்டா… என் வயிறு வலிக்கும் போலயே.”
குழந்தை போல் முகம் வைத்து கூறியவளை கண்டு சிரிப்பு வந்தது.
“ அப்பாடா… சிரிச்சிட்டியா,
இப்போ தான் இந்த முகம் அழகா இருக்கு.. ம்ம்ம் சாப்பிடு” என்று அவள் கையில் திணித்தாள்.
அவ்வளவு நேரமும் பசிக்கவில்லை என்று எண்ணி இருந்தவளுக்கு அத்தனை பசியும் எங்கு இருந்து தான் வந்ததோ.
ஐந்து நாட்களாகவே ' அவன் ' நினைவில் ஒழுங்காய் உணவை எடுத்து கொள்ளவில்லை.
இன்றும் மதியம் ஏதோ பேர் பண்ணி எழுந்து கொண்டாள்.
அதன் பின்னர், அனுவால் ஏற்பட்ட காயத்தின் வலியில் பசியை நினைக்கவும் இல்லை.
இப்போது தர்ஷினி அருகில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை எடுத்த பசி, அவள் ஏதேதோ பேசியபடி தந்த அத்தனை பிஸ்கெட்களையும் காலி பண்ணி இருந்தது.
வாழ்க்கையில் முதல் முறையாக தன் பசி அறிந்து அதை போக்கிய தர்ஷியின் மேல் அவளுக்கும் நேசம் துளிர் கொண்டது.
அது வளர்ந்து மரமாகுமா???
2 Comments