04. நட்பெனும் பூங்காற்றே

 


இரவு 12.30 அளவில் தூங்கி கொண்டு இருந்த தாரணியை எழுப்பினாள் தர்ஷினி.

அந்த சிறு தீண்டலிலும் சடக்கென்று இவள் எழ,

“ என்ன ஆச்சு தர்ஷி… ஊர் வந்துடுச்சா?” என்றாள்.

“ அது சரி, அதுக்கு காலைல ஆகிடுமே. ஆனா இப்போ வந்தது ஒரு ஹோட்டல்.

வா சாப்பிடலாம். நல்ல தூங்கிட்டு இருந்த எழுப்ப வேண்டாம்னு நினைச்சேன். ஆனா இனி இடையில எங்கேயும் நிக்காது போல. அதான் வா” என்று இவள் அழைக்க தாரணி மறுப்பு சொல்லாமல் உடன் சென்றாள்.

அந்த இரவு நேர ஹோட்டலில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவாறே தர்ஷினி அங்கிருந்த ஒருவரிடம்,

“ என்ன சார்? சாப்பாடு எல்லாம் ஃப்ரஷ் தானே, இல்ல மீஞ்சி போனதை எங்க தலைல கட்டிடலாம்னு பாக்குறீங்களா?”

இவள் கண்ணடித்து கேட்க அவரோ இவளை முறைத்து விட்டு,

“ இந்த பொண்ணுக்கு மட்டும் புது சாப்பாடு கொடுப்போம். உனக்கு இல்ல” என்று பல்லை கடித்தார்.

“ அய்யோ கதிர் அண்ணா… மீ பாவம் ப்ளீஸ் சாப்பாடு கொடுங்க”

வயிற்றை பிடித்து இவள் பாவமாய் கேட்க தாரணிக்கு ஒன்று புரிந்தது.

அது ' இந்த ஹோட்டல் இவள் வழக்கமாய் வரும் இடம் போல. அதான் இவ்வளவு சகஜமாய் உரையாடுகிறாள் ' என்பது.

மெல்ல சிரிப்பும் விரிந்தது அவளுக்கு,

“ நீ எப்பவுமே இப்படி தானா தர்ஷினி?”

“ இல்லையே, இப்படித்தான் எப்பவுமே” என்று கூறி சிரிக்க தாரணிக்கும் சிரிப்பு வந்தது.

“ ஆனா ஒன்னு தரூ, நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் நீ தான்” என்று கூற,

இவள் ' நான் என்ன செய்தேன் ' என்று புரியாமல் பார்த்தாள்.

“ ஆமா தரூ, எங்க வீட்டுல நான், அப்பா, அண்ணா மட்டும் தான்.

வீட்டுக்கு ஒரே பொண்ணுன்றதால என் மேல அண்ணாக்கும் அப்பாக்கும் பாசம் அதிகம்.

அண்ணா தான், நான் இங்க படிக்க வந்ததுக்கு காரணம்.

இங்க சொந்தக்காரங்க வீட்டில் தங்கி படிச்சேன்.

அப்போலாம் வீட்ட ரொம்ப மிஸ் பண்ணுவேன்.

ஒவ்வொரு தடவையும் அண்ணா பாக்க வரப்ப,

என்னையும் கூட்டிட்டு போய்டுங்க சொல்லி அழுவேன்.

அப்போ அண்ணா தான்,

“ இங்க உனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்ட தேடிக்கோ. அப்போ தான் உன்னோட கவலை கொஞ்சம் குறையும்ன்னு” சொன்னான்.

ஆனாலும் எனக்கு இங்க யார்கிட்டேயும் பேச பிடிக்கல.

அப்போ தான் நீ பண்ணுற அலம்ப பண்ணிட்டு சார் கிட்ட ரைடு வாங்கிட்டு இருந்த.. ஆனா உனக்கு எந்த பயமும் வரல.

காலேஜ்ல ஒருத்தன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்தப்ப…

என்ன தான் நீ அவன் மேல கோவப்பட்டாலும்… அவனுக்கு புரியுற மாதிரி எடுத்து சொன்னப்ப…

இதையே நான் எனக்கு நடந்து இருந்தா… நிச்சயம் அழுது ஊர கூட்டி அப்போவே அண்ணா கூட பஸ் ஏறி இருப்பேன்.

அப்போல இருந்து உன் மேல எனக்கு கொஞ்சம் ஈர்ப்பு வந்துச்சு. கிளாஸ்ல உன்ன கொஞ்சம் கொஞ்சமா கவனிக்க ஆரம்பிச்சேன்.

எப்போனு தெரியாம உன்ன எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது.

அண்ணன் கிட்ட அதை சொல்லி சந்தோச பட்டேன். அப்போ அண்ணன் சொல்லுச்சு,

“ உன் கிட்ட வந்து பேச சொல்லி” நானும் பேசுவேன்.

ஆனா நீ என் கூட என்ன தான் சகஜமா பேசினாலும் அதுல ஒரு ஒட்டல் இல்லையோனு தோணும்.

திரும்ப அண்ணாட்ட புலம்புனப்ப,

“ மத்தவங்க நம்மல, நம்ம அன்ப புரிஞ்சிக்கலனா என்ன?

நீ அவங்கள விரும்புற தானே. அத நினைச்சு சந்தோச படுவியா… அதை விட்டுட்டு இப்படி மறுபடியும் கண்ண கசக்குற” சொல்லி சமாதான படுத்திட்டு போனான்.

அப்புறம் தான் நீ என் கிட்ட எப்படி பேசினாலும் பரவாயில்லை. நான் உன் கிட்ட நல்ல தான் பேசுவேன். உனக்கு என்னை பத்தி நினைவில்லாட்டாலும் பரவாயில்லை.

எனக்கு உன்ன பாத்துட்டு இருந்தா போதும்னு இருந்தேன்.

இன்னொரு விசயம்,, இத சொன்ன நீ எப்படி எடுத்துப்ப தெரியல…

அண்ணா கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்.

அப்படியாவது… நீ என் பக்கத்துல இருக்க மாட்டியானு நினைச்சு…

ஆனா அவன் சிரிச்சுட்டு என் தலையை தட்டி விட்டுட்டு போய்ட்டான் லூசு”

அன்றைய தன் சிறுபிள்ளை நினைவில் முகம் கனிய கூறினாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்து போய் உட்காந்திருந்தாள் தாரணி.

' கடவுள் கொடுத்த இந்த கண்ணுக்கு தெரியாத அன்பை புரிஞ்சிக்காம போனதுக்காக தான்.. நான் நேசிச்ச அனுவின் அன்பை என்கிட்ட இருந்து பறிச்சுகிட்டானா?'

அத்தனை நேரமும் அவள் மனம் வசை பாடி கொண்டிருந்த கடவுளுக்கு தர்ஷினியின் அன்பை தெரிய படுத்தியதுக்கு நன்றி சொல்லியது.

“உனக்கு தெரியுமா? தரூ,

நீ அனு கூட பழகுறத பார்த்து ,

நான் அனுவா பிறந்து இருக்க கூடாதானு தோணும்”

அவசரமாக அவள் வாயை மூடிக்கொண்டு வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள் தாரணி.

“ வேணாம் தர்ஷீ… இன்னொரு தடவை அவ கூட உன்ன சேர்த்து வச்சி பேசாத. அவளை போல உன்னையும் இழக்க நான் தயாரா இல்லை.”

“ என்ன ஆச்சு தரூ? நீ ரொம்ப கஷ்ட படுறது புரியுது. என்னன்னு என் கிட்ட சொல்லு?”

“ எனக்கு அதை பத்தி நினைக்கவே பிடிக்கலை தர்ஷீ..”

“ இன்னைக்கே… இதுவே.. நீ அதை பத்தி நினைக்கிறது கடைசி தடவையா இருக்கட்டும் தரூ. சொல்லு… அப்போ தான் மனசுல உள்ள பாரம் கொஞ்சம் குறையும்.

உன்னோட பாரத்தை இறக்கி வைக்க… என் மனம் கூட ரெடியா தான் இருக்கு”

கண்ணடித்து கூறியவளை கண்டு தன்னுள் எழுந்த புன்னகையை மீறி

அவளுள் புதைய விரும்பிய சோகம் மெல்ல மீள் எழுந்தது.


Post a Comment

0 Comments