அனு சொன்னது போலவே, தாரணிக்கு சொந்தங்களை கொடுத்து இருந்தாள்.
தாரணி அந்த வீட்டில் ஒரு மகளாகவே வலம் வந்தாள்.
அனுவின் தாய் தந்தை, தாரணிக்கும் பெற்றவர்களாக இருந்தனர்.
காலை செய்தி தாளை புரட்டி கொண்டிருந்த தாணு ( அனுவின் அப்பா) முன் காபி கப்பை நீட்டினாள் தாரணி.
“ இந்தாங்க அப்பா.. சூடா காபி சாப்பிட்டுட்டு படிங்க” என்று புன்னகையோடு கூறினாள்.
அவரும் அதே புன்னகையோடு வாங்கி கொண்டு,
“ என்னமா அனு இன்னும் எந்திரிக்கலையா?”
“ உங்க மக என்னக்கி இவ்வளோ சீக்கிரம் கண்ணு முழிச்சு இருக்கா?” என்று தாரணி குடிக்க காபி கப்போடு அங்கு விஜயம் ஆனார் அனுவின் தாய் மஞ்சு.
“ அது சரி… இன்னக்கி அவளோட சேர்த்து எனக்கும் மண்டகப்படியா?” என்று அவர் கூற,
தாரணி வாய் மூடி சிரித்தாள்.
“ அம்மா விடுங்க.. அவள பத்தி தான் தெரியுமே… அப்புறம் எதுக்கு தேவை இல்லாம உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிகிட்டு… அப்பா பாவம் அவங்க என்ன பண்ணாங்க”
“ நீ சும்மா இரு தாரணி, அவளை கெடுக்கிறது இந்த மனுஷன் தான்.
ரொம்ப செல்லம் கொடுக்க வேண்டியது. நான் ஏதாச்சும் சொன்னா .. சட்டமா இவர் பின்னாடி வந்து ஒளிஞ்சுக்குறா… அப்போ எனக்கு கோவம் வராம என்ன செய்யும் சொல்லு?”
இவர்கள் பேசி கொண்டிருக்க, சாரி மஞ்சு புலம்பி கொண்டிருக்க அனு மாடி இறங்கி வந்தாள்.
“ அடடா, அம்மா காலை அர்ச்சனை எனக்கு தானா?” என்று டீப்பாயில் இருந்த ஃபிளாஷ்கில் இருந்து தனக்கும் காபியை எடுத்து கொண்டே கூறினாள்.
“ ஏன் அனு தினமும் இப்படி அம்மா கிட்ட வம்பு பண்ற.. கொஞ்சமாச்சும் அவங்க சொல் படி நடவேன்.”
“ அட போங்க டாட், இந்த அம்மா இதை செய்யாத அதை செய்… இப்படி இருக்காத… அப்படி இருன்னு ஆயிரம் கண்டிசன் போடுது… கடுப்பாகுது”
இவள் சலித்து கொண்டாள்.
“ ஹனி ஏன் இப்படி பண்ற…? அம்மா உன்ன தப்பா எதுவும் சொல்லலையே..
காலைல சீக்கிரம் எந்திரு. சமையல் வேலை கொஞ்சமாச்சும் கத்துகோ… எதிர்த்து பேசாத… இப்படி உனக்கு நல்லது தான சொல்லுறாங்க.. அதை கேட்டா தான் என்ன தப்பு?”
“ அப்படி சொல்லுடி. என் தங்கமே… இவளும் வந்து சேர்ந்து இருக்கா பாரு” அனுவை முறைக்க… அவள் இடுப்பில் கை கட்டி மற்ற இருவரையும் முறைத்தாள்.
“ என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்னை பத்தி? நானும் போனா போகுதுனு அமைதியா இருந்தா… இந்தாடி இவளே… எங்க அம்மாவ கைக்குள்ள போட்டுகிட்டு எனக்கே குழி பறிக்குறியா.. துரோகி .. உன்னை”
பல்லை கடித்து தாரணியை மொத்த… அவளும் சிரித்து கொண்டே வாங்கி கொண்டாள்.
இது அவர்களுக்குள் நடக்கும் வாடிக்கை தானே.
“ அதுசரி… இவ்வளோ சீக்கிரம் மேடம் இப்படி டிப்டாப்பா எங்க கிளம்பிட்டீங்க”
“ அது வந்து தரூஸ், இன்னைக்கு இளங்கோ மாமாக்கு பிறந்த நாள் அதான்.. கடவுளுக்கு ஒரு கை கொடுத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.”
இவ்வளவு நேரமும் வாயாடி கொண்டிருந்த அனுவின் முகத்தில் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் அப்படி ஒரு வெட்கம் வந்து அமர்ந்தது.
இளங்கோ அனுவின் மாமன் மகன்.
சிறு வயதிலேயே “இளங்கோவுக்கு தான் அனு ” என்று பெரியவர்கள் முடித்து வைத்து இருந்ததாலோ இல்லை…
இளங்கோவின் ஆளுமை திறன், பேசும் போதும் சிரிக்கும் போதும் கன்னத்தில் விழும் குழி, இன்னும் என்னென்னவோ அவனை அனுவுக்கு பிடிக்க காரணமாய் அமைந்தது.
அதுவே கண்மண் தெரியாத அளவுக்கு அவன் மேல் காதலாய் மாறியும் இருந்தது.
இதை விளங்க சொல்ல வேண்டும் என்றால்???
இளங்கோ, ஒரு டம்ளரில் விஷத்தை கொடுத்து…
“ இதில் விஷம் இருக்கு அனு . இதை நீ குடி” என்று சொல்வான் என்றால்?
மறு பேச்சு பேசாமல் அதை குடிப்பாள் அனு . “ சொல்வது என் மாமா ஆயிற்றே” என்று.
“ இந்த மலை உச்சியில் இருந்து குதி” என்று அவன் சொன்னால்…
குதித்த பின்பே ஏன்? என்று கேட்டாலும் கேட்பாள்.
இவ்வாறு செய்தால் தான் ‘செத்து விடுவோம்’ என்று எண்ணம் எல்லாம் அவளுக்கு வராது.
இப்படி செய்தால் அத்தானுக்கு பிடிக்கும் என்பது தான் அவள் எண்ணமாக இருக்கும்.
இவள் அளவுக்கு அந்த இளங்கோ இவளை விரும்புகிறானா? என்று கேட்டால், அது எழுதும் எனக்கே சந்தேகம் தான்.
பெற்றோர் மனதில் தன் திருமணம் குறித்த எண்ணத்தை அவனும் அறிவான்.
அதற்கு அவனும் மறுப்பு சொல்லவில்லை.
காரணம் இரண்டு…
இதுவரை எந்த பெண்ணிடமும் அவன் மனம் ஈர்க்க படவில்லை.
மற்றொன்று, பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு அனுவிடம் எந்த தவறும் தெரியவில்லை.
' எப்படியும் திருமணம் செய்ய தான் வேண்டும். அது பெரியவர்களின் விருப்பமாக இருந்தால் நல்லது தானே ' என்று அமைதியாகி விட்டான்.
சரி விளக்கம் போதும்.
திரும்ப கதைக்குள் பயணமாகலாம்.
வெட்க பட்டு நின்று கொண்டிருந்த அனுவை முடிந்த வரை ஓட்டி தள்ளி விட்டாள் தாரணி.
“ ஏய் தாரூஸ் சும்மா இரு..” என்று வெட்கத்துடன் சொன்னாள் பின்,
“ நீயும் வரியா கோவிலுக்கு…” இவள் கேட்க,
“ நீ மட்டும் போய் கடவுளுக்கு ஸ்பெஷலா நன்றி சொல்லிட்டு வா. எனக்கு தைக்க வேண்டிய ப்ளவுஸ்க்கு லேஸ், பீட்ஸ்லாம் வாங்க வேண்டி இருக்கு. அதனால் நான் மால் போறேன். முடிஞ்சா என்னை அங்க வந்து பிக்கப் பண்ணிக்கோ” என்று காலை உணவை முடித்து கொண்டு கிளம்பினாள்.
இங்கு நான் சொல்ல வேண்டிய ஒன்று.
அனுவின் நெருங்கிய தோழி தாரணி, இது வரை இளங்கோவை பார்த்தது இல்லை என்பது தான்.
அனுவின் காதலை நன்கு அறிந்தவள்… இது நாள் வரை அந்த இளங்கோவை போட்டோவில் கூட பார்த்ததும் இல்லை. பார்க்க வேண்டிய எண்ணமும் அவளுக்கு வரவில்லை.
அதே போல் அனுவும் தன் மனம் கவர்ந்த இளங்கோவின் இன்ச் அளவு முகத்தை கூட தாரணிக்கும் காட்டியதில்லை என்பது விதி போல.
அதனாலோ என்னவோ?
விதி அவர்களின் வாழ்க்கையில் தாறுமாறாய் விளையாட ஆரம்பித்தது.
0 Comments