அந்த பெரிய மாலில் வழக்கமாக செல்லும் அந்தக் கடைக்குள் நுழைந்தாள் தாரணி.
தனக்கு தேவைப்படும் பொருட்கள் அடங்கிய செக்ஷனுக்குள் நுழைந்தவளை அங்கிருந்த பணிப்பெண் சிரித்த முகத்துடன் வரவேற்றாள்.
“ என்ன அக்கா நான் கேட்ட அந்த கோல்டு கலர் பாடர் வந்துச்சா?”
“ அன்னைக்கே வந்துட்டு மா, உனக்காக தனியா எடுத்து வச்சிருக்கேன். இதோ…”
அவள் கேட்ட அந்த பாடரை எடுத்து கொடுத்தார் அந்த பெண்.
அதை வாங்கி கொண்டவள், மற்ற பொருட்களையும் வாங்கி கேஷ் கவுண்டருக்கு நகர்ந்தாள்.
அங்கு இவளுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்ணின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தை இவளை பார்த்து அழகாய் சிரிக்க, இவளும் பதிலுக்கு சிரித்தாள்.
அதில் குஷியான குழந்தை இவளிடம் மேலும் சில வம்புகளை பண்ணியது.
நீண்டு கொண்டிருந்த கூட்டத்தை ஒரு நொடி பார்த்தவள்,
' சரி வேற எதும் வாங்கிட்டு கொஞ்சம் கழிச்சு வரலாம் ' என்று நினைத்து திரும்ப,
அவளின் சுடிதாரின் சால் அந்த குழந்தையின் கையில் இருந்ததை இவள் அறியவில்லை.
தன்னிடம் இருந்து பறி போகும் பொருளை இழுத்து பிடித்து கொள்வது போல அது அந்த நுனியை தன் பக்கம் வேகமாய் இழுக்க,
கொஞ்சம் நிலை தடுமாறி பக்கவாட்டில் விழ போனாள் தாரணி.
' விழத்தான் போகிறோம் ' என்று புரிய அவசரமாய் கையில் கிடைத்த எதையோ ஒன்றை பலமாக பற்றி கொண்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து மெதுவாய் கண் விழித்தவளுக்கு,
' அடக்கடவுளே, எதையோ பிடிக்கிறதா நினைச்சுட்டு… யாரோட சட்டையையோ பிடிச்சுட்டு நிக்கிறோமே ' என்று குறுகுறுப்பு ஏற்பட்டது .
'நல்ல வேளை கீழே விழலை. விழுந்து இருந்தா மானம் போய் இருக்கும். இவன் பக்கத்தில் வரப்போய் நல்லதா போச்சு' என்று நிம்மதியுடன்
“ சாரி அண்ட் தேங்க்ஸ்” என்றாள் பயத்துடன்.
அவன் முகத்தில் அழகாய் மலர்ந்தது புன்னகை.
' அட, இவன் சிரிக்கும் போது அழகா இருக்கானே ' கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அவனை சைட் அடிக்க, மறு நொடி தன் தலையில் கொட்டி கொண்டாள் மானசீகமாக.
இவள் சைட் அடித்ததை கண்டு பிடித்திருப்பான் போல… அவளை பார்த்து என்ன? என்பது போல் விழியால் வினவ,
அதிலும் தடுமாறி போனாள் போல.
' ச்ச, இந்த தொண்டைக்கு என்ன ஆச்சு? உள்ளே இருந்து சத்தமே வர மாட்டிங்குது ' என்று எண்ணி கொண்டு,
“ சாரி, குழந்தை தெரியாம ஷால பிடிச்சு இழுக்கவும்… மன்னிச்சுடுங்க… சட்டையை கசக்கிட்டேன்”
' அப்பாடா ஒரு வழியா சொல்லியாச்சு '
அவன் பதிலுக்கு,
“ நானும் கவனிச்சேன். இட்ஸ் ஓகே... நோ ப்ராப்ளம்” என்று அதே வசீகர புன்னகையோடு கூறி விட்டு நகர்ந்தான்.
அவன் சென்ற பின்பு தான் இவளால் அமைதியாக முடிந்தது.
ஏன்? என்று புரியாமல் அவன் முன் தன் மனம் படபடப்பாக உணர்ந்தது போல் நிலை கொள்ளாமல் தவித்தாள்.
சிறிது நேரத்தில் அந்த மாலை விட்டு இவள் வெளியே வர, அனு அங்கு வரவும் சரியாக இருந்தது.
“ தரூஸ், வந்துட்டியா? சரி வா, இளங்கோ மாமா இங்க தான் இருக்கிறதா போன்ல சொன்னாங்க… போய் பாத்துட்டு வந்திரலாம்.” என்று இவளை அழைக்க.
தாரணியோ அந்த மாலை சுற்றி பார்வையை ஓட விட்டாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த ' அவனை ' காணவில்லை.
அதனால் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாளோ என்னவோ?
“ இல்ல ஹனி , எனக்கு தலை வலிக்குது. நீ போய்ட்டு வா.
நான் போய் அந்த காபி ஷாப்ல சூடா ஒரு காபி குடிச்சிட்டு இருக்கேன்.
முடிஞ்சா என்னை பிக்கப் பண்ணிக்கோ. இல்லை டைம் ஆகும்னா நான் போய்க்கிறேன்.
இன்னக்கி சோ ரூம் போய் ரெண்டு செட் குர்தி எடுக்கலாம் நினைச்சேன். சரி நாளைக்கு பாத்துக்கலாம்.
நீ போ… அங்க உன் ஆள் உனக்காக வெயிட் பண்ண போறாங்க…” என்று கண்ணடித்து இவளை அனுப்பி வைத்தாள்.
ஏனோ? இன்றும் தாரணியும் இளங்கோவும் சந்திக்க விதி விடவில்லை போல.
அன்று மதியம்:
படிக்கும் நமக்கு சரியாக புரிய வேண்டும் என்றால்?
தர்ஷினியும் தாரணியும் பயணமாகி கொண்டிருக்கும் இந்த நாளில் இருந்து ஆறு நாட்களுக்கு முன்.
தையல் இயந்திரம் முன் அமர்ந்து இருந்த தாரணி எதையோ யோசித்து கொண்டிருந்தாள்.
கொஞ்ச நாளாகவே அந்த பெயர் தெரியாத ' அவனின் ' முகம் அவளை படுத்தி எடுத்தது.
சிந்தை மயங்கி கிடந்தவளின் முன் வந்த அனு சொடுக்கி போட்டு அவளை சுயம் மீட்டாள்.
“ ஹேய் தரூஸ், என்ன கனவுல மிதக்குற? யார் இந்த கன்னியின் மனதை கொள்ளை கொண்ட கள்வன்?”
“ ஏய் ச்சீ.. அப்படிலாம் ஒன்னும் இல்ல” என்று அவளுக்கு பதில் கூறினாலும்
அவள் மனதில் எங்கோ கேட்டது.
' அப்படியும் இருக்குமோ!!'
சொல்ல தெரியாத ஒரு இதம் அவளுள் பரவி முகத்தை சிவக்க செய்தது.
“ ஏய், பொய் சொல்லாத? உன் வாய் இல்லன்னு சொன்னாலும் உன் கன்னம் இருக்குன்னு சொல்லுதே.. சொல்லு யார் அது?”
“ அடப்போடி அப்படிலாம் ஒன்னும் இல்ல”
அவளை அங்கிருந்து துரத்துவதற்குள் மூச்சு முட்டி விட்டது தாரணிக்கு.
மெத்தையில் போய் விழுந்தவள் தலையணையில் முகம் புதைத்து
தனக்குள் கேட்டு கொண்டாள்.
' அப்டியா? நான் அவனை விரும்புறேனா?
அப்படிதான் இருக்கும். அவன் நினைவு அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கம் அவளை வானில் பறக்க செய்தது.
கட்டிலை விட்டு எழுந்து தன்னையே சுற்றி கொண்டவள் அங்கிருந்த நிலை கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.
அவன் முகம் அதில் தெரிகிறதா? என்று.
' என் முகம் காண அதில் உன் முகம் தெரிவதேனோ? '
கண்ணாடியில் இருந்த அவன் முகம் அவளை காதலோடு வருடியது போன்ற பிரமை.
அவன் நிழல் முன்பே அழகாய் வெட்கம் கொண்டாள்.
“ ஹேய் யார் நீ? உன் பேர் என்ன? எங்க இருக்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? உனக்கு என் நினைவு இருக்குமா?”
அவன் பிம்பதிடம் கேள்வியாய் அடுக்கி கொண்டே போனாள்.
தன்னை நினைத்து சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.
' உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுட்டு தாரணி '
“ ஆமா, இதோ இவன் மேல… நான் கேட்ட எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை தான். ஆனா நான் அவனை விரும்புறேன். அது மட்டும் நிஜம்”
தனக்குள் கூறி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவளுக்கு இப்போது எங்காவது போகணும் .
அவள் சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் சமயம் அவள் தஞ்சமடையும் ஒரே இடம் அந்த பூங்கா.
அனுவின் வீட்டில் இருந்து ஒரு பத்து நிமிட நடை பயணத்தில் இருக்கும்.
வீட்டில் யாரும் நடமாடவில்லை.
மாலை 4 மணி:
இது மஞ்சு ஓய்வெடுக்கும் நேரம். அனுவும் வீட்டில் இல்லை.
' சரி நாம போய்ட்டு வரலாம்.' என்று எண்ணி கொண்டு பூங்காவிற்கு நடை போட்டாள்.
0 Comments