07. நட்பெனும் பூங்காற்றே



மனதை மயக்கும் மாலை வேளையில் பூங்காவில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

அவரின் அருகில் வந்த தாரணி,

“ கொடுங்க தாத்தா நான் பாய்ச்சுறேன்” என்றாள்.

“ இருக்கட்டும் மா உனக்கு எதுக்கு சிரமம்!”

அவர் சொல்ல கேட்காமல் அவரின் கையில் இருந்த பைப்பை பிடுங்கி அவள் நீர் பாய்ச்ச அவர் சிரிப்புடன் நகர்ந்தார்.

மனம் துள்ள ஆடிப்பாடி கொண்டிருந்தவளை அங்கிருந்த சிறார் கூட்டம் பார்க்க,

அவர்களை ஓர கண்ணால் பார்த்து கண் சிமிட்டி தன் அருகே அழைத்தாள்.

அவர்களும் அவள் அருகே வந்தனர்.

கையில் இருந்த பைப்பை காட்டி சிறுவர்களிடம் ஏதோ பார்வையால் கேட்க, அவர்களும் சரி என்பது போல் தலையாட்டினர்.

“ ரெடி… ஒன்… டூ…. த்ரீ….”

கையில் இருந்த பைப்பை வான் நோக்கி உயர்த்த,

“ ஹேய்… மழை… மழை…”

சிறுவர்கள் கொக்கரிக்க,

இவள்,

“ மழையே, ஓ மழையே…

புன்னகை தூவுறியே…”

என்று பாடினாள்.

அந்த பூங்காவில் இருந்த மொத்த சனமும் அவர்களை தான் உதட்டில் புன்னகை தவழ பார்த்திருந்தனர்.

அந்த செயற்கை மழையில் அவளும்… சிறுவர் கூட்டமும் நனைந்து கொண்டிருக்க அவர்களின் அருகில் வந்த அந்த பெரியவர் அவள் கையில் இருந்த பைப்பை பிடுங்கி அவளை முறைத்தார்.

அவருக்கு அசட்டாய் ஒரு சிரிப்பை சிந்தியவள்,

“ சலசலசல நதிகள் தொடங்கி…

நெடுநெடுநெடு மலைகள் வரையில்…

நான் போட்ட கோட்டை தாண்ட கூடாது.

சிறுசிறுசிறு சிறுவன் தொடங்கி…

கிடுகிடுகிடு கிழவன் வரையில் நான்

வைத்த சட்டம் மீற கூடாது…”

சிரிப்புடன் பாடியவள் தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைத்து விட்டு பெரியவர் நகர்ந்தார்.

அவரிடம் சிந்திய புன்னகை மாறாமல் அங்கிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தவள், அந்த சிறுவனை அழைத்தாள்.

“ டேய் மகேஷ்… இங்க வாடா, அக்காவ அலுங்காம ஆட்டுடா” அவள் கூற,

எப்போதும் போல் அதன்பின் அவளும் தன்னை ஆட்டிவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அந்த சிறுவன் ஊஞ்சலை தள்ளினான்.

“ ரோஜாக்கள் பூக்கட்டும் ஹோய்….

முள்ளேதும் இல்லாமல் ஹோய்…

என் ஊஞ்சல் ஆடட்டும் ஹோய்…

காற்றுக்கும் நோகாமல் ஹோய்…”

பாடியதை போன்றே காற்றுக்கும் வலிக்காமல் அவள் ஆடி கொண்டிருக்க மகேஷ் தான் பேசினான்.

“ அக்கா இப்போ நான்”

“ இருடா… இப்போ தானே ஆடுறேன். கொஞ்ச நேரம் போட்டும்”

“ போக்கா… நீ இப்டி சொல்லியே என்னை ஏமாத்திடுவ…”

அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அவனின் பெற்றோர் அழைக்க,

“ பாத்தியா… இன்னைக்கும் என்னை ஏமாத்திட்ட… போ நான் போறேன்” என்று முடிந்த மட்டும் தன் கோவத்தை ஊஞ்சலில் காட்டி விட்டு அவன் ஓட,

ஏற்கனவே நனைத்திருந்த துணியும் ஈர கையும் அவளுக்கு எதிராய் வேலை செய்ய… மெல்ல ஆடிய ஊஞ்சல் திடீரென பொத்தென்று தள்ளியதால் அவள் ஊஞ்சலை விட்டு நழுவ தொடங்கினாள்.

விழுந்த வேகத்தில் ஈர கால்களும் அவளை சதி செய்ய தரையில் முகம் குப்புற விழ தொடங்கினாள்.

“ அய்யோ செத்தேன்” என்று முகத்தை கைகளால் மூடி விழுந்தவள் சில நிமிடங்களுக்கு பிறகே ஆசுவாசமடைந்தாள்.

' நல்ல வேளை ஏதோ மூட்டை மேல விழுந்ததால் அடிபடாம தப்பிச்சோம் ' என்று எண்ணி மெல்ல தன் கைகளை விலக்க…

அங்கே ‘ அவன்… எவன் அவளுக்கு அந்த நாள் முழுக்க அத்தனை சந்தோசத்தையும் அள்ளி கொடுத்தானோ ? எவனை அவள் நீ இந்நேரம் எங்கு இருக்கிறாய்? என்று மனதினுள் கேட்டு கொண்டாளோ?

அவன் தான்… அவள் மனதை அவளுக்கே தெரியாமல் திருடிய கள்வன்.

ஏதோ மூட்டை என்று இவள் நினைப்பு இப்போது பொய்யாகி அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள்.

அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்த அவள் இமைகள் தந்தியடிக்க, அவனை விட்டு எழவும் தோன்றாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

இப்போது அவன் வழக்கமாய் சிந்தும் புன்னகையை வீச, அதில் தன்னை தொலைத்தவள் மறு நொடி அவனை விட்டு விருட்டென்று எழுந்து நின்றாள்.

அவனும் மெல்ல எழுந்து தன் மேல் ஒட்டிய தூசுகளை தட்டி விட்டு அவளை பார்த்து கொண்டிருந்தான்.

அவளோ தரையில் மொத்தம் எத்தனை புல் உள்ளது என்ற கணக்கில் இறங்குபவள் போல் நின்று இருந்தாள்.

அவன் பார்வை அவளை வருடுவதை அவள் அறியாமல் இல்லை. ஆனாலும் நிமிர்ந்து பார்க்க ஏதோ ஒன்று அவளை தடுத்தது.

அவர்களின் அந்த மோன நிலையை அவனின் செல்பேசி கலைத்தது.

“ ஹலோ, இதோ வந்துட்டேன்” என்று கூறி விட்டு அவளையே பார்த்தான்.

அவன் சொல் இவளுக்கு ஏதோ உணர்த்த அவசரமாய் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அந்த பார்வையில் என்ன கண்டானோ… மெல்லிய சிரிப்பை அவளுக்கு கொடுத்து விட்டு இடம் நகர்ந்தான்.

அனுவும் தாரணி வீட்டில் இல்லாததால் அவள் வரும் பூங்காவிற்கு அவளை அழைக்க வந்தாள்.

“ ஹேய் தரூஸ் என்ன முகம் ஃபுல்லா ரெட் கலரா இருக்கு? என்ன ஆச்சு?” என்ற அனுவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவளை அழைத்து சென்றாள்.

ஒரே ஒரு முறை மட்டுமே திரும்பி அவனை பார்த்து கொண்டே.

' காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை…

புத்தகம் மூடிய மயிலிறகாய் புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை…

நெஞ்சே என் நெஞ்சே… செல்லாயோ அவனோடு…

சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும் பாடு…'

மனதில் காதலை சுமந்து கொண்டே நகர்ந்தாள்.


Post a Comment

0 Comments