ஐந்து நாட்களும் அவன் நினைவு, அளவுக்கு அதிகமாக அலைக்கழிக்க
சந்தோசமா? துன்பமா? என்று வரையறுக்க முடியாது இருந்தாள் தாரணி.
“ என்னடா தாரணி ? உடம்பு சரியில்லையா? மூணு நாளா ஒழுங்கா சாப்பிட மாட்டுக்க” மஞ்சு கேட்க,
' என்ன பதில் சொல்வது? ' என்று முழித்து கொண்டு வாயில் வந்த பதிலை உலரி விட்டு அறைக்குள் அடங்கி கொள்வாள்.
அறைக்குள் தாரணி நுழையும் போதே அவளின் செல் அழைக்க எடுத்தாள்.
“ஹலோ தாரணி, ப்ளவுஸ் கொடுத்தேனே… இன்னைக்கு வர சொன்னியே மா… வந்து வாங்கிக்கவா?”
“ அய்யோ அக்கா, சாரி இங்க கொஞ்சம் வேலை இருந்ததால முடிக்க முடியலை. நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்க. நான் ரெடி பண்ணி வைக்கிறேன்.”
அவசரமாய் அவளுக்கு பதில் சொன்னாலும், அவள் மனம்..
' டேய் உன்னால என் வேலையெல்லாம் பட்டு போச்சு போ ' அவனிடம் செல்லமாய் சண்டையிட்டு கொண்டாள்.
“ சரிமா” என்று அந்த பெண் செல்லை அணைக்கவும்… இவள் கண்ணாடியின் முன் வழக்கம் போல் அவனிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.
“ உன்னால என் வேலை கெட்டுச்சு… என் ஹனி ஞாபகம் வரவே இல்லை… இந்த கொஞ்ச நாளா… அதனால நீ கொஞ்ச நேரம் அமைதியா இருப்பியாம். நான் போய் என் ஹனிய பாத்துட்டு… அப்டியே என் வேலையும் முடிச்சுட்டு உன்னை பாக்க வரேன்” மனதினுள் உள்ளவனிடம் கொஞ்சி பேசிவிட்டு தோழியை பார்க்க சென்றாள்.
டிரஸ்சிங் டேபிள் முன் அமர்ந்து இருந்தவளின் சிந்தை எங்கோ வெறித்தது.
“ என்ன ஹனி ? கொஞ்ச நாளாவே ஆளையே காணோம்.. என்ன ரொம்ப பிஸியோ?”
அவளின் தோளில் கை போட்டு கண்ணடித்து இவள் கேட்க,
அவளோ சாதாரணமாய் செய்வது போல் அவள் கையை தோளில் இருந்து எடுத்தாள்.
“ அப்படிலாம் இல்ல”
அவள் கண்கள் அழுதிருப்பதை தாரணிக்கு சொல்ல,
“ என்ன ஆச்சு ஹனி ? உடம்பு சரியில்லையா?” அவளின் நெற்றியில் கை வைத்து இவள் கேட்க,
அதையும் மெதுவாய் எடுத்தவளின் கண்கள் இப்போது கொஞ்சம் நீரை வெளியே சிந்தியது.
“ ஏய் ஹனி என்ன பிரச்சனை? சொன்னா தானே தெரியும்” இவள் குரலில் பதட்டம் காட்ட,
“ தாரணி உன் கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ வேண்டாம்… 5 மணி போல பேசுவோம்” என்று கூறியவளை புரியாமல் பார்த்தாலும்,
“ சரிடி, நீ இப்போ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு. நாம ஈவ்னிங் பேசலாம்” என்று அவளை அமைதி படுத்தி விட்டு தன் அறைக்குள் வந்தவளுக்கு மனதில் சொல்ல முடியாத சுமை ஏறியது.
அவசரமாய் தைக்க வேண்டிய அத்தனை துணிகளையும் வெட்டி அதை தைக்க அமர்ந்தாள்.
சீசன் இல்லாததால் நிறைய துணிகள் இல்லை. அதனால் இருந்த கொஞ்சத்தையும் வெட்டி தைக்க அமர்ந்தவளுக்கு நேரம் போனது தெரியவில்லை.
அத்தனையும் முடித்து விட்டு ஒழுங்கு படுத்தி விட்டு நேரத்தை பார்க்க, அது 4.30 என்று காட்டியது.
அவசரமாக குளியலறைக்குள் சென்றவள் பதினைந்து நிமிடத்தில் தயாராகி வர,
கபோடில் இருந்து ஒரு சுடியை கையில் எடுத்தவள் முகம் சிணுங்கினாள்.
“ அய்யே ச்சே, துணியெல்லாம் இப்படி கலைஞ்சு இருக்கே. சரி அப்புறமா வந்து ஒழுங்கு படுத்துவோம்” என்று தனக்குள் கூறி கொண்டு இளம் மஞ்சள் வண்ணத்தில் சிவப்பு ரோஜாக்கள் கலந்த ஒரு சுடியை எடுத்து அணிந்தவள் மணியை பார்க்க 4.50
' சரி நாம தோட்டத்துக்கு போகலாம். அனு வரும் வரை கொஞ்சம் உலாத்தலாம்'
எண்ணியபடி தோட்டத்தை அடைய அங்கு இவளுக்கு முன்னமே அனு அமர்ந்திருந்தாள்.
' அட இன்னைக்கு மழை வரும்… குறித்த நேரத்துக்கு முன்னேயே வந்துட்டாளே' என்று மத்த நேரங்களில் நக்கலடித்து இருப்பாள்.
ஆனால் இன்று ஏனோ அனுவின் நிலை மனதை பிசைய அவளை நெருங்கி அமர்ந்தாள்.
முன்பு போல் மறைமுகமாக அவளிடம் புறக்கணிப்பை காட்டாமல் நேரடியாகவே கொஞ்சம் தள்ளி அமர்ந்து காட்டினாள்.
புரியாமல் அவளையே பார்த்த தாரணி,
“ என்ன அனு …. என்ன பிரச்சினை?”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த அனு நீண்ட பெரு மூச்சுடன்,
“ என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும் தாரணி.”
“ ஆமாம் , அதுகென்ன?”
“ நான் இளங்கோ அத்தான எவ்வளோ விரும்புறேன்னும் உனக்கு தெரியும்”
“ ஆமாடி… ஆனா?”
‘ ஏன் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்’ என்று புரியாமல் அவளையே பார்த்து இருக்க,
“ எதுக்காகவும்? யாருக்காகவும் ? நான் இளங்கோ அத்தானை விட்டு கொடுக்க மாட்டேன்”
“ சரி விட்டு கொடுக்காத… ஆனா யார் இப்போ உன் கிட்ட உன் அத்தானை பங்கு கேட்டது” இவள் கேட்க,
“ நீ தான்” என்று மென்று முழுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினாள் அனு .
‘ அவள் என்ன சொல்கிறாள்?’ முதலில் புரியாமல் விழித்தவள், மறு நொடி அவள் சொல்வது விளங்க,
“ அனு ….” என்று கத்திவிட்டாள்.
“ நீ தான் தாரணி. நீ மட்டும் தான்… எங்களுக்கு இடையில வந்துட்ட. உன்னை பார்க்காத வரை மாமா எங்க கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லலை.
ஆனா, எப்போ உன்னை மால்லயும்… அதுக்கு அப்புறம் பார்க்லயும் பார்த்தாங்களோ… அப்போவே எங்களுக்குள்ள திரை வர ஆரம்பிச்சிட்டு…
இந்த நிலையில… உன் கூட இந்த ரெண்டு தடவையும் என்னை பார்த்துட்டு… யார் நீ? அப்டின்னு என் கிட்டயே கேட்டாங்க.
நீயே சொல்லு… எனக்கு எப்படி இருந்திருக்கும்?”
அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று அவள் விழி நீர் உணர்த்த, தாரணிக்கோ
நெஞ்சு கூட்டில் கை விட்டு யாரோ இதயத்தை பிழிவது போன்ற வலி.
' இல்லை… இருக்காது… அப்படி ஏதும் இல்லை' என்று புரியாமல் தனக்குள் கூறி கொண்டே விழிநீர் சிந்த தோழியை ஏறிட்டாள்.
' அது இளங்கோவா?... அய்யோ, என் தோழி வாழ்க்கை கெட நான் காரணமாக இருக்கிறேனா?
மாட்டேன்… நிச்சயம் ஒரு போதும் அப்படி நடக்க விட மாட்டேன்' என்று எண்ணி அனுவின் தோளில் கை வைக்க அவள் ஆவேசமாய் அதை தட்டி விட்டாள்.
“ நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்லை தாரணி. இது தான் என்னோட முடிவு… நீ இங்க இருந்து போய்டு… என் வாழ்க்கையை விட்டே…”
அழுது கொண்டே அனு கூற, அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள் தாரணி.
“ அனு !!! ஏன் இப்படியெல்லாம் பேசுற” நிற்க மாட்டாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன் தாரணி கேட்க அனு
முகத்தை அவளுக்கு காட்டாமல் திரும்பி கொண்டாள் .
சில நொடிகள் அங்கு மௌனமாய் கழிய… மெல்ல தாரணியை பார்த்தாள் அனு .
தாரணியின் விழியோ,
' எனக்கு எல்லாமுமாக இருப்பேன்…. என்று சொல்லி கூட்டி வந்தியே… இப்போ, இப்படி பாதியிலேயே விட்டு போ என்று சொன்னால்?'
அவளின் பார்வை புரிந்தது போல் அனு ,
“ உனக்கு எல்லாமா நான் இருப்பேன் என்று சொன்னது உண்மை தாரணி.
என்னோட அம்மாவை உனக்கும் அம்மாவா தந்தேன்.
என்னோட அப்பாவை உனக்கும் அப்பாவா தந்தேன்.
ஆனா, அதே போல….
என்னோட அத்தானை உனக்கு தருவேன்னு அர்த்தமாகுமா?”
அவளின் சொல் ஈட்டி போல் தாரணியின் நெஞ்சை தைக்க, கை உயர்த்தி அவளை தடுத்தவள், மெல்ல நகர்ந்தாள்.
அறைக்குள் வந்த தாரணி அங்கிருந்த ஒரு சிறிய டிராவல் பேக்கை எடுத்து கபோடில் இருந்த துணிகளை அதில் அடுக்க ஆரம்பித்தாள்.
முதலில் ஒரு துணியை எடுத்தவள்,
' இது அனு வாங்கி கொடுத்தது ' என்று எண்ணி அதை அப்படியே உள்ளே வைத்தாள்.
இப்படியே ஒவ்வொரு துணிகளும் அனுவை குறிக்க,
மொத்தம் ஐந்து அல்லது ஆறு துணிகளை… தன் பணத்தில் வாங்கியவற்றை மட்டும் பையில் அடுக்கினாள்.
கழுத்தில், காதில், கையில் இருந்த அனைத்தும் அனுவின் பெயரை சொல்ல அதையும் கழட்டி வைத்து விட்டு…
தன்னிடம் ஒப்படைக்க பட்ட துணிகளை எடுத்து மஞ்சுவின் அறையில் வைத்து விட்டு வெளியேறினாள்.
அந்த வீட்டை விட்டு…. அனுவின் வாழ்க்கையை விட்டு….
வெளியேறும் முன் ஒரு முறை தோட்டத்தை திரும்பி பார்க்க அனு இன்னும் அசையாமல் அப்படியே இருந்தாள்.
எப்படி வெளியே வந்தாள்.
கால் வலிக்க நீண்ட தூரம் நடந்தவள் ஆட்டோவில் ஏறியதும்… அங்கிருந்து பேருந்து நிலையம் வந்ததும் என்று எதுவுமே அவள் சிந்தையில் படியவில்லை.
" என்னால தாங்க முடியல தர்ஷினி. நட்புக்கு கூட கற்பு உண்டு. அனுவின் மேல் எனக்கு இருக்க அன்பு களங்கம் இல்லாதது. அதை அவ புரிஞ்சுக்கலைன்னு நினைச்சா ரொம்ப வலிக்குது தர்ஷினி."
கண்மூடி அழுபவளை என்ன சொல்லி சமாதான படுத்த என்று புரியாமல் தர்ஷினி முழித்தாள்.
அவளுக்கும் கண்ணீர் வரத்தான் செய்தது.
ஆனால் இப்போது தாரணியின் அமைதியே கண் முன் வர, அவளை தோள் அணைத்து அமைதி படுத்தினாள்.
தர்ஷினியின் கோவம் அனுவை மனதிற்குள் நெறித்தது.
' கையில் கிடைத்த வைரத்தை பாதுகாக்க தெரியாத முட்டாள்… அனு நீ '
என்று பல்லை கடித்தாள்.
0 Comments