09. நட்பெனும் பூங்காற்றே

 


அதிகாலை 5 மணிக்கு தர்ஷினியின் ஊரில் இறங்கியவர்கள் ஒரு ஆட்டோ பிடித்து அவளின் வீடு சென்றனர்.

கிராமம் அல்லாத வளர்ந்து வரும் நகரமாக தர்ஷினியின் ஊர் தாரணியை வரவேற்றது.

பதினைந்து நிமிடத்தில் தர்ஷினியின் வீடு வர இருவரும் ஆட்டோவை கட் செய்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த இரண்டு அடுக்கு மாடி வீட்டின் வாயிலை அடையும் போது தாரணி மனதினுள் தயங்கினாள்.

' தர்ஷினி கூப்ட்டதும் ஏதோ ஒரு வேகத்துல வரேன்னு சொல்லியாச்சு. அவ வீட்டுல இதை எப்படி எடுத்துப்பாங்க தெரியலையே. '

இவள் எண்ணம் புரிந்ததோ என்னவோ?...

அவளின் கையை ஆதரவாய் பற்றியவள்,

“ இதுவும் உன் வீடு போல தான்….

அடச்சே, போல என்ன போல? உன் வீடு தான்… போதுமா!!...

எந்த தயக்கமும் இல்லாம உள்ள வா…

அப்பாவ பாரு… ரொம்ப பிடிக்கும் உனக்கு..

அண்ணா ஊர்ல இல்லை… வர ரெண்டு வாரம் ஆகும்”

அவளுக்கு விளக்கம் கொடுத்தபடி வீட்டினுள் அழைத்து வந்தாள்.

இருந்தும் தாரணி தயக்கம் காட்ட,

“ என்ன தாரணி?” என்று புரியாமல் அவளையே கேட்டாள் தர்ஷினி.

“ வந்து…. எனக்கு இங்க பக்கத்துல தங்க ஏதாச்சும் வீடு ஏற்பாடு பண்ணி கொடு தர்ஷினி. அது போதும்…”

தயங்கி தான் கூறினாள்.

ஆனால் தர்ஷினி அவளை முறைக்க அமைதியாய் தலை கவிழ்ந்து கொண்டாள்.

' உன் கிட்ட இப்படி பேசினாலாம் வேலைக்கு ஆகாது.' என்று எண்ணியவள்,

“ சரி தர்ஷினி… வீடு பாத்துடலாம். ஆனா உடனே கிடைக்காது இல்லையா… அது வரை ரோட்லயா தங்க போற”

தர்ஷினி கேட்பது புரிய அவசரமாக,

“ இல்லை… அது வரை இங்க தங்குறேன்” என்று கூறினாள்.

அவள் சொன்ன தினுசில் சிரிப்பு வரவே,

“ ப்பா… ரொம்ப பெருந்தன்மை தான் போ” என்று கூறி சிரித்தாள்.

தலை குனிந்து நின்றாலும்… தாரணி சிரிப்பதும் அவளுக்கு நன்றாக தெரிந்தது.

“ சரி தாரணி, அதோ அந்த ரூம்ல போய் நல்ல தூங்கி ரெஸ்ட் எடுத்து ஒரு எட்டு மணி வாக்குல ரெடி ஆகி வா… அப்பாவை அறிமுக படுத்தி வைக்கிறேன்” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

அங்கு உள்ள அன்னம்மாவை ( வீட்டு வேலை முதல் அந்த வீட்டின் அத்தனை வேலைகளை செய்யும் ஆல் இன் ஆல்) அழைத்து அவருக்கு தாரணியை பற்றி கூறி விட்டு அவளுக்கும் சேர்த்தே காலை உணவு தயாரிக்க சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்றாள்.

காலையில் எழுந்து வந்தவள் உணவு மேசையில் தர்ஷினியின் அப்பா சண்முகத்தை கண்டும் திருப்தி கொண்டாள்.

அவரின் அந்த அமைதியான முகமே அவளிடம் கொஞ்சம் ஒட்டி இருந்த தயக்கத்தையும் போக்கியது.

அந்த வீட்டில் அமைதியாக ஒரு வாரத்தை அவள் கழிக்க ஒரு நாள் தாரணியை பார்க்க அவன் வந்தான்.

“ ஹாய் தாரணி, எப்படி இருக்கீங்க? நான் சந்தோஷ்.

தர்ஷினி என்னை பத்தி சொல்லி இருக்காளா?”

துள்ளல் குரலில் தன் முன் வந்து கேட்பவனை கண்டதும் 'அவன் தர்ஷினியின் அண்ணா' என்று தாரணி ஊகித்து,

“ ஹலோ சந்தோஷ். நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?.

தர்ஷினி வாயை திறந்தா… எப்பவும் உங்களைப் பத்தி தான் பேசுறா…”

“ இசிட்” அவன் புன்னகையோடு கேட்க,

“ ஆமா, என் அண்ணா அப்படி, என் அண்ணா இப்படி… வீரன்… சூரன்…

இப்படியே உங்களை பத்தி புகழ்ந்துட்டே இருப்பா.” அவளும் புன்னகையோடு கூறினாள்.

“ அடச்சே, கருமம்…. நான் தர்ஷினிக்கு அண்ணாவா?”

அவன் முகத்தை ஒரு முழ நீளத்தில் தூக்கி முறுக்கி கொள்ள தாரணி புரியாமல் பார்த்தாள்.

' எதுக்கு இந்த ஆள் மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிட்டு நிக்குறார் '

அவள் எண்ணியபடி அவனை பார்க்க,

“ அப்போ தர்ஷினி என்னை பத்தி உங்க கிட்ட சொல்லலையா?”

‘ இவன் என்ன உலறுகிறான்? இவ்வளோ நேரம் நான் என்ன ஊமை படமா காட்டினேன்.'

அவள் பார்வையில் என்ன கண்டானோ? அவசரமாய் அடுத்த அறைக்கு நகர்ந்தான்.

பின்னாடியே தாரணியும்.

அங்கு இருவரும் கண்ட காட்சி,

வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டே இருக்கும் தர்ஷினியை தான்.

தாரணியின் அறையில் பேசியது தர்ஷினி தெளிவாக கேட்டு கொண்டதால் அவள் சிரிப்பை சிந்தி கொண்டு இருக்க,

தாரணிக்கு அவள் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை என்றாலும்,

சந்தோஷ் அதன் அர்த்தம் புரிபட்டவனாக அவளை முறைத்தான்.

அவர்கள் இருவரை கண்ட தர்ஷினிக்கு மேலும் சிரிப்பு வர, மீண்டும்

“ ஹாஹா…” என்று சிரித்து வைத்தாள்.

“ ஹய்யோ, அம்மா முடியல…

தாரணி…. இது …

என்…. அண்ணா... ஹாஹா….”

மீண்டும் வந்த சிரிப்பால் வலித்த வயிற்றை கையில் பிடித்து கொண்டு அவள் கட்டிலில் அமர,

அவன் மேலும் அவளை முறைத்தான்.

இப்போது தாரணி அவனை முறைத்தாள்.

' பெரிய இவன் மாதிரி இஞ்சி தின்னவன் போல போஸ் கொடுத்துட்டு… இப்போ பார்… அவளும் அதை தானே சொல்லுறா?'

அவள் எண்ணி கொள்வது அவனுக்கு புரிந்தது போல… அவசரமாக தர்ஷினி அருகில் சென்றவன்,

“ நீயுமாடி? முதல்ல நான் யாருன்னு இவங்களுக்கு சொல்லு… அடிக்கடி என்னையே சந்தேகமா பாக்குறாங்க.

இந்த லட்சணத்தில் நீயும் என்னை அண்ணா… ச்சை கருமம் வாயை கழுவனும்…

சிரிக்குறத நிறுத்திட்டு பதில் சொல்லி தொலைடி”

அவன் தலையில் அடித்து கொண்டான்.

“ தாரணி, இது சந்தோஷ்”

“ அதை நான் முன்னாடியே சொல்லிட்டேன். நீ நான் உனக்கு யாருன்னு சொல்லு” அவன் தவிப்பில் வேக,

“ ஹாஹா, இருடா அதை தானே சொல்லுறேன். எங்க விடுற?

தாரணி இது, சந்தோஷ்… நான்.. அது வந்து,

என்னோட வருங்கால கணவன்… தற்கால காதலன்…

போதுமாடா எருமை… கேப் கொடுக்காம நீ பாட்டுக்கு பேசிட்டே போற”

தோழியிடம் வெட்கம் கலந்து கூறியவாறு அவனை செல்லமாக திட்டினாள்.

“ அய்யோ, சாரி சந்தோஷ்… நான் தெரியாம!! உங்களை இவ அண்ணன் நினைச்சு,…

இவ என் கிட்ட சொல்லவே இல்லை…

நீங்க வந்து அப்படி கேட்டதும்..

இவ என் கிட்ட அதிகமா அவ அண்ணாவை பத்தி சொன்னதால் நான் அப்படி நினைக்க வேண்டியதா போச்சு…வெரி சாரி”

“ புரியுது, இவ குணம் தெரிஞ்சும் நானும் உங்க கிட்ட அப்படி கேட்டு இருக்க கூடாது. இவளுக்கு இவ அண்ணன் தான் எல்லாமே,

நாங்க எப்போ பேசிகிட்டாலும் எங்க பேச்சு எதுவா இருக்கும்னு நினைக்கிறீங்க?

எல்லாம் இவ அண்ணனை சுத்தி தான்…”

சலிப்பாக அவன் கூற நினைத்தாலும் முடியவில்லை.

“ தாரு, இவனை நம்பாத… இவனும் என் அண்ணாவும் ஃப்ரண்ட்ஸ்.

இவன் எனக்கு ப்ரப்போஸ் பண்ணது எப்படி தெரியுமா?

எருமை, என் கிட்ட சொல்லாம… என் அண்ணா கிட்ட போய் சொல்லிருக்கு…

நீயே சொல்லு? ஒரு பொண்ணு தன் கிட்ட காதலை சொல்லணும் நினைப்பாளா? இல்லை அண்ணன் கிட்ட சொல்லணும் நினைப்பாளா?

என்ன தான் அண்ணனா இருந்தாலும்? நானும் பொண்ணு தானே…”

“ அச்சோ பெருசா ஒன்னும் இல்லை சிஸ்டர், எங்க இவ கிட்ட சொல்லி… ஒரு வேளை இவளுக்கு நம்ம பர்ஸ்னாலிடி பிடிக்காம போய்… கைல கிடைக்குற கட்டையால மண்டைய பிளந்துட்டா.. அதான் அப்படி செஞ்சேன்.

என்ன இருந்தாலும் நாளைக்கு இவ இல்லைனா… வேற ஒரு பொண்ணு என் கிட்ட குப்பை கொட்டணும்ல… அதுக்காக வேணும் நம்ம இமேஜை காப்பாத்திக்க வேண்டாம்”

“ என்ன சொன்ன? நா இல்லைனா… இன்னொருத்தியா? உன் மூஞ்சிக்கு நானே அதிகம். இதுல சார்க்கு வேற பொண்ணு கேக்குதோ? உன்னை….”

அவன் முதுகில் சாத்த,

“ அய்யோ.. அம்மா… செல்லம் நான் அப்படி சொல்வேனா? எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? சொல்லு”

அலறல் கலந்து அவன் வழிய, மேலும் அவனை அடித்தாள் தர்ஷினி.

அவர்களின் விளையாட்டை கண்ட தாரணிக்கு சிரிப்பு வர, அவள் இருவரையும் மாறி மாறி பார்த்து சிரித்தாள்.

இருவரும் தங்கள் சண்டையை விட்டு, மனம் திறந்து சிரிக்கும் தாரணியை பார்க்க, அவள் இமைகள் மூடி சிரித்து கொண்டு இருந்தாள்.

அவளின் புன்னகை தர்ஷினிக்கு நிம்மதியை தந்தது.

' என்ன தான் அவள் இங்கு தங்கி வந்தாலும், மனம் கணக்க இருக்கிறாளே ' என்று தர்ஷினி தவித்தது அவள் மட்டுமே அறிவாள்.

“ டேய் சந்து குட்டி, நீ உன் வாழ்க்கைல பண்ண உருப்பிடியான காரியம் இது தான்… என் செல்லம்…”

அவன் கன்னத்தில் முத்தம் வைத்து கூறினாள். கண்களால் தோழி புன்னகையை காண்பித்தவாறு.

“ அடடா அம்மு குட்டி, நீ இப்படி டெய்லி தருவேன்னா… நான் தினமும் இந்த வேலையை தவறாம செய்வேனே”

கன்னத்தை தடவி கொண்டு கண்ணடித்து இவன் கேட்க, அவள் முகம் சிவந்தாள்.

சற்று நேரத்தில் அவர்களின் நிலை கண்ட தாரணி,

' இனி தான் இங்கு அதிகப்படி ' என்று புரிய மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள்.

அதன் பின் காதலர்களுக்குள் அரங்கேறும் மென் சீண்டல்கள் அந்த அறையில்

அரங்கேறியது.

தாரணிக்கு தான் மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது.


Post a Comment

0 Comments