சந்தோஷ் தர்ஷினியின் அந்த மோகன நிலையை கண்ட தாரணிக்குள் அவன் நினைவு மேலெழுந்தது.
'வேண்டாம் இது தப்பு' என்று மூளை மறுப்பு கூற காதல் மனம் கேட்பதாயில்லை.
கண்மூடி விழிநீர் சிந்தியவள்,
கனத்த இதயத்துடன் அங்கிருந்த தோட்டத்தில் தஞ்சம் அடைந்தாள்.
சற்று நேரத்தில் தாரணியை தேடி வந்த தர்ஷினியும் சந்தோஷும்,
தோட்டத்தில் அவளை கண்டு நெருங்கினர்.
தாரணியின் முகமே அவள் மனம் கலைந்திருப்பதை தர்ஷினிக்கு உணர்த்த வேகமாய் அவளை நெருங்கினாள்.
ஆனால், சந்தோஷ் தர்ஷினியின் தோளில் கை வைத்து ' வேண்டாம்' என்பது போல் சைகை செய்ய அவள் தயங்கினாள்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராசு அண்ணனின் fm,
அவள் மனதில் உள்ள சோகத்தை பாட்டாக பாடியது.
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ...
கவிதை தேடித்தாருங்கள்… இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்..
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை…
பாடல் தந்த வலியோடு மீண்டும் அவள் இமை மூட, தர்ஷினிக்கு தாங்கவில்லை.
சந்தோஷ்க்கு அவள் கஷ்டம் புரியாவிட்டாலும் அவளின் அந்த நிலை அவனையும் வருத்தியது.
“ நான் அவ கிட்ட போறேன் சந்தோஷ். அவ ரொம்ப கஷ்ட படுறா..”
தர்ஷினி கூற அவன் மீண்டும் மறுத்தான்.
“ அவங்கள கொஞ்சம் தனியா விடு தர்ஷி… மனசு விட்டு அழுதா.. அவங்க கவலை கொஞ்சம் மறையலாம்.”
மனோ தத்துவ மருத்துவன் சந்தோஷ் விளக்கம் கொடுக்க தர்ஷினி அமைதி காத்தாள்.
பாடல் மீண்டும் தொடர்ந்தது.
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே…
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே…
கண் முன் தொலைத்த தன் காதலை எண்ணி அவள் கேவல் அதிகமாக, அந்த நொடி அவளுக்கு தோன்றியது… பாடலாய் வந்தது.
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்…
அவன் சட்டை காலரை பிடித்தது. அவன் நெஞ்சில் விழுந்தது. நொடிக்கு நொடி அவளுக்குள் எழுந்த அந்த காதல் இதம் மீண்டும் வேண்டும் போல் பேதை நெஞ்சம் தடுமாறியது.
கனவில் அவனோடு கொஞ்சிய அந்த நாட்கள் திரும்ப வேண்டும் போல் இருந்தது.
ஒரே பார்வை அட, ஒரே வார்த்தை அட, ஒரே தொடுதல் மனம் வேண்டுதே…
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே…
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…
' என்னதான் அனுவை விட்டு பிரிந்து வந்து விட்டாள்... என்றாலும்?
அவளால் அவனை தன் மனதில் இருந்து தூக்கி எறிய முடியவில்லை.
தர்ஷினியிடம் தான் பெரிய இவள் போல் நாடகமாடி கொண்டு வந்தாலும் அவளால் அவனை மறப்பது
ஏன் மறக்க நினைப்பது கூட முடியாத காரியமாக மாறி போனது.
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்…
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்.
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
“ தாரணி, எங்க இருக்கே?” என்று ஒன்றும் அறியாதவர்களாக தர்ஷினி குரல் கொடுக்க சந்தோஷ் பின் வந்தான்.
அதற்குள் தாரணி தன் கண்களை துடைத்து கொண்டு இயல்பாக தன்னை காட்டி கொண்டாள்.
“ நீ இங்க இருக்கியா? உன்னை வீடு ஃபுல்லா தேடினேன்.” என்று கூறி விட்டு
அவளை நெருங்கி அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் ஏதேதோ பேசி அவளை இயல் நிலைக்கு கொண்டு வந்தாள் தர்ஷினி.
இரவு உணவு உண்டு விட்டு தாரணி தன் அறைக்குள் அடங்கி கொள்ள, தர்ஷினி கையில் செல்போனுடன் சந்தோஷிடம் தஞ்சமானாள்.
அவனுக்கு தெரியும்.
'தாரணியை சமநிலைக்கு கொண்டு வந்த தர்ஷினி, மனதில் குழம்பி கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு இப்போது என் இதம் தேவை ' என்று புரிய அமைதியாக செல்லுக்கு உயிர் ஊட்டினான்.
“ ஹலோ சந்தோஷ்..”
“ சொல்லு செல்லம்” எடுத்த எடுப்பில் அன்பை பாய்ச்சினான்.
“ ரொம்ப கவலையா இருக்கு சந்தோஷ். இவ எப்போ தான் மாற போறா?. இன்னும் எதுக்கு அந்த வீணா போன இளங்கோவை நினைச்சு கண்ணீர் விடுறா? புரியலை எனக்கு…”
அவனுக்கும் புரியவில்லை.
' யார் அந்த இளங்கோ? தாரணி அவனை விரும்புகிறாளா?... அப்போ எதுக்கு அவனை மறக்கணும்?' அவன் தனக்குள் கேட்டு கொண்டு தர்ஷினியிடம்,
“நீ சொல்லுறது எனக்கு புரியலை தர்ஷி… தெளிவா சொல்லு”
சில நொடிகள் தர்ஷினி அமைதி காக்க, மீண்டும் சந்தோஷ் தொடர்ந்தான்.
“ இங்க பாருடி, எனக்கு உன் தோழியுடைய கவலை என்னன்னு தெரிய வேண்டாம்.? ஆனா என் பொண்டாட்டி கவலை படுறத பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.
அவ கவலை போக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.
நான், என் பொண்டாட்டி பிரச்சினை தான் கேட்டேன்”
சந்தோஷ் அமைதி குரலில் இதை கூறினாலும், அவன் கோபம் அவளை தாக்க மெல்ல விசும்பினாள்.
அவள் விசும்பலில் தன்னையே கடிந்து கொண்டவன்,
“ இதோ பார் தர்ஷி செல்லம். நான் உன்னை திட்டனும்ன்னு இதை சொல்லலை. அவங்க கதையை சொல்லு. அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே அவங்கள தேத்திடலாம். சரியா?”
குழந்தைக்கு சொல்வது போல் அவன் கூற, இந்த பக்கம் தர்ஷினி வேகமாய் தலை ஆட்டினாள்.
அது அவனுக்கு புரிந்தது போல் அவன் உதட்டில் புன்னகை விரிந்தது.
மூச்சு கூட விடாமல் தர்ஷினி அத்தனையும் கொட்டி விட, கவனமாய் கேட்டு கொண்ட சந்தோஷ்,
“ அப்போ, தாரணி இன்னும் அந்த இளங்கோவை விரும்புறாளா?”
தெளிவு படுத்த கேட்டான்.
“ இன்னக்கி நடந்தது வச்சு பார்த்தா எனக்கும் அப்படி தான் தோணுது சந்தோஷ்.
தகுதி இல்லாதவன் மேல இவ்வளோ அன்பை வச்சிருக்காளேன்னு நினைக்கும் போது... அந்த வீணா போனவன் மேல கோவம் கோவமா வருது.”
“ ஸ்ஸ் தர்ஷினி, என்னதிது? இப்படி பேச கூடாதுன்னு உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.
அவன் பண்ணது தப்புன்னாலும்… உன் கோவத்தை அவன் மேல காட்டி அவன் செஞ்ச தப்பை மறக்க வச்சிடுவ போலயே…
நமக்கு இப்போ தாரணி கவலை மறக்குறது தான் முக்கியம். அந்த இளங்கோ இல்லை… புரியுதா?”
சந்தோஷ் குரல் கோவத்தில் கூட ஸ்ருதி மாறாது இயல்பாகவே ஒலிக்கும்..
ஆனால் அதன் வேறுபாட்டை அறிந்தவர்கள் தான் அவன் கோபத்தை புரிந்து கொள்வர்.
அது இப்போது தர்ஷினிக்கும் புரிய அமைதியானாள்.
“ சரி, இப்போ சொல்லு… தாரணி விஷயத்துல நாம என்ன செய்யலாம்?”
பேச்சை மாற்றி கேட்டாள்.
சிறிது நேரம் அமைதி அடைந்தவன் பின் மெல்ல,
“ நீ தான் அவ மருந்து தர்ஷி…”
என்றான் மெல்ல.
“ என்னடா சொல்ற?”
“ ஆமா தர்ஷி, அனு கிட்ட இருந்து பிரிய நேர்ந்தப்போ… தாரணி எந்த அளவுக்கு மனசு ஒடிஞ்சு போய் இருப்பான்னு நினைக்குற”
“ ரொம்பவேடா.. நான் அன்னைக்கு அவளை பார்த்தேனே.. எப்படி இருந்தா தெரியுமா?
கண்ணில் ஜீவன் செத்து போய்….
ஒரு… ஒரு வேளை நான் அன்னைக்கு அவளை மீட் பண்ணலைன்னா… சாக கூட நினைச்சு இருப்பாளோ என்னவோ?
நினைக்கவே பயமா இருக்குடா…!!
நல்ல வேளை இறைவன் அந்த சமயம் என்னை அவ கிட்ட கொண்டு போனான்.”
இன்று அதை நினைத்தாலும் உள்ளம் அதிர வைத்தது.
தன் நெஞ்சை அழுந்த பற்றி கொண்டாள் தர்ஷினி.
“ம்ம்ம், அதே ஃபார்முலாவை தான் இப்போவும் பயன்படுத்த போறோம்”
“ புரியலைடா…. தெளிவா சொல்லு?”
“அனுவ பிரிஞ்சப்போ உண்டான காயத்தை உன் நட்பும் அன்பும் எப்படி மாத்துச்சோ? அதேபோல,
இளங்கோ மேல உள்ள பிரியத்தால உண்டான காயத்தை மறக்க செய்ய…
தாரணியை… அவளுக்காகவே அவளை விரும்புற
ஒருத்தனால மட்டும் தான் முடியும்.”
அப்போதும் அமைதியாக தர்ஷினி இருக்கவே,
“ தர்ஷி.. இன்னும் புரியலையா? தாரணிக்கு ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு சொல்றேன்”
“ என்னடா விளையாட்டு பண்றியா?” அதிர்ந்து போய் கேட்டாள்.
“ இல்ல தர்ஷி, நிஜமா தான் சொல்லுறேன்.
தாரணியோட திருமணம் தான் இதுக்கு தீர்வு. இதை நீ தான் தாரணி கிட்ட எடுத்து சொல்லணும்”
“ஏற்கனவே எப்போ வீடு பார்க்க போறனு கேட்டு நச்சரிக்கிறா… இப்போ நான் அவ கல்யாணத்தை பத்தி பேசுனா… இந்த ஊர காலி பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பா” சலிப்புடன் கூறினாள்.
“ அதெல்லாம் எனக்கு தெரியாது தர்ஷீ… இது தான் தீர்வு… அவளை சரி கட்ட வேண்டியது உன் பொறுப்பு.
அதோடு, நீ உடனே பேச வேண்டாம்.
அவளுக்கு ஏத்த ஒரு நல்ல பையனா முதல்ல தேடுவோம். அதுக்கு அப்புறம் அவ கிட்ட இத பத்தி பொறுமையா எடுத்து சொல்லலாம்.
பை சான்ஸ்… அதுக்குள்ள தாரணி இளங்கோவை மறக்க வாய்ப்பு இருக்கு.”
“ நீ நம்புறியா தாரணி அவனை மறப்பானு? அதும் இன்னைக்கு நடந்தத பார்த்த அப்புறமும் உன்னால நம்ப முடியுதா சந்தோஷ்?”
கேள்வியாக அவன் முன் வைத்தாள். அவனுக்கும் நம்பிக்கை இல்லை தான்… இன்றைய தாரணி நிலை அப்படி.
“ நம்புவோம் தர்ஷி, முதல்ல உனக்கு நம்பிக்கையான ஒருத்தனை தேடி கண்டு பிடி.. மத்தது அப்புறம் சரியா?”
மேலும் சில நேரம் அவளிடம் பேசிவிட்டு அவன் வைக்க,
நெடு நேரம் ஆகியும் மனம் குழம்பி அமர்ந்து இருந்தாள் தர்ஷினி.
' எனக்கு நம்பிக்கையான ஒருவனுக்கு நான் எங்க போக?'
சட்டென்று அவள் மூளையில் மின்னல்.
செல்லில் அவனை அழைத்தாள்.
மூன்றாவது ரிங்கிலேயே மறுமுனை எடுக்க பட்டு,
“ அடடா, மேடம்க்கு எங்க நினைப்பு கூட இருக்குதா?... நான் நினைச்சேன்… உனக்கு எப்போவும் சந்தோஷ் நினைப்பு தான்னு…” என்றது.
“ டேய் அண்ணா.. இப்போ நான் பேசட்டுமா இல்லை போனை வைக்கட்டுமா?”
பல்லை கடித்துக்கொண்டு கேட்டாள்.
“ அச்சோ பாப்பு, இது எப்போவாது நடக்க கூடிய அதிசயம் தானே, வேண்டாம்னு எந்த மடையனாச்சும் சொல்வானா?... நீ பேசு பாப்பு”
தர்ஷினி கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கவே அவன் மெல்ல,
“ என்ன ஆச்சுமா?” என்றான் பரிவுடன்.
எப்போதும் போலவே அந்த பரிவில் கிறங்கி,
“ அண்ணா , நான் உன் கிட்ட ஏற்கனவே கேட்டது தான்.
என் ஃபிரண்ட் தாரணியை கல்யாணம் பண்ணிக்கிறியா????” என்று கேட்டாள்.
0 Comments