மூன்று நாட்கள் அமைதியாக கழிய அந்த நாளின் காலை வேலையே தர்ஷினி வீட்டிற்கு விஜயமானான் சந்தோஷ்.
ஹாலில் அமர்ந்திருந்த தாரணி அவனை புன்னகை முகமாய் வரவேற்றாள்.
“ வாங்க சந்தோஷ்.”
“ குட் மார்னிங் தாரணி. என்ன காலை காஃபி போய்ட்டு இருக்கா… அன்னம்மா எனக்கும் சூடா ஒரு கப்”
அடுக்களை பக்கம் குரல் கொடுத்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.
அப்போது தான் மாடி இறங்கி வந்தாள் தர்ஷினி.
“ என்ன டாக்டர் சார், ஹாஸ்பிடல் பக்கம் போகாம இங்க தலைய காட்டி இருக்காரு?” அவனை முறைத்து கொண்டே தாரணி அருகில் அமர்ந்தாள்.
நேற்றைய அவர்களின் செல்பேசி உரையாடலில் இருவருக்குள்ளும் ஒரு சிறு சண்டை.
கோபத்தோடு தர்ஷினி போனை வைத்தவள்,
அதன் பின் அவன் எத்தனை முறை அழைத்தும் எடுக்கவே இல்லை.
இன்று காலையில் கூட அதுவே தொடர, அவசரமாக அவளை சமாதான படுத்த… கொஞ்சி செல்ல வந்து இருந்தான்.
( என்ன சண்டை அப்படின்னு யாரும் யோசிக்க வேண்டாம். எல்லா காதலர்களுக்கு நடுவில் வரும் ஒரு சிறு அக்கப்போர் தான்)
அவனோ அவளை பார்த்தவுடன் அழகாய் கண்ணடித்து உதடு குவித்தான் தாரணி அறியாமல்.
அவன் செய்கை கண்ட தர்ஷினிக்குள் மெல்ல வெட்கம் வர, வந்த புன்னகையை உதட்டிலேயே மறைத்தாள்.
' அப்பாடா சிரிச்சுட்டா.. இனி நம்ம வேலை ஈஸி தான் ' அவனும் புன்னகைக்க ,
தாரணி இருவருக்கும் குடிக்க காஃபியோடு வந்தாள்.
அவர்களின் சம்பாஷனை கண்டு சத்தமில்லாமல் எழுந்து போயிருப்பாள் போல.
காபி தட்டை மேஜை மேல் வைத்த தாரணியை பார்த்த சந்தோஷ்
திடீரென்று நினைவு வந்தவனாய்,
“ தர்ஷினி, உன் அண்ணா போன் எதும் பண்ணானா? எப்போ வரேன்னு சொன்னான்?
ஒரு ரெடிமேட் ஷோரூம் வச்சு நடத்துனாலும் நடத்துறான். அவனை இப்போலாம் பாக்கவே முடியரது இல்ல.”
“ மூணு நாள் முன்னாடி பண்ணான் சந்தோஷ். அனேகமா இன்னக்கி நைட் வருவான்னு நினைக்குறேன். நீ டியூட்டி முடிஞ்சு நேர இங்க வந்துடு. நைட் இங்க தான் டின்னர் உனக்கு”
அவனுக்கு விளக்கம் கொடுத்தபடி தோழியை பார்த்தாள்.
அவளின் முகம் ஏனோ மாறி இருப்பதை உணர முடிந்தது அவளால்.
சந்தோஷ் சிறிது நேரம் இருந்து பேசி விட்டு தர்ஷினி அப்பா சண்முகம் வர அவரோடும் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு காலை உணவை அங்கேயே முடித்து கொண்டு கிளம்பினான்.
அறை வாசலில் நிழலாட திரும்பிய தர்ஷினி தாரணி அங்கு நிற்பதை கண்டு முறைத்தாள்.
“ என்ன தாரு இது? சின்ன பிள்ளை மாறி வாசல்ல நின்னுட்டு தயங்கி நிக்குற. உனக்கு எவ்வளோ முறை சொல்லுறது? இது உன் வீடு இப்படி தயங்காம இருக்க பழகுன்னு…. கேட்க மாட்டியா?”
“ அதில்லை.. சந்தோஷ் இருப்பாங்க நினைச்சு….” தயங்கி கொண்டே இவள் கூற,
“ ஏன் அவன் இருந்தா என்ன? சரி வா” என்று அவளை கை பிடித்து அழைத்து சென்றாள்.
“ சொல்லு தாரு, ஏதோ சிந்தனைல இருக்குறனு தெரியுது. என்னன்னு சொல்லு?”
“ வந்து…. வீடு பாக்க சொன்னேனே தர்ஷினி..” தயங்கி தான் இதை கூற முடிந்தது அவளுக்கு.
' ஏற்கனவே முறைத்து கொண்ட தர்ஷினி இதை கேட்டு என்ன சொல்வாளோ?' என்ற பயம் அவளுக்கு.
ஆம், அவள் எண்ணியது போல தர்ஷினிக்கு கோவம் வர தான் செய்தது. இருந்தும்,
“ அப்பா கிட்ட சொல்லி இருக்கேன் தாரணி. அவங்களும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சி இருக்காங்க.
அதோட அண்ணாவும் வந்துடுவான். அவனுக்கு இங்க நிறைய வீடு புரோக்கர் பழக்கம்.
சோ அவன் வந்ததும் அவன் கிட்ட சொல்லி வைப்போம்.
அப்புறம் எல்லாமே தன்னால நடக்கும்.
நீ எதுக்கும் வொரி பண்ணிக்காத”
தர்ஷினி விளக்க,
மனமில்லாவிட்டாலும் ஒப்புக்கு தலையசைத்தாள் தாரணி.
ஆனால் அவள் மனமோ,
' இந்த வீட்ல இவ அப்பா, என்னை ஏத்து கிட்ட மாறி…
இவ அண்ணா என்னை ஏத்துப்பாங்கன்றது என்ன நிச்சயம்?
அதானே அவர் வரதுக்கு முன்னேயே வீடு மாறிடலாம் நினைக்கேன்.
இதை சொன்னா இன்னும் கோச்சுக்குவாளே' என்று எண்ணமிட அமைதியாக வாயை மூடி கொண்டாள்.
ஆனால் தர்ஷினியோ,
' அன்னைக்கு போன்ல கல்யாணம் பண்ணிக்கிறியா கேட்டா… என்னென்னவோ சொல்லி மழுப்பிட்டான் லூசு அண்ணா. இன்னைக்கு இருக்கு…
அண்ணா வரட்டும். அப்புறம் தானே நான் என் பிளானை எக்ஸ்கியூட் பண்ண முடியும்' என்று எண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டாள்.
' ஆனா தாரு, இனி உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்புற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்ல. உன்னை எப்படி என் பக்கத்துலயே வச்சிக்கணும் என்று எனக்கு தெரியும்'
“ தாரு.. நான் உன் கிட்ட ஒன்னு கேட்பேன்… எனக்காக அதை செய்வியா?”
“ என்ன தர்ஷி?”
“ நீ இப்போனு இல்ல… எப்பவுமே என்னை விட்டு பிரிய கூடாது. இதை மட்டும் எனக்காக செய்வியா?”
கரகரத்து தர்ஷினியின் குரல் ஒலிப்பதை கண்ட தாரணிக்குள் மனம் பிசைய,
“ எப்பவுமே உன்னை விட்டு பிரிய மாட்டேன் தர்ஷினி. இது சத்தியம்”
தாரணி இப்படி சொல்லியதும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள் தர்ஷினி.
அவள் கண்ணீர் ஏன் என்று தெரியாமல் அவளின் விழியை விட்டு வெளியேறியது.
மாலை 6.30 மணி அளவில் சந்தோஷ் கிளினிக்கில் இருந்து தர்ஷினி வீட்டுக்கு வந்தான்.
ஹால் சோபாவில் அமர்ந்து இருந்த தாரணி தர்ஷினி உடன் தானும் அமர்ந்து கொண்டே,
“ தர்ஷி அப்பா இல்லை..?” என்று கேட்க,
“ அப்பா கார்மெண்ட் வரை போய் இருக்காங்க. எப்படியும் நைட் வர லேட் ஆகும் சொல்லிட்டு தான் போனாங்க.”
“ அப்படியா? சரி உன் அண்ணா இன்னுமா வரலை. இந்நேரம் வந்து இருக்கணுமே!!”
அவன் கூறி கொண்டு இருக்கும் போதே வாயில் கேட் திறந்து மூடும் சத்தம் கேட்டது.
“ இதோ அண்ணா வந்தாச்சு…”
மான் போல் துள்ளி குதித்து ஓடினாள் தர்ஷினி வாயிலுக்கே.
“ ஹேய் வாலு… எப்படி இருக்க?” என்று கேட்டு கொண்டே அவன் உள்ளே வர வந்தவனை கண்ட தாரணி ஓர் கணம் அதிர்ந்து நின்றாள்.
' இவனா????'
ஆனால் அவனோ, சந்தோஷிடம் விசாரிப்பு முடித்து கொண்டு அவளை புன்னகையோடு பார்த்தான்.
அந்த புன்னகையில் என்ன இருந்தது என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.
அதற்குள் தர்ஷினி,
“ அண்ணா, இது தான் என் ஃபிரண்ட் தாரணி. உன் கிட்ட சொல்லி இருக்கேனே” என்று அவளை அறிமுக படுத்த,
அவனோ தங்கையிடம் அக்மார்க் புன்னகையை சிந்தி அவள் பக்கம் திரும்பி,
“ ஹாய் தாரணி, எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான்.
அவ்வளவு தான் அத்தனை நேரமும் இருந்த பிரமை விலகி அவனின் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
“ டேய் பாவி, இங்க ஏன் வந்த? இங்கேயும் என்னை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்ற எண்ணமா உனக்கு.
எந்த மூஞ்சிய வச்சிகிட்டு இங்க வந்த இளங்கோ?
இவளையும் என்னையும் பிரிக்கணும் என்ற எண்ணமா?”
இன்னும் என்னென்ன கூறி கொண்டே இருந்தாளோ தெரியவில்லை.
“ தாரணி… என்ன சொல்லுற? இது என் அண்ணா அஷ்வின்.”
தர்ஷினி சொல்வது ஒன்றும் விளங்காமல் முழித்தவள் ,
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல்,
வந்தவனை பற்றி மூளை என்னவெல்லாமோ எண்ணமிட…
“ அம்மா..” என்று தலையை பிடித்து கொண்டு
கண்ணிமைக்கும் நேரத்தில் மயங்கி சரிந்தாள்.
“ தாரணி…….” என்று அதிர்வோடு தர்ஷினி அவளை தாங்க,
நடப்பவை ஒன்றும் புரியாமல் ஆண்கள் இருவரும் முழித்து நின்றனர்.
சந்தோஷ் நிலை உணர்ந்து அவளை தூக்கி அறைக்குள் சென்று கட்டிலில் படுக்க வைக்க தர்ஷினி அவளின் கைகளை பற்றி கொண்டாள்.
“ அய்யோ தாரணி… என்ன ஆச்சு உனக்கு?” என்று அழுகையே வந்தது.
“ ஸ்ஸ் தர்ஷினி அழுறத நிறுத்து. முதல்ல அவங்களுக்கு முகத்தை தொடச்சு விடு. ஏசி ஆஃப் பண்ணிட்டு ஜன்னலை திறந்து விடு."
தர்ஷினியை சரி கட்டி விட்டு,
"அஷ்வின் கார்ல என்னோடே மெடிக்கல் கிட் இருக்கு எடுத்துட்டு வா” என்று சிலை போல் நின்று இருந்தவனையும் எழுப்பி அனுப்பினான்.
“ ஹாங்… ம்ம், இதோ” என்று அவனும் விரைந்தான்.
ஒன்றும் மட்டும் விளங்கவில்லை அவனுக்கு
'இவளுக்கு என்ன ஆச்சு திடீர்னு?' என்று .
0 Comments