12. நட்பெனும் பூங்காற்றே



மயங்கி விழுந்த தாரணிக்கு வேண்டியவற்றை செய்து விட்டு திரும்பிய சந்தோஷ்,

“பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில வந்த மயக்கம் தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று இருவரையும் அழைத்து சென்றான்.

அரை மணி நேரம் கடந்தும், தர்ஷினி இந்த பக்கம் யோசனையிலும் அஷ்வின் அந்த பக்கம் குழப்பத்திலும் இருக்க நடுவில் சந்தோஷ் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.

“அடச்சே, என்ன இது? ரெண்டு பேரும் இப்படி சோக கீதம் வாசிக்குறீங்க… இப்படியே விட்டா எனக்கு தூக்கம் வந்துடும் சொல்லிட்டேன்”

கடுப்புடன் சொன்னவனை முறைத்தாள் தர்ஷினி.

“அட செல்லம், என்னை ஏன்மா முறைக்குற? நீ உன் அண்ணா கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை கேளுமா?” அவன் எடுத்து கொடுக்க

தர்ஷினி அஷ்வின் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.

“ஆமா அஷ்வின், உனக்கு தாரணியை முன்னாடியே தெரியுமா? எப்படி தெரியும்? அவ ஏன் உன்னை இளங்கோன்னு சொல்லுறா?”

“ஆமா அஷ்வின், எப்போ எங்களுக்கு தெரியாம பேர மாத்துன?” சந்தோஷ் கேட்க,

அண்ணன் தங்கை இருவருமே அவனை முறைத்தனர்.

'ஆத்தி, இதுக்கு மேல ஏதாச்சும் பேசுனா… பாச மலர்கள் கொலை கூட பண்ணிடுவாங்களே..' என்று எண்ணி வாயை இறுக மூடி கொண்டான் இரு கை கொண்டும்.

அஷ்வின் பக்கம் கேள்வியாக தர்ஷினி பார்க்க,

“அதான் பாப்பு எனக்கும் புரியல. என்னை ஏன் அவ இளங்கோ சொல்லுறா? முதல்ல அந்த இளங்கோன்னா யாரு?”

அவன் பதிலுக்கு அவளை கேட்க, தர்ஷினி இப்போது அண்ணனை முறைத்தாள்.

“என்ன விளையாடுறியா அண்ணா, நான் உன்கிட்ட கேட்டா? நீ அதையே திருப்பி என் கிட்ட கேக்குற?

எதுக்கு தாரணி, உன்னை அந்த கடன்காரன் இளங்கோன்னு சொல்லுறா?”

“ம்ம்ம்” என்று வாய்க்குள் சந்தோஷ் ஏதோ முணுமுணுக்க,

அவனை ‘என்ன?’ என்று பார்த்தாள்.

“இல்ல, அந்த இளங்கோ எப்போ உன் கிட்ட கடன் வாங்கினான்?” என்று கேட்டான்.

தர்ஷினி அவனை முறைத்த முறைப்பில்,

மீண்டும் அவன் கை வாயை இறுக மூடி கொண்டது.

சந்தோஷ்ஷை பார்வையால் அடக்கி விட்டு அஷ்வினை பார்த்தாள்.

அவனோ,

“பாப்பு, நான் உனக்கு எல்லாமே சொல்லுறேன். ஆனா முதல்ல எனக்கே நிறைய தெரியாது. அதனாலதான் கேக்குறேன். அந்த இளங்கோ யாருன்னு சொல்லு தர்ஷிமா?”

அவன் கெஞ்ச அவள் புரியாமல் சந்தோஷை பார்த்தாள்.

அஷ்வின் எப்போதாவது தான் அவளை ‘தர்ஷி’ என்று அழைப்பதே… இப்போதும் அவன் அழைப்பு அவளுக்கு புரிய சந்தோஷிடம் பார்வையால் வினவினாள்.

அவனோ, ‘சொல்' என்பது போல் கண்ணசைக்க….

தனக்கு தெரிந்த இளங்கோ பற்றி அத்தனையும் ஒப்பித்தாள் அண்ணனிடம்.

அவனும் பொறுமையாக அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான்.

அவன் நிலை என்ன? என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.

தர்ஷினி சொன்னவற்றுக்கும் தனக்கு தெரிந்தவற்றுக்கும் உள்ள ஒப்பீடு அவன் மட்டுமே அறிவான்.

மனதினுள், ‘என்ன நிகழ்ந்திருக்கும் ?’ என்று ஒருவாறு புரிய,

அவனுக்கு இப்போது பெரிதாய் பட்டது தாரணிக்கு ஒன்றை புரிய வைப்பது தான்.

‘அஷ்வினும் இளங்கோவும் ஒன்றில்லை… வேறு வேறு’ என்பதே…

‘என்ன சொல்லி அவளுக்கு புரிய வைக்க?... எப்படி இதை செய்ய?’

அவன் யோசனையில் ஆழ்ந்த படி இருக்க அவன் பார்வையில் தன்னையே பார்த்து கொண்டிருந்த தர்ஷினி பட்டு அவன் மன அழுத்தத்தை அவள் அறியாமல் போக்கி கொண்டு இருந்தாள்.

“எனக்கு தெரிஞ்சது இவ்வளோ தான் அண்ணா…” இவள் கூற,

“பாப்பு, நீ எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும்” என்றான் பீடிகையாக.

அவள் குழப்பமாக சந்தோஷை பார்க்க,

அவன் நண்பனை பார்த்து வாய்க்குள் சிரிப்பை மறைத்து கொண்டிருந்தான்.

ஓரளவுக்கு என்ன? என்பதை அவன் ஊகித்து இருந்தாலும்…. அஷ்வின் முழித்த முழி அவனுக்கு சிரிப்பை கொடுத்தது.

அவனும் அந்த ‘காதல் நிலையை’ கடந்து வந்தவன் தானே…

நண்பர்கள் இருவரையும் ஒன்றுமே புரியவில்லை என்பதால் முறைத்து பார்த்தாள் தர்ஷினி.

“அட என் அருமை குட்டி பிசாசே, நான் நீ கேட்ட எல்லா விபரமும் சொல்லுறேன். எல்லாமே கேட்டுட்டு.. இந்த அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணுவியா?”

“ அட என்ன அண்ணா? நீ, என்கிட்ட போய் இப்படி கேட்டுட்டு… நான் என்ன செய்யனும் மட்டும் சொல்லு அண்ணா நான் செய்யுறேன்.” என்று அக்மார்க் தங்கையாக மாறினாள்.

( அவர்களோடு சேர்ந்து நாமும் கதை கேட்க அஷ்வினோடு பயணமாகலாம்.)

தர்ஷினியை கல்லூரியில் சேர்த்த அஷ்வின் மனமும் சரி வரவில்லை.

ஒவ்வொரு முறையும், “என்னையும் கூட்டிட்டு போ” என்று கூறும் தங்கையை என்ன சொல்லி சமாதானம் செய்ய? என்று புரியாமல் முழித்தான்.

அப்போது தான்,

“இங்கே உனக்கொரு நட்பை தேடு” என்று சொல்லி விட்டு வந்தான்.

அதன் பின் கொஞ்ச நாளில் தங்கையும் ஒரு பெண்ணை பற்றி “ஆ ஊ” என்று பிதற்ற…

'எப்படியோ? அவள் மனம் சமன் பட்டால் சரி' என்று எண்ணி கொண்டான்.

ஆனால் மறு வாரமே,

“அந்த பெண் அவளிடம் அவ்வளவாய் ஒட்டவில்லை” என்று புலம்பிய தர்ஷினியை என்ன சொல்லி சமாதானம் செய்ய...

முடியாமல் தலையை சொரிந்து வாயில் வந்தவற்றை கூறி மீண்டும் அவளை மலை இறக்க… படாத பாட்டு பாட வேண்டி இருந்தது.

ஆனாலும் அதில் சமாதானம் அடையாமல்…

தங்கை 'அந்த பெண்ணையே' தனக்கு மணம் செய்து கொள்ள சொல்ல… அப்போது தான் அவனும் உணர்ந்தான்.

‘அந்த முகமறியா பெண் மேல் இவள் கொண்ட நேசத்தை ..

இப்படியும் ஒரு பெண்ணால் மறு பெண் மேல் நேசம் வைக்க முடியுமா???

ஏன்? முடியாது … இதோ என் கண் முன்னே நிற்கிறாள் என் செல்ல தங்கை…'

அவளுக்கு பதில் கூறாமல் அவளை செல்லமாய் கடிந்து விட்டு ..

தங்கையின் அந்த அன்பிற்கு பாத்திரமான அவளை அவனும் தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டான்.

தர்ஷினி எப்போதும் அப்படி தான். அவ்வளவு எளிதில் யாரையும் தன்னிடம் நெருங்க விட மாட்டாள்.

அவள் ஒருவர் மேல் அதீத அன்பு வைக்கும் பட்சத்தில்… அந்த நபரை யாருக்காகவும்? எங்கேயும்? எப்போதும்?? விட்டு கொடுக்க மாட்டாள்.

அதனால் தான் அவளுக்கு அனுவின் மேல் கொஞ்சம் பொறாமையும் வந்தது.

தர்ஷினி கல்லூரி முடிந்து ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த சமயம்…

அவளை அழைக்க அஷ்வின் வந்திருந்தான்.

வரும் வழியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தங்கைக்கு பிடித்த டைரி மில்க் பாரை வாங்க வந்தவன்,

( கல்லூரி முடிந்த சமயம் அனுவும் தாரணியும் பேசி கொண்டிருந்த அந்த ஷாப்)

அன்று தங்கை தனக்காக பார்த்த அந்த பெண்ணை…

அதான் தாரணியை கண்டான்.

அவனுக்குள் சிரித்து கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

ஆனால் கொஞ்ச நேரத்தில் அவள் 'ஆச் மூச்’ என்று கத்த… புரியாமல் அவளையே பார்த்தான்…

'பாவம் என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? ' என்று தான் எண்ணினான் முதலில்.

ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளே தன்னை அறியாமல் அவன் மேல் வந்து இடித்து விட்டு.. சாரியும் சொல்லி விட்டு,

கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போனவளை கண்டு சிலையாகி இருந்தான்.

'ப்பா.. என்ன சாஃப்ட்டான கை… பஞ்சு போல இருக்கு. ஒழுங்கா சாப்பிடுவாளா? இல்லையா?' என்று எண்ணி கொண்டான்.

அவன் எண்ணம் போன திக்கை எண்ணி தனக்குள்ளே சிரித்தும் கொண்டான்.

அவனும் பாவம் என்ன செய்ய?...

கல்யாணம் என்ற பெயரில் தங்கை அவன் மனதில் கல்லை எறிந்து விட்டு செல்ல..

குழம்பிய குட்டையில் தத்தளித்த மீன் போல தவித்து போனான் அஷ்வின்.

அவன் எதிர்பாராத அடுத்த இன்ப அதிர்ச்சி அந்த மாலில் அவளை கண்டது தான்.

அதும் தன் சட்டையை கொத்தாக பிடித்து கண் மூடி பயத்தில் நடுங்கிய இமைகளோடு…

கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் கண் முன்னேயே அவனை சைட் அடித்தது.

நெளிந்து குழைந்து என்று அவள் பேசும் பேச்சில் அவன் இரண்டாம் முறையாக சறுக்க வேண்டியதாகி விட்டது.

அப்போது தான் அவனும் உணர்ந்தான்.

அவள் மேல் செல்லும் தன் மனதை.

'ஆனால், அது போல் அவளுக்கும் இருக்குமா? ' என்று எண்ணி கொண்டவன் மறுநொடியே,

' இல்லைனா என்ன? நாம வர வச்சிடுவோம் ' என்று மனதிற்கு பதில் சொல்லி கொண்டான்.

'அவளை பார்க்க வேண்டும்…' என்று தோன்ற,

'எங்கே போய் எப்படி பார்க்க?' என்ற வழியில்லாமல் இருந்தான்.

அப்போது தான் அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு..

“சென்னை வந்து இருக்கியே.. எங்க வீட்டுக்கு வா!!” என்று அழைப்பு விடுக்க ..

மறுக்க தோன்றாமல் அவனும் சம்மதித்தான் வீட்டிற்கு வர வழி கேட்டு கொண்டு.

அந்த நண்பனும், தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவை சொல்லி,

“அங்க வந்துடு… நான் வந்து கூட்டி போறேன்” என்று வழி கூறினான்.

அப்போது தான் அவனும் அவளை அங்கு சந்திக்க நேர்ந்தது.

‘பூக்குவியல் போல தன் மேல் வந்து விழுவாள்' என்று கற்பனையிலும் நினைக்காத ஒன்று கண் முன் நடக்க…

சுற்றம் மறந்து அவளை அப்படியே அணைக்க துடித்த மனதையும் கரத்தையும் அடக்க அவன் வெகு சிரமபட்டான்.

' இன்னும் கொஞ்ச நேரம் இவ, இப்படி என் மேல கிடந்தா.. நடக்க போற விபரீதத்தை யாராலும் தடுக்க முடியாது' என்று தனக்குள் கூறி கொண்டான்.

நல்ல வேளை அப்படி எதுவும் விபரீதம் ஆகாமல் அவளே எழுந்தும் கொண்டாள்.

மனம் சிணுங்கினாலும்… அவளின் அந்த சிவந்த முகம் அவனை ஏழாவது வானில் பறக்க செய்தது.

ஒரு காதலனுக்கு, தன் காதலுக்கான பதிலை காதலியின் வாய்மொழி தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை விழிகள் இரண்டும் சொன்னாலே போதும் வார்த்தைகள் அங்கு ஊமையாகிவிடும்.

அது தான் இங்கேயும்…

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா…

உன் இதழ்கள் சொல்லும்…

நினைவுகளில் இருந்து மீண்டு, திரும்பி தர்ஷினியை பார்த்தான் அஷ்வின்.

“பாப்பு, நீ சொல்லுறத வச்சி பார்த்தா.. தாரணி மனசுல என் மேல ஒரு ஈர்ப்பு இல்லை காதல் இருக்கணும்.

நாங்க சந்திச்ச அந்த நேரத்தில் தான்…

அந்த இளங்கோவும் தாரணியை பார்த்து இருக்கணும்.

அதை கணக்கு பண்ணி மகாராணி,

நான் தான் அந்த இளங்கோன்னு நினைச்சு… தன் காதலை துறந்து… தோழிக்கு என்னை தாரை வாற்க்க துணிஞ்சு இருக்கா” என்று கூறினான்.

“இல்ல அண்ணா, தோழியோட வாழ்க்கை தன்னால கேள்வி குறியாகிட கூடாதுன்னு விலகி வந்துட்டா” என்று திருத்தினாள் தர்ஷினி.

சந்தோஷ் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.

அவனுக்கு முன்னேயே,' இது போல் தான் ஏதாவது இருக்கும் ' என்ற எண்ணம்.

“அது சரி, ஆனா இப்போ… நீ இளங்கோ இல்லை அஷ்வின்னு தாரணி எப்படி நம்புறது?” என்று கேட்டான்.

“அதுக்கு தான் தர்ஷினி உதவி தேவைன்னு சொன்னேன்.” என்று அஷ்வின் கூறினாலும் அவன் மனம் குழப்பத்தில் இருந்தது.

“இன்னும் என்னடா?” அவன் முகம் கண்டு நண்பன் கேட்டான்.

அவனும் தன் மன குழப்பத்தை கூற..

'இப்படியும் ஆக கூடுமோ?' என்று நினைத்தான் சந்தோஷ்.

“ அப்படி எதுவும் நடந்துச்சுனா… இந்த உலகத்துலயே அதிகம் சந்தோசப்படுவது நானா தான் இருக்கும்” என்று தர்ஷினி குண்டை தூக்கி போட நண்பர்கள் இருவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.


Post a Comment

0 Comments