13. நட்பெனும் பூங்காற்றே

 


“ஏய் எந்திரிடி…” மஞ்சு தான் வழக்கம் போல் அனுவை உலுக்கி கொண்டு இருந்தார்.

கொஞ்ச நாட்களாகவே அவரின் புலம்பல் அவருக்கு மட்டுமே…

“தாரணி எங்க?” என்ற கேள்வியில் இருந்து இப்போது உள்ள புலம்பல் வரை அனுவிடம் எந்த பதிலும் இல்லை என்பது தான் உண்மை.

‘ இந்த தாரணிக்கும் அனுவுக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த பொண்ணு சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு போனா?

இதுக்கிடையில்,

இளங்கோவின் அம்மா வேணி

போன் பண்ணி,

“ இளங்கோ ஜாதகத்தில் இன்னும் ஒரு வருசத்துக்குள்ளே கல்யாணம் பண்ணனும்… இல்லைனா அஞ்சு வருஷம் தள்ளி போகும். அதனால சிம்பிளா நம்ம சொந்ததுக்குள்ள பூ வச்சிடலாம் அண்ணி… மூணு மாசத்துல நல்ல நாளா பார்க்கலாம் சரி தானா?” கேக்குறா

'அவளுக்கு என்ன பதில் சொல்ல?

உன் மருமக கொஞ்ச நாளாவே புத்தி பேதலிச்சவ மாறி யார் கிட்டயும் பேசாம… அறைக்கு உள்ளேயே தவம் கிடக்குறானு சொல்ல முடியுமா?

இதுக்கெல்லாம் மேல, இன்னைக்கு அவ அப்பா கிட்ட போய்,

“ எனக்கு கல்யாணம் வேண்டாம்” சொல்லிட்டு போனது

அந்த மனுசன் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு உக்கார…

‘அய்யோ கடவுளே…’

அந்த தாயுள்ளம் தலையை பிடித்து கொண்டது.

“ என்ன தான்டி உன் பிரச்சனை? இப்போ எதுக்கு கல்யாணம் வேணாம் சொல்லுற?

காலேஜ் படிக்கும் போதே கட்டி வச்சா கூட சரினு சொல்லிக்கிட்டு திரிஞ்ச… இப்போ என்ன ஆச்சு? தாரணி எங்க ? அவ சொன்னாதான் நீலாம் கேப்ப? என்னடி கேட்டுட்டே இருக்கேன்…

கல்லு குண்டு மாறி கிடக்க… பதில் சொல்லுடி”

மஞ்சு உச்ச ஸ்தாதியில் கத்த,

“ நான் சொல்லுறேன் அத்தை” என்று இளங்கோ வந்தான்.

அவனையும்… அனுவையும் மாறி மாறி பார்த்த மஞ்சுவிற்கு ஆச்சர்யம்.

‘எப்போதும் இளங்கோவின் பெயரை கேட்டாலே மான் போல் துள்ளும் மகள் இப்போது அவனே வந்து நிற்கும் போதும் அசையாமல் இருப்பது…’

அவனையே கவலையாக பார்த்தார்.

அவனோ கண்களால்,

"நான் பார்த்துக்கறேன்… நீங்க போங்க” என்று அனுப்பி வைத்தான்.

“என்ன அனு என்ன ஆச்சு?”

அவனுக்கும் எந்த பதிலும் இல்லை.

கட்டிலில் அனுவும் தாரணியும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ப்ரேம் செய்ய பட்டு கிடக்க அதை கையில் எடுத்தான்.

அவனுக்கு ஏதோ புரிவது போலும்… அதே நேரத்தில் தவறு தன்னால் தான் நடந்துள்ளது என்றும் புரிய,

“இவ பேர் தான் தாரணியா?”

மெல்ல கேட்டான்.

அவ்வளவு தான் சடக்கென்று எழுந்து அமர்ந்தவள் அவன் கையில் இருந்த படத்தை பிடுங்கினாள்.

ஏனோ அவள் பார்வை புகைப்படம் வழியே தாரணியிடம் ஏதோ சொல்வது போன்ற பிரமை.

“ஏன் மாமா கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொன்ன அனு…

இந்த கல்யாணம் நடக்குறதுல எல்லாரையும் விட உனக்கு தானே விருப்பம் அதிகம்… அப்புறம் ஏன்டா?”

“உனக்கு இருக்கா மாமா?”

அவள் அவன் பார்வையை ஊடுருவி கேட்டாள்.

அவன் தலை அனிச்சையாய் கவிழ்ந்து கொண்டது.

“சொல்லு மாமா? உனக்கும் என் மேல தான் காதல்ன்னு இவ்ளோ நாளும் நினைச்சுட்டு இருந்தேனே.. அது பொய்ன்னு நீ தாரணியை பத்தி சொல்லும் போதே மனசு கனத்து போய் ஏத்துக்கிட்டேனே…

ஆனாலும் என்னால உன்னை விட்டு கொடுக்க முடியல மாமா”

கண்களில் கண்ணீர் திரள அவள் கூற அவனால் பதில் கூறவோ இல்லை அவளை சமாதானம் செய்யவோ இயலவில்லை.

என்னவென்று சொல்வது? வார்த்தை கோர்க்க முடியா கவலை தோய்ந்த கவிஞனாக அவன்.

இருந்தும் கூறினான்.

“அனுமா… எனக்கு உன் மேல விருப்பம் இல்லாமலா இல்லைடி… அந்த பெண்ணை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு. அதை யார் கிட்டயும் நான் உணர்ந்தது இல்லையே. அத தான் உன் கிட்ட சொன்னேன்.

நான் சொன்னது சரின்னோ… இல்லை தப்புன்னோ சொல்ற இடத்துல இப்போ நான் இல்லைனு புரியுது.

அது கூட நீங்க ரெண்டு பேரும் பிரிய நான் காரணம் ஆகிட்டேன்னு நினைச்சா.. என்னோட குற்ற உணர்ச்சி கூடுதுடா… இதை சரி பண்ண எனக்கு வாய்ப்பு தான்னு தான் கேட்கிறேன்.”

விரக்தி சிரிப்பொன்று அவள் முகம் படர,

“நாங்க பிரிய நிச்சயமா நீ காரணம் இல்லை மாமா” என்றவளை புரியாமல் பார்த்தான்.

“ஆமா மாமா, என்னோட அவசர புத்தி தான் காரணம். நான் இதை வேற மாதிரி கையாண்டு இருக்கணும்.

ஒரே நொடியில் என் காதல் தோல்வின்னு எண்ணவும் என்னையறியாமல் நான் கையாண்ட முறை தான் காரணம்.”

“இருக்கலாம்… இருந்தும் இதை சரி செய்யவேண்டியது என் கடமைடா…”

“உனக்கும் இருக்கு மாமா… ஆனா இப்போ நீ செய்ய வேண்டியது அது இல்லை. நம்மளோட இந்த கல்யாணத்தை நிறுத்துறது” என்று கூற அவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.

“மன்னிச்சுடு மாமா… உனக்கு என் மேல விருப்பம் இருக்கலாம்… ஆனா காதல் இல்லையோனு என்னை இப்போ யோசிக்க வைக்குது… நாளைக்கே நீ தாரணியை பார்த்தாலும்.. உன் மனம் மாறிடுமோன்னு நான் பயப்படனும் மாமா… உனக்கு என் மேல மட்டுமே விருப்பம், காதல், மோகம் எல்லாமும் வரும்னு தோணுறப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் மாமா… காதல் இல்லாத கல்யாணம் கசக்கும்…” என்று மேலும் அவனை அவள் அறியாமல் காய படுத்தி கொண்டிருந்தாள்.

அவன் தலை கவிழ்ந்து இருக்க… சிறிது நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன்,

“சரி உன் இஷ்டம் அனு… இனியுமாது உன்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணறேன்டா… நீயும்

முயற்சி செய்” என்று எழுந்து கொண்டான்.

தன்னுடைய விளக்கமில்லா எதிர்காலத்தை நோக்கி.

                          ***

அஷ்வின் குழம்பியபடி இருக்க… சந்தோஷ் அவனுடைய ஆறுதலுக்காக தர்ஷினியிடம் பேசி பார்த்தான்.

‘எதுவும் வேலைக்கு ஆகவில்லை' என்று புரிய வேறு வழியில்லாமல் நண்பனை சமாதானம் செய்தான்.

சந்தோஷ் அன்றைய இரவை அங்கேயே கழித்து விட

காலையில் அஷ்வின் குழப்பத்திற்கான நிலைமையை எதிர்நோக்கி காத்து இருந்தனர் மூவரும்.

தோட்டத்தில் அமர்ந்து குளிர் காற்றை உள்ளிழுத்து கொண்டபடி இருந்த தர்ஷினியிடம் வந்தாள் தாரணி கையில் அவளுடைய ஒற்றை பேக்குடன்.

அதை கண்டு கொண்ட அஷ்வினும் சந்தோஷும் அங்கிருந்த புதரின் பின் தங்களை ஒளித்து கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்தனர்.

நோட்டம் விட்டனர் என்று சொல்ல வேண்டுமோ?

“ தர்ஷினி..” என்ற அவளின் அழைப்பை ஏற்று கண் திறந்து பார்க்க அவள் கண்ணில் பட்டது தாரணியின் துணிப்பை தான்.

“ என்ன தாரு, பிக்னிக் கிளம்பிட்டியா?” என்று கேட்டு வைத்தாள்.

அவளின் நக்கல் புரிந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவள்,

“ அன்னம்மாக்கு தெரிஞ்சவங்க வீடு ஒன்னு.. இன்னைக்கு காலி ஆகுதுன்னு சொன்னாங்க… அதான்” என்றவளை முறைத்தாள்.

‘வாவ்!!! சூப்பர் தாரணி.. இத இத… இத தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதில் கூறி கொண்டு

“ அப்போ எனக்கு பண்ணி கொடுத்த சத்தியம்?" என்று அசராமல் அவள் கேட்க,

தாரணி திணறி போனாள்.

'எந்த கேள்வியை இவள் கேட்க கூடாது’ என்று எண்ணி வந்தாளோ அதையே அவளும் கேட்க என்ன செய்ய? என்று முழித்தாள்.

நேற்றைய இரவின் பின் பகுதியில் தான் அவளுக்கு

அஷ்வினும் இளங்கோவும் வேறு வேறு என்ற உண்மை புரிய..

அதை ஏற்கவா? மறுக்கவா? என்று புரியாமல் குழம்பி கொண்டிருந்தாள்.

ஆனால் அன்றைய இரவு போய் பகல் வருவது போல்…

குழப்பம் தவிர்த்து ஒரு முடிவை கையெடுத்தாள்.

தனக்கு இப்போ கிடைத்திருக்கும்… தர்ஷினியின் தூயன்பை இழக்க அவள் தயாரில்லை.

ஆகவே, தர்ஷினிக்காக மீண்டும் தன் காதலையே கைவிட துணிந்தாள்.

முன்பொரு முறை இதே முடிவை அனுவிற்காக எடுக்கும் போது ஏற்பட்ட உயிர் வலியை காட்டிலும் ஓராயிரம் வலி.. அவள் நெஞ்சில்..

காரணம் … கண் முன்னே அவனை கண்டுகொண்டே எப்படி விலக முடியும்? என்பது.

ஆகவே முந்தைய தினம் அன்னம்மா கூறிய வீட்டை நோக்கி செல்ல முடிவெடுத்தாள்.

இதை யோசித்தவளுக்கு…

தர்ஷினி தன்னிடம் கேட்டு கொண்ட சத்தியம் நினைவு வர…

அதை எப்படி சமாளிப்பது? என்று புரியாமல் நின்றாள்.

யோசித்து கொண்டிருந்தவள் தோள் தொட்டு நினைவுக்கு கொண்டு வந்த தர்ஷினி,

“ இங்க பாரு தாரணி…எனக்கு,

உனக்கும் அண்ணாவுக்கும் இடையில இருக்குற

கசப்பை பத்தியெல்லாம்…"

சிறிது இடைவெளி விட்டவள்,

“ நோ கமெண்ட்ஸ்” என்கவே… இங்கு அஷ்வினும் சந்தோஷும் தலையில் அடித்து கொண்டனர்.

“ டேய் வேணும்னே பழி வாங்குறாடா… இவள வச்சிக்கிட்டு…. எப்படிடா குப்பை கொட்ட போற?” என்று சந்தோஷிடம் பல்லை கடித்தான் அஷ்வின்.

“ அதான் மச்சான் எனக்கும் தெரியல” என்று இவனும் சோகம் வாசிக்க தர்ஷினி மட்டும் இந்நேரம் அவர்கள் அருகில் இருந்தால் இருவரையும் அடித்து துவைத்து இருப்பாள்.

ஆனால் அவளோ தீவிரமாக தோழியின் மனதை கரைத்து வடிகட்டி கொண்டிருந்தாள்.

“ சொல்லு தாரணி… அதுக்காக என்னை விட்டு போகணும்னு முடிவு பண்ணிட்டியா?”

தர்ஷினியின் எந்த கேள்விக்கும் இவளிடம் பதில் இல்லை.

“ உனக்கு இங்க எந்த அசௌகரியமும் வராம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு…

அதோட கொஞ்சம் கால அவகாசம் தந்தா..

உனக்கான பாதுகாப்பான இடத்தில்..

உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டியதும் என் பொறுப்பு…

இதுக்கு மேலயும் நீ போகணும்னு முடிவு பண்ணா… நிச்சயமா அதை தடுக்க மாட்டேன் தாரு..

என்னுடைய சுயநலத்துக்காக உன்னை கட்டாய படுத்துவது ரொம்ப தப்பு” என்று கையை கட்டி கொண்டாள்.

இனி முடிவு முழுதும் அவள் வசம்..

என்ன செய்ய? என்று குழம்பி தவித்தவள்,

கொண்டு வந்த பையோடு வீட்டிற்குள் திரும்பினாள்.

தர்ஷினி திரும்பி புதரை பார்த்து சிரித்து கொண்டு தாரணியின் பின்னே நகர்ந்தாள்.

அவர்கள் சென்றபின் வெளி வந்த இருவரும்…

“ ஏன் மச்சான்… உன் தங்கச்சி அவளை எங்க கொண்டு போய் சேர்க்க பிளான் போட்டு இருக்கா தெரியலையே??” சந்தோஷ் கூற… அஷ்வின் சிரித்து கொண்டான்.

தர்ஷினியின் பூடக பேச்சை அறிந்தவன் ஆயிற்றே…


Post a Comment

0 Comments