14. நட்பெனும் பூங்காற்றே



காலை உணவை தர்ஷினியோடும் அவள் தந்தை சண்முகத்தோடும் சேர்ந்து தாரணி அமர்ந்து உண்டபடி இருக்க அஷ்வினும் சந்தோஷும் அங்கு வந்தனர்.

முந்தைய இரவிலேயே தந்தையிடம் தொழில் ரீதியாக பேசி விட்டு மீதத்தை காலையில் பேசலாம் என்று சென்றவனை இப்போது பிடித்து கொண்டார்.

ஆனால் அவனோ தாரணியின் ஓர் நொடி விழி பார்வைக்காக அவளையே பார்த்த வண்ணம் தந்தைக்கு பதில் கொடுக்க

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்ட தர்ஷினி சிரித்து கொண்டாள்.

‘இவன் அவள் பார்வைக்காக ஏங்குறான்…

ஆனா, அவ இட்லி எத்தனை கிலோ கிராம்ன்னு கணக்கு பண்ணுறா…

இந்த லட்சணத்துல இருக்கு இவங்க காதல்’ என்று தனக்குள் கூறி சிரித்தவளை எதேர்ச்சையாக பார்த்த அஷ்வின் முறைத்தான்.

அவள் அதற்கும் சிரித்து வைக்க… பல்லை கடித்தபடி சந்தோஷ் காலை மிதித்தான்.

திடீரென்று ஏற்பட்ட வலியில் கத்த போனவன்… நொடியில் சத்தத்தை வாய்க்குள் முழுங்கி நண்பனை முறைத்தான்.

அவனும் நடந்த கூத்தை பார்த்தான் தான்.

ஆனால், ‘ சம்பந்தம் இல்லாமல் இவன் என்னை எதுக்கு மிதிச்சான்?’ என்று முறைக்கவே..

இவன் பார்வையில் அவனிடம்,

‘ உன் ஆளுகிட்ட சொல்லி வை’ என்று எச்சரிக்கை விடுத்தான்.

சந்தோஷும் பதிலுக்கு,

‘ ஏன்?? நீ தான் தைரியமான ஆளாச்சே.. சொல்லு.. சொல்லித்தான் பாரு’ என்று பதில் கொடுத்தான்.

“ என்னடா அஷ்வின் கேட்ட கேள்விக்கு பதிலை காணோம்?” சண்முகம் இவர்களின் மௌன பாஷையை கலைத்தார்.

“ அப்பா… அது.. வந்து” என்ன சொல்லவென்று புரியாமல் இவன் முழிக்க,

“ என்னடா? குறிச்ச நேரத்துல அந்த சேட் சரக்கை அனுப்பிடுவான் தானே… இந்த முறை எந்த தடையும் இல்லையே??”

போன முறை இவர்களுக்கு வர வேண்டிய சரக்கை... இவர்களின் தொழில் போட்டியாக வரும் மற்றோர் நிறுவனம் கடைசி நேரத்தில் தன் கைப்பற்ற…

‘இந்த முறையும் அது போன்று நிகழ்ந்து விடக்கூடாதே’ என்று அவர் கேட்க…

“ அப்பா… அதுலாம் கரெக்ட் டைம்க்கு வந்துடும்.

இந்த முறை அந்த J K கம்பனிய விட நாம கம்மி ரேட் கோட் பண்ணி இருக்கோம்.

அவனும் சரின்னு சொல்லி அக்ரிமெண்ட் போட்டாச்சு.

அதுக்கு தானே நானே நேர்ல போனேன்…

அவனால நம்மளையும் பகைக்க முடியாது.

ஒத்துக்கிட்டான்… சரியா சொன்ன நேரத்துக்கு லோட் இங்க இருக்கும். நீங்க கவலை படாதீங்க” என்று அவன் விளக்கிய பின்பே அவர் முகம் தெளிவடைந்தது.

‘பரம்பரையாக செயல்பட்டு வரும் இந்த தொழிலை இனி மகன் பார்த்து கொள்வான்’ என்று ஒரு தந்தையாக சமாதானம் அடைந்தார்.

உணவை உண்டு விட்டு தாரணி தன் அறைக்குள் ஒடுங்க பார்க்க…

தர்ஷினி பிடித்து கொண்டாள்.

“ தாரணி நில்லு… எங்க போற?” என்று அவளுக்கு கூறி விட்டு,

அஷ்வினிடம்,

“ அண்ணா நாங்க இன்னைக்கு உன் ஆபிஸ் வரோம்.. வீட்லயே இருந்து இருந்து போர் அடிச்சது தான் மிச்சம்…” என்று கூற

அஷ்வின் ஆனந்த அதிர்வும்… தாரணி உச்ச கட்ட அதிர்வும் கொண்டனர்.

‘வீட்டில் இவள் இருக்கும் சில பொழுதுகள் கூட இவனை நிமிர்ந்து பார்ப்பதை முயன்று தவிர்த்து வந்தவள்…

இப்போது காலை உணவுவேளையில் விடாமல் தொடர்ந்து வந்த அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தான் நழுவ போனதே.

இதில்…

இவனோடு.. இவன் அலுவலகத்தில்…

முடியுமா???'

முடியாது என்றே நம்பி மறுக்க பார்க்க…

தர்ஷினி தான் அவளை அடக்க வேண்டியதாகி போனது.

ஒரு வழியாய் வானத்தில் பரந்த அஷ்வினை சந்தோஷின் குரல் பூமிக்கு இழுத்து வந்தது.

“ சரி தர்ஷி, ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க… போற வழியில ட்ராப் பண்ணிட்டு போறேன்..” என்றவனை,

‘ கையில் கிடைத்த எதையாவது கொண்டு அடிக்கலாமா??’ என்று முறைத்தான் அஷ்வின்.

சண்முகம் அறைக்குள் திரும்ப,

தர்ஷினியும் தாரணியும் தயாராக கிளம்ப… சந்தோஷிடம் வந்த அஷ்வின்,

“ ஏன்டா டேய்??? உன் கிட்ட இப்போ யாராச்சும் டிராப் பண்ணுன்னு சொல்லி கேட்டங்களா??

நீ ஏன் என் விஷயத்துல மூக்கை கொடுக்குற??” என்று அவன் முகத்தில் குத்தினான்.

“ அய்யோ அம்மா” மூக்கை சரி பார்த்து கொண்டவன்,

‘ நல்ல வேலை மூக்கு தப்பிச்சுது’ என்று எண்ணியபடி

“ டேய்… நான் கட்டிக்க போற பொண்ணை தானடா கேட்டேன்.

தெருவுல போற வரவளுக்கா லிப்ட் கொடுக்க போறேன்ன்னு சொன்னேன்…

ஷி இஸ் மை டார்லிங் டா…” என்றான்.

“ உன் மூஞ்சி… ஆனா கூட வரது என் டார்லிங்டா…

நீ என்ன பண்ணுவியோ தெரியாது… இப்போ அவங்க என் கூட தான் வரணும்.”

“ எப்படிடா?”

“ நீ தான ஆரம்பிச்சுது… நீயே முடி” என்று அவனை தள்ளினான்.

அதற்குள் இருவரும் தயாராகி வர… சண்முகமும் வந்தார்.

‘ இப்போ இவர் ஏன்டா வரார்? கொஞ்சம் முன்னாடி பெரிய இவனாட்டம் சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுறதா… தப்பா எடுக்க கூடாதே’ என்று அவன் எண்ணி கொண்டிருக்க

அஷ்வின் அவனை கண்களால் மிரட்டி கொண்டிருக்க… சண்முகம் தான் பேசினார்.

“ சரி தர்ஷினி… நீங்க சந்தோஷ் கூட அங்க போய்டுங்க…

அஷ்வின் நீ போற வழியில என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிட்டு போ” என்று கூறினார்.

அதற்கும் அவன் சந்தோஷை தான் முறைக்க வேண்டியதாகி போனது.

‘ ஏன்டா??? நடக்குறது எல்லாத்துக்கும் நானே காரணம் ஆகிட முடியுமா?? சொன்னது உன் அப்பா… நியாயமா நீ அவரலோ முறைக்கணும்…

அது சரி… ஊருக்கு இளைச்சது…. யாரையோ சொல்வாங்களே??? யாரது???’ என்று அவன் தீவிர யோசனையில் ஆழ தர்ஷினி அவன் முதுகை தட்டி,

“ டேய்… நின்னுட்டே தூங்குறியா??? இப்போ நீ வரியா? இல்ல நாங்க தனியா போய்க்கவா??” என்று கேட்க

அவசரமாய் யோசனையை கைவிட்டு அவர்களை அழைத்து சென்றான்.

‘இவங்களுக்கு உதவியும் செஞ்சு… அடியும் வாங்கணும் எழுதி இருக்கு நம்ம தலையில’ என்று நொந்தபடி.

“வா தாரணி, இது தான் நம்ம ஷோரூம்… இதுக்கு பின்னாடி தான் நம்ம கார்மெண்ட்ஸ் இருக்கு” என்று அங்குள்ள ஒவ்வொரு பகுதியாக அவளுக்கு விளக்கிய படி…

அந்த பெரிய ஷோரூமை சுற்றி வந்தனர் இருவரும்.

நகரின் மையத்தில்… பரம்பரையாக இயங்கி வரும் அந்த ஜவுளிக்கடை மக்கள் மத்தியில் மிக பிரசித்தமானது.

இவர்களுக்கென தனிப்பெயரை தாங்கி நிற்கும் அந்த கடையை கண்களில் பிரமிப்போடு பார்த்தாள் தாரணி.

சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கும் இந்த குடும்பத்தில் யாருக்கும்…

தலைக்கணம் என்ற ஒன்று இருப்பது போலவே தெரியாமல்….

தர்ஷினியின் தந்தையும் சரி…

தர்ஷினியும் அஷ்வினும் சரி... மிக இயல்போடு இருக்க அவர்கள் மதிப்பு மேலும் மெருகேறுவது போலத்தான் தோன்றியது தாரணிக்கு.

சிந்தனையில் மூழ்கி இருந்தவளை தர்ஷினி அவர்களின் அலுவலக அறைக்குள் அழைத்து செல்ல,

முக்கிய பொறுப்பில் இருக்கும் செந்தூரன் அங்கு வந்தார்.

“ வாம்மா தர்ஷினி…” என்றவர் தாரணியையும் அதே புன்னகையோடு வரவேற்றார்.

“ அங்கிள் இவ தான்… நான் போன்ல உங்க கிட்ட சொன்னது…

அப்பா கிட்டயும் பேசிட்டேன். அண்ணா இப்போ வந்துடுவான்.

அவனுக்கும் இதுல மாற்று கருத்து இருக்காது… நீங்க இவளுக்கான வேலையை மட்டும் எப்படின்னு சொல்லிடுங்க” என்று தர்ஷினி கூற அருகில் நின்ற தாரணிக்கு

முதலில் அவள் கூறுவது விளங்கவில்லை என்றாலும்…

பின் புரிய அந்த பெரிய மனுஷன் நகரும் வரை காத்து இருந்தவள்,

“ தர்ஷினி என்னதிது??? எதுக்கு இப்போ இந்த வீண் வேலை உனக்கு??” என்று பல்லை கடித்தாள்.

‘தன்னை கேட்காமல் அவளாக முடிவெடுத்தது ஒருபுறம்…

யாரை சந்திக்க கூடாது!! என்று எண்ணி கொண்டிருக்கிறாளோ அவனிடமே வேலையை செய்ய சொல்வது மறுபுறம்’ என்று அவளை கோபவெறி ஏற்ற அமைதியாக அவளுக்கு பதில் கொடுத்தாள் தர்ஷினி.

“ தாரு… சும்மா சும்மா டென்ஷன் ஆகாத.. பீபி வரும்.

நான் சும்மா ஒன்னும் உன்ன இங்க வேலை செய்ய சொல்லல…

எனக்கு தெரியும். காலேஜ்ல எல்லாருக்கும் நீ பிளவுஸ் தைச்சு கொடுக்குறது.

நான் கூட பாத்தும் இருக்கேன்.

ஏன்? உன் திறமையை உள்ளேயே போட்டு பூட்டி வைக்க போற…

உனக்குள் இருக்க கற்பனையை இதில் கொட்டு…

ஆமா, இதுல என்னோட சுயநலமும் இருக்கு…

உன்னோட டிசைன் இந்த கடைக்கு இன்னும் பேர் வாங்கி கொடுக்கும்ன்ற சுயநலம் தான்.

ஏன் பண்ண மாட்டியா?” இவள் கேட்க,

'என்ன பதில் சொல்வாள்?' வழக்கம் போல் அமைதியாகி விட…

“ ரொம்ப பெரிய ரிஸ்க்ல உன்னை இறக்கி விட்டு இருக்கேன் தாரு..

அது என்னனு அஷ்வின் உன் கிட்ட சொல்லுவான்” என்று தர்ஷினி கூறி கொண்டிருக்க

அதே நேரம் சண்முகம் அவனிடம்,

“ நீ நம்ம வீட்ல இருக்க வேண்டாம் அஷ்வின்” என்ற இடியை அவன் தலையில் இறக்கினார்.


Post a Comment

0 Comments