23. நட்பெனும் பூங்காற்றே



அனுவின் வருகை ஒரு புறம் அஷ்வினே அவர்களை அழைத்தது ஒரு புறம் என எண்ண அலைகள் அவளை தாக்க அறைக்குள் ஓடி வந்த தாரணியின் பின்னோடு அஷ்வினும் வந்தான்.

“தாரணி..”

கட்டிலில் அமர்ந்து அழுகையில் குலுங்கி கொண்டிருந்தவளை தோள் தொட்டு அழைத்தான்.

திரும்பி அவனை பார்த்தவள் அவனின் முன் சட்டையை கை பற்றி

“ஏன் இப்டி செஞ்சீங்க அஷ்வின்? நீங்க இப்டி பண்ணுவீங்கனு எதிர்பாக்கல” என்று கூற

“பேபி, புரிஞ்சிக்கடா…”

“ என்ன புரியனும் அஷ்வின்? உங்களுக்கு தான் என்னை புரியல… அவ என்னவெல்லாம் சொன்னா தெரியுமா? என்னை அவ வாழ்க்கைய விட்டே போக சொன்னா? அதெல்லாம் எப்டி என்னால மறக்க முடியும் சொல்லுங்க ?” என்று கூறினாள்.

“ நடந்ததுல அவளுக்கு மட்டும் என்ன லாபம் இருக்கு சொல்லு? அவளும் உன்னை மாதிரி காயப்பட்டவ தானே? அவளோட உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ?” என்றான்.

“ என்ன சொல்றிங்க அப்போ அவ செஞ்சது எல்லாமே சரின்னு சொல்றிங்களா? கடைசியில நீங்களும் என்னோட உணர்வுகள புரிஞ்சிக்கலை இல்ல அஷ்வின்” என்று அவனை உலுக்கியவள் சட்டையை உதறிவிட்டு கட்டிலில் மடிந்து அமர்ந்து அழுதாள்.

“ இறைவா… என்னை எதுக்கு இப்டி சோதிக்குற? எந்த ஒரு உறவையும் கடைசி வரை எனக்கு நிலையா நிற்க செய்ய மாட்டியா? யாரும் என்னை புரிஞ்சிக்க மாட்டாங்களா? எனக்குன்னு யாருமே இல்லையே…” என்று முகம் மூடி அழுதவளை ஒரு கரம் தோள் தொட முகம் திறக்காமலேயே

“தர்ஷினி…” என்று அவள் மேல் சாய்ந்தாள்.

சுற்றி இருந்த அனைவருமே அதிர்ந்தனர்.

ஏன்??

சோர்வாக இருக்கிறதாய் காரணம் சொல்லி அறைக்கு வந்த தர்ஷினியுமே அதிர்ந்தாள்.

கட்டி கொண்டிருந்தது அனுவை என்றாலும் தன்னை தான் தேடி இருக்கிறாள் என்று.

“ தரூ…” என்று அதே அதிர்வோடு அழைக்க முதுகிற்கு பின்னால் கேட்ட தர்ஷினியின் குரலில் திரும்பி பார்த்தவள்

தாயை கண்ட சேயாய் அவளிடம் ஓடினாள்.

தாரணியை தன் அணைப்பில் கொண்டு வந்து சுற்றி இருந்தோரை முறைத்தாள்.

“ எதுக்கு வந்த அனு? இதோ இவ இப்டி அழுறத பாக்கவா” என்று கேட்க

“தர்ஷினி…” கோவமாய் இடையிட்டது அஷ்வினின் குரல்.

‘என்ன தான் அனுவின் மேல் பிழை இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி அவளை நோக செய்வதை அவன் விரும்பவில்லை.

அவனும் பொறுமையாக தாரணியிடம் எடுத்து சொல்லி பார்த்தான்.

அவளும் புரிந்த பாடில்லை. தர்ஷினியும் புரிந்த பாடில்லை.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தான்.

“ என்னை எதுக்கு கத்துற அண்ணா? நீ சொல்லு எதுக்கு அவளை இங்க வர சொன்ன? இதோ இப்டி இவள கஷ்ட படுத்தவா?” என்று கேட்டாள்.

“ வாய மூடு தர்ஷினி… எப்போ பாரு சொன்னதையே சொல்லிட்டு இருக்க… உன் கிட்ட இதை நான் எதிர்பாக்கல” என்று கடுமையான குரலில் அவன் கூற கேட்டு கொண்டிருந்த தர்ஷினி அதிர்ந்து தான் போனாள்.

இது நாள் வரை செல்ல சண்டைகளை தவிர்த்து தன்னிடம் கடுமையான சொல் பேசியிராத தன் அண்ணனின் இந்த குரலும் முகமும் இவளுக்கு முற்றிலும் புதிது.

கண்களில் நீர் திரையிட

“ அண்ணா…” என்று குரல் உடைய அழைத்தாள்.

“ உன்னை பேசாதனு சொன்னேன். என் தங்கை அடுத்தவங்க மனசுல நினைக்கிறத புரிஞ்சிப்பானு உன்னை பத்தி பெருமையா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ இவ்ளோ பெரிய சுயநலவாதியா இருப்பனு நான் எதிர்பாக்கல”

“ என்ன? நா… நான் சுயநல வாதியா?”

“ இல்லையா பின்ன? தாரணி அனுவை மன்னிச்சு ஏத்துகிட்டா… உனக்கும் அவளுக்கும் நடுல பிரிவு வந்துடுமோன்னு பயந்து தானே அனுவை அவள நெருங்க விடாம பண்ற?” என்று அவன் கூறவும் முற்றிலுமாய் நொறுங்கி போனவள் அருகில் நின்ற சந்தோஷை பார்க்க

அவனும் ‘அஷ்வின் பேசியதில் தவறில்லை’ என்பது போல அமைதியாக கை கட்டி நிற்கவே இவளுக்குள் இனம் புரியா வலி.

விழியை விட்டு வெளியேறிய நீரை துடைத்து விட்டு தன்னில் விசும்பி கொண்டிருந்த தாரணியை நிமிர்த்தினாள்.

“தாரணி, இங்க பாரு…” என்று கூறவும் அமைதியாக அவளை ஏறிட்டவள்

நீண்ட பெரு மூச்சு விட்டு

“ இங்க பாரு தாரணி… நடந்தது எல்லாமே கசப்பு தான்… அதுக்காக அதை கடந்து வராம இருக்க முடியாது. பொறுமையா யோசி… உனக்கு சரின்னு படுறத செய்” என்று அழுத்தி மற்றவர்களை பார்த்தபடி கூறிவிட்டு

“ அது எந்த முடிவா இருந்தாலும்?? நல்ல கேட்டுக்கோ? அந்த முடிவுல உன் கூட கடைசி வரை நான் நிற்பேன்.. அதை விட்டுட்டு எனக்குன்னு யாரும் இல்லைனு சொல்லிட்டு அழுற வேலை வச்சிக்காத… இனி முடிவு உன் கையில” என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் தன் அறைக்கு சென்றாள்.

சிறிது நேரம் அவளின் முதுகை வெறித்த தாரணியின் அருகில் அஷ்வின் வர அவனை ஏறிட்டவள்,

“அஷ்வின், எனக்கு தனிமை வேணும் ப்ளீஸ்” என்று கூற எதையோ கூற வந்த அஷ்வினை தடுத்தாள் அனு.

“இருக்கட்டும் அண்ணா… அவளும் தர்ஷினி சொன்ன மாதிரி யோசிக்க நேரம் ஒதுக்கணும்… அவளை கட்டாய படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டு வெளியே வர ஒரு நொடி நின்று தாரணியை விழி நோக்கி…

“ நீ அடிக்கடி சொல்லுவ நான் குழந்தை மாதிரின்னு… ஒரு குழந்தை பண்ண தப்பா நினைச்சு என்னை மன்னிச்சு ஏத்துக்கோ தரூ… அது தான் எனக்கும் வேணும்” என்று தன் விழி நீர் சிந்தி கூறிவிட்டு வெளியேறினாள்.

அதுவரை அமைதியாக ஒரு வித குற்ற உணர்வோடு நின்று கொண்டிருந்த இளங்கோ அவளின் அருகில் வந்து…

“ நடந்த குழப்பதுக்கு முழு காரணம் நான் தான் தாரணி… அதுக்காக அனுவை பழிவாங்கிடாதீங்க…” என்று கூற அவனை நெருப்பாய் பார்த்தவள்,

“ அஷ்வின் கிட்ட சொன்னது தான் உங்களுக்கும் இளங்கோ… எனக்கு தனிமை கொடுங்க… அதையாவது கெடுக்க வேணாமே” என்று கூற அடிபட்ட பார்வை அவனிடம்.

“தாரணி...” அஷ்வின் இடைப்புக அவனை தடுத்தான் இளங்கோ

“விடுங்க அஷ்வின்… காயம் பட்டவங்க அவங்க.. அதனால அவங்க சொன்னது எனக்கு வலிக்கல… அப்டியே வலிச்சாலும் அதை எனக்கான தண்டனையா எடுத்துகிறேன்” என்று கூறி நகர்ந்தான்.

அவர்கள் அனைவரும் வெளியேறிய பின் அறைக்கதவை அறைந்தவள் மெல்ல கட்டிலில் விழுந்தாள்.

தலை வின்னென்று வலிக்க தலையணையில் முகம் புதைத்தாள்.

தர்ஷினி கூறி சென்றது போல ‘இனி அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசிக்க யோசிக்க தலை பாரம் கூடுவதை போல உணர்ந்தாள்.

எத்தனை நேரம் சென்றதோ?

உறவினர்கள் மொத்தமும் விருந்து முடிந்து கலைந்து செல்ல வீட்டினர் மட்டுமே தங்கி இருந்தனர்.

திலகா வந்து தாரணியை உணவு உண்ண அழைக்க பார்க்க உடலை குறுக்கி கொண்டபடி உறங்கி போயிருந்தாள் அவள்.

அவளை இழுத்து போர்த்தி விட்டு வெளியே வந்த திலகா மற்றவர்களை உணவு உண்ண அழைக்க சென்றாள்

எதுவும் பேசாமல் தர்ஷினி உண்டு விட்டு எழ…

மற்ற இருவரும் கூட ஏதோ ஒரு அமைதியில் உண்டு எழ

‘ ஏதோ சரியில்லை’ என்று உணர்ந்த பெரியவர்கள் ஏதும் பேசாமல் தங்களுக்குள் பார்வை பரிமாறி கொண்டனர்.

“ அத்தை, தாரணி சாப்பிட்டாளா?” அஷ்வின் கேட்க

“ தூங்கிட்டு இருக்காடா..அப்புறம் எழுப்பி சாப்பிட வைக்கிறேன்…. நீங்க போய் தூங்குங்க… இன்னைக்கு அங்க இங்கன்னு அழைஞ்சது களைப்பா இருக்கும் “ என்று அனுப்பி வைத்தார்.

அவர்களும் எதுவும் மேற்கொண்டு பேசாமல் தத்தம் அறைக்குள் அடைந்தனர்.

மறுநாள் விடியல் வரும் முன்னே முழித்து கொண்ட தாரணி,

தோட்டத்தில் அதிகாலை வேலை இயற்கை காற்றை அனுபவித்து கொண்டிருக்க அவளின் அருகில் வந்தான் அஷ்வின்.

“ தாரணி..”

அவனின் அழைப்பில் சிந்தை கலைந்து திரும்பி பார்த்தவள்,

“வாங்க அஷ்வின்..” என்று கூற அவனும் அவளின் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.

“என் மேல உனக்கு கோவமா தாரணி… அனு விஷயத்துல நான் செஞ்சது தப்புன்னு உனக்கு படுதா?” என்று கேட்க

அவனை திரும்பி பார்த்தவள்,

“அனு விஷயத்துல உங்க மேல எனக்கு கோவம் இருந்துச்சி அஷ்வின்… ஆனா அது கூட என் மேல உங்களுக்கு இருக்க பாசம்ன்னு எடுத்து எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டேன்… ஆனாலும் உங்க மேல எனக்கு கோவம் தான் அனுவுக்காக இல்ல… தர்ஷினிக்காக” என்று கூற

அவனுக்கும் புரிந்தது.

நேற்றைய இரவின் தனிமையில் தான் அவன் கூறிய வார்த்தைகளின் கடுமை அவனுக்கு புரிய தன்னையே கடிந்து கொண்டான்.

‘அனுவுக்காக பார்க்க தன் தங்கையின் மனதை புரியாமல் காயப்படுத்தி விட்டோமே’ என்று எண்ணம் தோன்ற பிந்தைய இரவில் தங்கையை தேடி சென்றான்.

அழுது வடிந்த முகத்தோடு கன்னத்தில் கண்ணீரின் கோடுகள் இருக்க உறங்கி போனாள்.

அருகில் அவளின் டைரி…

எப்போதுமே சந்தோஷத்தில் அவள் டைரியை கிறுக்குவதை காட்டிலும் மனம் கணக்கும் தருணத்தில் தான் அவள் டைரியை நாடுவதே.

அதே போல இப்போது அவளின் அருகில் அஷ்வின் டைரியை காணவும் மீண்டும் தன்னையே கடிந்து கொண்டான்.

‘தானா? அப்படி கூறியது… தனக்கே இத்தனை வலி ஏற்படும் என்றால்??? தன் செல்ல தங்கையின் மென்மனம் என்ன பாடு படும்?’

“ என்னை மன்னிச்சுருடா பாப்பு... அண்ணா வேணும்னு உன்னை காயப்படுத்தல… அன்னைக்கு அனு அழுறதை பாக்கும் போது… அந்த இடத்துல நீ தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச… அதனால தான் என் தங்கையாலே அந்த பெண் காயப்பட கூடாதுன்னு உன்னை அமைதி படுத்தறதா நினைச்சு என்னலாமோ சொல்லிட்டேன்… நிஜமா அண்ணா வேணும்ன்னு சொல்லலடா… ப்ளீஸ்” என்று அவளின் அருகில் அமர்ந்து கொண்டு கூறி கொண்டு இருக்க லேசான சிணுங்கலோடு திரும்பி படுத்தவளை அப்படியே படுக்க விட்டு எழுந்து வெளியே வந்தான்.

இரவு முழுவதும் தூங்காமல் சுற்றி கொண்டிருந்தவன் காலையில் தர்ஷினியை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் தான் தோட்டத்திற்கு வந்ததே… இதமான காற்று தன் மனதை தெளிவு படுத்தும் என்ற எண்ணமே.

இப்போதோ தாரணி கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் மீண்டும் அவனுக்குள் செல்ல தலை குனிந்து கொண்டான்.

“நான் தெரிஞ்சே அப்டி சொல்லல தாரணி…” என்று அவளிடமும் அதையே கூற

“ அது எனக்கும் புரியுது அஷ்வின்… ஆனா தர்ஷினிக்கு??” என்று கேள்வியாய் அவள் கேட்க அவனால் பதில் கூற இயலவில்லை.

அவளும் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

மௌனம் மட்டுமே அவர்களை சுற்றி இருக்க…

“ தரூ…” என்று அழைத்து கொண்டே தர்ஷினி அங்கு வந்தாள்.

“ இங்க பேசிட்டு இருக்கியா? அத்தை சொன்னாங்க, நைட் சாப்பிடலன்னு…இந்தா காபி” என்று கையில் இருந்த கப்பை அவளிடம் கொடுத்துவிட்டு நகர

“ பாப்பு…” என்ற அஷ்வினின் அழைப்பில் திரும்பாமல் நின்றாள்.

“ இங்க பாருடா… நான் வேணும்ன்னு…” என்று கூற வர

திரும்பி அவனை பார்த்தவள் தாரணியிடம்

“தரூ… எனக்கு மனசு சரியில்லை…கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோமா?” என்று கேட்டாள்.

அஷ்வினை ஒரு நொடி ஏறிட்டு பார்த்த தாரணி,

“போகலாம்டா… காலை டிபனை முடிச்சிட்டு போவோம்” என்று கூற சரியென்று தலையாட்டி விட்டு நகர்ந்தாள் தர்ஷினி.

தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாது செல்லும் தங்கையையே பார்த்து கொண்டிருந்தான் அஷ்வின்.

“ விடுங்க அஷ்வின், சரியாகிடுவா” என்று ஆறுதல் கூறியவள் வீட்டினுள் சென்றாள்.

தாரணி கூறியது போல் தர்ஷினி சரியாகுவாளா???

அனுவின் மீதான தாரணியின் முடிவு என்ன???

பொறுத்திருந்து பார்ப்போம்.


Post a Comment

0 Comments