22. நட்பெனும் பூங்காற்றே

 



விசேஷ வீட்டிற்கான பிரத்யேக நறுமணத்துடன் தர்ஷினியின் இல்லம் காட்சியளித்தது.

விருந்தின் மணம் கமகமக்க அங்கேயே கண் வைத்திருக்கும் கணவர்மார்கள் ஒரு புறம். செய்தி துணுக்குகளை பரிமாறி கொள்ளும் மனைவிகள் ஒருபுறம்.

நாட்டு நடப்பு அரசியலை அலசி ஆராயும் பெரியவர்கள் ஒரு புறம் என நிரம்பி வழியும் கூட்டத்தோடு வீடு குதூகளித்தது.

வந்திருந்த உறவினர்களுக்கு தாரணியை திலகா அறிமுக படுத்தி வைக்க மரியாதை நிமித்தமாக அவர்களை பார்த்து புன்னகைத்தாள் தாரணி.

கையில் பழத்தட்டோடு நகர்ந்து சென்றவளை இருத்தி பிடித்த திலகா அவளின் கையில் ஒரு பெட்டியை திணித்தார்.

“ அம்மா.. என்ன இது?” தாரணி புரியாமல் கேட்க

“ம்ம், நகைப்பெட்டி… அங்க பீரோல தூங்கிட்டு இருந்துச்சு அதான் எழுப்பி கூட்டி வந்தேன். போட்டுக்கோ” என்று அவர் கூற இவள் மறுத்தாள்.

“வேணாம்மா…” என்று தலையாட்டியவளை முறைத்து பார்த்தவர்

“ஒழுங்கா போய் போட்டுக்கோ.. இல்ல எனக்கு கோவம் வரும் சொல்லிட்டேன்…” என்று வேகமாய் நழுவி சென்றார்.

அவரின் குழந்தை தனத்தில் மெல்ல சிரிப்பு எழ தர்ஷினியின் அறைக்கு வந்தாள்.

அஷ்வினின் அறை சந்தோஷுக்கு ஒதுக்க பட்டு அவன் தயாராகி கொண்டிருக்க இங்கு தர்ஷினியை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் பெண்கள்.

கையில் நகைப்பெட்டியோடு வந்து நின்றவளை பார்த்த தர்ஷினி,

“ வாடி என் அருமை அண்ணி… நான் சொன்னபோ பெருசா வேணாம்னு சொன்ன… சொல்றவங்க சொன்னாதான் கேட்ப போல.. உன்னை…” என்று முறைக்க

அவளிடம் இரு கண் சிமிட்டி அழகு காட்டிவிட்டு பெட்டியில் இருந்தவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் போட்டுக்கொண்டாள்.

“ தாரணி, அந்த ஸ்டோரூம் சாவி உன் கிட்டயா இருக்கு?” என்றபடி உள்ளே வந்த அஷ்வின்

தங்க ஜரிகை படர்ந்த கருநீல பட்டில் அளவான நகைகளோடு தேவதையாக நின்று கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.

“ம்கும்” தொண்டையை செருமியபடி சிலை போல் நின்றவன் அருகில் வந்த தர்ஷினி அவன் தோளை தொட,

“என்னமா?”

“அதை நான் கேக்கணும்… என்ன விஷயமா வந்த இங்க?”

“ஹான்.. அது வந்து..”ஒரு கணம் ஒன்றும் புரியாமல் முழிக்க தாரணி தான் எடுத்து கொடுத்தாள்.

“சாவி…”

“ஆமா, சாவி… இந்தா தாரணி சாவி… வச்சிக்கோ” என்று கூற இவள் தலையிலடித்து கொண்டு தோழியை பார்க்க தர்ஷினி,

“இவனுக்கு போய் எடுத்து கொடுத்தியே…” என்று சிரித்தாள்.

“சார்… நீங்க இங்க சாவி கொடுக்க வரலை… வாங்க வந்திங்க” என்று கூற இவனும்

“ஆமால்ல…” என்று சாவியை வாங்கி கொண்டு ‘விட்டால் போதும்’ என்பவனை போல் ஓடினான்.

ஆனால் அடுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு இரு முறை ஏதேனும் ஒரு காரணம் காட்டி அவன் தாரணியை அணுக நகையை சரி செய்து கொண்டிருந்த தர்ஷினி பொறுமையிழந்து,

“அடேய் அண்ணா… இந்தா… இதுதான் இவளோட கை… பிடிச்சுட்டு போய் எவ்ளோ நேரம் பேசணுமோ பேசிட்டு வா…” என்று கூறினாள்.

“ஹிஹி… சரிடா பாப்பு.. சாரி சாரி…” என்று வழிந்து மொழிந்து விட்டு நகர்ந்தான்.

இங்கு அஷ்வினின் அறையில் தயாராகி கொண்டிருந்த சந்தோஷ் குறுக்கும் நெடுக்குமாய் நடை பயில அறைக்குள் வந்த அஷ்வின் அவனை வித்தியாசமாக நோக்கினான்.

“என்ன மச்சான்? ரூம் எவ்ளோ அடி இருக்கும்னு அளந்துட்டு இருக்க போல…” என்று கூறியவனை முறைத்தான்.

“ பேசாம போயிடு.. நானே கடுப்புல இருக்கேன்” என்று கடுகடுக்க

தெரிந்தது தான் என்றாலும் வேண்டுமென்றே இவன்,

“ மச்சான், இன்னைக்கு உனக்கான நாள் மச்சான்… நியாயமா பாத்தா நீ விருப்புல இருக்கணும்… இப்டி கடுப்புல இருக்க கூடாது” என்று வெறியேற்ற கையில் இருந்த பெர்ஃபியூம் பாட்டிலை அவன் மேல் எறிந்தான்.

“அய்யோ அம்மா..” என்று நழுவி தப்பித்தவன்

“ டேய்… நானும் போனாப் போகுதுனு நீ பண்ற அழும்பை எல்லாம் பொறுத்துகிட்டு போனா.. ரொம்ப பண்ற… இப்போ உனக்கு என்னடா பிரச்சனை? என் தங்கச்சியை பாக்கணும் அவ்ளோ தானே?” என்க

இவன் கடகடவென தலையாட்டினான்.

ஆம்… நிச்சயம் முடியும் வரை இருவரையும் சந்திக்க திலகா தடை போட்டதால் வந்த கடுகடுப்பு தான் அவனுக்கு.

“ இரு ஏற்பாடு பண்றேன்” என்று தலையில் அடித்து கொண்டு

‘ ஒரு அண்ணனை என்ன வேலைலாம் பாக்க வைக்கிறான் பக்கி..’ என்று மனதில் கருவிக்கொண்டே சென்றான்.

நேராக தராணியிடம் சென்று சிறிது நேரத்திற்கு தர்ஷினியை தனிமை படுத்த சொல்லி கெஞ்சி கொஞ்சி விட்டு செல்ல இவளும் மற்றவர்களிடம் இருந்து தர்ஷினியை தனித்து விட பெரும் பாடு பட்டாள்.

“ ஏய் எல்லாரையும் அனுப்பிட்டு நீயும் எங்க போற?” என்று தர்ஷினி கேட்க

“ இதுக்கான பதிலை உன்னவர் வந்து சொல்வார்” என்று கண்ணடித்து விட்டு சென்றாள்.

என்ன புரிந்ததோ மெல்லிய வெட்க புன்னகை இவள் முகத்தில்.

அறைக்குள் வந்த சந்தோஷ் வெட்கத்தில் குறுகி நின்று கொண்டிருந்த தர்ஷினியை பார்க்க அவன் வருகை உணர்ந்த அவளும் நிலம் விட்டு தன் கண் அகற்றாமல் நின்றாள்.

இது உண்மையில் அவர்களுக்கான நாள்.

இவர்களின் காதலின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் ஓர் இனிய நாள்.

அந்த நாளின் பூரிப்பு இருவரின் முகத்திலும் அழகாக தெரிந்தது.

அரக்கு வண்ண பட்டில் தலையில் மல்லிகை சரம் படர நகைகளின் ஜொலிப்பில் தேவதையாக மிளிர்ந்த தன் நாயகியை நெருங்கிய சந்தோஷ் குனிந்திருந்த அவளின் நாடி நிமிர்த்தி விழி நோக்கினான்.

வெட்கத்தில் துடித்து கொண்டிருந்த அவளின் விழியில் மெலிதாய் தன் இதழை ஒற்றி எடுக்க இவளுக்குள் பல பிரளயம்…

“ தர்ஷி…” மெல்ல ஒலித்த அவன் குரலுக்கு

“ ம்ம்” என்ற முனகல் மட்டும் வர

“ படப்படனு பட்டாசு மாறி பொரிக்கும் பொண்ணா நீ” என்ற குறும்போடு அவன் கேட்க விழியை திறந்து அசட்டு சிரிப்பில் அவனை தள்ளிவிட்டவள்

“ அது இருக்கட்டும்… முதல்ல நீ வந்த காரணத்தை சொல்லு” என்று கேட்டாள் மீண்டும் அதே பட்டாசாக மாறி.

“ இதுக்கு தான் வந்தேன்...” என்று அவளை இழுத்து தனக்குள் அணைத்து கொண்டான்.

அவனின் அணைப்பில் இருந்தாலும் அவள் குரல்,

“ அத்தை சொல்லி இருக்காங்களே… அவங்க பாத்தா என்ன நினைப்பாங்க?” என்று கேட்க

பட்டென்று கதவு திறக்கும் சத்தம் இருவரும் விலகி வாயிலை பார்க்க தர்ஷினி கூறியது போல் திலகா தான் நின்று கொண்டிருந்தார் இவர்களை முறைத்தவாறே.

அவரின் பின் கையை பிசைந்த வண்ணம் தாரணியும் அஷ்வினும்.

“திருட்டு கழுதைங்களா… உங்க கிட்ட என்ன சொன்னேன்? உறவுக்காரங்கலாம் பார்த்தா ஏதாவது ஏடாகூடமா பேசுவாங்க… அதனால கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னேனா? இல்லையா?

ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இதுக்கு நீயும் உடந்தையா தாரணி?”

“அய்யோ அம்மா, நான் இல்லை அஷ்வின் தான்…”

அவர் திரும்பி அஷ்வினை முறைக்க

“அய்யோ அத்தை, நான் இல்லை சந்தோஷ் தான்…”

அவர் பார்வை இப்போது சந்தோஷிடம் தீயாய்

“அய்யோ அம்மா, நான் இல்லை தர்ஷினி தான்..”

தர்ஷினியின் காதை பிடித்து இவர் திருக

“ அய்யோ அத்தை.. நிஜமாகவே எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல தாரணி தான்…” என்று கூற

“ நாலு பேரும் திருட்டு பயலுக தான்… சேர்த்து வச்சி மொத்துனா சரி வரும்…

இங்க பாருங்க கீழ கூப்டுறாங்க தாரணி இவள கூட்டிட்டு போ…

டேய் அஷ்வின், கொஞ்ச நேரம் கழிச்சு இதை இழுத்துட்டு வா” என்று கூறி விட்டு நகர

“எது இழுத்துட்டு வரனுமா? ம்மா, என்னை என்னனு நினைச்ச?” என்று இவன் குரலில் தெரிந்த கடுப்பில் திரும்பி சென்ற திலகாவின் முகத்திலும் கூடவே அங்கிருந்த மூவரின் முகத்திலுமே புன்னகை பரவியது.

அலங்கரிக்க பட்ட நாற்காலியில் ஆளுக்கொன்றாய் சந்தோஷும் தர்ஷினியும் அமர பெரியவர்கள் தங்கள் துணையோடு வந்து சந்தனமும் குங்குமமும் இட்டு அவர்களை வாழ்த்தி நகர்ந்தனர்.

சடங்குகள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்து முடிக்க ஒருவர் பின் ஒருவராய் எழுந்து பந்தி சென்றனர்.

மாலை நெருங்கி கொண்டிருக்கும் நேரம்

தர்ஷினியின் அருகில் நின்று கொண்டிருந்த தாரணியும் சந்தோஷ் அருகில் நின்று கொண்டிருந்த அஷ்வினும் அவ்வப்போது பார்வையில் பேசி கொண்டாலும் அன்றைய நாயகர்களை கலாய்க்க தவறவில்லை.

அவர்களின் கேலி பேச்சில் இருவரும் மெல்லிய வெட்க புன்னகை சிந்தி கொண்டிருக்க எதேர்ச்சையாக வாயிலை பார்த்த தர்ஷினியின் விழி அதிர்ந்து நின்றது.

ஆம்,

அனு நின்று கொண்டிருந்தாள் அருகில் ஒரு ஆடவனோடு.

தர்ஷினி விழி சென்ற திசையில் மற்றவர்களும் பார்க்க அஷ்வின் புன்னகையோடு அவர்களை வரவேற்க சென்றான்.

தாரணி நிலையை கூறவும் வேண்டுமா??

அவளை திடீரென கண்டது ஒரு புறம்..

அஷ்வினே அவர்களை வரவேற்றது ஒரு புறம் என… அதிர்வின் உச்சத்தில் அவள் நிற்க

மெல்ல தயங்கிய படி தர்ஷினியின் அருகில் வந்தாள் அனு.

அதிர்வில் இருந்து மெல்ல மீண்ட தர்ஷினி அனுவை முறைத்துவிட்டு தாரணியை பார்க்க அவள் இன்னும் மீளவில்லை போலும்.

“ நீ.. இங்க???” என்ற தர்ஷினியின் கேள்விக்கு

“ நாங்க தான் வர சொன்னோம்” என்று அஷ்வின் பதில் கொடுக்க வந்த அழுகையை கட்டுப்படுத்த வகை தெரியாமல் அறைக்கு ஓடினாள் தாரணி.

அவளின் பின்னே எழ முயன்ற தர்ஷினியை கரம் பிடித்து தடுத்த சந்தோஷிடம்

“விடு சந்தோஷ்… எல்லார் முன்னாடியும் அவ அழுறத பாத்தல்ல… நான் போகணும்” என்று கோவமாய் அங்கிருந்த அனுவையும் சந்தோஷையும் முறைத்த படியே கூற

“தேவையில்லை.. அதோ அஷ்வின் போறான். அவன் பாத்துக்குவான்… இப்போ நீ எந்திச்சு போனா தான் எல்லார் கவனமும் அவங்க மேல போகும்.” என்று கூற வந்த கோவத்தை அடக்கி கொண்டு

“ இவள எதுக்கு வர சொன்ன சந்தோஷ்? எங்க பீலிங்ஸ் புரிஞ்சும் நீங்க இப்டி செய்யலாமா??” என்ற வார்த்தையில் சந்தோஷ் காயப்பட்டானோ இல்லையோ அனு மிகவும் நொறுங்க

“ என்னை மன்னிச்சுடு தர்ஷினி…” என்று கூறினாள்.

அவளை திரும்பி முறைத்தவள்

“ உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை” என்ற வார்த்தையில் அனுவின் முகம் வாட அதை கண்ட சந்தோஷ்

“தர்ஷினி, என்ன இது?? அவ உணர்வுகளுக்கு மதிப்பு கொடு… இப்டி வார்த்தையால் காய படுத்தாத” என்று கூற அவனையும் முறைத்தாள்

அதே சமயம் இங்கு அஷ்வினின் சட்டையை பிடித்து,

“ கடைசியில நீங்களும் என்னோட உணர்வுகள புரிஞ்சிக்கலை.. இல்ல அஷ்வின்” என்று உலுக்கினாள்.


Post a Comment

0 Comments