அன்றைய தினம் அலுவலகத்திற்கு பரபரப்புடன் வந்து கொண்டிருந்தான் அஷ்வின்.
அவர்களின் அந்த பிரத்தியேக டிசைன் முழு வடிவம் பெற்று அனைவரின் முன்பும் கலந்தாலோசித்து வைக்கப்பட வேண்டிய தருணம். தன்னவளின் முதல் முயற்சி அனைவரின் மனதை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது அஷ்வினின் எண்ணம்.
அதனாலேயே கூடுதல் பரபரப்பு அவனுக்குள்.
அறைக்குள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தவனை தாரணி புன்னகையோடு எதிர்கொண்டாள்.
“ என்ன ஆச்சு அஷ்வின்? ஏன் இவ்வளவு பதட்டம்?” என்றவளை கை பிடித்து அழைத்து சென்று அமர வைத்தவன்,
“எல்லாம் ஓகே தானே பேபி? எதும் குழப்பம் இல்லையே?” என்று கேட்க
குழந்தையாக மாறிய அவன் முகத்தை கையில் ஏந்தி சிரித்தவள்..
“ என்னோட முழு திறமையும் இதுல காட்டி இருக்கேன் அஷ்வின். என் உழைப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… நீங்க பயப்பட வேண்டாம்… என் மேல நம்பிக்கை வச்சி இதை எனக்கு கொடுத்தீங்க… உங்க நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று கூற அவளை அணைத்து கொண்டான்.
அவனின் இதயம் படபடக்கும் ஓசையை அவள் செவி வழி உணர அவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவனை தட்டி கொடுத்து கொண்டிருந்தாள்.
அவன் மனம் முழுவதுமே, ‘ இவளின் இந்த உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்க வேண்டும்’ என்பது தான் தவிர அவள் கூறியது போல அவள் மீது அவனிக்கிருந்த நம்பிக்கை எல்லாம் இதில் மறு பட்சம் தான்.
சிறிது நேரம் கழித்து அந்த அறைக்குள் முக்கிய நபர்கள் குழுமியிருக்க விளக்குகள் அணைக்க பட்டு திரை ஓடியது.
ஒவ்வொரு வடிவமைப்பையும் கண்டு அங்கு உள்ளவர்களின் முகம் விகசித்ததை திரையின் ஒளி வழி அவன் குறித்து கொண்டான்.
அனைவரின் ரசனைகளையும் அவர்களின் முகமே பட்டவர்த்தனமாக்க அதை கண்டு எழுந்த புன்னகையோடு, “என்ன கைஸ் எல்லாமே ஓகே தானே? திருப்தியா இருக்கா? இதையே பண்ணிடலாமா?” என்று கேட்க
அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு,
“ எங்களுக்கு ஓகே சார், இதையே பண்ணிடலாம்” எனவும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சு காற்று வெளியில் பறந்தது மற்றவர்களுக்கு.
“அவர்கள் கோட் செய்த தொகையை காட்டிலும் இந்த மாடலுக்கு குறைவான தொகையே ஆகும்” என வந்திருந்த பங்குதாரர்கள் கூறிவிட இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
அவர்களுக்குள்ளேயே அதை மாலையில் கொண்டாட சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
பங்குதாரர்களும் கலந்து கொள்ளும் படி அஷ்வின் சார்பில் கேட்டு கொள்ளப்பட அவர்களும் சரியென தலையசைத்தனர்.
மாலையில் சண்முகமும் தர்ஷினியும் கலந்து கொள்ள
தாரணிக்கு தன் வாழ்த்தை தெரிவித்தனர்.
கூடியிருந்த அனைவரும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குழுமி கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
சண்முகமும் அஷ்வினும் வந்திருந்த விருந்தினர்களை சந்தோஷ் தர்ஷினியின் திருமண நிச்சயத்திற்கு முறையாக அழைப்பு விட அவர்களும் புன்னகையோடு சம்மதித்தனர்.
“என்ன அஷ்வின்? தங்கச்சிக்கு இருக்கட்டும்… நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியால இருக்கீங்க?” என்று வந்திருந்தவர்களில் வயதில் மூத்தவர் ஒருவர் கேட்க அஷ்வின் அருகில் தந்தை இருப்பை உணர்ந்து வெட்கத்தோடு சேர்த்து கூச்சத்தையும் கொண்டது.
அவனையும் அவரையும் மாறி மாறி பார்த்த சண்முகம்,
“அஷ்வினுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கோம் வாசன்” என்றார்.
“இசிட்… கன்கிராட்ஸ் மை டியர் பாய்…” என்று அவர் அவனுக்கு வாழ்த்து கூறினார்.
“சீக்கிரமே ஒரு நல்ல நாள்ல இதை பத்தி சொல்லலாம்னு இருந்தோம். இப்போ தான் பெரியவங்க முக்கியமானவங்கன்னு எல்லாரும் கூடி இருக்கோமே… இப்போவே எல்லாருக்கும் சொல்லிடலாம் அஷ்வின்” என்று அவனை பார்த்து கூறி கொண்டே கூட்டத்தை தன் பக்கம் திருப்பினார் அஷ்வினின் கையை பற்றியபடி.
“எல்லாருக்கும் வணக்கம்… நாம எல்லாரும் ஒன்னா கூடி இருக்க இந்த சந்தர்ப்பத்துல உங்க எல்லாருக்கும் இன்னொரு நல்ல செய்தி சொல்லலாம்னு இருக்கேன்… அது என்னன்னா?
நம்ம கம்பெனியோட எம்டியும் என் மகனுமான அஷ்வினுக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் நிச்சயம் ஆக போகுது” என்று கூறவும் அவையோர் கைதட்டி உற்சாகம் கிளப்பினர்.
அவற்றை ஒரு மெல்லிய புன்னகையோடு பெற்று கொண்டான் அவன்.
இங்கு தர்ஷினியின் அருகில் மெல்லிய வெட்கத்துடன் நின்று கொண்டிருந்த தாரணியை கைநீட்டி, “இதோ இவங்கதான் எங்க வீட்டு மருமகள்...” என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி விட்டு அவளை நோக்கி,
“வாம்மா” என்று அழைக்க காலோடு சேர்த்து படபடத்த இதயத்தையும் அடக்கி கொண்டு அவர் அருகில் சென்றாள்.
சுற்றி இருந்தவர்களின் விழிகள் இவர்களின் மேல் ஆயிரம் கதை சொல்லியது.
“ என்ன இவங்களா?”…
“நான் நினைக்கிறேன் இது காதல் கல்யாணம்னு… அஷ்வின் சார் எப்போவும் அவங்கள பாக்குற பார்வையே ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்குனு சொல்லுச்சு..”
“இருக்கும்.. தாரணி, தர்ஷினி கூட படிச்சவங்க தானே.. ரெண்டு படிக்கும் போது இருந்தே காதல்ன்னு நினைக்கிறேன்”
‘நினைக்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையில் அனைவரும் அவரவர் கற்பனைகளை அள்ளி கொட்ட தன் காதில் விழுந்த கிசுகிசுக்களை கண்டு அதிர்ந்து போனவளாய் அவனை பார்த்தாள் தாரணி.
இவை அனைத்துமே அவளுக்கு புதிதாயிற்றே.. உலகின் ஏதோ ஓர் மூலையில் யாருடைய பேச்சினையும் காதில் வாங்காமல் சுற்றி கொண்டிருந்தவளை விதி இதன் வசம் கொண்டு வந்து நிறுத்த அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவள் விழியால் அவனை நாடினாள்.
அவளின் அச்சம் புரிந்தது போல அவனும் அவளை நெருங்கி தன்னோடு இருத்தி கொண்டான்.
அவளருகில் குனிந்து, “ பேபி, சுற்றி நடக்குற எதையும் கண்லையும் காதுலையும் போட்டுக்காத… இது சகஜம் தான். இனி நீயும் இதை சிரிப்போட எதிர்கொள்ள பழகனும்… உனக்கான எல்லா இடத்திலும் நான் உன் பக்கம் இருப்பேன்… உன்னோட கனவுல உனக்கு கஷ்டம் வந்தாலும் அங்கயும் நான் வருவேன்…” என்று கூற
அவன் அருகாமையா? இல்லை அவன் வாய்மொழி கூறிய வார்த்தையா? ஏதோ ஒன்று அவளின் பயம் விலக்கி அவளை அந்த நொடி அவனோடு ஒன்ற செய்து அந்த கணத்தை முற்றிலும் அனுபவிக்க செய்தது.
அவன் கூறியது போலவே அவள் அவற்றை ஏற்க பழகினாள்.
சுற்றி இருந்தவர்களின் பார்வை ஓட்டத்தை புரிந்தவன் போல் மேலும் அவளை தன்னோடு இறுக்கி கொள்ள பெண்ணிவளுக்கு இப்போது அச்சம் விலகி நாணம் சூழ்ந்தது.
மெல்லிய குரலில் அவனிடம்,
“அஷ்வின் என்ன இது? கைய எடுங்க.. மாமாலாம் இருக்காங்க..” என்று நெளிய
“ இருந்தா என்ன பேபி? நான் உன் சேஃப்டிக்கு தானே நிக்குறேன்..”
“ நல்ல நிக்குறீங்க… மாமா பாத்தா என்ன நினைப்பாங்க ஒதுங்கி நில்லுங்க அஷ்வின்” என்று கூறியவாறு மெல்ல அவனை விட்டு விலக எத்தனிக்க அவனோ யாரோடோ பேசி கொண்டே அவர்களுக்கு இவளை அறிமுகம் செய்து வைக்கும் சாக்கில் தன் பக்கம் இருத்தி கொண்டான்.
“விடுங்க அஷ்வின், நான் போகணும்” என்றவளை முறைத்து விட்டு
“ விட முடியாது பேபி, ஏற்கனவே ரொம்ப லேட்…” என்க இவள் புரியாமல் பார்த்தாள்.
“சந்தோஷ் தர்ஷினி மாதிரி நிச்சயம் பண்ணிட்டு அப்புறம் தான் கல்யாணம்ன்ற பேச்சுக்கே இங்க இடமில்ல… இப்போ எல்லார் கிட்டயும் சொன்னோமே இது தான் நமக்கான நிச்சயதார்த்தம்… இனி நேரடியா கல்யாணம் தான்..” என்று கூற
“ நல்ல ஐடியா.. பேசாம எங்க கூடவே உங்க கல்யாணத்தை முடிச்சுட்டா என்ன அண்ணா?” என்று பின்னால் நின்ற தர்ஷினி கூற இருவரும் மெல்லிய புன்னகை அதிர்வோடு திரும்பினர்.
“ பாப்பு, நீ எப்போ வந்த?” என்று அவன் கேட்க,
“ ம்ம், நீ என் பிரண்டை விட முடியாதுன்னு சொன்னியே அப்போவே வந்துட்டேன்… நீ தான் கவனிக்கல… நிஜமாவே நீ ரொம்ப லேட் அண்ணா” என்று தர்ஷினி கூறவும் இவன் அசட்டு சிரிப்பை சிரித்தான்.
“அய்யே.. சிரிக்காத சகிக்கல… சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்க
“அட போ பாப்பு… அப்பா அதுக்குள்ள என்ன அவசரம்னு கேப்பாங்க?” என்றான்.
“அடப்பாவி, அப்போ நீ நிஜமாவே ரெடியா தான் இருக்கியா… நான் கூட நீ ஏதோ விளையாட்டுக்கு சொல்றன்னு நினைச்சேன்..”
“இது அண்ணனோட வாழ்க்கைமா… இதுல யாராச்சும் விளையாடுவங்களா?” என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு இவான் கூற தாரணி அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
அண்ணனை முறைத்து கொண்டு நின்றவள் தோழியின் சிரிப்பில் அவளை முறைத்தவாறே,
“ஏய், நீயுமாடி? அப்போ உனக்கும் இதுக்கு ஓ.கே.வா? என்று கேட்க
“ இல்லையா பின்ன, அவங்க விருப்பம் தானே இனி என்னோட விருப்பமாகவும் இருக்கணும்” என்று கூற
“ லவ் யூ பேபி” என்று பறக்கும் முத்தத்தை அவளுக்கு பரிசாக்கினான்.
“ அட பக்கிகளா, பாக்க ஊமை கொட்டான் மாதிரி இருந்துட்டு என்னமா பிளான் போடுறீங்க.. இருங்க… இதுக்கே உங்க ரெண்டு பேரையும் இன்னும் ஒரு வருஷத்துக்கு பிரிச்சு வைக்க சொல்றேன்” என்று தர்ஷினி கூறினாள்.
அவளின் முகபாவத்தில் பொங்கிய சிரிப்போடு,
“ என் டார்லிங் அப்படி பண்ண மாட்டாளே… எனக்கு தெரியுமே?” என்று அவளின் கன்னம் கிள்ளி கண்ணடித்தாள் தாரணி.
அவளோடு சேர்ந்து தானும் பொய் கோவத்தை விட்டு சிரிக்க தொடங்கினாள் தர்ஷினி.
“ நல்ல தெரிஞ்ச போ… நான் இப்போ எதுக்கு வந்தேன்னு தெரியுமா? எனக்கு பசிக்குது.. நீ வரியா? இல்ல உன் பேபிய கொஞ்சிட்டு இருக்க போறியா? என்று கேட்க,
“இதோ வரேன் டியர்..” என்று கூறியபடி தாரணி அவளின் இடைபிடித்து நகர அதை கண்ட அஷ்வின்,
“இவளுக்கு நாம லவ்வரா? இல்ல இவ லவ்வரா தெரியலையே?” என்று முணுமுணுத்தான்.
“இதுல என்ன அண்ணா உனக்கு டவுட்? இவளோட பர்ஸ்ட் லவ்வர் எப்போமே நான் தான். நீ என்ன முயற்சி பண்ணாலும் என் இடத்தை பிடிக்க முடியாது” என்று கூறிவிட்டு தோழியோடு நகர்ந்தாள் தர்ஷினி.
இருவரின் செய்கையையும் கண்டு தனக்குள் சிரித்து கொண்டே வந்தவர்களை கவனிக்க சென்றான் அஷ்வின்.
நாட்கள் மெதுவாக சக்கரம் கட்டி சுழல ஒரு நாள் நிச்சயத்திற்கு தேவையான உடைகள் எடுக்க தர்ஷினியை அழைக்க வந்து இருந்திருந்தான் சந்தோஷ்.
சண்முகத்திடம் கூறி விட்டு அஷ்வினின் ஷோ ரூம் வந்திருந்தனர்.
அங்கு இவர்களுக்காக ஏற்கனவே அஷ்வினும் தாரணியும் காத்திருந்தனர்.
நீண்ட ஒரு மணி நேரம் கழித்து தர்ஷினிக்கான உடையை தேர்வு செய்து விட்டு சந்தோஷுக்கு உடை தேர்வு செய்யப்பட்டது.
“டியர் உனக்கும் ட்ரெஸ் எடு” என்று தர்ஷினி தாரணியை கேட்க அவள் அஷ்வினை பார்த்தாள்.
புரிந்தவன் போல அவனே முன் வந்து அவளுக்கான உடையை தேர்வு செய்து கொடுக்கவும் அனைவரும் ஒன்றாக கிளம்பினர்.
என்ன தான் மணமக்களுக்கே உரிய சந்தோஷத்தோடு அவர்களின் திருமண நிச்சய நாளை தர்ஷினியும் சந்தோஷும் எதிர்பார்த்து காத்திருந்தாலும்
அனுவின் வருகையால் வரப்போகும் பூகம்பம் அஷ்வின் மற்றும் சந்தோஷுக்குள் ஒரு வித பீதியை கிளப்பி கொண்டு தான் இருந்தது.
சந்தோஷமும் திகிலுமாகவே அவர்களின் திருமண நிச்சய நாளும் வந்தது.
0 Comments