01. மின்சாரப் பாவை

காக்கை சிறகினிலே நந்தலாலா! – நின்றன் கரியநிறந் தோன்று தையே நந்த லாலா! பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன் பச்சை நிறந் தோன்று தையே நந்தலாலா! -பாரதி
கார்மேக வண்ணன், கோபியர் கொஞ்சும் ரமணன், புல்லாங்குழல் இசையில் போதையேற்றும் அந்த தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணனை தன் மனமுருக பாடி வணங்கிக் கொண்டிருந்தாள் கண்மணி.

 கண்மணி பெயருக்கு ஏற்றார் போல் அழகுப் பெண்மணி. அன்புடன் பழகும் எளியவள். உலகம் அறியாதவள் அல்ல. ஒவ்வொரு நாளும் உலகின் புதுமைகளை அறியத் துடிப்பவள். 

ஆனால் என்ன? துடிப்பை வெளியே காட்டமாட்டாள். தனது சாந்தமான முகத்திலே அனைவரையும் ஈர்ப்பாள். 

 பெற்றவள் இல்லாததாலோ, அவளது உடல் குறைபாடினாலோ தனது துடிப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லையா? அல்லது அவளது இயல்பே அப்படித் தானோ தெரியவில்லை.

 கால ஓட்டத்தில் இந்த சாது மிரளுமா? பொறுத்திருந்து பார்ப்போம். அழகு, அமைதியுடன் அவளைப் படைத்த கடவுள்… ஒரு சிறு குறைபாட்டையும் வைத்து படைத்து விட்டான். 

 ஆம், கண்மணியின் இடது கால், வலது காலை விட சற்று வளைந்து இருக்கும். ஆகையால், கொஞ்சம் கெந்தி, கெந்தி தான் நடப்பாள். இக்குறைபாட்டை அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை ஆனால் அவள் வீட்டில் உள்ளவர்கள்?? 

 தனது இஷ்ட தெய்வம் கண்ணனை மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்தவளை, “அக்கா.. அக்கா ஒரு முக்கியமான விசயம்” என்று ஓடி வந்த அவளது தங்கை அபிநயாவின் குரல் கலைத்தது. 

 அந்த வீட்டில் கண்மணி மீது பாசமாக இருக்கும் ஒரே ஜீவன் இவள் தான். “என்ன அபி? ஏன்டா இப்படி வேகமா ஓடி வர?” என்று தங்கையிடம் கனிவாக கேட்க, 

“அக்கா உனக்கு விசயம் தெரியுமா? இன்னைக்கு சாயங்காலம் உன்னை பொண்ணு பார்க்க வராங்களாம்?” என்றதும்,

 “தெரியும்டா. சித்தியும், அப்பத்தாவும் சொன்னாங்க. இதுக்கா இவ்வளவு வேகமா ஓடி வந்த?” என்று பரிவாக தங்கையின் தலையை வருடினாள். 

 “என்னக்கா நீ இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட… பி.ஏ. முடிச்சிட்டு, பி.எல் படிச்சு பெரிய வழக்கறிஞர் ஆகனுங்கிறது தானேக்கா உன்னோட ஆசை? ஆனா, அம்மாவும் அப்பத்தாவும் சேர்ந்து கல்யாணம் பண்ண முடிவு பண்ணி, உன் கனவுல மண்ணள்ளிப் போட பாக்குறாங்க?” என்று படபடவென்று அபி தாயையும், பாட்டியையும் வசை பாட… 

 “ரிலாக்ஸ் அபி.. ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அதுக்கான வசதியும், தகுதியும் வேணும்ல. சித்தி இவ்வளவு தூரம் என்னையப் படிக்க வச்சதே பெரிய விசயம் தான் அபி” என்றவள், 

 “என் கண்ணன் எனக்கு என்ன குடுக்கனும்னு முடிவு பண்ணி இருக்கறத, அதை யாராலையும் மாத்த முடியாது” என்று புன்னகை புரிந்தவள் தங்கையை சமாதானம் செய்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

 கண்மணி பிறந்து இரண்டு வருடத்திலே அவளது தாய் உடல் நலக் குறைவால் இறைவனடி சேர்ந்து விட மனைவியின் பிரிவை தாங்க முடியாத முத்து குடித்துக் குடித்தே தனது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டார். 

 தனியாக இருந்து பேத்தியை வளர்க்க முடியாத காரணத்தாலும், மகன் கெட்டு சீரழிவதை பார்க்க முடியாமலும், ஏதோ அரசாங்கத்தில் மகன் பார்க்கும் சிறிய ப்யூன் வேலையை சாதகமாக வைத்துக் கொண்டு, இரண்டாவதாக வேணியை முத்துவிற்கு மணமுடித்து வைத்தார் வடிவுக்கரசி. கண்மணியின் அப்பத்தா. 

திருமணம் செய்த புதிதில் கொஞ்சம் திருந்தியிருந்த முத்து, ‘ஆடுன கால் தரையில நிற்காது' என்ற பழமொழிக்கு உதாரணமாக மீண்டும் குடியை கையில் எடுத்து விட்டார். ஆரம்பத்தில் கண்டித்துப் பார்த்த வேணி, அவரைத் தடுக்க முடியாமல் போக..

 “என் வாழ்க்கைய இப்படி சீரழிச்சிட்டிங்களே! கவுர்மன்ட் உத்தியோகம் பாக்குறாரு.. நல்ல மனுசனு சொல்லவும் தானே… எங்க அப்பாரு ரெண்டாவது கல்யாணமா இருந்தாலும் பரவாயில்லைனு இந்த மனுசனுக்கு என்னைய கட்டி வச்சாரு. கடைசியில பார்த்தா மொடா குடிகாரன என் தலையில கட்டிட்டீங்களே!” என்று நடுவீட்டில் அமர்ந்து மூக்கை சிந்தி ஒப்பாரி வைப்பார்.

 மருமகளைப் பார்த்துப் பாவமாக இருக்கும் வடிவுக்கரசிக்கு. அதே வேளையில் கண்மணியை பார்க்கும் போதெல்லாம், “இந்தக் கழுதைய பெத்தவ பாதில போனதுனால தானே எம்மவன் இப்படி குடிகாரனாப் போனான். இவ நல்ல மாதிரியா பொறந்திருந்தா நா எம்மவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பனா… நொண்டிக் கழுதை எல்லாம் இவளால தான்” என்று தனது இயலாமையையும், மகனின் போக்கை கண்டிக்க முடியாத கோபத்தையும் கண்மணியின் புறம் திருப்பினார் வடிவுக்கரசி. 

 வேணிக்குத் திருமணமாகி இரண்டு வருடம் கழித்துப் பிறந்தாள் அபிநயா.

 அப்பத்தா மற்றும் சித்தியின் ஏச்சுப் பேச்சுகளுக்கு அர்த்தம் கூட தெரியாமல் அழும் கண்மணியின் ஒரே ஆறுதல் அபிநயா தான். 

தன் பிஞ்சுப் பாதங்களை அவள் உதைத்து விளையாடும் வேளை அவள் ஸ்பரிசம் பட்டு சிலிர்த்துப் போவாள் கண்மணி. 

 ஆரம்பத்தில் அவள் குழந்தையை தூக்குவதை எதிர்த்த வேணி, நாட்கள் செல்லச் செல்ல “பிள்ளைய வளர்க்க ஒரு குட்டி ஆயாவா இருந்துட்டு போவட்டும். நமக்கும் வேலை மிச்சம்” என்று தனது வேலைகளை கவனிக்க சென்று விடுவார்.

 அதுவே அக்கா-தங்கை இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. 

வேணியும், வடிவும் சேர்ந்து எவ்வளவு முயன்று பார்த்தும் அபியை, கண்மணியிடமிருந்து பிரிக்க முடியவில்லை. அவர்களின் உறவு மேலும் இறுகியதே தவிர விலகல் வரவில்லை. 

 முத்துவின் சம்பளத் தொகையை வாங்கிக் கொண்டு, அவருக்கு பெயருக்கு சமைத்துப் போட்டு, வீட்டில் வைத்திருந்து… தங்கள் கூட்டணி அதிகாரத்தை அவ்வீட்டில் நிலை நாட்டி வந்தனர் மாமியாரும், மருமகளும்.

 “ஏ கண்மணி சாயங்காலம் மாப்புள வீட்டு ஆளுங்க வரும் போது ஒழுங்கா நல்ல சேலையை கட்டிக்கிட்டு வந்து நில்லு. ஏற்கனவே ஒரு வரனும் அமைய மாட்டேங்குது. இதுல நீ வேற பட்டிக்காடு மாதிரி வந்து நிக்காத. மாப்புள வீட்டாளுக மலேசியாவுல இருந்து வராய்ங்க புரிஞ்சதா?” என்றதும்

   “சரிங்க அப்பத்தா” என்று வேகமாக தலையாட்டினாள்.

 அவள் எளிமையாக இருப்பதைத் தான் வடிவு ‘பட்டிக்காடு’ என்று சுட்டிக் காட்டினார். தனது அக்காவைப் பார்த்து பாவமாக இருந்தது அபிக்கு. 

‘இந்தக் கிழவி பெரிய ஃபேஷன் டிசைனர் மாதிரி எங்கக்காவ பட்டிக்காடுங்குது. லூசு கிழவி' என உள்ளுக்குள்ளே அப்பத்தாவை திட்டிக் கொட்டினாள் அபி. 

வெளிப்படையாக திட்டி யார் அவளிடம் விளக்குமாற்றடி வாங்க என்ற எண்ணம் அபிக்கு.

 மாலை சரியாக நான்கு மணிக்கு மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்திருந்தனர்.

 ‘ஐந்து, ஆறு பேராவது வருவார்கள்’ என கண்மணி வீட்டினர் நினைத்திருக்க மாப்பிள்ளை, அவனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் தரகர் என நான்கு பேர் மட்டுமே வந்திருந்தனர். அழகான மெரூன் வண்ண பட்டுச் சேலை அணிந்து, தலை நிறைய பூ வைத்து, எளிமையான அலங்காரத்திலும் கண்ணுக்கு நிறைவாக இருந்தாள் கண்மணி. மாப்பிள்ளை உயரத்திற்கேற்ற எடையுடன், பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் இருந்தான். பார்க்கும் போதே நன்கு படித்தவன் என்று உணர முடிந்தது. 

அவனது பெற்றோருமே பார்ப்பதற்கு மிக நாகரிகமாக இருந்தனர். வேணி வந்து காபியை கொடுத்து விட்டு ஓரமாக நிற்க,

 “எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க உங்க வசதிக்கு என்ன போட முடியுமோ போடுங்க. மாப்பிளைக்கு பத்து பவுன் போட்டுருங்க.” என்று மாப்பிள்ளையின் தாயார் நறுவிசாக கூறியதும்,

 “மாப்புள்ளைக்கு பத்து பவுனா? என்னத்தே இப்படி அநியாயமா கேக்குறாய்ங்க?” என்று வேணி மாமியாரின் காதில் முனுமுனுக்க..

 ”மலேசியாவுனா சும்மாவா? எப்படியாவது அவிங்க கேக்குறதை எல்லாம் செஞ்சுப் புட்டோமுனு வையி… கல்யாணத்துக்கு அப்பறம் எங்களால ஒன்னும் செய்ய முடியாது. இன்னொரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் நாங்க செய்யனும்னு சொல்லிப்புடுவோம்”

 “மொதல்ல இவ கல்யாணத்த முடிச்சா தான். நாம அபிக்கும் ஒரு நல்ல இடமா பார்க்க முடியும். இவளுக்கு இதுவும் தட்டிக் கிட்டு போனுச்சுனா இன்னோம் எத்தனை வருசமாகுமோ தெரியாது. இப்பவே இருவத்தி மூனு ஆவுது” என்றார் வடிவு சன்னமான குரலில் மருமகளுக்கு மட்டும் கேட்கும் படி.

 இருவரும் கிசுகிசுப்பதை பார்த்து விட்டு, “என்னம்மா உங்களுக்குள்ளயே பேசிக்குறீங்க” என்று தரகர் கேட்கவும்,

 “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க தரகரே” என்ற வேணி, 

மாப்பிள்ளையின் தாயாரைப் பார்த்து, 
“நீங்க கேக்குற நகை நட்டெல்லாம் போட்டுற்றோம்… பண்டம், பாத்திரமெல்லாம் பத்தி ஒன்னும் சொல்லலைங்களே!” என்றதும், 

 “எங்களுக்கு சொந்த ஊரு மதுரைப் பக்கந்தான் இருந்தாலும், நாங்க மலேசியாவில செட்டிலாகி முப்பது வருசமாக போகுது. பாத்திர, பண்டமெல்லாம் மலேசியாவுக்கு ஃபிளைட்ல எடுத்துட்டுப் போக முடியாதே” என்று பெரிய நகைச்சுவையை சொன்னது போல மாப்பிள்ளையின் தாயார் சிரிக்க…

 “எங்களுக்கு பாத்திர, பண்டமெல்லாம் வேணாம். நீங்க உங்க பொண்ணை அனுப்பினா போதும். நல்லபடியா பார்த்துப்போம்” என்று மாப்பிள்ளை முதன்முதலாக வாயைத் திறந்து கூறவும் அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.

 “சரியா சொன்னடா கண்ணா” என்றார் அவனது தாய். 

 கண்ணா என்ற பெயரில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் கண்ணனின் தீவிர பக்தை கண்மணி. 
அவள் தன்னை காண்பதை அறிந்து, கண்ணனும் அவளைப் பார்த்து புன்னகை புரிய, சட்டென குனிந்து கொண்டாள்.

 திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்தது. 

“ஒரு மாத கால விடுப்பில் மட்டுமே வந்திருப்பதாகவும், இன்னும் இருபது நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அடுத்த பதினைந்தாவது நாளில் திருமணத்தை மிக எளிமையாக வைத்துக் கொள்ளலாம்” என மாப்பிள்ளை வீட்டார் கூறவும் இவர்களும் சரியென சம்மதித்தனர். 

 ஒப்புதல் தாம்பூலத்தை மாற்றி, திருமணத்தை உறுதி செய்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்று விட… 

 “அக்கா, மாமா சூப்பரா இருக்காருக்கா. பேரு கூட உனக்கு பிடிச்ச கண்ணனாம்” என்று தங்கை கண்ணடித்துக் கூற,

 “சும்மா இருடி” என்று அழகாக புன்னகைத்தாள் கண்மணி. 

 “பாருடா புதுப் பொண்ணுக்கு வெட்கத்தை” என்று அபி கேலி பேச, தனது அப்பத்தாவின் அருகே சென்ற கண்மணி, 

“அப்பத்தா.. மாப்பிளைக்கு மட்டுமே பத்து பவுன் நகை போட சொல்றாங்களே! இந்த சம்மந்தத்த கண்டிப்பா முடிக்கனுமா அப்பத்தா?” என்று தனது ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டிக் கேட்க…

 “அப்படியே அறைஞ்சேனா பாரு… இந்த சம்மந்தம் அவசியமாவானா கேக்குற? இந்த சம்மந்தத்தை புடிக்க நாங்க பட்ட பாடு எங்களுக்குத் தானே தெரியும். ஒனக்கு இருக்குற இந்தக் கொறைக்கி இப்பேர்ப்பட்ட மாப்புள கெடைக்குறதே அந்த மீனாட்சி ஆத்தா செயல். நீ கட்டிக்கிட்டு போனா தான், ஒன் தங்கச்சிய கட்டிக் குடுக்க முடியும். அவளுக்கும் இருவது வயசு ஆவப்போது.. வாயை மூடிக்கிட்டு நாங்க சொல்லுறத கேட்டுக்கிட்டு இரு” என்று வடிவு பொரிந்துத் தள்ள…

 “இங்கேரு அப்பத்தா ரொம்ப பேசாத… அம்புட்டு பவுனு அம்மாவால போட முடியாதேனு அக்கா கேட்டுச்சு. அதுல என்ன தப்பு இருக்குனு இந்த குதி குதிக்கிற” என்ற அபி, 

 “நீ வாக்கா நாம உள்ள போகலாம்” என்று தனது தமக்கையை ஆதரவாக தோள் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 “பாத்தீகளாத்தே! இவளுகளுக்கு இருக்கத் திமிர? அதுவும் இந்த நொண்டிக் கழுத… இந்த இடம் வேணாங்குறா.. இவுங்க அப்பன் என்னமோ நூறு மாப்புளைங்கள வரிசையில கொண்டு வந்து நிறுத்தப் போற மாதிரி” என்று திட்ட ஆரம்பிக்க…

 “அதான் நா சொல்லிட்டன நீ போ” என்று மருமகளை அடக்கினார் வடிவு. என்ன தான் மூத்த பேத்தியை ‘நொண்டி’ என்று அவர் கூறினாலும், மற்றவர் வாயால் அப்படி சொல்ல விட மாட்டார். 
அந்த இரும்புக்குள்ளும் சற்று இளகல் எப்போதாவது இருக்கும். 

 தனது தமக்கையை உள்ளே அழைத்துச் சென்ற அபி, “அக்கா அப்பத்தா பேசுறத பத்தியெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. மாமாவப் பார்த்தா நல்லவர் மாதிரி தான் தெரியுறாரு. நீ மேல் படிப்பு படிக்கிறதப் பத்திக் கூட அவர்கிட்ட பேசிப் பாருக்கா. எனக்கென்னவோ உன்னைய படிக்க வைப்பாருனு தோணுதுக்கா” என்றாள்.

 “அபி, முதல்ல கல்யாணம் நல்ல படியா நடக்கனும்னு சாமிய வேண்டிக்குவோம். அப்புறம் படிப்பைப் பத்தி பேசலாம். அவங்கள நா இன்னும் சரியாக் கூட பார்க்கல” என்று கண்மணி கூறவும், 

“ஓ அப்போ மாமாவ சரியாப் பார்க்கலைனு தான் இப்போ கவலைப்படுற போல” என்று கேலியாக அபி கேட்க, 

 “போடி சேட்டைக்காரி” என்றபடி தங்கையை அணைத்துக் கொண்டவள்,

 “கண்ணா கீதாசாரத்துல முக்காலத்திலயும் எது நடந்தாலும் நன்மைக்கேனு நீ சொன்ன வேதவாக்கை நான் ஏத்துக்குறேன். என் கூட நீ தான் இருந்து வழி நடத்தனும்” என வேண்டிக் கொண்டாள். 

 திருமண வேலைகள், நகைகள் வாங்குவது, புடவை எடுப்பது என பதினைந்து நாட்கள் சென்றதே தெரியவில்லை.

 நாளைக் காலை திருமணம் என்ற சூழலில் தனது அறையில் வருத்தத்துடன் அமர்ந்திருந்தாள் கண்மணி. 

 ‘இனிமே இந்த வீட்டுக்கு, இந்த அறைக்கு எப்போ திரும்பி வருவேனோ தெரியலையே! கண் மூடி கண்ணை திறக்குறதுக்குள்ள கல்யாண நாளும் வந்திருச்சே கண்ணா… இப்போ எனக்கு அம்மா வேணும் போல தோணுதே! அவங்க மடியில படுத்து அழணும்னு மனசு ஏங்குதே!’ என்று தவிப்புடன் தனது தாயின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருக்க… 

“அக்கா..அக்கா” என்று அழைத்த படி வந்த அபி, தமக்கையின் முகத்தைப் பார்த்து அவளது தவிப்பை உணர்ந்தவள் போல அருகே சென்று அவளை அணைத்துக் கொண்டாள். 

 “அக்கா இந்த வீட்டை விட்டு, எல்லாரையும் விட்டுப் போகணும்னு தானே கவலைப்படுற. அதெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான். நாளைக்கு மாமா உன் கழுத்துல தாலி கட்டின அப்புறம் எங்களை மறந்துட்டு அவரு பின்னாடியே சுத்தப்போறப் பாரு” என்று கேலி பேசியவளைப் பார்த்தக் கண்மணிக்கு என்ன முயன்றும் அடக்க முடியாமல் இரு துளி நீர் விழியோரம் வழிந்தது. 

 “அழுமூஞ்சி அக்கா அழாத” என்றபடி அக்காவைக் கட்டிக் கொண்ட அபி, மெல்ல அவளை விலக்கி 

“வா உன் கைக்கு மருதாணி வைப்போம்” என அவளின் மனதை திசை திருப்பினாள்.

 திருமணத்தை எளிமையாக நடத்திக் கொள்ளலாம் என மாப்பிள்ளை வீட்டில் கூறவும், மிக சொற்ப அளவிலே அழைப்பு விடுத்திருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் பத்து பேர், பெண் வீட்டுப் பக்கம் இருபது பேர் என மொத்தமே வீட்டு ஆட்களையும் சேர்த்து ஐம்பது பேருக்குள் தான் அடக்கம். 

 ஆகவே, திருமண நாளன்று காலையில் பெண் அழைத்துக் கொள்ளலாம் என இரு வீட்டுப் பெரியவர்களும் முடிவு செய்திருந்தனர்.

 கண்மணி மருதாணி போட்டுக் கொண்டதும், அபியே அவளுக்கு உணவை ஊட்டி படுக்க வைத்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கண்மணியின் அருகே ஏதோ நிழலாடுவது போல இருக்க மெல்ல ஒரு கண்ணை மட்டும் விரித்துப் பார்க்க.. அவளது தகப்பன் அங்கே நின்று கொண்டிருந்தார். 

‘மகள் உறங்குகிறாள்’ என நினைத்து.. அவள் தலையை வருடியவர்,

 “அம்மாடி தங்கம்… கண்ணம்மா இந்த பாவி ஒனக்கு ஒரு நல்ல அப்பனா இல்லாம பொயிட்டேன்ட்டா. மூனு வருசமே வாழ்ந்தாலும் ஒங்க அம்மாவ மறக்க முடியாம குடிக்க ஆரம்பிச்சு உன்னைய மறந்துட்டேன்.”

 “இப்போ எந்த காரணமும் இல்லாம குடிக்கு அடிமையாகிட்டேன் தாயி. என்னைய மன்னிச்சிருடா ஆத்தா” என்றவர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழட்டி மகளின் தூக்கம் கலையாதவாறு அவளது கழுத்தில் அணிவித்துச் சென்றார்.

 அவர் சென்றதும் கண் விழித்துப் பார்த்தாள். இன்னும் மதுவின் நெடி அந்த அறையில் இருப்பது போல குமட்டலாக இருந்தது அவளுக்கு. தனது கழுத்திலுள்ள சங்கிலியைப் பார்த்தாள்.

 அவள் அம்மாவின் திருமணத்தின் போது மாப்பிள்ளை நகையாக அவள் அம்மாச்சி வீட்டில் போட்டது. அதனை பத்திரப் படுத்தி இன்று தனக்கு அணிவித்து செல்லும் தந்தையைப் பார்த்து அவள் நெஞ்சம் அப்படி ஒன்றும் நெகிழ்ந்திட வில்லை. 

 அவளைப் பொறுத்த வரை பொறுப்பில்லாத இந்த தந்தையை விட, வார்த்தைகளால் வதைத்தாலும் ஊருக்காக என்றாலும் தனக்கு உணவிட்டு, படிக்க வைத்து திருமணமும் செய்து வைக்கப் போகும் அப்பத்தாவும், சித்தியும் எவ்வளவோ மேல் என்று தான் தோன்றியது.

 காலை விடியல் கதிரவனின் ஒளியால் பூமியை பிரகாசமாக்கிக் கொண்டிருக்க… பழமையான அந்த முருகன் ஆலயத்தில், பெண்ணுக்கு ஒதுக்கிய இடத்தில் அபி, கண்மணியை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். 

 தங்கையின் கை வண்ணத்தில் அழகாய் ஜொலித்தாள் கண்மணி. வேணியும் வடிவும் கூட ஒரு நிமிடம் அவளது அழகில் மலைத்து விட்டனர். 

 பட்டு வேட்டி, சட்டை அணிந்து கழுத்தில் மாலையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கண்ணன். 
பெயருக்கு ஏற்றார் போல் அழகுடன் காண்பவர் கண்ணைக் கவர்ந்து கொண்டிருந்தான்.

 கண்மணியை அழைத்து வந்து அவனருகே அமர வைத்ததும், அவள் புறம் திரும்பியவன் இதமாக புன்னகைத்தான். அவளும் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

 ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க, கண்மணியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு தனது சரிபாதியாக்கிக் கொண்டான் கண்ணன். 

 திருமண பரபரப்புகள் அடங்கி, மாலை வீட்டிலுள்ளவர்கள் மட்டும் இருக்க கண்மனியின் வீட்டிலேயே அவளது அறையில் சாந்தி முகூர்த்தத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். 

 இரவு உணவை முடித்துக் கொண்டு அலங்காரத்துடன் அமர்ந்திருந்த கண்மனியிடம் வந்த வடிவு, “இங்கப் பாருடி… மாப்புள்ள கிட்ட பதமா, பக்குவமா நடந்துக்கனும். அவரு என்ன சொன்னாலும் கேட்டுக்கிடனும் சரியா? இனிமே அவரு சொல்றத தான் கேக்கனும்” என்றதும்

 “சரி” என மௌனமாக தலையாட்டினாள்.

 “சரி.. கொஞ்ச நேரத்துல மாப்புள்ள உள்ள வருவாரு. நா கெளம்புறேன்” என்று வடிவு சென்று விட லேசாக கைகள் நடுங்கியது கண்மணிக்கு.

 ‘திருமணத்தைப் பற்றி அறியாதவள் அல்ல. இருந்தாலும் கணவன் எப்படி நடந்து கொள்வானோ?’ என பயந்தவள்,

 காலையிலிருந்து ஓய்வு எடுக்காததால் உடல் களைப்பாக இருந்தது. 
கண்மணியின் அறையில் கட்டில், மெத்தை இல்லாததால் தரையில் பாய் விரித்திருந்தனர். அப்படியே கண்கள் சொருக உறங்கி விட்டாள். 

 சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த கண்ணன், மனைவி உறங்குவதைப் பார்த்து விட்டு, “பாவம் டயர்டா இருப்பா… தூங்கட்டும்” என இன்னொரு பாயை எடுத்துப் போட்டு அவனும் படுத்துக் கொண்டான். 

 ‘எப்படியும் இனி தன்னுடன் தானே இருக்கப் போகிறாள். மற்றவைகளை மெதுவாக பார்த்துக் கொள்ளலாம்’ என எண்ணிய படி கண்ணயர்ந்தான் கண்ணன்.  

Post a Comment

0 Comments