சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்..
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ..
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ..
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்…
-பாரதி
அன்றைய தினம் அழகாய் தான் விடிந்தது கண்மணிக்கு. முதல் நாள் இரவு அயர்வில் தன்னையும் அறியாமல் தூங்கியது புரிய பயம் கலந்த பார்வையோடு அருகில் படுத்து இன்னும் உறங்கி கொண்டிருந்த கண்ணனைப் பார்த்தாள்.
‘என்ன நினைச்சுருப்பார் என்னை பத்தி? அசடாட்டம் தூங்கிட்டேன்னு கோவமா இருப்பாரோ?’ என்று மனதில் பயம் கொள்ள… எழுந்து காலைக் கடமைகளை முடிக்க சென்றாள்.
எப்போதும் எல்லாருக்கும் முன் அவளே எழுந்து எல்லா வேலைகளையும் செய்யும் வழக்கம் கொண்டவள், இன்றும் அதே போல் குளித்து முடித்து வாசல் தெளித்து புதுக்கோலம் போட்டு அனைவருக்கும் டீ போட்டு கொண்டிருக்கும் போது அபி எழுந்து வந்தாள்.
“அக்கா என்ன இன்னிக்கும் நீ தான் இதெல்லாம் பாக்கணுமா? அதான் மத்தவங்க இருக்காங்களே அவங்க பாக்க மாட்டாங்களா?” என்றபடி.
“இன்னிக்கு தான நான் இதெல்லாம் செய்யற கடைசி நாள் இனிமே இதெல்லாம் எப்போ கிடைக்குமோ?” என்று அமைதியாக கூற
“அடடா… கல்யாணம் ஆகியும் இந்த பேச்சு போகுதா உனக்கு? இங்க இந்த தொல்லையில இருந்து தப்பிச்சு மாமா கூட ஒரு மகாராணியா வாழ போற வாழ்க்கை காத்துட்டு இருக்கு… அத நினைச்சு சந்தோஷ படாம இன்னும் இந்த தீஞ்சு போன ரெக்கார்ட போட்டு தேயவிடாத நீயி…” கையில் கரண்டியை தூக்கி பிடித்து மிரட்டும் தொனியில் அவள் கூற
‘இனி இந்த செல்ல மிரட்டலையும் கேட்க முடியாது’ என்று எண்ணிக்கொண்டாள்.
“அக்கா, நீ சந்தோஷமா இருக்குறது தான் எனக்கும் சந்தோஷம்… அதனால கண்டதையும் மனசுல போட்டு கிளராம வாழுற வாழ்க்கைய சந்தோஷமா வாழுக்கா ..” என்று தாயாய் அவளுக்கு அறிவுரை கூறினாள்.
“சரி, நீ போய் மாமாக்கு டீ கொடு.. மத்த வேலையெல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்று கையில் டீ கப்பை திணித்து அனுப்பி வைத்தாள் அபிநயா.
அவள் கூறியபடி அறைக்கு வந்தவள் படுக்கையில் எழுந்து அமர்ந்த வண்ணம் வாசற்கதவையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டாள்.
“சாரி, எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா? எல்லாருக்கும் டீ போட்டுட்டு உங்களுக்கு எடுத்துட்டு வர லேட் ஆகிருச்சு” என்று தயங்கிக் கொண்டே அவள் கூற, அவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.
“ஸ்கூல் பசங்க மாதிரி லேட்டா வந்ததுக்கு காரணம் சொல்றியா கண்மணி?” என்று. அவன் கூறவும் அவளுக்கும் ‘அப்படி தான் நடந்து கொள்கிறோமோ?’ என்று தோன்ற…
“சாரி…” என்றாள் அதற்கும்.
“இது எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்?” என்றான் கேலி குரலில்.
“நேத்து… வந்து… அசதில” தன்னிலை விளக்கம் கூற முடியாமல் அவள் தயங்கி தக்கி தக்கி கூறிட,
“ஓஹ் அதுக்கா… அப்போ இந்த ஸாரி ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என்றான்.
முத்துப் பற்கள் தெரிய அவன் சிரித்து கூற அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் கண்மணி.
‘இவனால் தன்னிடம் சரளமாக பேசிப் பழக முடிவது போல ஏன் தன்னால் முடியவில்லை?’ என்று மனம் கேட்க
‘ஒரு வேளை வெறும் பதினைஞ்சு நாள் பழக்கம்கிறதாலயா? அப்படினா அவருக்கும் அதே தானே.. ஏன் என்னால முடியல?’ அவள் மனம் பதில் கேட்டு கேள்விகளை தெளித்து கொண்டிருக்க… அவள் முகத்தைக் கண்டவன்,
“உன் கிட்ட எதையும் ஃபோர்ஸ் பண்ண விரும்பல கண்மணி.. நீ எப்பவும் போல இயல்பாவே இருக்கலாம்… அது தான் எனக்கும் வேணும்…” என்றான்.
அவன் கூறுவது விளங்க அவள் பதிலேதும் கூறாமல் அமைதியாக நின்றாள்.
“நாம இப்போ நம்ம வீட்டுக்கு போறோம்ல.. அதனால நீ ரெடியாகு. நானும் போய் ரெடியாகுறேன்” அவள் சிந்தையை மாற்ற முயற்சி செய்ய அவள்,
“ஆமா, இங்க உங்களுக்கு சொந்தமா வீடு இருக்கா? சித்தி உங்க குடும்பம் எல்லாமே மலேசியாவில செட்டில் ஆகிட்டீங்கனு சொன்னாங்க?” என்று கேட்க
“ஹப்பாடா, இப்போவாவது இதை கேட்டியே..” என்று நக்கலாய் சிரித்துப் பின்,
“சொந்தமா வீடு எல்லாம் அங்க தான் இருக்கு.. இது நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் வீடு. ஏதோ சடங்கு இருக்காமே… மாப்பிள்ளை வீட்டுல பொண்ணு விளக்கேத்தணும்னு அதனால அங்க போய் அந்த சடங்கு எல்லாம் செய்யுறதா அம்மா சொன்னாங்க..” என்று கூறிட,
“ஓஹ்..” என்றதோடு முடித்து கொண்டாள்.
அவன் ‘அவ்வளவு தானா?’ என்பது போல பார்க்க இவள் மென் சிரிப்போடு தயாராக சென்றாள்.
அவனும் புன்னகை மாறாமல் தயாராவதற்குச் செல்ல அடுத்த சில நிமிடங்களில் கண்ணனின் உறவினர் வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர்.
கண்ணனின் தாய் சொல்படி கண்மணி விளக்கேற்றி வணங்கி விட்டு அனைவருக்கும் பால் கொடுத்திட, மாமியாருடன் அடுக்களைக்குச் சென்றாள். கண்மணியுடன் அவள் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
“அக்கா, வீடு ரொம்ப அழகா இருக்கு… உனக்கு பிடிச்ச மாதிரி தோட்டமெல்லாம் இருக்கு.. அங்க மலேசியால கூட இதெல்லாம் உண்டாமா மாம்ஸ் கிட்ட கேட்டியா?” என்றாள் அபி.
“இருக்கு அபி.. அங்க உங்க அக்காக்கு பிடிச்ச எல்லாமே இருக்கு… அப்படியே அவளுக்கு எது வேணும்னாலும் உடனே வாங்கி கொண்டு வந்து சேர்த்துற மாட்டேன்..” என்று குறும்பாய் கண்ணன் கண்ணடித்துக் கூற.. கண்மணிக்கு வெட்கம் தாளவில்லை..
இவர்களின் இந்த லீலைகளை பார்த்து கொண்டிருந்த வேணியோ,
‘இந்த நொண்டிக்கு வந்த வாழ்வை பாரு… பேசாம இவளை இப்படியே இருக்க வச்சுட்டு, இந்த மாப்பிள்ளையை நம்ம பொண்ணுக்குக் கட்டி வச்சிருக்கலாம்.. எவ்ளோ பெரிய இடம்? நம்ம கைய விட்டு இந்த சீக்காரி கைக்கு போய்டுச்சே…’ என்று முகவாயில் நொடித்து கொண்டாள்.
அன்றைய விருந்தில் ஒரு பிடி பிடித்த அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருக்க, கண்ணனின் தந்தை பேச ஆரம்பித்தார்.
“சம்பந்தி, நாளைக்கு காலைல பசங்க ஊருக்கு கிளம்புறாங்க…” என்றார்.
“நீங்க கிளம்பலயா சம்பந்தி?” என்று வடிவு கேட்க,
“இல்லைங்க… நாங்க இங்க பக்கத்துல எங்க சொந்தக்காரங்க இருக்காங்கல்ல அவங்கள இந்த மாதிரி ஊருக்கு வரும் போது பாத்தா தான் உண்டு… அதனால நாங்க அப்படியே அவங்க எல்லார் வீட்டுக்கும் போயிட்டு அங்க இருந்த படி கிளம்பிடுவோம்.. கண்ணனுக்கு தான் அவசரமா வர சொல்லி அழைப்பு வந்துருக்கு..
அதனால நாளைக்கு அவனும் அவன் பொண்டாடியும் மட்டும் தான் போறாங்க” என்றாள் கண்ணனின் தாயார்.
‘தான் மட்டும் தனியாகவா செல்கிறோம்?’ என்று கண்மணிக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க… அவள் மனதை படித்தவன் போல,
“என்ன என் கூட தனியா வர அவ்வளவு பயமா??” என்று அவள் காதருகே குனிந்து மெல்லிய குரலில்கேட்டான்.
“ஹான்,… இல்ல… வந்து…” என்று திடீரென அவன் குரல் அருகில் கேட்டதும் தயக்கத்தில் அவளுக்கு காற்று தான் வந்தது.
“பயப்படாத நான் உன்னை கடிச்சு தின்னுற மாட்டேன்…” என்றான் கிசுகிசுப்பாய் அவள் காதில்.
இப்படியாய் பொழுதுகள் கடந்து அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.
மதுரை விமான நிலையத்தில்…
மதுரை – கோலாலம்பூர் செல்லும் அந்த விமானத்திற்காய் காத்து கொண்டு
கண்ணன் மற்றும் கண்மணியும். அவர்களை வழியனுப்ப இரு குடும்பத்தாரும். பெரியவர்கள் ஒரு புறம் அமர்ந்து கொள்ள கண்ணனும் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் செல்ல… கண்மணியும் அபியும் மட்டுமே தனியாய் அமர்ந்து இருந்தனர்.
சிறுவயது முதல் ஒன்றாய் வளர்ந்த தமக்கை. தாயை விட தன் மேல் அதிகம் பிரியம் கொண்டவள். இப்போது தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் நிலையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அக்கா…” மெல்லிய கமரலாய் அவள் குரல் ஒலிக்க அவளின் கைகளை தனக்குள் பொத்தி கொண்டாள் கண்மணி.
“அபி…” அவளுக்கும் அதே நிலை தான் என்றாலும் அபியை சரிசெய்ய வேண்டுமே ஆகையால் முயன்று வரவழைத்த தெம்போடு,
“நேத்து வரைக்கும் என்னைய அழுமூஞ்சினு சொல்லிட்டு நீ இப்படி அழுதா எப்படி அபி?” என்று தங்கையின் தோள்களைத் தொட்டு சமாதானம் செய்தவள்,
“அபி, நீ தான் இனிமே அப்பாவையும், பாட்டி, சித்தியையும் பார்த்துக்கணும். உனக்கு சொல்ல தேவையில்ல… இருந்தாலும் சொல்றேன்… அப்பாவ கவனிச்சுக்கோ சரியா?” என்க
“அக்கா என்ன சொல்ற? நீயா? அப்பாவ கவனிச்சுக்க சொல்ற…”
இதுவரை தந்தை என்ற ஸ்தானத்தில் கூட எண்ணி பார்க்காத, பார்க்க விரும்பாத ஒருவரை இப்போது ‘அப்பா’ என்று விளித்ததோடு நில்லாமல் அவரை கவனிக்க சொல்லி தனது அக்கா கூறவும் ஆச்சர்யம் தாளவில்லை அவளுக்கு.
அவள் விரித்த வைத்த விழிகளை கண்டு எழுந்த புன்னகையில், “எனக்கு இதை எப்படி எடுத்துக்கன்னு தெரியல அபி… ஒரு அப்பாவா அவர் தன்னோட கடமையை ஒழுங்கா செஞ்சு இருந்தா சித்தியும் பாட்டியும் என்னை வெறுக்கும் அளவுக்கு வந்துருக்காதுன்னு தோணும். ஆனா அவர்…” என்று
திருமண நாளுக்கு முந்தைய இரவு நடந்தவைகளை எடுத்துக் கூறி, அவள் அணிந்திருந்த நகைகளுக்குள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடந்த அந்த தங்க செயினை எடுத்து காட்டினாள்.
“அவரையும் குறை சொல்ல முடியல… சொல்லாம இருக்கவும் முடியல… அம்மா மேல வச்ச பாசம் அவர இப்படி ஆக்கிருச்சுன்னு நினைக்கவா இல்ல. சோகத்துக்குனு கையில எடுத்த போதை அவரை ஒரேடியா பிடிச்சுக் கிட்டு நிதானமா இருக்கவிடாம பண்ணிருச்சா? எதை சொல்லனு எனக்குத் தெரியல..
திடீர்னு அன்னைக்கு ராத்திரி வந்து இந்தச் செயினை எனக்குப் போட்டு விட்டுட்டு போறப்ப தான் அவருக்குள்ளயும் எங்கையோ ஒரு ஓரத்துல எம்மேல பாசம் இருக்குனு தோணுச்சு” என்று கண்மணி வருத்தமான குரலில் கூற..
அபியாலும் நம்ப முடியவில்லை அவள் தந்தையின் விந்தைகள் நிறைந்த செயலை எண்ணி.
“நீ எதையும் நினைக்காத அக்கா… எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்… நீ பத்திரமா போயிட்டு வா… தினமும் கால் பண்ண மறக்காத… உன் போனுக்காக நான் வெயிட் பண்ணிட்டே இருப்பேன்… ஒரு நாள் பண்ணலைனாலும் மலேசியாவுக்கே தேடி வந்து அடிப்பேன் சொல்லிட்டேன்…” என்று தங்கை போலியாக மிரட்ட, அவளை அணைத்து கொண்டாள் கண்மணி.
“கொஞ்சுனது போதும். என் பொண்டாட்டிய விட்டா நானும் அவளை கூட்டிக்கிட்டு கிளம்ப வசதியா இருக்கும்…” திடீரென கேட்ட கண்ணனின் குரலில் இருவரும் விலகி நின்று அவனைப் பார்க்க… கைகளை மார்புக்குக் குறுக்காய் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
“கொஞ்ச நேரம் கட்டிக்கிட்டேன்… அது பொறுக்காம ஓடி வந்துட்டீங்களே..” என்று அபி கூற இவன் சிரித்தான்.
“கிளம்பலாமா கண்மணி?” என்று அவளின் பெட்டியை தன் பக்கம் இழுத்து கொண்டு அவன் கேட்க, இவள் பொம்மையாய் அவன் பின் நடந்தாள் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு.
உலகத்தைப் பற்றி அறியத் துடிப்பவள் தான்.
ஆனால் புத்தகத்தில் மட்டுமே உலகத்தை சுற்றிப் பார்த்திருந்தவள், வாழ்க்கையில் முதல் முறையாக தனது சொந்த ஊரைத் தாண்டி வெளிநாடு செல்லப் போகிறாள்.
முதல் விமானப் பயணம். விமானத்தை அருகில் பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்தது அவளுக்கு. கால்களை இழுத்து நடப்பதால் மெதுவாகவே அவளால் படியேற முடியும்.
கண்ணன், அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று, தங்களுக்கான இருக்கையை கண்டறிந்து அமர வைத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு விழித்தபடி கண்மணி அமர்ந்திருக்க, அவள் செய்கையைப் பார்த்து புன்னகைத்தவன், சீட்பெல்ட்டை அவளுக்கு அணிவித்தான்.
“ஏதாவது சாப்பிடுறியா?” என்று அவள் அருகில் நெருங்கி அவன் கேட்க..அவன் மூச்சு காற்று ஏற்படுத்திய கூச்சத்தில் இவள் நெளிந்தாள்.
அவனோ, விமான பணி பெண்ணிடம் உணவை வர சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“நீ பதில் சொல்லுறதுக்குள்ள மறுநாள் ஆகிடும் போல.. அதான் நானே கொண்டு வர சொல்லிட்டேன்.. எப்படியும் ஊருக்கு போய் சேர மூன்றரை மணி நேரம் ஆகும். அது வரைக்கும் வயிறு தாங்க வேணாம்…” பணிப்பெண் கொடுத்த உணவை வாங்கிய படி அவன் கூறினான்.
அவன் எடுத்து கொடுக்க அமைதியாக உண்டவள், பின் தன்னையும் அறியாமல் உறங்கி விட மேகங்களைப் போல நேரமும் நகர்ந்தது.
மூன்று மணி வாக்கில் தரையிறங்கியவர்கள் செய்ய வேண்டிய எல்லா செய்முறைகளையும் செய்து முடித்து கொண்டு நான்கு முப்பது மணிக்கு வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறி தங்குமிடம் சென்றனர்.
அப்போது தான் மலேஷியாவை முதன் முதலாய் பார்க்கிறாள் கண்மணி. கார் கண்ணாடி வழியாக வேடிக்கை பார்த்த படி வந்தவளின் கண்கள் அப்பட்டமாக வியப்பை வெளிப்படுத்தின.
கண்ணன் ஓட்டுனரிடம் மலாய் மொழியில் ஏதோ பேசிய படி வர, இவள் தன் பார்வையை வெளியில் பதித்தபடி வந்தாள்.
சாலை எங்கும் சீன மக்களும், நம் தமிழ் மக்களும் கலந்து காணப்பட்டனர். நகர் முழுவதும் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் காணப்பட்டது. பெரும்பாலான இளைஞர்கள் நவநாகரீக உடையில் வலம் வந்தனர்.
வீதியெங்கும் தூய்மையாகவும், வாகனங்கள் வரிசையாகவும் சென்றன. ‘இதே நம்ம ஊரா இருந்தா ரெண்டு காருக்கு இடையில கூட பைக்கை ஓட்டிக்கிட்டு போவாங்க' என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேரம் பயணம் செய்து அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.
மிஞ்சிப் போனால் மூன்றடுக்கு மாடிக் கட்டிடத்தை மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, முப்பது அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்க்கப் பார்க்க புதுமையாகவும் சற்று திகிலாகவும் இருந்தது.
அந்த பிரம்மாண்ட குடியிருப்பின் ஒரு பிளாட்டின் தன் பொதிகளை வைத்திட அவன் தன்னிடம் இருக்கும் சாவிக்கொத்தில் ஒன்றை வாயிற்கதவில் திணித்தான்.
வீட்டின் வரவேற்பு அறை ஒரு நீண்ட சோபாவோடு அவளை வரவேற்றது.
ஹாலை ஒட்டிய ஓர் அறை சமையல் அறையாக கண்ணில் பட இரு பெட்ரூம் கொண்ட அந்த சிறிதும் பெரிதும் அல்லாத அந்த வீட்டை காணவும் அவளுக்கு பிரமிப்பு.
“அங்கேயே நின்னுட்ட வா கண்மணி…” கண்ணன் அழைக்க அந்த அறையில் அவளின் பொருட்கள் அடங்கிய பையை வைத்து விட்டு,
“இங்க தங்கிக்கோ… பக்கத்துல தான் என்னோட ப்ரைவேட் ரூம்.. அது கொஞ்சம் பெருசு… ஆபிஸ் ரூம் அட்டாச் பண்ணி இருக்கும். பொறுமையா எல்லாத்தையும் சுத்தி பாரு சரியா?.. அப்புறம் இந்த பால்கனில உனக்கு பிடிச்ச மாதிரி தோட்டம் செட் பண்ணிக்குவோம் சரியா?” என்றான்.
அவள் தலையை அசைத்தாள் சரியென்பதாய்.
“இதுக்கும் அமைதி தானா? உனக்கு வேற ஏதாவது கேட்கணுமா?” என்று கேட்க
“இல்லையே.. நைட் என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டாள்.
அவன், “இன்னிக்கு பயண களைப்பு இருக்கும் சோ இன்னிக்கு மட்டும் ரெஸ்ட் எடு.. சமையல் வேலை எல்லாம் நாளைக்கு கையில எடுத்துக்கலாம்… நைட் ஹோட்டல்ல ஆடர் பண்ணிடறேன்…” என்று அலைபேசியில் யாருக்கோ அழைத்து மீண்டும் மலாய் பாஷையில் ஏதோ கூறிவிட்டு அணைத்தான்.
அவள் கேள்வியாய் அவனை பார்க்க அவன்,
“என்ன கண்மணி?” என்றான்.
“ஆமா நீங்க என்ன லாங்குவேஜ் பேசுறீங்க?” என்று அவள் கேட்க,
“ஓ அதுவா மலாய். இது மலேசியாவோட தேசிய மொழி. இங்க பெரும்பாலும் இந்த மொழி தான் பேசுவாங்க. மலாய்க்கு அடுத்த படியா சைனீஷ், தமிழ் ரெண்டும் இங்க அதிகமா பேசுவாங்க. நா இங்கயே பிறந்து வளர்ந்ததால இந்த மொழியெல்லாம் எனக்கு அத்துப்படி. போகப் போக நீயும் கத்துக்கலாம்” என்றான் சிரித்தபடி.
அவளும் புன்னகையோடு தலை அசைத்தாள்.
பின் இரவில் அவன் சொன்ன படி வீட்டிற்கே உணவு வந்து விட இருவரும் அமர்ந்து உண்டனர்.
பின் அவன் குட் நைட் சொல்லிவிட்டு உறங்க செல்ல அவள் தன் அறைக்கு வந்தாள்.
விமானத்திலேயே பாதி உறங்கியதால் உறக்கம் வராமல் பால்கனியில் நின்று கொண்டு இன்றைய அவளுக்கான இந்த புதிய இரவினை ரசித்து கொண்டிருந்தாள்.
‘இனி தன் வாழ்க்கை இங்கே தான்’ என்று அவள் மனம் கூற விதியோ விஷமமாய் சிரித்தது.
0 Comments