03. மின்சாரப் பாவை


        


“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”

-பாரதி


வாசல் தெளித்து கோலம் போடும் வேலையின்றி மெதுவாக எழுந்த கண்மணி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சமையலறையில் தனக்கும் கணவனுக்கும் காபி தயாரித்த படி யோசனையில் நிற்க..

“என்ன கண்மணி மேடம் யோசனை பயங்கரமா இருக்கு? மலேசியா தேர்தல்ல எதும் வேட்பாளாரா களம் இறங்கப் போறீங்களா?” என்று காதருகே கேட்ட கணவனின் குரலில் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள்,

“ம்கூம்” என்றாள்.

“அப்புறம் வேற என்ன யோசனை ஓடுது? தயங்காம சொல்லு கண்ணம்மா” என்றதும்,

“அ.. அது.. இல்.ல.. என்னைய கல்யாணம் பண்ணிக்க எப்படி? எப்படி சம்மதிச்சீங்க? என்னால நடக்க முடியாது. என்னோட குறைபாடு உங்களுக்கு பெரிசா தெரியலையா?” என்று அவள் தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

“இல்ல… உன்னால நடக்க முடியாதுங்குற ஒரே குறை தானே.. மற்றபடி எல்லாம் சரியாத் தானே இருக்கு” என்று அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டே அவன் கூற…

“அச்சோ..போங்க” என்று நாணத்தால் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பாருடா வெட்கத்தை.. ம்ம்” என்றவன் தன்னுடைய காபி கோப்பையை எடுத்துக் கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்தான்.

திருமணமாகி ஒரு வாரமாகி இருந்ததால் இருவருக்குள்ளும் புரிதலும் நெருக்கமும் மெல்ல உருவாகி இருந்தது.

தனது வீட்டிற்கு போன் பண்ணி தரச் சொல்லி தங்கையிடமும், அப்பத்தாவிடமும் பேசி விட்டு மொபைலை அவனிடம் கொடுத்தவள்,

“நா போய் காலை சாப்பாடு தயார் பண்றேன்” என்று அடுக்களையை நோக்கிச் செல்ல

“நோ” என்றவன், தனது கைகளை அவளின் தோள் மீது வைத்து மெதுவாக அழுத்தி அமர வைத்து, “இன்னைக்கு என் மகாராணிக்கு சாப்பாடு நான் தான் செய்வேன்” என்றான்.

கண்மணி “வேணாங்க” என்று மறுக்க மறுக்க தானே சமையலை செய்து முடித்தான்.

சாப்பிட்டுப் பார்த்தவள், “நல்லா இருக்குங்க” என்று கணவனைப் பாராட்டினாள்.

சாப்பிட்டு முடித்ததும் அவனுக்கு ஒரு அழைப்பு வரவே அலைபேசியை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தவன் மலாயில் எதையோ பேசிக் கொண்டிருக்க அவனது முகம் தீவிர பாவனையைக் காட்டியது.

கணவனின் முக பாவனையை கவனித்துக் கொண்டிருந்தவள் ‘எதுவும் பிரச்சினையா இருக்குமோ? ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்காரே!’ என எண்ணிய படி நிற்க,

போன் பேசி விட்டு வந்தவன் அவளது முக பாவனையை கவனித்து யூகித்தவன்,

“நீ நினைக்குற மாதிரி ப்ராப்ளமெல்லாம் ஒன்னுமில்லை கண்மணி. என் ப்ரெண்டோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே கண்மணி தனது வாயில் கையை வைத்துக் கொண்டு வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்.

“ஹே கண்மணி என்னாச்சு?” என்றபடி பின்னே ஓடியவன் அவளது தலையை தடவிக் கொடுக்க சாப்பிட்ட உணவு ஒன்று விடாமல் வாந்தி எடுத்திருந்தாள்.

“நா செஞ்ச சாப்பாடு எப்படி இருக்குனு கேட்டப்போ சூப்பர்னு சொன்ன. ஆனா ரிசல்ட் இப்போ தானே தெரியுது. வாந்தி எடுக்குற மாதிரி இருக்குனு.” என்று மெலிதாக சிரித்தபடி அவன் கூற,

கண்மணியின் முகம் வாடி விட்டது.

“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? நிஜமாவே நீங்க சமைச்ச சாப்பாடு அருமையா இருந்துச்சு. ஆனா சைனீஷ் ஃபுட் நா இதுக்கு முன்ன சாப்பிட்டது இல்லை. இதான் முதல் தடவை. அதனால தான் ஒத்துக்காம வாந்தி வந்திருச்சு. வேற ஒன்னுமில்லை” என்று விளக்கம் அளித்தவளுக்கு வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தான் அவள் கணவன்.

வெந்நீரை அருந்தி விட்டு மெல்ல நடந்து போய் சோபாவில் அமர்ந்தவள், தலையை சோபாவில் சாய்த்துக் கொள்ள

“என்ன கண்மணி இன்னும் ஒரு மாதிரி இருக்கா? மாத்திரை எதுவும் போடுறியா?” என்று கேட்டவனிடம்

 “இல்லை கொஞ்சம் ஓய்வு எடுத்தா சரியாகிடும்” என்றாள்.

மறுநாள் காலைப் பொழுதே உற்சாகமாக வலம் வந்த கண்ணன், “கண்மணி நீ மலேசியா வந்து பத்து நாளாகப் போது. இன்னும் நா உன்னை எங்கையும் கூட்டிட்டுப் போல தானே.

இன்னைக்கும், நாளைக்கும் நாம ரெண்டு பேரும் ஃபுல்லா ஊரை சுத்திப் பார்க்கப் போறோம். அப்புறமா நீ கேட்டாலும் என்னால கூட்டிட்டு போக முடியாது. ஏன்னா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நா ஆபிஸ் போக ஆரம்பிச்சிடுவேன்” என்றான்.

“ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் போயிருவீங்களா?” என சுருதி குறைந்து போய் கண்மணி கேட்க..

“அட மண்டு. அது ரெண்டு நாள் கழிச்சு தானே! இப்போ நாம ஊர் சுத்தப் போகப் போறோம். அதனால போய் சந்தோசமா ரெடியாகிட்டு வா” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் பச்சை வண்ணத்தில் இளம் ரோஸ் பார்டர் வைத்த காட்டன் சேலையில் கண்மணி தயாராகி வந்தாள். இருவரும் காரில் புறப்பட ஓட்டுநரைத் தவிர்த்து விட்டு கண்ணனே காரை செலுத்தினான்.

முதலில் அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறினான்.

 கடல் தாண்டி மலை தாண்டி வணிகம் செய்து குடும்பத்தை செழிப்பாக்க பாடுபட்ட நம் தமிழ் மக்கள் செல்லும் இடமெல்லாம் தங்கள் கலாச்சாரத்தை மட்டுமின்றி தாங்கள் வணங்கும் கடவுளின் கோவில்களையும் நிலை நாட்டிச் சென்றுள்ளனர்.

முத்தமிழுக்கும் மூத்தவனாம், மயிலேறி உலகை வலம் வந்த முருகப் பெருமான் பத்துமலை அடிவாரத்தில் உயர்ந்து எழுந்து நின்று பக்த கோடிகளுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

இதற்கு முன்பு மலேசிய முருகன் ஆலயத்தைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் முதன் முதலாக நேரிடையாக பார்த்த கண்மணிக்கு ஆர்ச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

புன்னகை முகத்துடன் மனமுருக கண்மூடி முருகனை வேண்டிக் கொண்டவள் கண் விழித்துப் பார்க்கத் தன் கணவன் அருகில் இல்லை என்றதும் சற்று பதட்டத்துடன் சுற்றும் முற்றும் தேடினாள்.

பத்தடி நகர்ந்து சென்று அச்சம் பரவிய முகத்துடன் நின்றவளை யாரோ கவனிப்பது போல அவளது உள்ளுணர்வுக்குத் தோன்ற.. சட்டென திரும்பிப் பார்த்தாள்.

சுற்றுலாப் பயணிகள், ஒரு சில பக்தர்களைத் தவிர்த்து வேறு யாரும் சந்தேகப்படும் படியாக அவள் கண்களுக்குத் தென்படவில்லை. திடீரென தன் தோள் மீது ஒரு ஸ்பரிசத்தை உணர்ந்தவள், “ஆஆஆஆ” என்று கத்த..

“ஹே கண்மணி என்னாச்சு? ஏன் கத்துற?” என கண்ணன் அவள் தோளை ஆதரவாக பற்றிய படி அவளருகே வந்து நின்றான். தனது நெஞ்சின் மீது கை வைத்து அழுத்திப் பிடித்தவள், நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டாள்.

“என்னங்க நீங்க எங்க போனீங்க? நா பயந்தே பொயிட்டேன்” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது கட்டுப்பாட்டை மீறி நயனங்கள் இரண்டும் இரு துளி நீரை வெளியேற்றி கன்னங்களை நனைத்திருக்க… அவளது உடல் வெளிப்படையாக நடுங்கியது.

“நீ கண்ணை மூடி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தியா? ஆபிஸ்ல இருந்து போன் வரவும் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேனு கொஞ்சம் தள்ளிப் போய் பேசிட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி பயந்து போய் நிக்குறியே கண்மணி!” என்றவன் அவளை அணைத்தவாறே காரை நோக்கி அழைத்துச் செல்ல..

சற்று நேரத்திற்கு முன்பு தன்னை யாரோ கவனிப்பது போல தோன்றிய உணர்வு இப்போதும் கண்மணிக்குத் தோன்றியது.

ஆம் அவளது முதுகைத் துளைத்துக் கொண்டிருந்தது ஒருவனின் பார்வை.

காரில் வந்து அமர்ந்தாலும், அவளது மனதை ஏதோ ஒரு பயம் கவ்விக் கொண்டிருந்தது.

‘இந்த ஊர்ல நமக்கு யாரைத் தெரியும்? என்னை யார் ஃபாலோ பண்ணுவாங்க? இல்ல இது என் மன பிரம்மையா?’ என்று தனக்குள் கேட்டு கொண்டிருக்க… அவளின் முகம் பார்த்து புருவம் நெறித்த கண்ணன்,

“என்ன கண்மணி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான்.

‘ஒரு நொடி கணவனிடம் கூறலாமா?’ என்று யோசித்தவள் பின் ‘இது வெறும் பிரம்மை மட்டுமே.. இதுக்கு போய் நானும் குழம்பி அவரையும் எதுக்கு குழப்ப?’ என்று முடிவெடுத்து அவனிடம்,

“ஹான், ஒன்னுமில்லங்க.. லேசா தலை வலி அதான்..” என்று சமாளித்தாள்.

அவளின் குணம் அறிந்த காரணத்தால் அவனும் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் அமைதியாக வந்தான். குடியிருப்பின் வாசலிலேயே அவளை இறக்கி விட்டவன்,

“நீ போய் ரெஸ்ட் எடு கண்மணி. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடறேன்..” என்று கூற இவளும் தலையை அசைத்து விட்டு நடந்து சென்றாள்.

மேல் தளத்தில் இருக்கும் அவர்களின் வீட்டிற்கு செல்ல மின்தூக்கியை நோக்கிச் சென்றவள், கண்ணன் கூறிய தங்கள் வீட்டுத் தளத்தையும், வீட்டு எண்ணையும் மனதில் பதித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

மின் தூக்கியினுள் வந்து நின்றவளின் கண்களில் அந்த குட்டி வாண்டு பட்டாள். உடன் அவளது தாயாரும்.

அந்த வாண்டு அவர்களின் தளத்தில் தான் கண்மணியின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருப்பவள். எப்போதும் பால்கனியில் வாசம் செய்யும் கண்மணியின் கண்களுக்கு தவறாமல் தரிசனம் தருபவள்.

அந்த சின்ன வாண்டின் சேட்டைகளில் தன்னை மறந்து ஈர்க்கப்பட்டு அவளைப் பார்த்துக் கொண்டிருப்பாள் கண்மணி.

அந்த சிறுமியின் குண்டு கன்னமும், அதில் விழும் குழியும் அவளுக்கு அவள் தங்கையை நினைவு படுத்தும்.

‘அடுத்த வாட்டி அபி போன் பண்ணுறப்போ இந்தக் குழந்தையப் பத்தி மறக்காம சொல்லணும்’ மனதில் எண்ணிக் கொண்டபடி அந்த குழந்தையை நெருங்கி நின்றவள் அதன் அழகான கன்னத்தைத் தொட்டு கிள்ளி உதட்டில் ஒட்டிக் கொண்டாள்.

பதிலுக்கு அதுவும் அவளைப் பார்த்து அழகாய் சிரிக்க அவ்வளவு தான் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ அந்தப் பெண்மணிக்கு.

சட்டென குழந்தையைத் தூக்கித் தனது இடையில் இருத்திக் கொண்டு, “ஹூம்” என முகத்தை வெட்டித் திருப்பிக் கொண்டார்.

ஆனால் புரியாத விந்தை என்னவென்றால்? அந்த பெண் புரியாத மொழியில் முகத்தில் காரம் பூச அவளை திட்டியது தான்.

‘ஏன் இந்த அம்மா இவ்வளவு கோவப்படுறாங்க? என்னைப் பார்த்தா குழந்தை கடத்துறவள மாதிரியா இருக்கு? இல்ல.. நானெல்லாம் குழந்தைய தொடக்கூடாதுன்ற எண்ணமா?’ எனத் தனது உடல் குறைப்பாட்டை மையப்படுத்தி அவள் குழப்பத்தில் நிற்க…

அந்த பெண்ணோ அதே கார சாரமான ஏச்சுகளை அள்ளி வீசி விட்டு தங்களது தளத்தில் மின் தூக்கி நிற்கவும், விருட்டென வெளியே சென்று விட்டார்.

இங்கு சிலையாய் நின்றதென்னவோ கண்மணி தான்.

மனம் தன்னிலை குறித்து எழுந்த உணர்வில் அழுகை பீறிட வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

படுக்கையில் சரிந்தவளின் மனமும், விழிகளும் விடாமல் அழுது தீர்த்தது.

எத்தனை நேரம் கடந்ததோ சில்லென்று உடல் குளிரில் விறைக்க, அந்த உணர்வில் அடிவயிற்றில் ஏதோ உணர்வு தோன்றவும் தான் விழித்தாள் கண்மணி.

அது குளிர் காலம். மாலை மங்கும் முன்னரே குளிர் சாளரம் தாண்டி அறையில் அடிக்கும்.

அப்போது தான் கவனித்தாள். மதிய உணவைக் கூட தயாரிக்க மறந்து உறங்கி விட்டதை.

கண்ணனும் வந்திராததால் யோசனையோடு குளித்து வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு, குடிக்க டீ செய்து கொண்டு பால்கனியில் அமர்ந்தாள்.

எத்தனை நேரம் கடந்து சென்றதோ அவளுக்கு தெரியவில்லை.

மனம் மட்டும் ஓர் அழுத்தத்தோடு இருக்க மீண்டும் அதே உணர்வு. தன்னை யாரோ கவனிப்பதாக புத்தி கூற, மனமோ சட்டென 'சுற்றிப் பார்’ என்றது. தனது கண்களை விரித்து, சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எதிர் குடியிருப்பு, சாலை, பக்கத்துக் குடியிருப்பு என கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை யாரும் தென்படவில்லை.

ஆனால் தவறாமல் தோன்றும் இந்த உள்ளுணர்வு??

‘யார் என்னை கவனிக்கிறது?’ என்று மீண்டும் கேட்டு கொண்டாள்.

நெஞ்சம் பயத்தில் அழுத்த பால்கனியை விட்டு வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.

வீட்டினுள் வரவும், காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே படபடத்துக் கொண்டிருந்த மனம் இப்போது வேகமாக தந்தியடிக்க… கதவினை நெருங்கி அதிலிருந்த சிறு துவாரம் வழியாக பார்க்க கண்ணன் நின்று கொண்டிருந்தான்.

ஓர் நெடிய மூச்சோடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் கதவைத் திறந்தாள்.

முகம் புன்னகையை அப்பியிருக்க, அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே உள்ளே வந்தான் கண்ணன்.

இவளோ விழிகளை சிமிட்டி தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு, அவனுக்குக் குடிக்க தேனீர் தயாரிக்கச் சென்றாள்.

“என்ன மேடம்? மதியம் சாப்பிட வரலனு கோவமா இருக்கீங்களா?” என்றபடி அவனும் பின்னூடே வந்து சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொள்ள…

“இல்லைங்க அசதியில அப்படியே தூங்கிட்டேன்.. சமைக்கக்கூட மறந்துட்டேன்.. கொஞ்சம் பொறுங்க.. நீங்க ரெடியாகி வர முன்ன சாப்பாடு ரெடி பண்ணிடுறேன்..” என்றாள்.

“என்ன நீ மதியம் சாப்பிடலையா? என்ன கண்மணி இது.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? நான் ஒரு மடையன்.. உன் கூட இருக்குறேன்னு சொல்லிட்டு தனியா விட்டுட்டு போய்ட்டேன்.. சாரி கண்மணி..” என்று தன் மன வருத்தத்தைக் குரலில் தேக்கி மனைவியிடம் மன்னிப்பை வேண்டினான்.

“அட என்னங்க நீங்க? லேசான தலைவலி தான்… அதான் தூங்கிட்டேன்.. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? நீங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க..” என்று அவள் அவனை சமாதானம் செய்ய…

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம் டார்லிங்.. இன்னிக்கு நைட் என் கூட வேலை பாக்குற என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நமக்கு பார்ட்டி வைக்கிறாங்க.. நாம அங்க போறோம் ரெடியா இரு” என்று அவளின் கன்னம் தட்டி குளிக்கச் சென்றவன்,

“ஹோ… இதை மறந்துட்டேன் பாரு” எனத் தன் பின்னந் தலையில் தட்டிக் கொண்டவன், அவளை வரவேற்பரைக்கு அழைத்து வந்தான்.

“என்னங்க எதை மறந்துட்டிங்க?” அவள் புரியாமல் பார்க்க…

“இதோ இதைத் தான்” என ஒரு சிறிய ஷாப்பிங் பேக்கை அவளிடம் நீட்டினான். அவள் தயக்கமாக நிற்கவும்,

“பிரிச்சு பார்த்துட்டு பிடிச்சிருக்கானு சொல்லு” என்றதும் அந்தப் பையை திறந்து பார்த்தாள்.

உள்ளே அழகிய பச்சை வண்ண டிசைனர் சேலை ஒன்று இருந்தது. அதனை வருடிப் பார்த்தவள் கணவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“உனக்குப் பிடிச்சிருக்கு தானே?” அவள் விழிகளுடன் தன் விழிகளை கலக்க விட்டபடி அவன் கேட்கவும் உள்ளுக்குள் படபடப்பாக உணர்ந்தவள்,

“ம்ம் பிடிச்சிருக்குங்க” என்று தலையசைத்தாள்.

“அப்புறம் என்ன? சீக்கிரம் போய் கிளம்பு நேரமாகுது” என்றவன் குளியலறைக்குச் சென்று விட்டான்.

கணவன் குளித்து விட்டுத் திரும்பி வருவதற்குள் உடை மாற்றிவிடலாம் எனத் தனது அறைக்குள் நுழைந்து கொண்டவள் புடவையை அணிந்து கொண்டு தயாரானாள்.

“கண்மணி ரெடியா?” என அரை மணி நேரத்திற்குப் பின் கண்ணனின் குரல் அறைக் கதவிற்கு வெளியிலிருந்து கேட்கவும் புன்னகை முகமாக வந்து கதவைத் திறந்தாள்.

“ஹே கண்மணி என் டார்லிங்… இந்த பச்சைக் கலர் டிசைனர் சேலையில ரொம்ப அழகா இருக்க… வாங்குறப்போ கூட செட் இந்த கலர் ஆகுமானு யோசிச்சேன். பெர்ஃபெக்ட்டா இருக்கு” என்று அவளருகே வந்து நெற்றி முட்டிக் கூறவும் நாணத்தில் கன்னம் சிவக்க நின்றவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

கண்மணியை கீழே அழைத்து வந்தவன் அவளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுத் தனது வாகனத்தை எடுக்கச் சென்றான்.

ஐந்து நிமிடம் கழித்து கண்ணன் திரும்பி வர வேர்வையில் குளித்து, வெடவெடத்துப் போகாத குறையாக கண்மணி நின்று கொண்டிருந்தாள்.

“ஹே கண்மணி என்னாச்சுடா? ஏன் இவ்வளவு வேர்த்துருக்கு? எதையும் பார்த்து பயந்துட்டியா?” என்று காரிலிருந்து இறங்கியவன் ஆதாரவாக அவள் தோள் பற்றி மறுபுற கார்க் கதவைத் திறந்து அவளை அமர வைத்தான்.

அவளது தலையை ஆறுதலாக தடவிக் கொடுத்த கண்ணன் என்னவென்று கேட்க தன்னை யாரோ பின்பற்றுவதாக உணர்வதை அவனிடம் கூறினாள்.

“ஹையோ கண்ணம்மா! அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. நீ ஊருக்கு புதுசுல அதான் உன்னை யாரோ வாட்ச் பண்ற மாதிரி உனக்குத் தோணுது. ப்ளீஸ் ரிலாக்ஸா இரு. இந்த ஜூஸைக் குடி” என காரில் இருந்த குளிர்பானத்தை நீட்டினான்.

அவளும் தொண்டை வறண்டிருப்பது போல் உணரவும் கணவன் கொடுத்த பழரசத்தை வாங்கிக் குடித்தாள்.

மறுபுறம் வந்து அமர்ந்தவன், “கண்மணி கொஞ்சம் ரிலாக்ஸா இரு. பார்ட்டி ப்ளேஸ் வந்த உடனே நா உன்னை எழுப்புறேன். அதுவரைக்கும் கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு” என்று இருக்கையை அவளுக்கு வசதி படுத்திவிட்டு வாகனத்தைக் கிளப்பினான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் “டொம்” என்ற சத்தத்துடன் கார் எந்த வாகனத்திலோ பலமாக மோதி நிற்க மோதிய வேகத்தில் இருக்கையில் சாய்ந்து கொண்டிருந்தவளின் தலை முன்பக்கம் முட்டிக் கொள்ள தலை ‘வின் வின்’ என்று வலியில் தெரிக்க…

கண்மணி அப்படியே மயங்கி சரிந்தாள்.

‘என்ன நடந்தது?’ என யூகிப்பதற்குள் கார் எதிரிலிருந்த வாகனத்தில் வேகமாக மோதியதில் ஸ்டியரிங்கில் தலை முட்ட குருதி முகத்தில் வழிந்தோட கண்ணனும் மயங்கி விட்டான்.


Post a Comment

0 Comments