04. மின்சாரப் பாவை

 



துன்பம் நெருங்கி வந்த போதும்- நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு- துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

-பாரதி

இணை பிரியா இன்பக் காதலர்கள் போல்… கண் இமைகள் இரண்டும் ஒன்றோடொன்று பிரிய மறுத்து ஒட்டிக் கொள்ள… மிகுந்த பிரயத்தனப்பட்டு காதலர்களை பிரித்தது போல் கண்ணிமைகளைப் பிரித்தாள் கண்மணி.

இருட்டு… சுற்றிலும் ஒரே இருட்டு. கன்னிப் பெண்ணின் கண்மையை கடன் வாங்கி வந்தது போல் அத்தனை அடர்த்தி. கருமைப் போர்வையில் சில நேரம் மனம் விரும்பும் தனிமையோடு விரும்பக் கூடிய ஒன்று.

சில நேரம் இருட்டானது மிரள வைக்கும் மரண பீதியை ஏற்படுத்தும் ஒன்று.

அப்படியோர் இருள் மொத்தமும் சூழ்ந்து கிடக்கும் அறையில் தான் இருந்தாள் கண்மணி.

முந்தைய இரவின் புகை மூட்டத்தில் தன்னிலை மறந்து, மூர்ச்சையாகிப் போனவள் இப்போது தான் கண் விழிக்கிறாள்.

அறை முழுதும் இருட்டாக இருந்ததால் கண் விழித்தும் காட்சிகள் ஏதும் புலப்படாமல் போக… பிரயத்தனப்பட்டு பிரித்த இமைகளை… ஓர் முறை சேர்த்து கைகளால் தேய்த்துக் கொண்டு திறந்து பார்க்க… பின்பே விளங்கியது ‘தான் ஏதோ ஓர் இருள் சூழ் உலகில் இருக்கிறோம்..’ என்று.

இயல்பிலேயே இருள் என்றால் தன்னையறியாத பயம் ஒன்று உயிரினத்தைக் கவ்விக் கொள்ளும். கண்மணியும் அதே நிலையில் தான் இருந்தாள்.

உடலை மெல்ல அசைத்துப் பார்த்தாள். படுத்த நிலையில் இருப்பது புரியவும் படக்கென எழுந்து அமர்ந்து கொண்டவள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி கைகளால் துளாவினாள்.

கரம் ஏதோ ஒரு மென்மையை உணர… தான் ஒரு பஞ்சாலான மஞ்சத்தின் மேல் அமர்ந்திருப்பதை மனம் கூறியது.

சில நிமிடங்களுக்கு இருளை கண்களுக்குள் வாங்கி கொண்டு அந்த அறையை பார்த்தாள். பெரிதாக ஏதும் கிடைக்கவில்லை.

‘நாம எப்படி இங்க வந்தோம்? இது என்ன இடம்? ஒன்னுமே புரியலையே..’ தலையை தட்டி கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு திடுமென ஓர் பயம்..

“அய்யோ கண்ணா?? என் கண்ணனுக்கு என்ன ஆச்சு??” என்று சத்தமாக கேட்டு கொண்டாள்.

“என்ன இது? யார் என்னை இங்க கூட்டி வந்தது? சுத்தி முத்தி கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒரே இருட்டாவே இருக்கே? என்னோட ஸ்டிக்கைக் காணாமோ? நா எப்படி எழுந்து நிப்பேன்?” என மெல்ல முனுமுனுப்பாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள்

“ஹலோ யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ் யாராவது வாங்களேன்” என இரைஞ்சியது அவள் குரல்.

நா வறண்டு கிடந்தாலும், பயம் மனதை கவ்விக் கொண்டு இருந்தாலும், மொத்த சக்தியையும் திரட்டி அவள் கத்தினாள்.

சுற்றிலும் இருந்த இருட்டில் அது அவள் மீதே எதிரொலித்ததே தவிர வேறெந்த மாற்றமும் தெரியவில்லை அவளுக்கு.

முழுதாக சில நிமிடங்களுக்கு அறைக்குள் அதீத குரலெடுத்து அவள் சத்தமிட…

அவளது கத்தலுக்குப் பலனாய்… திடுமென புதிதாக அந்த சத்தம் கேட்டது.

ஆம், கதவு திறக்கப்பட்ட கிரீச்சென்ற ஒலி. கூடவே கண்களை கூசும் ஒளியும்.

அறையெங்கும் அந்த சிறிய ஒளி ஊடுருவி செல்ல… சட்டென்று கூசியக் கண்களை ஓர் நொடி திருப்பிக் கொண்ட கண்மணி, அடுத்த நொடி வாசலை ஏறிட்டாள்.

நீண்ட நெடிய ஓர் உருவத்தின் கருப்பு நிழல் முதலில் அவளது காலடியில் விழுந்தது.

நிமிர்ந்து பார்க்க… கண்களைக் கூசிய ஒளியை மறைத்துக் கொண்டு நெடிய கருப்பு உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவது மட்டுமே தெரிந்தது அவளுக்கு.

அந்த இருட்டில் அத்தனை பெரிய உருவத்தை கண்டு கண்கள் அச்சத்தில் விரிய… உற்றுப் பார்த்தாள். அது ஒரு ஆணுடைய உருவம்.

“யார் நீ?.. எ…என்னை.. எதுக்கு கடத்திட்டு வந்திருக்க? உனக்..கென்ன வேணும்?” என்று அதி பயங்கர பயத்தில் அவள் திக்கி விக்கி கேட்க சிறிய அசைவு கூட இல்லை அந்த உருவத்திடம்.

திக்கலை விடுத்து மீண்டும் கேட்டாள். அதே மௌனம் தான் பதிலாக கிடைத்தது.

“என்னை விட்டுரு.. என் புருஷனுக்கு என்ன ஆச்சுனு தெரியல? நான் போகணும்..?”

 வார்த்தைகளை என்னவோ அவள் மட்டுமே உதிர்த்துக் கொண்டிருக்க… அவன் எதையும் கேட்டதாக கூட தெரியவில்லை.

தனது நீண்ட கைகளை அவள் புறம் அவன் நீட்டுவதற்கு எத்தனிக்க… அந்த மிக மங்கிய வெளிச்சத்திலும் தன்னுணர்வு பெற்று அவனது கைகளைத் தட்டிவிட்டு மெல்ல சுவற்றோடு ஒன்றிக் கொண்டாள்.

மெல்லத் திரும்பி நடந்தவன், அறைக்கதவில் கை வைக்கவும்,

“ஹேய்…. ஹேய்…. யார் நீ… உனக்கு என்ன வேணும்???????” நீண்ட விளிப்பாக அவள் கேட்டது அறையின் கதவில் பட்டு அவளுக்கேத் திரும்பியது. அவன் கதவை அடைத்திருந்தான்.

“ஷிட்... ராஸ்கல்” என்று கையை மடக்கி, மெத்தையில் ஓங்கிக் குத்தியவள், மெதுவாக எழுந்து நிற்க முயற்சி செய்தாள். எழுந்தும் விட்டாள்.

ஆனால், மை இருட்டின் பலனாய் கதவு இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை.

தளர்ந்து போய் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டவளின் மனம் பூதமாய் விரிந்தது.

‘யார் என்னை இங்கே கொண்டு வந்துருப்பாங்க? என்ன வேணும் அவங்களுக்கு? ஒரு வேலை பொண்ணுங்களை கடத்தி விக்கிற கும்பலா இருப்பாங்களோ? என எண்ணிக் கொண்டவள், மறுநொடியே கேலி புன்னகை ஒன்றை சிந்தினாள்.

‘ஆமா அப்படியே பொண்ணுங்களைக் கடத்துற கும்பலா இருந்தாலும், நம்மளைக் கடத்தி என்ன செய்யப் போறானுங்க? நம்மளால தான் சரியா எழுந்து கூட நிக்க முடியாதே!’ என தனது குறைபாட்டை எண்ணி தன்னையே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டாள்.

ஆனால் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘பெண்’ என்று கல்லில் எழுதி வைத்தால், அந்தக் கல்லைக் கூட புணரத் துடிக்கும் கயவர்கள் சூழ்ந்த உலகு இது என.

“கண்ணன் எங்க இருக்கீங்க? எனக்கு பயமா இருக்கு கண்ணன்… என்னை எப்படியாவது காப்பாத்துங்க… என்னை காணோம்னு தேடிட்டு இருக்கீங்களா??? இல்ல.. இல்ல.. இந்த… இந்த கும்பல் உங்களையும் ஏதாவது??? அய்யோ கடவுளே… நான் என்ன செய்ய போறேன்? எனக்கு எதுவுமே விளங்கலயே?” என தனக்கு ஆபத்து வந்திருக்கும் இந்த வேளையிலும், தன் கண் முன் இல்லாத கணவனின் நிலையை எண்ணிப் பெரிதும் கலங்கித் தவித்தாள்.

மனம் விட்டு அனத்திக் கொண்டிருந்தாள். கண்கள் கங்கையாக கரைந்து கொண்டிருந்தது.

நேரம் மொத்தமும் தன் நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் கழிய… மீண்டும் அறையை திறந்து உள்ளே வந்தது அந்த உருவம்..

அந்த இருளில் அவன் முகம் துளியும் தெரியவில்லை அவள் கண்களுக்கு. தெரியவும் வாய்ப்பில்லை.

மெல்ல அவளை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தான். தொலைவில் தெரியும் போதே அச்சத்தை கொடுத்த அந்த உருவம் இப்போது அருகில் வரவும் பெண்ணின் மனம் மானம் காக்க வேண்டி பலமாய் நின்றது.

“நீ யாரு? என்னை எதுக்கு இங்க கடத்திட்டு வந்துருக்க? உனக்கு என்ன வேணும்?”

கண்ணீரோடே அவள் கேட்க அவனோ பதிலாக மௌனத்தை மட்டுமே கொடுத்தான்.

“உன்னைத் தானே கேட்டுட்டு இருக்கேன்? என்னை என்ன செய்ய போற?”

இப்போது கோபமாக அவள் கேட்டாலும் அவனிடம் அதே மௌனம் மட்டுமே.

“எனக்கு வீட்டுக்குப் போகணும். நானும், அவரும் சந்தோசமா வாழணும். எங்களை விட்டுரு. என் கண்ணனை எங்க வச்சு இருக்கீங்க? வாழ்க்கையில இதுவரைக்கும் நான் சந்தோசத்தையே பார்த்ததில்லை. இப்போ தான் அவர் மூலமா எனக்குக் கிடைச்சது. ப்ளீஸ் எங்களை வாழ விடுங்க” என கைகள் கூப்பி திக்கிக் கொண்டே அவள் கேட்க..

“ஸ்டாப் இட்” என்ற கர்ஜனை குரலில் அவன் அறையே அதிரும் படி கத்தினான்.

இதுவரை இது போன்ற காதை துளைக்கும் ஒலியை எப்போதும் கேட்டிராத கண்மணி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

இருளில் அருகில் அவனுடைய அந்த தாடி போர்த்திய முகமும், கரகரப்பாக ஒலித்த அவன் குரலும் கண்மணியை பயம் கொள்ள செய்தது. உடல் வெளிப்படையாக நடுக்கமுற ஆரம்பித்தது.

அவளின் முகத்தை ஏறிட்டு கூட பாராமல்…

“கண்ணனைப் பத்தி என்ன தெரியனும்னாலும் முதல்ல நீ சாப்பிடு. அப்பறம் தெரிஞ்சிக்கலாம்…” என்று உணவுப் பொட்டலத்தை அவளது முகத்திற்கு முன்பு நீட்டியவன், கட்டளைத் தொனியில் கூற…

“எனக்கு எதுவும் வேணாம் “ என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உடல் மனம் இவற்றுடன் சேர்ந்து, அவளது வயிறும் மிகுந்த சோர்வடைந்திருந்தது. அதனை சற்று நேரத்திற்கு முன் அவனிடம் கத்திப் பேசும் போதே அவள் உணர்ந்திருந்தாள்.

இருந்தாலும் இவன் கொடுக்கும் உணவை ஏற்க மனம் முரண்டியது. ‘வேண்டாம்’ என பிடிவாதம் செய்தது.

அந்த கும்மிருட்டிலும், கண்மணியின் முக பாவத்தை உற்று நோக்கியவன்,

“சோ சேட்… அதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல…” என்று தோளை குலுக்கியபடி நகர்ந்து சென்றான்.

கதவை அடைக்கும் முன், கதவை ஒட்டியிருந்த மின் பொத்தான்களில் ஒன்றை அழுத்தி விட்டுச் செல்ல… இரவு விளக்கு ஒன்று ஒளிர்ந்தது.

அகன்ற அவன் முதுகை மட்டுமே அவளால் வெறிக்க முடிந்தது.

அவன் சென்ற சில நிமிடங்களுக்கு அப்படியே அமர்ந்து இருந்த கண்மணிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.

‘யாரங்கே எங்களை கவனிக்க ஆளில்லையா?’ என்பது போல வயிற்றின் உள்ளே நடக்கும் போராட்டத்தின் சத்தம் அவள் காதுகளுக்கு நன்கு கேட்டது.

இரண்டு கைகளையும் சேர்த்து வயிற்றோடு அமுக்கி பசியை வெல்ல முயற்சித்த படி அமர்ந்திருந்தாள். கண்கள் உணவுப் பொட்டலத்தையே வெறித்துக் கொண்டிருந்தது.

கையோ மனதோ… எதுவோ ஒன்று வைராக்கியத்தை விட்டால் தான் வயிறு நிறைய முடியும்.

‘இவன் கொடுத்த உணவைப் போய் உண்பதா?’ என்று புத்தியும், ‘யார் கொடுத்தால் என்ன? என்னைக் காப்பாற்றேன்?’ வயிறும் விவாதம் செய்தன.

முரண்டு பிடித்துக் கொண்டிருந்த மூளையின் சொல் கேட்கவா? இல்லை வயிற்றுக்குள் ஈயவா? என்ற பசிப் போராட்டத்தில் இறுதியில் தான் இருக்கும் இடத்தில் மேலும் தெம்பாக இருக்க வேண்டும் எனில் முதலில் உள்ளத்தோடு சேர்த்து உடலுக்கு பலம் தேவை… என்று தோன்ற வயிறே வெற்றி பெற்றது.

அந்த உணவுப் பொட்டலத்தை பிரித்தாள்.

லேசாக விக்கி கொண்டே உணவு மொத்தத்தையும் காலி செய்தவளுக்கு, ‘கை கழுவ எழ வேண்டுமே?’ என்ற சிந்தனை தோன்ற… மெல்ல விழிகளை சுழல விட்டாள்.

படுக்கையின் ஓரத்தில் அவளது ஸ்டிக் கிடந்தது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அதைப் பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியம். அதே நேரத்தில் பலவித யோசனைகளும் தோன்றியது.

எக்கி குச்சியை எடுத்தவள் மெல்ல எழுந்து நின்று தனது வலக்கை இடைவெளியில் அதனை சொருகியபடி சுற்றிப் பார்த்தாள்.

மூலையில் ஒரு அறை தெரிந்தது. குளியலறை என்பது சொல்லாமலே விளங்க… இயற்கை உபாதையும் சொல்லாமலே தன்னிருப்பை வெளிப்படுத்தியது.

குச்சியின் உதவியுடன் தனது தேவைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அறையில் பரவியிருந்த லேசான வெளிச்சத்தில் அந்த அறையை பார்வையிட்டவள், மெல்ல நடந்து வந்து அறையின் மூலையில் இருந்த ஜன்னலருகே வந்து, கம்பிகளின் ஊடாக வெளியேப் பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடர்ந்த மரங்களும், செடிகளுமாக காட்சியளித்தது. ஒரு நீண்ட சுவர் ஒன்றும் தென்பட… தான் இருக்கும் வீட்டினுடைய சுவராகத்தான் இருக்குமென நினைத்தவளுக்கு, இது புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீடாகவோ, காட்டு பங்களாவாகவோ இருக்கக் கூடும் என தோன்றியது. சுற்றி எங்கும் உயிரினங்கள், வாகனங்கள் என எதுவும் கண்ணில் அகப்படவில்லை.

சுற்றி பரவி இருந்த மெல்லிய வெளிச்சத்தில் குறித்து கொண்டாள் மணி ஆறை நெருங்கி இருக்கும் என்று.

“அப்படினா நான் இங்கே வந்து ஒரு நாள் ஆகுதா? நேத்து இந்நேர வாக்குல தான கண்ணன் கூட இருந்தோம்? கண்ணன் இப்போ என்ன செஞ்சுட்டு இருப்பார்? உங்களுக்கு எதும் ஆகலைல கண்ணன்…”

ஜன்னல் காற்றை கணவனுக்கு தூதனுப்பி கொண்டிருந்தாள் கண்மணி.

அதே நேரம் கண்ணனும் தலையில் கட்டிய கட்டோடு கண்மணியை தான் தேடி கொண்டிருந்தான்.

“கண்மணி உனக்கு என்ன ஆச்சு? எங்க போன நீ?” அவர்களின் வீட்டில் கத்திக் கொண்டே இருந்தான்.

இங்கு கண்மணியை அறையில் அடைத்து வைத்து பூட்டியவன் அந்த வீட்டின் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தான்.

சுற்றி எங்கும் கேமரா பொருத்தப்பட்ட அந்த வீட்டின் மொத்த காட்சிகளைப் பார்த்து கொண்டிருந்தான்.

அந்தப் பெரும் பிரம்மாண்ட வீட்டில் நான்கு புறமும் கையில் துப்பாக்கி ஏந்திய படி, கருப்புப் பூனைகள் வலம் வந்து கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்தவனிடம் வந்தாள் அந்தப் பெண்.

வயது நாற்பதை நெருங்கி இருக்கும் தோற்றத்தைக் கொண்டிருந்தாள்.

“கவி, என்ன பண்ணிட்டு இருக்க சாப்பிடலையா?” என்று அவன் தோளைத் தொட்டார்.

“இல்லக்கா.. பசிக்கல… நீ போய் சாப்பிடு” என்றவனின் கண்கள் திரையை விட்டும் நகரவில்லை.

“அந்த பொண்ணு என்ன பண்ணிட்டு இருக்கா சாப்பிட்டாளா?” சத்யாவை பார்த்து அவன் கேட்க

“சாப்பிட்டாளா தெரியல.. ரூம்குள்ள இருந்து எந்த சத்தமும் வரல.. நேத்து நைட் புகை மூலமா பரப்புன மயக்க மருந்தோட வீரியம் அவ்வளவு சீக்கிரம் சரியாகாது. எப்படியும் தூங்கிருப்பா… நாம கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் பார்க்கலாம்…” என்றாள் சத்யா.

அவனுக்கும் அதுவே சரியென்று பட அமைதியாக இருந்தான்.

“கவி….” அவள் ஏதோ சொல்ல வருவது புரிய…

“சொல்லு சத்யா…” என்றான்.

“அந்தப் பொண்ணு…. அவளை என்ன பண்ண போற?” என்று கேட்க…

சில நிமிடங்கள் கையில் இருந்த பேனாவை விரல்களுக்கு இடையில் சுழற்றியவன்,

“இன்னும் முடிவு பண்ணல…” என்றான்.

“அந்த கண்ணன்? அவன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்?…”

சத்யாவின் குரலில் அப்படியொரு கோபம் பழி வாங்கும் வன்மம் தெரிய அதே அளவு வன்மம் அவன் முகத்திலும் தெரிந்தது.

“இப்போ தான் நம்ம ஆளுங்க கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்துச்சு. இவள தேடிட்டு இருக்கான்.. இவள காணோம்னு பைத்தியம் பிடிச்சவன் மாதிரி சுத்திட்டு இருக்கான்…” என்றான்.

“அவனுக்கு இன்னும் நல்லா வலிக்கிற மாதிரி ஏதாவது பண்ணனும் கவி” என்றாள் சத்யா கண்கள் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் மின்ன…

இவனும், “அதுக்கு தானே இவளைக் கடத்திட்டு வந்ததே… வெயிட் பண்ணு… நாம நினைச்சத கொஞ்சம் கொஞ்சமா நிறைவேத்துவோம்…” என்றான்.

“கவி… நம்ம பகையை தீர்த்துக்க இந்த பொண்ணைப் பயன்படுத்த வேணுமா?” என்றாள் சத்யா.

அதுவரை அமைதியாக இருந்த அவன் முகம் இப்போது தீஜ்ஜுவலையாக மாற

“அக்கா………. எனக்கு நான் என்ன செய்றேன்னு தெரியும்… நீ அதுல தலையிடாத…” என்று கர்ஜித்து விட்டு விடுவிடுவென நகர்ந்து செல்பவனை கண்டு விழி விரித்தாள் சத்யா.

“என்னமோப் போ. ஆனா எனக்குத் தேவை அந்த கண்ணனோட அழிவு மட்டும் தான்” என்ற தமக்கையின் குரல் அவனது முதுகுப்புறம் ஒலிக்க

‘நிச்சயமா நடக்கும்க்கா. காத்திரு’ என்று தனக்குள்ளே கூறிக் கொண்டு மாடியேறினான்.

தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த தடைகளை நம் மின்சாரப் பாவை எவ்வாறு தகர்த்தெறிவாள்????


Post a Comment

0 Comments