05. மின்சாரப் பாவை

 




மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

வைய வாழ்வு தன்னிலெந்த

வகையினும் நமக்குள்ளே

தாதரென்ற நிலைமை மாறி

ஆண்களோடு பெண்களும்

சரி நிகர் சமானமாக

வாழ்வமிந்த நாட்டிலே…

-பாரதி

கடவுள் கண்ணனின் பக்தையாக இருந்த கண்மணி, கணவன் கண்ணனின் பக்தையானது விந்தையே. அவனுடன் இருந்த அந்த பத்து நாட்களுமே தான் ஒரு தேவதையாக வாழ்ந்தோம் என்பதைப் போல் உணர்ந்தாள்.

முந்தைய நாள் இரவில் விருந்திற்கு கிளம்பும் போது கூட அவளை தனது அணைப்பிலேயே அழைத்து வந்து கார்க் கதவை திறந்து விட்டு இருக்கைப் பட்டி வரை அணிவித்திருக்க… அவனது அந்த சிறிய செயல் கூட கண்மணியின் மனதில் இடம் பெற்று நெஞ்சம் நெகிழ்ந்து போய் இருந்தாள்.

இப்போது அந்த எண்ணங்களெல்லாம் கரையைத் தொட்டு செல்லும் ஆழியின் அலைகளைப் போல் அவளது நெஞ்சத்தை அடுக்கடுக்காய் தொட்டுச் செல்ல… தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத ஒரு நிலையில் கட்டிலில் சாய்ந்து கிடந்தாள்.

மூளை விழித்திருந்தாலும், அரை நிதானத்திலே இருந்தாள். கை கால்கள் கணத்துப் போனது போல் தோன்றியது. கண்களை திறக்க முயல… அது முடியாமல் கண்மணிகளை தொடர்ந்து உருட்டிக் கொண்டிருந்தாள்.

முந்தைய நாள் உடலில் ஏறியிருந்த மயக்க மருந்து இன்னும் தனது மிச்ச சொச்ச வேலைகளைக் காட்டிக் கொண்டிருந்தது.

அதே வேளையில் அறைக் கதவு திறக்கப்படுவதும் அதையடுத்து உள்ளே ஆள் நுழைவதையும் அரவத்தினால் உணர்ந்து கொண்டாள்.

‘போச்சு… அவன் தான் திரும்ப வரானா? அவனை எதிர்த்து நிற்கவாவது வலு வேணும்னு தான் அந்த சாப்பாட்டை சாப்பிட்டேன். ஆனாலும் என் நிலைமை இப்படி ஆகிருச்சே!

சாயந்திரம் சாப்பிட்டுட்டு அந்த ஜன்னல் ஓரம் போய் நிற்குறப்போ நல்லாத் தானே இருந்தேன். ஆனா அதுக்கப்பறம் தான் லேசா தலை சுத்த ஆரம்பிச்சது.

ஒரு வேளை இவன் சாப்பாட்டுல எதையும் கலந்திருப்பானோ? இறைவா! ஏற்கனவே என் பக்கம் அவனோட கையைக் கொண்டு வந்தப்போ நான் தடுத்திட்டேன். இப்போ நடக்குறது தெரிஞ்சும் என்னால தடுக்க முடியாத நிலைமையில இருக்கேனே! கண்ணா… கௌரவர்கள் சபையில திரௌபதி மானபங்க பட்டப்போ ஆடை கொடுத்து அவளோட மானத்தை காத்தியே! என் மானத்தைக் காக்க என்ன பண்ணப் போற?’

தன் மனம் போன போக்கில் அவள் பிதற்றிக் கொண்டிருக்க…

அறையின் மின் விளக்கு பளிச்சென எரிவதை கண்கள் மூடியிருந்த போதும் லேசாக உணர முடிந்தது.

அவளருகே ஆள் வந்து நிற்பதை வாசனையால் உணர முடிந்தது. பயத்தில் மேலும் உடல் வெடவெடக்க… “நோஓஓஓ” என்று அலறி விட்டாள்.

உடல் தூக்கிப் போட்டது.

“மிஸ் நீங்க பயப்படாதீங்க. காம் டவுன். நான் ஒரு டாக்டர். உங்களை பரிசோதிக்க வந்திருக்கேன். அதனால ரிலாக்ஸ்ஸா இருங்க” என்று அவளது மணிக்கட்டை பிடித்தபடி அந்த பெண் மருத்துவர் பேசவும் அவளது நடுக்கம் சற்று குறைந்தது.

அவளருகே அமர்ந்து தலையை கோதி இயல்பாக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அவள் சற்று இயல்பாவதை உணர்ந்தவர் ஒரு ஊசியை எடுத்து அவளது இடது கையில் செலுத்தினார்.

நெற்றியை லேசாக சுருக்கினாள். இரண்டு கைகள் அவளது நெற்றியை நீவி விட்டன. மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர், உடன் வந்த அக்கா தம்பி இருவரையும் ஏறிட்டுப் பார்க்க… அவர்களும் மருத்துவரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.

“மிஸ்டர் கவி! அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. எல்லாப் பொண்ணுங்களும் நினைக்குறது போல எங்க தன்னோட பெண்மை பறிக்கப்பட்டுருமோனு நினைச்சு நடுங்குறாங்க. அவங்களோட ஃபீலிங்ஸ் என்னனு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். பிறகு உங்க விருப்பம்” என்றவர் தனது காரை நோக்கிச் செல்ல…

“ஏன் கவி இவ இப்படியே இருந்தா நாம நெனச்சதை எல்லாம் நடத்த முடியாது போலவேடா” என சத்யா நிராசையாக கூறவும்…

“அக்கா… முடியாதுனு நினைச்சா கண்டிப்பா முடியாது. அவளை எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவேத் தெரியும். இவளை வச்சு அந்தக் கண்ணனை ஒரு வழியாக்கல. நான் கவியே இல்லை” என தனது தொடையில் கையால் தட்டி சூளுரைத்தான்.

அதே சமயம்,

“கண்மணி எங்க இருக்கானு கண்டுபிடிக்க முடிஞ்சதா? அந்தக் கார் நம்பர் சிசிடிவில தெரிஞ்சதா?” என்று தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரணையை முடுக்கி விட்டிருந்த கண்ணன் அலைபேசியில் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“வாட்? அந்தக் கார் நம்பர் ஃபேக்கா? ஷிட்… அன்னைக்கு அந்த புகையில நானும் சேர்ந்து மயங்கிட்டேன். இல்லைனா இந்நேரம் உங்க கிட்ட உதவி கேட்டு நின்னுருக்க மாட்டேன்” என தன் தலையிலிருந்த சிறிய கட்டை நீவியபடி, எதிர்முனையில் இருந்தவரை கடிந்து கொண்டிருந்தான். எதிரே என்ன சொல்லப்பட்டதோ…

“என்ன போலீஸ்கிட்ட போகனுமா? மலேசியன் போலீஸைப் பத்தி உனக்குத் தெரியாதா? என்னோட விசா முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது. இன்னும் ரெண்டு நாள்ல ரின்யூவல் பண்ணிக்கலாம்னு இருந்த நிலையில இப்படி ஆகிருச்சு. இப்ப நா போய் கம்ப்ளயின்ட் கொடுக்கப் போனா… என்னையப் பிடிச்சு உள்ள போட்டுருவாங்க” என கத்தியபடி அலைபேசியை அணைத்துத் தூக்கி எறிந்தான்.

“ஷிட்… இது யாரோட வேலையா இருக்கும்? என்னை விட்டுட்டு கண்மணியை மட்டும் ஏன் கடத்தியிருக்காங்க? அவங்களோட குறிக்கோள் என்னவா இருக்கும்? பாவம் அவ என்ன பண்றாளோ?” என பதறிக் கொண்டிருந்தான்.

ஆதவனின் அக்கினிக் கதிர்களைக் கூட நிலமகள் அன்பாய் தன்னுள் அரவணைத்துக் கொள்ள… மெல்ல புலர்ந்தது காலைப் பொழுது.

சுற்றிலும் உயரந்த மரங்களையும், அழகிய பூச்செடிகளையும் கொண்டு வனத்திற்கு நடுவே கான்க்ரீட்டும், மரப்பலகையும் கலந்து கட்டப்பட்டு கம்பீரமாய் எழுந்து நின்றது அந்த பங்களா.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 200 கிமீக்கு அப்பால் அமைந்துள்ள பேராக் மாநிலத்தின் தெற்கே புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீடு அது.

குட்டி பங்களா என்று கூட சொல்லலாம். கவி மற்றும் சத்யாவின் பெற்றோரால் கட்டப்பட்ட வீடு அது. கிட்டதட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட அறைகளை தரை தளத்திலும், பத்து அறைகளை முதல் தளத்திலும் கொண்டு நிமிர்ந்து நின்றது.

வீட்டைச் சுற்றி சில, பல பாமாயில் மரங்களும்… தென்னை, மா போன்ற மரங்களும் அடர்த்தியாக நின்றன. வாயில் கதவு ஏழடி உயரத்தில் இருந்தது. அந்த இரும்புக் கதவிலிருந்து உள்ளே வர பத்து நிமிடங்களாகும். வீட்டைச் சுற்றி பெரிய காம்பவுண்ட் சுவரும், உட்புறமாக வீட்டை சுற்றி வர வசதியாக சிமெண்ட் தளமும், இடதுபுறம் ஒரு நீச்சல் குளமும், வலதுபுறம் கார் தரிப்பிடத்தையும் கொண்டு கனக்கச்சிதமாக அமைந்திருந்த அந்த வீட்டில், அந்தக் காலைப் பொழுதில்…

 தனது காலை ஓட்டத்தை தொடங்கியிருந்தான் கவி என்று அழைக்கப்படும் சத்யாவின் தம்பி. முழுப்பெயர் என்ன என்பது முக்கால்வாசி பேருக்குத் தெரியாது. அவனிடம் வேலை பார்ப்பவர்களுக்கு ‘பாஸ்'. தமக்கைக்கு செல்லமாக கவி.

மலேசியாவில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவன் சில, பல ஏற்றுமதி தொழில்களை செய்து வருகிறான். இவையெல்லாம் சைடு பிசினஸ் தான். முக்கியத் தொழிலே வேறு.

ஆறடி உயரத்தில், கட்டுக்கோப்பான உடலமைப்புடன் மாநிற அழகனாக இருந்தாலும் கருணையையும் மென்மையையும் இவனிடம் எதிர்பார்க்கவே முடியாது. மிகுந்த பிடிவாதக்காரன். தனது தேவைகளை முடித்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவன். இவனது குணம் என்ன என்பதை போகப்போக தெரிந்து கொள்ளலாம்.

இரவு செலுத்தப்பட்ட ஊசியின் விளைவால் நன்கு தூங்கிய கண்மணி, பொழுது புலர்ந்த வேளையில் மெதுவாக எழுந்தாள். முந்தைய நாளைப் போல் அறையில் இருள் இல்லை. முழு வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்கு ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.

நேற்று போல் பதறி துடித்தெல்லாம் அவள் எழவில்லை. மெதுவாக எழுந்து தனது ஊன்றுகோலின் உதவியுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டவள் அறைக் கதவருகே வந்தாள்.

உற்று பார்த்த போது கதவு தாழிடாமல் இருந்ததை கவனித்தாள். ஒரு புறம் வியப்பாக இருந்தாலும் மறுபுறம் மனம் ‘எச்சரிக்கையாக இரு' என விளித்தது.

மெல்லக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அது நீண்ட வராண்டாவைக் கொண்ட மாடிப்பகுதி என அறிந்து கொண்டவள் மெல்ல ஊன்று கோலின் உதவியுடன் நடந்து கட்டை சுவற்றை அடைந்தாள்.

முன்மாலைப் பொழுது பார்த்த வெளிப்புறக் காட்சிகள் இந்தக் காலைப் பொழுதில் மேலும் தெளிவாகவும் ரம்மியமாகவும் தெரிந்தது.

சற்றே குனிந்து பார்க்க… கீழே ஓடிக் கொண்டிருந்த கவியின் பக்கவாட்டுத் தோற்றம் கண்ணில் பட்ட மறுநொடி அந்த நெடிய உருவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டது அவள் மனம்.

‘இவன் தான் என்னை இங்க கடத்திட்டு வந்ததா? நேத்து சாயந்திரமும் நைட்டும் நா இருந்த ரூம்க்கு வந்தவனா?’ என்று எண்ணிய விழிகள் வெஞ்சினத்தைக் கக்கியது.

‘என்னைக் கடத்திட்டு வந்து நீ பெரிய தப்பு பண்ணிட்ட. நேத்து நா இருந்த மனநிலையிலையும், உடல்நிலையிலையும் ரொம்பவே சோர்ந்து பலகீனமா ஆகிட்டேன். ஆனா, இனிமே நா அப்படி இருக்க மாட்டேன். என் வலு உள்ள வரைக்கும் போராடுவேன்.

மொழி தெரியாத ஊர், முன்ன பின்ன வராத இடம்னா நா பயந்துருவேனா? நா தமிழச்சிடா. எனக்கும் வீரம் இருக்கு. என் மானத்தை காப்பாத்திக்க என்ன பண்றேன் பாரு. அமைதியா இருந்து தான் உன்னையத் தாக்கனும்.

நா உடல் பலகீனமானவ தான். ஆனா, மனசு பலகீனமானவ இல்லை. என்னையும், என் கணவனையும் உன்னோட பிடியில இருந்து நா விடுவிப்பேன்' என தனக்குத் தானே உறுதியெடுத்துக் கொண்டவள்

யாரோ வரும் அரவம் கேட்கவும் மெல்ல நகர்ந்து அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

இரண்டு நாட்கள் ஒரு பணிப்பெண் வந்து வேளா வேளைக்கு உணவு வைத்து விட்டுச் செல்ல…

மூன்றாவது நாள் மெல்ல கீழிறங்கி செல்ல முயற்சி செய்தாள். கீழேயும் வந்து விட்டாள். நீள் இருக்கையில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்த சத்யா, கண்மணியைக் கண்டு அதிர்ந்து எழுந்து நின்றாள்.

பின் எதுவுமே கவனிக்காதவள் போல தனதறையை நோக்கி சென்று விட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்மணிக்கு மிகுந்த குழப்பமாக இருந்தது.

‘இவளும் இந்தக் கூட்டத்தை சேர்ந்தவ தான் போல' என எண்ணிக் கொண்டவள், வாசலுக்கு வந்தாள். அவளைத் தடுக்க யாருமில்லை.

அன்று மருத்துவர் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு கவி அவளை தடுக்கவில்லை. அவனுக்கு அவனது காரியம் முக்கியமல்லவா?

வெளியே வந்தவள் நீச்சல் குளத்தைப் பார்த்து விட்டு அருகே சென்றாள். குளத்திற்கு அருகாமையில் செல்லும் போது எதிரே வந்து நின்றான் கவி.

தன் முன்னே கைகளை கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நிற்பவனைக் கண்டு உள்ளே சற்று குளிரெடுத்தாலும் பற்றுகோலை பற்றிக் கொண்டு இவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள். முதன் முறையாக அவனது முகத்தை இன்று தெளிவாக பார்த்து விட்டாள்.

“என்ன மேடம்? ரொம்ப குளிர் விட்டுருச்சு போல? வெளில ஜாலியா வாக்கிங் வர அளவுக்கு முன்னேறிட்டிங்க?” என்று எள்ளல் தொனியில் அவன் கேட்க…

இவளும் அவனுக்குக் குறையாத எள்ளல் தொனியில்

“பொம்பளை பொறுக்கிங்க, கடத்தல்காரனுங்க, வீணாப்போனவங்க எல்லாம் ஜாலியா வெளில சுத்துறப்போ… நா ஏன் முடங்கியே கிடக்கனும்?” என நிமிர்ந்து கேட்ட மறுநொடி

கண்களில் சினம் துளிர்க்க, தனது இடது கையால் பலம் கொண்ட மட்டும் இடித்து அவளை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டிருந்தான்.

ஊன்று கோல் நீரில் மிதக்க… தண்ணீரில் முங்கி முங்கி தத்தளித்தவள், மூச்சிற்கு சிரமப்பட்டாள். நீச்சல் பற்றி அறியாதவள், என்ன செய்வதென்று தெரியாமல் உயிருக்குப் போராட…

வெளியே நின்றவனின் கேலிச் சிரிப்பு அவள் உயிரை வதைத்த மறு நொடி மிகுந்த வைராக்கியத்துடன்… தனது கை, கால்களை அசைத்து, அசைத்து சற்று நீந்தியவள், நீரில் மிதந்த காற்றடைத்த வளையம் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு மூச்சிரைத்தாள்.

வளையத்தின் உதவியுடன் ஊன்று கோலை எடுத்து வெளியே போட்டவள், மெல்ல நீந்தி படியருகே வந்து, படியை பற்றிக் கொண்டு மேலேறினாள்.

அவள் முறைத்துக் கொண்டே வருவதைக் கண்டும் காணாமல் தனது தோள்களை குலுக்கியபடி அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

கண்மணிக்கு கோபம் எக்கு தப்பாக வந்தது. அவளுக்கு இந்நேரம் வேகமாக நடக்கும் திறன் இருந்திருந்தால், அவனை ஏதாவது செய்திருப்பாள். நடந்ததை மாடியிலிருந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சத்யா.

மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. ஈர உடையுடன் நிற்பதை தொட்டுப் பார்த்து கூதல் காற்று மேலும் அவளை சோதித்தது.

 மாற்றுடையின்றி மாடியறைக்கு வந்தவள், ‘இன்று இரவு முழுவதும் இதே உடையுடன் இருக்க வேண்டுமா?’ என அஞ்சி நின்ற போது பணிப்பெண் ஒருத்தி வந்து மாற்றுடை கொடுத்து விட்டுச் சென்றாள்.

அதன் பிறகு அவனை சந்திக்கும் இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதாவது இது போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க…

‘இந்த வீட்டை விட்டு தப்பிச் சென்றால் என்ன?’ என்று அவள் யோசிக்கும் போதே கீழே ஒரு பணியாளின் குரல் கேட்டது.

“பாஸ் பின் பக்க கேட்ல இருக்க சிசிடிவி நேத்து நைட்ல இருந்து வேலை செய்யலை” என ஆங்கிலத்தில் கூறியதை கேட்டுக் கொண்டவள், தனக்குள்ளே ஒரு திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாள்.

அன்று மாலைப் பொழுதிலே பின் பகுதியை மாடியிலிருந்தே நோட்டம் விட்டவள், ‘எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சிரனும்' என முட்டாள் தனமாக திட்டம் தீட்டினாள்.

அன்று இரவு எட்டு மணி போல தன் அறைக்கு அருகே இருந்த பின் வாசல்படி வழியாக மெல்ல இறங்கி அவள் வரும் போது…

கன்று குட்டிகளைப் போல் இரண்டு நாய்கள் அவளை சூழ்ந்து கொள்ள

“ஐயோ அம்மா…” என பயத்தில் ஊன்றுகோலை தவற விட்டவள்,

 பிடிமானமின்றி கீழே விழுந்து விட அந்த இரண்டு நாய்களும் அவளைக் கடித்துக் குதற தயாராய் இருந்தன. குரைத்துக் கொண்டே ஒரு நாய் அவளது முகத்தருகே வர… மற்றொரு நாய் அவளது காலருகே நெருங்கி வந்தது.

வந்த வேகம் தான் தெரிந்தது. எப்போது அவளைக் கடித்தது. எப்போது மூர்ச்சையானாள் என அவளுக்கேத் தெரியவில்லை.

கண் விழிக்கும் போது அறையிலிருந்த கட்டிலில் அவள் படுத்திருக்க… உடலில் இரண்டு, மூன்று இடங்களில் பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

எதிரே அவளது வில்லனும், அருகே அவனது அக்காவும் இவளையே பார்த்தபடி நின்று கொண்டிருக்க… சினத்தில் கைகளை முறுக்க… வலி உயிர் போனது.

“இங்கப் பாரு. நாங்க சொன்னதை செஞ்சனா உன்னை நாங்க விட்டுருவோம்” என டீல் பேசிய சத்யா, சில விஷயங்கைக் கூற…

“நோ… என்னால முடியாது. என் உயிரேப் போனாலும் நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என அவள் அலறி மறுக்க…

“அப்போ நீ இந்த நரகத்திலே கிடக்க வேண்டியது தான். வாக்கா போகலாம்” என தன் அக்காளை அழைத்துக் கொண்டு கீழிறங்கினான் கவி.

“என்னடா நாம சொல்ற எதையுமே கேட்க மாட்டேங்குறா? இவ நம்ம திட்டத்துக்கு ஒத்து வரமாட்டா” என சத்யா சலித்துக் கொள்ள

“அவளுக்கு வேற வழியே இல்லை. ரெண்டு நாள்ல அவ நம்ம வழிக்கு வந்துருவா” என்றான்.

ஆனால், இவர்களது எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டி,

தப்பிக்க முயற்சி செய்து அவன் கையாலே அறை வாங்கிக் கொண்டாள் கண்மணி.

வலி தாங்கும் பாறையது சிற்பங்களாகுமா??


Post a Comment

0 Comments