06. மின்சாரப் பாவை

 


நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ!

- பாரதி

கன்னத்தில் பட்ட கவியின் கைரேகளை தொட்டுப் பார்த்தவளின் கண்கள் துளியும் ஒரு சொட்டு நீரை சிந்தவில்லை. மாறாக அரக்கனை எரித்த துர்க்கா தேவியைப் போல் பார்வையால் அவனை எரித்தபடி நின்றிருந்தாள் கண்மணி.

சற்று நேரத்திற்கு முன் அவள் தப்ப எண்ணி, நாய்களிடம் பட்ட காயங்களையும் பொருட்படுத்தாது மெல்ல ஊன்றுகோல் துணையுடன் தப்பிச் செல்ல எத்தனித்த வேளையில் வசமாக துப்பாக்கி ஏந்திய கருப்புப் பூனைகளின் கைகளில் சிக்கிக் கொண்டாள்.

மெத்த தின்று பெருத்திருந்த கருப்பு பூனைகள் இருவர் ஆளுக்கு ஒரு புறமாக கண்மணியை தூக்கி வந்தனர்.

அவள் தப்பிக்க நினைத்து தவ்வி ஓடும் ஒவ்வொரு முறையும் வகையாக பிடிபட்டு விடுகிறாள். சென்ற முறை நாய். இந்த முறை இந்த கருப்புப் பூனைகள்.

“என்னடி உன்னால இங்க இருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியும்னு நினைச்சியா? இது இந்தக் கவியோட மாளிகை. சுத்தி நல்லா உத்துப்பாரு” என தன் ஆட்காட்டி விரலால் சுற்றிவது போல் காட்டியவன்,

“எல்லா இடத்துலயும் சிசிடிவி பொருத்தியிருக்கு லூசுப் பொண்ணே! பின்பக்கம் இருக்குற ஒரு கேமிரா உடைஞ்சு பொயிட்டா எளிமையா தப்பிச்சிடலாம்னு கனவு கண்டியோ?

போனவாரம் அந்தக் கேமிரா உடைஞ்சிருச்சுனு கேள்விப்பட்டு தானே தப்பிக்க முயற்சி பண்ணுன? அந்தக் கேமராவை உடைச்சதும் நான் தான். உனக்கு கேக்குற மாதிரி சொல்ல சொன்னதும் நான் தான்” என்றதும் பாலைவனமாய் மாறியிருந்த அவளது தொண்டைக்குழி, பொய்கையைத் தேடி ஏறி இறங்கியது.

“நல்லாத் தெரிஞ்சுக்கோ. அன்னிக்கு நைட் நா சொன்ன விசயத்துக்கு ஒத்து வந்தன்னா உனக்கு நல்லது. இல்லைனா!!” என்று அவன் இழுக்கும் போதே…

“ஒத்துக்கலைனா என்னடா பண்ணுவ?” என்றாள் ஒற்றைக் கை ஊன்று கோலை பற்றிக் கொண்டிருக்க நிமிர்ந்து நின்றபடி.

“என்னடி ரொம்பத் திமிரா? நானும் கொஞ்ச நாளா இருந்து ரொம்ப பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்” என்று அவளருகே நெருங்குகையில்…

“கவி…” என்று சத்யா அதட்டிய அதே வேளையில் தனது ஊன்று கோலால் அவனைத் தள்ளிவிட்டிருந்தாள் கண்மணி.

“ஏய்..” என்று சத்யா அதிர்ச்சியுடன் ஓடி வர… ‘வேண்டாம்' என்பது போல் கையசைத்தான் கவி.

தடுமாறி தள்ளி நின்றவனை கூர்ந்து நோக்கியவள், “நொண்டிச்சி தானே! என்ன பண்ணிருவானு நினைச்சியா? அடிச்சி, மிரட்டுனா அடிபணிஞ்சிருவேனு நினைக்காத. ஒரு காலும் நீ நினைக்குறது நடக்காது” என்று அவள் திரும்ப… கவி ஒரு விசமப் புன்னகையை உதிர்த்தான்.

திரும்பியவளை அலேக்காக இருவர் வற்புறுத்தி, தூக்கிக் கொண்டு போய் அறையில் அடைத்து வைத்தனர்.

கடந்த இரு முறையும் இதே போல அடைத்து வைத்து விட்டு மறுநாள் காலையில் வழக்கம் போல திறந்து விட அவளுக்குள் தன் நிலையை குறித்து அழுகை வந்தது.

‘இந்த நொண்டியால தப்பிச்சி போக முடியாதுன்ற தைரியத்தில தான மறுபடியும் மறுபடியும் திறந்து விடுறாங்க… எல்லாம் என்னை படைச்ச இறைவனை சொல்லனும்…’

அழுது கரைந்து முடித்தாலும், அவளுக்குள் இருந்த துணிச்சல் சற்று திடமாகவே இருந்தது.

‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா’

என்று அவள் படித்த பாரதியின் வரிகள் அவளது வைராக்கியத்திற்கு உரம் சேர்த்தது.

நாய் கடித்து குதறிய காயங்களின் வலியும், கவி கடித்து குதறும் வார்த்தைகளின் வலியும் ஒன்று சேர்ந்து அவளுக்குள் கனலை மூட்டியது.

‘அந்த ஐந்தறிவு நாய்களுக்கும், இந்த ஆறறிவு நாய்க்கும் சேர்த்து கூடிய சீக்கிரமே பாடம் புகட்டுவேன்' என கருவிக் கொண்டாள்.

அன்றொரு நாள் மதிய வேளை எப்போதும் போல மனதின் எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தவள், வெட்ட வெளியை வெறித்தபடி அறையின் வாசலில் கட்டைச் சுவற்றைப் பற்றிய படி நின்று கொண்டிருந்தாள்.

வாயில் காவலாளி முன் பக்க கதவைத் திறந்து விட… சீறியபடி வந்து நின்றது ஒரு நவீன ரக கார். அதிலிருந்து ஒரு பெண்ணை மூவர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல…

“என்னை விடுங்கடா பொறுக்கி பசங்களா” என அந்தப் பெண் கத்துவது கண்மணியின் செவிப்பறையை தெளிவாக தீண்டிச் சென்றது.

‘நறநறவென’ பற்களை கடித்தவள் கெந்தி, கெந்தி கீழே சென்ற போது கவி நேரெதிராக வந்து கொண்டிருந்தான்.

“நீயெல்லாம் ஒரு மனுசனா? பொண்ணுங்களை கடத்திட்டு வந்து மிரட்டி இப்படி தொழில் பண்றதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்” என்று காட்டமாக கத்த… அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“கண்மணிஈஈஈ… போதும் நிறுத்து” என்று சத்யா அவளைத் தடுக்க

“வாங்க மேடம் வாங்க. உங்களைத் தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னோரு பொண்ணுக்கு தீங்கு நினைக்கிறீங்களே? நீங்கலாம் ஒரு பொண்ணா?

இந்த மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கி எனக்கு தம்பியா இருந்திருந்தா இந்நேரம் அவனைக் கொன்னுட்டு நா ஜெயிலுக்கு போயிருப்பேன்.

இன்னைக்கு இவன் கூட துணையா நிக்குறீங்களே? உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குனு கேள்விப்பட்டேன். நாளைக்கே அவளையும் இந்த ஆள் பணத்துக்காக வித்துட மாட்டான்னு என்ன நிச்சயம்?” என கொதிப்புடன் வார்த்தைகளை முடிக்கும் முன்னரே… சத்யாவின் கரங்கள் இடியென கண்மணியின் இரண்டு கன்னங்களிலும் பதிந்தது.

கண்கள் கலங்க, நாசி விடைக்க சத்யாவை ஏறிட்டவள்,

 “ஹ்ம்… தமிழ்நாட்டுல இருந்து ஒரு அப்பாவி நொண்டி வருவா. அவளை அடிச்சு பழகிக்கலாம்னு அக்காவும், தம்பியும் காத்திருந்திங்க போல” என எள்ளலாக பேசியவள்,

“நீங்க எத்தனை தடவை என்னை அடிச்சாலும் நா போராடுறதை விடமாட்டேன்” என தளர்ந்த நடையுடன் ஊன்றுகோலை பற்றிக் கொண்டு வெளியே சென்றாள்.

ஆம். அந்த வீட்டில் தான் அவள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாமே. வாயில் கதவிற்கு அப்பால் செல்வதைத் தவிர.

இந்த பரந்த வீடும், நீண்ட மதில் சுவர்களும், உயர்ந்த மரங்களும் ஏனோ அவளுக்கு அசோகவனத்தையும், துப்பாக்கி ஏந்திய கருப்புப் பூனைகள் அவள் பார்வைக்கு அரக்கர்களாகவும் தோன்றினர்.

‘அக்கா, தம்பி இருவரும் ராவணனுக்கும், சூர்ப்பனைக்கும் கனக்கச்சிதமாக பொருந்துவர்' என தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

இரண்டு நாட்களாக கண்மணி சாப்பிடவில்லை என்று பணிப்பெண் மூலம் அறிந்த சத்யா. உணவுத்தட்டை எடுத்துக் கொண்டு தானே மாடியேறினாள்.

இரண்டு நாட்களாக அறையிலேயே அடைந்து கிடந்த கண்மணி, கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தாள். சத்யா நிற்கவும் அவளை வெறுப்புடன் பார்த்தாள்.

தன் மேல் உள்ள கோபத்தை அவளது முகத்தில் கண்ட சத்யா,

‘அந்த கோபம் தன்னை ஒன்றும் செய்யப் போவதில்லை' என்பதாய் அமைதியாக அவளுக்கு உணவை எடுத்து வைத்து விட்டு

“சாப்பிடு கண்மணி..” என்றாள்.

சத்யா எதுவும் நடவாதது போல சாப்பாட்டை எடுத்து வைக்க கோபம் மூக்கின் நுனி வரை வர…

“எனக்குத் தேவையில்லை…” என்று வெடுக்கென்று கண்மணி கூற அதற்கும் சத்யா,

“சரி உன் இஷ்டம்..” என்று அமைதியாக வெளியேறினாள்.

“என்ன எப்பவும் போல வயித்துல பசி எடுத்ததும் சாப்பிட்டு முடிச்சுறுவேன்னு கணக்கு பண்றிங்களா?? உங்க திட்டம் எல்லாம் என் கிட்ட பலிக்காது…” என்றபடி போர்வையில் தன்னை முழுதும் மறைத்து கொண்டு படுத்து விட்டாள்.

அந்த வேளையும் சரி அடுத்தடுத்து வந்த மூன்று வேலைகளும் உணவின் சிறு பருக்கை கூட பல்லில் படாமல் போராட்டம் செய்தாள்.

முதலில் அனைவரையும் போல பெரிதாக எடுத்து கொள்ளாத சத்யா முழுதாய் நான்கு நாட்கள் அவள் சாப்பிடாமல் இருக்கவே கவியை தேடி வந்தாள்.

“கவி…” மெல்ல அழைத்தாள்.

“சொல்லுக்கா..” கணினியின் திரையை விட்டும் பார்வையை எடுக்காமல் அவன் கேட்க…

“அந்த கண்மணி ரெண்டு நாளா எதுமே சாப்பிடல. சாப்பிட முடியாதுனு போராட்டாம் பண்றா” என்ற தமக்கையின் செய்திக்கு,

“ஓஹ்..” என்ற முனகல் மட்டுமே அவனிடம்.

“இப்போ என்ன பண்றது கவி?” என்று சத்யா கேட்க,

திரையில் இருந்து பார்வையை பிரித்து அவளை ஏறிட்டவன்,

“சாப்பாட்டோட சேர்த்து கொடுக்குறல்ல தண்ணீ… அதை நிறுத்திடு…” என்றான்.

“என்ன??” அவள் புரியாமல் பார்க்க…

“தினமும் நீ கொடுத்தனுப்புற சாப்பாட்டை விட்டுட்டு தண்ணியை மட்டும் எடுத்துக்குறா… அவ நினைச்சுட்டு இருக்கா… வயித்து பசிக்காக வெறும் தண்ணீ போதும்னு… அதை கொடுத்து விடாம வெறும் சாப்பாட்டு மட்டும் கொடுத்தனுப்பு..” என்று அவன் கூற

“கவி பாவம்டா அந்த பொண்ணு…” அவள் ஆரம்பிக்கும் முன்னே அவன் முறைத்த முறைப்பில் வேறு வழியின்றி அமைதியாக நகர்ந்து சென்றாள்.

வழக்கம் போலவே வந்த உணவை கண்ணெடுத்தும் பாராமல் இருந்தவள் அவன் கணித்து வைத்திருந்தது போலவே வயிற்றில் பசியெடுக்கும் சத்தம் கேட்கும் போது சுற்றி இருந்தவற்றில் தண்ணீர் பாட்டிலை தேடினாள்.

இரண்டு நாட்கள் வெறும் நீரை மட்டுமே எடுத்து கொண்ட வயிற்றுக்கு இன்று அது கூட இல்லாமல் போக சர்க்கரை ஆலையில் கரும்பைப் பிழியும் இயந்திரம் போல ‘கடகடவென’ சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தது.

கொதிக்கும் வயிற்றுக்கு தண்ணீர் விட்டு ஆற்றலாம் என்றால் அதையும் காணாமல் போக ஓரளவுக்கு கண்டு கொண்டாள்.

‘தண்ணீ இல்லனா சாப்பாட்டை சாப்பிடுருவேன்னு தப்பு கணக்கு போட்டு வச்சு இருக்கீங்களா எல்லாரும்… உங்க கிட்டயெல்லாம் கத்தி கதறி அழுது எந்த பிரயோஜனமும் இல்ல… இனிமே இது தான் என் ஆயுதம்…” என்று மனதில் கொண்ட வைராக்கியத்தை வயிற்றில் நிரப்பி அமைதியாக போய் அமர்ந்து கொண்டாள்.

‘இவங்களுக்கு என்னோட உயிர் ரொம்பவே முக்கியம் போல… அதான் தவறாம சாப்பாடு அனுப்புறாங்க… இவங்க குறிக்கோள் நிறைவேறுகிற வரை எனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க... ஒருக்காலும் அதுக்கு இடம் கொடுக்க கூடாது… சாப்பிடாம செத்தே போனாலும் சரி.. இவங்க கேட்டதுக்கு நாம துணையா இருக்க கூடாது..’ என்று மனதோடு ஆயிரம் கதை பேசி விட்டு திடகாத்திரமாக இருந்தாள்.

தண்ணீரும் அருந்தாமல் அவள் மேலும் இரண்டு நாட்களை மனம் கொடுத்த தைரியத்தோடு கழிக்க…. அன்றைய நாள் முடிவில் மூர்ச்சையாகியிருந்தாள்.

உடலிலிருந்த நீர்சத்தும் வற்றிவிட்டது. கேமிராவின் மூலம் அவளது நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த சத்யா, அவள் மயக்கமுற்ற மறு நொடி பத்தற்றத்துடன் மருத்துவருக்கு அழைத்து விட்டு மாடியை நோக்கி ஓடினாள்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து ட்ரிப்ஸ் ஏற்றி விட்டு, சத்யாவை கடுமையாக எச்சரித்து விட்டு செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

விசயம் கேள்விப்பட்டு வந்த தம்பியிடம்,

“டேய் கவி இது சரியா வராது. இப்படியே இவ கிடந்தானா சீக்கிரம் போய் சேர்ந்துருவா போல” என்ற அக்காளை முறைத்தவன்,

“அவ்வளவு சீக்கிரம் அவளை நான் சாக விடமாட்டேன். எப்படியும் நம்ம வழிக்கு கொண்டு வந்துருவேன். உன்னால முடியலைனா விலகி இரு” என்று உருமி விட்டுச் சென்றான்.

ஆயிற்று.. இன்றுடன் கண்மணி கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிற்று.

கண்மணியின் உடல் நலம் சற்று முன்னேறி இருந்தது. ஆனால் பழையபடி சாப்பிட மறுத்தவளைப் பார்த்து மீண்டும் தலையை பிய்த்துக் கொண்டது என்னவோ சத்யா தான்.

“கவி திரும்பவும் அந்தப் பொண்ணு சாப்பிடவே மாட்டேங்குறா. இப்படியே போனா அவளோட உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. அவளை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு…” என்று சத்யா மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பிக்க…

“ப்ச்” என்று சலித்துக் கொண்டவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன்

“இப்போ என்னை என்ன செய்ய சொல்றக்கா??” என்று காட்டமாக கேட்டான்.

“நான் வேணும்னா பேசிப் பார்க்கவா?” என்று சத்யா கேட்க

“எப்படி சாப்பிடுமா ராசாத்தி.. கண்மணின்னு கெஞ்ச சாரி… கொஞ்ச போறியா?” என்றான் கோபத்தை அடக்க முயற்சித்த குரலில்.

அவள் அவனை முறைக்க “சரி போ… என்னமோ செய்..” என்றபடி அவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு சூடான சாப்பாட்டோடு கண்மணியின் அறையில் இருந்தாள் சத்யா.

“கண்மணி, ஏன்மா சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குற சாப்பிடு..”

கவி சொன்னது போலவே பவ்யமாக தான் அவளின் குரல் ஒலித்தது.

“எதுக்காக சாப்பிடணும்.. நான் சாப்பிட்டா என்ன? சாப்பிடாம செத்தா உங்களுக்கு என்ன?” காட்டமாக கண்மணி கேட்க…

“இப்படி நீ சாப்பிடாம உடம்பை கெடுத்து கிட்டா மட்டும் இங்கே இருந்து போயிடலாம்னு உனக்கு யார் சொன்னது? நீ சாப்பிட்டாலும் சரி.. சாப்பிடலைனாலும் சரி… உன்னால கவியோட பார்வையிலே இருந்து தப்பிக்க முடியாது… வீணா வம்பு பண்ணாம சாப்பிடு… உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்றாள் சத்யா.

“என்ன நல்லதா? எனக்கு நல்லதா? அதும் நீங்க சொல்றீங்களா? கேக்க நல்ல காமெடியா இருக்கு… சாத்தான் வேதம் ஓதுதுனு சொல்லுவாங்க. இன்னைக்குத் தான் நேர்ல பார்க்குறேன். ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பெண்ணை இப்படி கண் முன்னாடி கட்டி வச்சு சித்ரவதை பண்ணிட்டு இருக்காங்க.. அது உங்க கண்ணுக்கு தெரியல.. நீங்க என் நல்லதுக்கு சொல்றீங்களாமா? இதை நான் நம்பனுமா? உண்மையை சொல்லுங்க. எங்க இவ சாப்பிடாம செத்து பொயிட்டா நம்ம திட்டமெல்லாம் பலிக்காம போயிருமோங்கிற பயத்துல தானே இப்போ பம்முறீங்க. நா செத்தாலும் சாவேனே தவிர ஒரு நாளும் உங்களோட பசிக்கு இரையாக மாட்டேன்” என்று பெண் சிங்கமாக கர்ஜிக்கவும்,

அமைதியாக அவளது கர்ஜனையை கேட்டுக் கொண்டிருந்தவள் நீண்ட பெரு மூச்சொன்றை எடுத்த படி,

“நீ யாரோட பசிக்கும் இரையாக வேணாம். அப்பறம் ஒரு தாயா என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுடும்.

நல்லா யோசிச்சு நா ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். அந்தக் கண்ணன் மேல இருக்கிற வன்மத்துல உன்னைய கொடுமைப்படுத்திப் பார்க்குறது எந்த விதத்துலயும் நியாயமில்லை. நீ இங்க இருந்து தப்பிக்க நானே உனக்கு உதவி பண்றேன்” என்ற சத்யாவை ஏளனமாக பார்த்தவள்,

“அந்த சிசிடிவி காமிராவை உடைச்சு என்னை பரிசோதிச்ச மாதிரி, இது அடுத்த பரிசோதனையா?” என்று கேலியாக சிரித்தாள்.

“நா சொல்றது உண்மையா? பொய்யானு ஒரு வாரத்துல உனக்குப் புரிஞ்சிடும்” என அழுத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சத்யா.

சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, தொழில் விசயமாக கவி வெளியே சென்றிருந்த சமயம் கண்மணியை அழைத்து வந்து தனது காரில் அமர சொன்னாள் சத்யா.

காவலாளிகள் எவ்வளவோ தடுத்தும், அவர்களை எதிர்த்து கண்மணியை அழைத்துக் கொண்டு தானே காரை செலுத்தினாள்.

நான்கரை மணிநேரப் பயணத்திற்கு பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் கண்ணனின் அபார்ட்மெண்ட் இருக்கும் பகுதிக்குள் கார் நுழைந்தது.

குடியிருப்பு வாயிலில் நிறுத்திய சத்யா, ‘போ' என்பதாக தலையசைக்க…

ஆச்சரியமாக அவளை ஏறிட்ட கண்மணி, அவளை கண்ணீர் மல்க கட்டியணைத்து கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

சத்யா அமைதியாக காரைத் திருப்பிக் கொண்டு வீடு திரும்பினாள்.

குடியிருப்பை நிமிர்ந்து பார்த்த கண்மணியின் கண்கள் ‘பொலபொலவென’ கண்ணீரை சொரிந்தது.

பத்து நாட்கள் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பகுதியல்லவா? மெல்ல உள்ளே சென்று மின் தூக்கியினுள் நுழைந்தவளை மின்தூக்கியை இயக்குபவன் ‘எங்கே செல்ல வேண்டும்?’ என்பது போல் பார்க்க… தங்கள் வீடு இருக்கும் தளத்தைக் கூறினாள்.

மின் தூக்கி திறந்த மறு நொடி ஊன்றி, ஊன்றி வேகமாக தனது வீட்டு வாயிலுக்கு சென்றவள் அழைப்பு மணியை அழுத்தி விட்டு பரபரப்புடன் நிற்க…

ஐந்து நிமிடம் கழித்து வந்து கதவைத் திறந்த கண்ணன், வெளியே வேர்த்து விறுவிறுத்து நிற்கும் மனைவியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“கண்ணம்மா” என்று அவளை தாவி அணைத்துக் கொண்டவன், ஆனந்தக் கண்ணீர் வடிக்க… கண்மணியும் அழுதபடி நின்றாள்.

அவளை உள்ளே அழைத்துச் சென்று நீள் இருக்கையில் அமர வைத்தவன், குடிக்க தண்ணீரை கொணர்ந்து கொடுத்தான்.

அவள் அழுகையினூடே ஒவ்வொன்றாக விவரிக்க… அவளது தலைகேசத்தை ஒதுக்கிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னங்க ப்ளீஸ்… நாம நம்ம ஊருக்கே போயிரலாம்ங்க. சாதாரணமா வாழ்ந்தாலும், உயிர் பயம் இல்லாம சந்தோசமா வாழலாம். இப்போ எப்படியோ தப்பிச்சு வந்துட்டேன் ஆனா அவங்க எப்படியும் உங்களை மறுபடியும் ஏதாவது செய்ய இங்க வருவாங்க. தயவுசெஞ்சு வாங்க நாம நம்ம ஊருக்கே போயிரலாம்” என கேவிக்கேவி அழுதாள்.

எதையோ யோசித்தவன், “சரி கண்மணி, இனிமே நாம இங்க இருக்க வேணாம். நம்ம ஊருக்கே போயிரலாம்” என மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்.

பத்து நாட்களுக்குப் பிறகு தாயகம் செல்ல இருவரும் விமான நிலையம் நோக்கி பயணப்பட்டனர்.

சத்யாவின் திடீர் மனமாற்றம் ஏனோ?

கண்டங்களை கடந்து வருவாளா கண்மணி??


Post a Comment

0 Comments