நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
-பாரதி
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு…
“அம்மாஆஆ” என்று அலறி வந்து நிலத்தில் விழுந்த அந்த திடகாத்திரமான வாலிபன், எதிரே மாகாளியாய் நிற்பவளைக் கண்டு தேகம் நடுங்க, எழுந்து நிற்க முயற்சி செய்தான். ஆனால், எழத்தான் முடியவில்லை.
எதிரே நின்றவள் தனது ஊன்றுகோலை அவனது காலின் மேல் வைத்து அழுத்த… வலி தாங்க முடியாமல் மேலும் கத்த ஆரம்பித்தான்.
“ஏன்டா இந்தக் கண்மணி ஸ்டூடன்ஸ் லீடரா இருக்கும் போதே உன்னோட வேலையக் காட்டுறியா? எங்க இப்பக் காட்டுடா பாப்போம் உன் ஆம்பளை வீரத்தை…” என்று பம்மிய படி கைகளை பிசைந்து கொண்டு கண்ணீர் மல்க நின்ற மாணவியைத் தனதருகே அழைத்தாள்.
“வேணாம் கண்மணி ப்ளீஸ் என்னை விட்டுரு நா விளையாட்டுக்குத் தான் பண்ணுனேன். என்னை மன்னிச்சிரு” என்று அவன் கதற
“எதைடா மன்னிக்க சொல்ற? அனுமதியில்லாம ஒரு பொண்ணோட உடலை உரசிட்டுப் போறதை மன்னிக்கனுமா? அதை விளையாட்டுக்கு செஞ்சியா? சட்டக் கல்லூரிக்கு எதுக்குடா நாம படிக்க வந்துருக்கோம்?
நீதி, நேர்மையை காப்பாத்தவும், அயோக்கியர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தானே! ஆனா நீயே அந்த பொறுக்கி வேலையைப் பார்த்தா… வழக்கறிஞர்கள் மேல மக்களோட மதிப்புக் குறைஞ்சு போயிடும்.
ஐயா சகாயம் ஐ.ஏ..எஸ், தலைமை நீதிபதி சதாசிவம் ஐயா மாதிரி நல்ல நீதிமான்கள் படிச்ச கல்லூரியில உன்னை மாதிரி சில கலுசடைகளும் இருக்கிறது பெருத்த அவமானம்டா.
இந்த தடவை அடியோட விட்டேன். அடுத்த முறை உன்னை படிக்கவே விடாம பண்ணிருவேன் ராஸ்கல்” என ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கை செய்து விட்டு நகர்ந்தாள்.
அவள் நகர்ந்து சென்றதும், அதுவரை கூட்டதில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது நண்பர்கள் ஓடி வந்து அவனைத் தூக்கினர்.
“டேய் இந்த கண்மணியோட பிரெண்டு கிட்ட ஏன்டா வம்பு வச்சுகிட்ட… ஏற்கனவே நாங்க வாங்கிக் கட்டிக் கிட்டதே முடியலை அதுக்குள்ள நீயுமா?” என அவன் நண்பர்களில் ஒருவன் தனது வலது கன்னத்தை தடவிக் கொண்டே அவனை அழைத்துச் சென்றான்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் கண்மணி பட்ட வேதனையும், அவமானமும் இன்னும் அவளை நிமிரச் செய்திருந்தது. அவளது வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றியிருந்தது. தனது கொஞ்ச, நஞ்ச பயங்களையும் விடுத்து கயவர்களை களையெடுக்க களமிறங்கினாள் கண்மணி.
தான் பட்ட இன்னல்களை இனி வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள், தனது தடை பட்டு போன கனவாகிய சட்டப் படிப்பை பயில முயற்சிகளை மேற்கொண்டு தற்சமயம் வெற்றிகரமாக படித்தும் வருகிறாள்.
சில, பல காரணங்களால் அவள் மட்டுமே தனித்து தாயகம் திரும்பி வர
‘அப்பாடா ஒரு தொல்லை ஒழிந்தது’ என்று எண்ணியிருந்த அவளது சித்தியும், அப்பத்தாவும் திரும்பி வந்தவளை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல் துரத்தியடித்தனர்.
முன்பே இது போலவெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்திருந்த அவளவன், தனக்கு பரிட்சயமான வழக்கறிஞர் வித்யாவின் வீட்டில் அவளைத் தங்க வைத்ததும் அல்லாமல், அவள் சட்டம் படிக்கவும் ஏற்பாடுகளை செய்திருந்தான். மாத மாதம் அவள் தடுத்தும் கேட்காமல் அவளது கல்விச் செலவுகளையும் அவனே செய்து வருகிறான்.
அன்று விமான நிலையத்தில் தன்னவளின் மனநிலையை புரிந்து கொண்டு அவளை தனியே செல்ல அனுமதித்தவன் ஏனோ, அவளில்லா நொடிகளையும் நரகமாக கழித்து வருகிறான்.
தாய் மற்றும் அப்பத்தாவின் செய்கையால் வெறுப்படைந்த அபி, தந்தையை காணக் கூடாததை கண்டது போல் பார்த்தாள்.
வீட்டில் எவ்வளவு மறுத்தும், தனது இளங்கலை படிப்பை முடித்துக் கொண்டு, கண்மணியைப் பற்றி விசாரித்து, படித்துக் கொண்டே வேலை செய்யலாம் என்று சென்னைக்கு வந்து விட்டாள்.
“ஏய் அபி! நீ எதுக்குடி இங்க தனியா வந்த? நா ஒருத்தி இப்படி நாதியில்லாம கெடக்குறது போதாதா? நீ ஏன் எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நிக்குற?” என்று தங்கையை கண்மணி ஆதங்கத்துடன் கடிந்து கொள்ள
“அக்கா, அங்க இருக்குற எல்லாருமே சுயநலப் பிசாசுங்க. அம்மாவுக்கும், அப்பத்தாவுக்கும் பணத்து மேல மயக்கம்னா… நம்மள பெத்தாரே அவருக்கு குடிபோதை மேல மயக்கம்… இவங்கல்லாம் தெளிஞ்சு வர இந்த ஜென்மம் பத்தாது. அதான் நானே அவங்களை ஒதுக்கி வச்சிட்டு வந்துட்டேன்” என சினத்துடன் மொழிந்தவள்,
“இப்படியெல்லாம் பேசக்கூடாது அபி..” கண்மணி எடுத்து கூற அவளை தடுத்தவள்,
“இல்லக்கா.. எனக்காக.. என்னோட நல்லத்துக்காகனு உன்னை ரொம்ப கொடுமை படுத்திட்டாங்க.. தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்க வேணாம்.. அதான் அவங்கள விட்டு தள்ளி வந்துட்டேன். இனியாவது திருந்துறாங்களா பாப்போம்.. இல்ல என் சாவுக்கு அப்புறமா திருந்துவாங்களோ என்னவோ?” என்று கூற அவசரமாக அவள் வாயை அடைத்தாள் கண்மணி.
“என்ன அபி நீ? இப்படியெல்லாம் பேசுற?” கண்கள் குளம் கட்ட கூறியவளை அணைத்து கொண்ட அபி,
“தீன்னு சொன்னா நாக்கு சுட்டுருமா அக்கா? அது போல தான்… அதிருக்கட்டும் உனக்கு என்னக்கா ஆச்சு? ஏன் நீ மட்டும் தனியா வந்துருக்க? என்ன ஆச்சு? மாமா எங்க?” என்று அடுக்கடுக்காக விசாரித்தவளை சமாதானப்படுத்தியவள்,
கண்ணனுடன் மலேசியா சென்றது முதல் கடைசியாக விமான நிலைத்தில் நடந்தது வரை அனைத்தையும் சொல்லி முடிக்க…
“அக்கா அந்த அயோக்கிய ராஸ்கலை சும்மா விடக் கூடாதுக்கா. அவனை தூக்குல போடனும். நா மட்டும் அவனைப் பார்த்தேன். செருப்பாலே அடிப்பேன். நீ எடுத்தது நல்ல முடிவு தான்க்கா. உன்னை மாதிரி வேற பொண்ணுங்க பாதிக்கப்பட கூடாதுக்கா. நானும் உனக்குத் துணையா இருப்பேன்” என்றவளை கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் கண்மணி.
நாட்கள் செல்ல…
அபி ஒரு தனியார் கணக்கு தணிக்கை நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே தனது மேல்படிப்பைத் தொடர்ந்து வருகிறாள்.
கண்மணி எவ்வளோ சொல்லியும் தனியார் விடுதியில் தங்கி வேலையும் செய்து படித்து வருகிறாள். வித்யாவின் அன்பால் கவரப்பட்டவள் அடிக்கடி அவர்களை சென்று பார்த்து வருவாள்.
வித்யாவின் மகன் ஜீவாவும் தனது சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு, ஒரு பெரிய வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று கொண்டிருக்கிறான்.
கண்மணி ஆண்களை விட்டு எட்டி நின்றாலும், ஜீவாவுடனான அவளது நட்பு அதிசயம் தான். கண்மணியின் சின்ன வேலைகளில் இருந்து கல்லூரி செயல்முறை வரைக்கும் உற்ற நண்பனாக துணை நிற்கிறான்.
தாயின் அன்பை அதிகமாக தேடிய கண்மணிக்கு வித்யா தாய்க்கு தாயாகவும் வழிகாட்ட நல்ல தந்தையாகவும் இருந்தார்.
ஆரம்பத்தில் 'மேடம்' என்று அவள் அழைக்கும் போதெல்லாம்...
"அம்மானு கூப்பிடு கண்மணி" என்பார்.
'அம்மா' என்ற சொல் மட்டுமே அவளுக்குத் தெரியும். அன்னையைப் பார்த்ததில்லை. அன்னை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய சித்தியோ அரக்கியாகிப் போனதால் அந்த வார்த்தையையே வெறுத்தவள், வித்யாவை “ஆன்ட்டி” என்றே அழைத்தாள்.
“என்ன கண்மணி? சாப்பாட்டை சாப்பிடாம அளந்துட்டு இருக்க என்ன ஆச்சு?” என்று நெடு நேரமாக உணவை கையில் வைத்து கொண்டு எதையோ யோசித்து கொண்டிருப்பவளை போல அமர்ந்து இருந்த கண்மணியை கண்டு கேட்டார் வித்யா.
“ஹான்.. ஒன்னுமில்ல ஆன்ட்டி… வந்து.” என்று ஏதேதோ கூறிவிட்டு அவள் அமைதியாக இருக்க
“என்ன வந்து போயின்னு இழுக்குற? ஒழுங்கா சாப்பிடு.. இல்ல மலேஷியால இருக்க உன் மன்னவன் பறந்து வந்து என் ராணியை ஏன் பட்டினி போட்டிங்கனு என் சட்டையை பிடிப்பான்..” என்று சிரித்து கொண்டே கூறி விட்டு அவரே அவளுக்கு ஊட்டியும் விட அம்மாவின் அன்பில் நிறைந்தவள் அழகாக உண்டு முடித்தாள்.
“என்ன உங்க பாச மகளுக்கு ஊட்டி முடிச்சாச்சா? தலைவி பசலையால் வாடுறாங்கன்னு தலைவருக்கு தகவல் கொடுத்துடுவோமா?” என்று கேலி பேசியபடி ஜீவா வர
“பாருங்க ஆன்ட்டி…” என்று சிணுங்கிய படி அவரிடம் புகார் வாசித்தாள்.
“டேய் அவள கிண்டல் பண்ணலைனா உனக்கு சாப்பாடு இறங்காதே.. வேலை முடிஞ்சுதுல இப்போ போய் சாப்பிடு..” என்று அவனை விரட்டி விட்டார் வித்யா.
சமூகத்தில் சீரும் சிங்கமாக வலம் வந்தாலும் மகனுக்கு அவர் செல்லமான தாய் ஆவார்.
அனைவரிடமும் இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டாலும் அவளின் மனம் மட்டும் கணவனை சுற்றி வந்தது.
அவன் அன்பில் ஒவ்வொரு நாளும் திளைத்தாலும் தன்னால் தான் அவனுக்கு இத்தனை கஷ்டமோ? என்று எண்ணுவாள்.
தன்னை கட்டாமல் வேறு யாரை கட்டியிருந்தாலும் அவனுக்கும் இந்த பிரிவு ஏற்பட்டு இருக்காதோ? நான் அவருக்கு பொருத்தமில்லாதவள் எல்லா வகையிலும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற விசயத்துல யோசிக்காம பொயிட்டாரு. என்னால அவரை நெருங்கவும் முடியலை. விலகி இருக்கவும் முடியலையே கண்ணா’ என மனதோடு உரையாடிய படி தவித்தாள்.
கட்டிய கணவன் அங்கே!! காதலோடு காத்திருக்கும் கண்மணி இங்கே!! என காலமும் அவர்களை பிரித்து வைத்து சோதித்து கொண்டிருக்கிறது.
தன் மேல் அத்தனை அன்பை காட்டும் அவனின் அருகாமை வேண்டி அவள் மனம் விழைந்தது.
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
அவளை சோதித்து பார்ப்பது போலவே அவள் மனம் விரும்பும் பாரதியும் கவி படித்து சென்றார் போல.
காதல் மனைவி இங்கோ வானோடும் கடலோடும் காதல் கனவுகளை கண்டு கணவனை எண்ணி இருக்க அங்கு அவளின் கணவனும் அதே நிலையில் தான் இருந்தான்.
பிரிந்து வாழும் தம்பதிகளுக்கே தெரியும்!!
அனுதினமும் ஆர்ப்பரிக்கும் காதலை காட்டிட கட்டியவளோ கணவனோ அருகில் இல்லாமல் போக சுற்றி திரியும் இயற்கையிடம் தங்கள் காதலை தூது சொல்லி அனுப்ப அவர்கள் நிலை உணர்ந்த இயற்கை கூட அட்ச்சரம் பிசகாமல் செய்தியை கொண்டு சேர்த்திடும்.
அனுபவித்து பார்த்தால் மட்டுமே விளங்கும்!
இவை ஓர் சுகமான இம்சை என்று.
அந்த கண்ணிறைக்கும் காதல் காவியம் தான் இங்கும் அரங்கேற்றமானது.
கண்மணியின் நிலைக்கு கொஞ்சமும் குறையாத அளவில் அவனும் காணும் இடம் எல்லாம் தன்னவளை கண்டு கொண்டிருந்தான்.
கண்மணி நிலையை கவி பாடிய பாரதி இவனுக்கும் பாடாமல் செல்வாரோ?
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
ஆகா!! எத்தனை அழகான வரிகள் பார்க்கும் இடமெல்லாம் தன்னவளை கண்டு அவன் உருகி கரைந்து கொண்டிருக்க முன்னமே கணித்து விட்டார் போல முண்டாசு கவிஞர்.
காதலில் காத்திருப்பு கூட ஓர் சுகம் தான்..
இவர்களுக்கும் அதுவே.
கடல் தாண்டி கண்டம் தாண்டி காதலை மட்டுமே சுமந்து கொண்டு இருக்கும் இந்த இரு நெஞ்சங்களும் மஞ்சத்தில் சேரும் நாளும் வெகு தூரமில்லை.
0 Comments