நல்லதோர் வீணைசெய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ!!!
-பாரதி
அபி அடிக்கடி வித்யா வீட்டிற்கு வந்து தனது அக்காவைப் பார்த்து அளவளாவிச் செல்வாள்.
அன்றும் அப்படித் தான்… மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாவதானமாக பேசிக் கொண்டிருந்தாள். இருள் கவிழ்ந்து வெகு நேரம் ஆனதை மறந்து பேசிக் கொண்டிருந்தவள், தனது கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்.
“அக்கா பேசிக்கிட்டே நேரம் போறத கவனிக்காம விட்டுட்டேன். மணி எட்டாகப் போகுது” என்று விழி விரித்தபடி கூறியவளைக் கண்டு கள்ளச் சிரிப்பை உதிர்த்த கண்மணி,
“அதை நான் கவனிச்சேனே! எப்போ பாத்தாலும் அவசர அவசரமா வந்து பறந்துகிட்டு ஓடிப் போயிடுற. இன்னைக்காவது இந்த அக்காவோட இருந்துட்டுப் போ. சொன்னா கேட்க மாட்டா. அதான் நானும் மணி எத்தனைனு சொல்லலையே..” என்று சிறுமியாக முகம் சுருக்கி நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டிய ‘அக்காளின் இந்த பரவச முகத்திற்காக வேணும் இங்கு தங்க வேண்டும்’ என முடிவெடுத்த அபி, அதைக் காட்டிக் கொள்ளாமல் வெளியே மறுத்து அலட்டிக் கொள்ள
“மேடம் ரொம்ப பிகு பண்ணாதீங்க. ஹாஸ்டலுக்கு கால் பண்ணி சொல்லிக்கலாம்” என்று ஜீவா சொல்லவும்,
“ஹூம்” என பழிப்புக் காட்டியவள், “சரிக்கா” என்றாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, ஹாஸ்டலில் இருக்கும் தனது தோழியிடம் பேசுவதற்காக அலைபேசியுடன் மாடிக்குச் சென்றாள் அபி.
பேசி முடித்து விட்டு திரும்பிய போது, அவளுக்கு நேரெதிரே மாடிக் கைப்பிடிச் சுவற்றை இரு கைகளாலும் பின்னோக்கி தாங்கி நின்றபடி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.
அவனை சற்றும் அங்கு எதிர்பாராதவள் சற்று தடுமாறி, “என்ன வக்கீல் என்னை ஃபாலோ பண்ணி வந்துருக்கீங்க? நா எந்த க்ரைமும் பண்ணலையே!” என்றாள் குறும்பாக.
“எந்த க்ரைமும் பண்ணலதான். ஆனா நா வேற விஷயத்துக்காக ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்” என அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தவாறே கூற
“எதுக்கு சார்?” என்றாள் ஒரு புருவத்தை உயர்த்திய படி.
“இல்லை நா கணக்குப் பாடத்துல ரொம்ப வீக். நீ நல்லா கணக்கு பண்ணுவனு கேள்விப்பட்டேன்” என்றதும்,
“என்ன?” என்றாள் அதிர்வுடன் அவனை முறைத்துக் கொண்டே…
“சாரி… சாரி கணக்குப் போடுவனு கேள்விப்பட்டேன். இனிமே கணக்கு பாடத்தை படிச்சு நா பட்டம் வாங்கப் போறதில்லை. அதான்…
ஒரு கணக்குப் பிள்ளைய கணக்குப் பண்ணி கணக்கை நேர் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்” என அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறும்பாக கூறியவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு மேலும் முறைத்தாள்.
“ஹலோ மேடம் ரொம்ப முறைக்காதீங்க… பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லுங்க. நா வேற யாராவது எம்.எஸ்சி மேத்ஸையோ, பி.எஸ்சி மேத்ஸையோ படிச்சுட்டு வந்தா அவங்களை பார்க்க போவேன்ல” என்றதும்,
“ஜீவாஆஆ…. உங்களை???” என பல்லைக் கடித்தவள் சிரித்து விட்டாள்.
தனது விரல்களை கோர்த்தபடி தலை குனிந்து கொண்டே, “ஜீவா அக்காகிட்ட முதல்ல கேட்கனும். அவளுக்கு சரினா தான் எனக்கும் சரி” என்றதும்
“அப்ப முதல்ல உங்க அக்காவைப் போய் கரெக்ட் பண்றேன்” என்றவன் படியிறங்க,
முதலில் அவன் சொல்ல வந்தது புரியாமல் விழித்தவள் பின்
“உங்களை” என்று அவனைத் துரத்தியபடி அவளும் இறங்கினாள்.
மறுநாள் மாலை அபியை, ஜீவாவே தனது இருசக்கர வாகனத்தில் அவளது விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தான்.
அந்த அன்பு உள்ளங்களின் ஆர்ப்பரித்து செல்லும் இந்த மோனக்காதலுக்கு ஆயுள் குறைவாக இறைவன் வகுத்து விட்டான் போலும்.
அன்றைய தினம்
தனது அலுவலகத்தில் கணினி திரையைத் தட்டி கொண்டிருந்தாள் அபி.
சிறிய அளவிலான அந்த நிறுவனத்தில் அவளோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் வேலை செய்து வந்தனர்.
அபிநயாவிற்கு சென்னையும் சரி, வேலையும் சரி புதிதாக இருந்ததால் ஒவ்வொன்றாக கற்றுத் தேர்ந்து வந்தாள்.
“ச்சே.. என்ன இது ஒரே கொசகொசனு இருக்கு.. தலையே வெடிச்சுரும் போல..” மனதோடு பேசுவதாக எண்ணி சத்தமாக பேச அது சரியாக அவளின் மேலாளர் மதனின் காதில் விழுந்தது.
“என்ன அபி?? எதுல குழப்பம் உங்களுக்கு?” என்று புன்னகையுடன் கேட்க
திடீரென அவன் குறுக்கே புகுந்து கேட்டதும் இவளுக்கு தூக்கி வாரி போட்டது.
“அது… வந்து.. சாரி சார்..” தயக்கமாக அவள் கூற
“ஹேய் ஈஸி.. நீங்க புதுசுல.. அப்படி தான் இருக்கும்… போக போக எல்லாம் கத்துப்பீங்க..” என்று கூறி சிரித்து விட்டு நகர்ந்தான்.
பொதுவாக ஆபிஸ் வட்டாரத்தில் அவனுடைய அணுகுமுறை என்பது அங்கு வேலை செய்பவர்கள் மத்தியில் நல்ல பேரை பெற்று இருப்பதாக கூறப்படுகிறதால் அபியும் அவனிடம் சிநேகமாக சிரித்து வைத்தாள்.
நேர்மையை ஒப்பிட்டு பேசப்படும் நாணயத்திற்கே இரண்டு பக்கம் என்று சொல்வார்கள்..
நாணயத்திற்கே அவ்வாறெனில் இந்த பசுந்தோல் போர்த்திய குள்ளநரிக்கு கேட்கவா வேண்டும்?
வெளியே நல்லவர் அன்பானவர். என்ற அடைமொழியிட்டு கூறப்படும் இந்த முகத்திற்கும் முதுக்கென்ற ஒன்று உண்டு.
அது அவன் பெண்களை விழுங்கும் இரண்டு கால் மிருகம் என்ற ஒன்றாகும்.
அறையில் அமர்ந்து கொண்டு ஆளை விழுங்கும் பார்வையில் அவன் அபியை பார்த்து இருக்க மூன்றாம் நபர் வருகையில் முகத்தை சரி செய்தவனாக கடமையே கண்ணாக கையில் இருந்த கோப்பை பார்த்தான்.
பொறி வைத்து இரைக்காக காத்திருக்கும் கழுகாக அவன் அபியை அடைய சமயம் பார்த்து இருக்க நேரமும் அவனுக்கே சாதகமாக அமைந்தது.
அன்று தன் இருக்கையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த அபியை நெருங்கியவன்
“அபி, இந்த K.K க்ரூப் கம்பெனி டீட்டைல் கேட்டேனே என்ன ஆச்சு?” என்றபடி வந்தான்.
“அல்மோஸ்ட் ரெடி சார்… நாளைக்கு எல்லா டீடைல்ஸ்ஸும் உங்க டேபிள்ல இருக்கும்..” என்று கூற
“நோ அபி.. திஸ் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்.. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் டைம் எடுத்து எனக்கு அதை முடிச்சு கொடுத்துட்டு போங்க..” என்றபடி நகர்ந்தான்.
அவள் மணியை பார்க்க ஐந்தை தாண்டி இருக்க ‘சரி ஒரு பதினைஞ்சு நிமிஷ வேலை தான முடிச்சுரலாம்’ என்று எண்ணியபடி வேலையில் ஆழ்ந்தாள்.
அங்கு வேலை செய்யும் செக்யூரிட்டி அவளிடம் நெருங்கி
“என்ன மேடம் நீங்க கிளம்ப லேட் ஆகுமா?” என்று கேட்க
“இன்னும் பத்து பதினஞ்சு நிமிஷம் ஆகும் அண்ணா…” என்றவள் தனது பாட்டிலில் நீர் தீர்ந்து விட்டது நினைவு வந்தவளாக, “அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா? குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?” என்று கேட்க,
“சரிங்க மேடம்.. தண்ணீ போதுமா நான் போய் ஏதாவது டீ வாங்கிட்டு வரவா?” என்றான்.
“இல்ல அண்ணா தண்ணி போதும்” என்றபடி வேலையை தொடர்ந்தாள்.
“என்னடா வேலா என்ன சொல்றா?” என்று அந்த செக்யூரிட்டியிடம் தனியே வந்து மதன் கேட்க,
“பட்சி குடிக்க தண்ணீ கேக்குது சார்…” என்று பல்லை இளித்தான்.
“நல்லதா போச்சு.. இந்தா இந்த பொடியை தண்ணியில கலந்துடு.. தடயமே தெரியாம காணாம போய்டும்.. போய் பட்சிக்கு தண்ணிய காட்டு.. கொஞ்ச நேரத்துல எல்லாம் மயங்கிருவா… அப்புறம் நாம நம்ம இடத்துக்கு கொண்டு போயிடலாம்…” என்று அவன் பாக்கெட்டில் சில நோட்டுக்களை திணித்து விட்டு மதன் கூற அவன் கூறியவாறு செய்து முடித்தான் வேலு.
பதினைந்து நிமிடங்கள் கழித்து மேசையில் சுய நினைவு இழந்து சரிந்து கிடந்த அபியை தூக்கி தன் காரில் போட்டவன் வேறொரு இடத்திற்கு காரை ஓட்டி சென்றான்.
மாலை எப்போதும் தன்னை சந்திக்க வரும் தங்கை வராமல் போகவும், அவளது அலைபேசிக்கு அழைத்த கண்மணி, அலைபேசி அணைத்து இருப்பதாக செய்தி வரவும், சிறிது நேரம் கழித்து அழைத்தாள். மீண்டும் அதே பதில் தான் வந்தது. நேரம் இரவை நெருங்கவும் ஜீவாவை அழைத்துக் கொண்டு அபி பணிபுரியும் இடத்திற்கு வந்தாள்.
வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டியிடம்,
“சார், இங்க அபிநயானு ஒரு பொண்ணு அக்கவுன்டன்ட்டா வேலை பாக்குறாங்கள்ல அவங்க உள்ள இருக்காங்களா?” என்று ஜீவா கேட்க,
“அபி மேடம் அப்போவே கிளம்பி போய்ட்டாங்களே சார்..” என்று எதுவும் தெரியாதவன் போல கூறினான்.
அவன் பதிலில் துணுக்குற்ற இருவரும்
“என்ன சொல்றிங்க சார்? ஆனா அவங்க வீட்டுக்கு இன்னும் வரலையே?” என்று கேட்க
“ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு எங்கயாவது போய் இருப்பாங்க சார்… கேட்டு பாத்தீங்களா?” என்று கேட்டான்.
“இல்ல சார்… அங்கயும் போகல அவங்களும் தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் கேட்டு பாத்துட்டு தான் இருக்காங்க… நீங்க தப்பா நினைக்கல அப்படினா.. ஒரு தடவ உள்ள போய் செக் பண்ணி பாத்துக்கட்டுமா?” என்று கண்மணி கேட்க
“சரி மேடம்… போய் பாருங்க” என்று கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான் அவன்.
முன்னமே ஊகித்து வைத்தது தான் என்பதால் அவள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிறு துணுக்கையும் துடைத்து எந்த உறுத்தலும் இல்லாதவாறு தயார் படுத்தி வைத்திருக்க
ஜீவாவிற்கும் கண்மணிக்கும் எதுவும் விளங்கவில்லை.
“ஜீவா எங்க போய் இருப்பா? ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கும் போகல ஆபிஸ்லயும் இல்ல.. எங்க போனா தெரியலையே…” என்று கைகளை பிசைந்து கொண்டே கண்மணி நின்றாள்.
மனதில் தங்கைக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்ற பயம்.
இரவு முழுவதும் அபியை தேடி அவர்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்.
அதே சமயம் இங்கு அபியோ ஒவ்வொரு நொடிதனும் கயவர்கள் கைகளில் சிக்கி கசங்கி கொண்டிருந்தாள்.
பன்னிரண்டு மணி நேரம் கழித்து மயக்க மருந்து தெளிந்து கண் விழித்து பார்த்த போது தன்னை சுற்றிலும் முன் பின் தெரியா முகங்கள் இருக்கவே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் அங்கிருக்கும் தன் மேலாளர் மதன் முகத்தை பார்த்து
“சார்.. நான் எப்படி இங்க?” என்று பயத்தில் வியர்த்து கொட்டியபடி அவள் கேட்க அவன் முகம் விகாரமாக சிரித்தது.
“உனக்கு என்ன தோணுது அபி? நீ எப்படி இங்க வந்த? எதுக்காக? ஏதாவது கெஸ் பண்ணுறியா?” என்று அவன் கேட்க
அவன் முக குறிப்பை உணர்ந்து கொண்டவள் அவனை காரி உமிழ்ந்திட அவை எல்லாம் அவர்களுக்கு உரைத்தால் தானே.
வெறி பிடித்த நாய் குணத்தை ஒற்றை பெண் இவள் எப்படி சமாளிப்பது?
எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவற்றை எல்லாம் காலில் போட்டு நசுக்கிய அந்த மிருகங்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய அவள் பெண்மையை கசக்கி எறிந்தனர்.
இரவு முழுவதும் தெரிந்த தெரியாத என அத்தனை இடங்களிலும் அபியை தேடி ஓய்ந்து போன கண்மணியும் ஜீவாவும் வீடு வந்து சேரவும் கண்மணியின் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
“என்ன சொல்றிங்க?” என்று அதிர்ச்சியில் கண்மணி உறைந்து நிற்க ஜீவாவே அவளை உலுக்கி விபரம் கேட்டு வேகமாக விரைந்தான்.
அலைபேசியில் சொல்லப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்திட கூட்டமாய் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் இவர்களிடம் வந்தான்.
“என்ன சேகர் நீ சொல்றது உண்மையா? அது நம்ம அபி தானா?” என்று ஜீவா கேட்க
“என்ன ஜீவா கண்மணியோட தங்கையை எனக்கு தெரியாதா? சொல்ல கஷ்டமா தான் இருக்கு… ஆனா அது நம்ம அபி தான்.. இங்க பேப்பர் போடுற சில பசங்க தான் எனக்கு போன் பண்ணது.. அவங்க சொன்ன விபரம் வச்சு ஒரு அனுமானமா வந்து பாக்கும் போது தான் எனக்கும் ஷாக்… அது நம்ம அபின்னு… இப்போ தான் ஜி.ஹெச்க்கு அனுப்பி வச்சோம் அங்க போனா தான் மேற்கொண்டு விபரம் தெரியும்..” என்று இறுதியில் முடிக்கும் போது இன்ஸ்பெக்டரான அவனுக்கே குரல் தழுதழுக்க… ஒரு அக்காவாக கண்மணியை பற்றி கேட்கவா வேண்டும்?
கையில் இருந்த ஊன்றுகோலை தவற விட்டவள் அந்த இடத்திலேயே சரிந்தபடி அழுது கரைந்தாள்.
“அய்யோ அபி…. அபி…” முகத்தில் அடித்து கொண்டு அழுபவளை கண்டு ஜீவாவிற்கும் அழுகை முட்டி கொண்டு வந்தது தான். ஆனால் இப்போது கண்மணியை தேற்றிட வேண்டிய நிலையில் தான் இருப்பதால் விழி முட்டிய நீரை தட்டி துடைத்து கொண்டு
“கண்மணி.. என்ன இது நீயே இப்படி உடைஞ்சு போய் அழலாமா? அப்போ அபிக்கு யார் ஆறுதல் சொல்றது? வா நாம போய் அபியை பாப்போம்..” என்று அவளை தூக்கி நிறுத்தி வைத்தபடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
அங்கு மருத்துவமனையில் உடலில் ரத்தமும் நகக்கீரல்களும் அழுந்த பதிந்த படி குற்றுயிரும் குலையுயிருமாக மூச்சு விடக் கூட சிரமப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று கொண்டு இருந்தாள் அபி.
அவளின் நிலை பார்த்த கருங்கல்லும் கண்ணீர் சிந்தும் அப்படியிருக்க நெஞ்சில் ஈரம் கொண்ட நம்மை பற்றியும் கேட்க வேண்டுமா?
அன்றைய தினசரி செய்திகளில் தலைப்பே அபியை பற்றியதாக தான் இருந்தது.
மருத்துவமனையில் கண்மணியை சுற்றி வளைத்த பத்திரிகை கூட்டத்தினை கலைத்து கொண்டு அபியை தேடி போய் சேர்ந்திட அவளின் நிலை கண்ட கண்மணிக்குள் அழுகையும் கோபமும் ஒரு சேர வெடித்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த அபியிடம் கண்மணியும், ஜீவாவும் வந்தனர்.
“அபி.. அபி… என்னடா என்ன ஆச்சு? யாருமா இதுக்கு காரணம்? ஏதாவது சொல்லுடா?” என்று கேட்க பேசவும் திராணி இல்லாமல் அழுகை மட்டுமே வர முனங்கினாள் அபி.
“உன்னோட இந்த நிலைக்கு யார் காரணம் சொல்லு அபி.. அவனுக்கு சாவை விட கொடுமையான தண்டனையை நான் கொடுக்குறேன்..” என்று கூறியபடி அவளின் நிலையை கண்ட ஜீவாவும் கலங்கி நின்றான்.
செவிலியர் வந்து, “மிஸ்டர் அவங்களை ரொம்ப தொந்தரவு செய்யாதீங்க.. நீங்க கார்டியன்னு சொன்னதால தான் உங்களை உள்ள அனுமதிச்சோம்… இப்படி அவங்களை டிஸ்டர்ப் பண்ணா ரொம்ப க்ரிடிக்கலா போய்டும்… படிச்சவங்க நீங்களே இப்படி நடந்துக்கலாமா?” என்று அதட்ட அவனும் அபியை அப்போதைக்கு அமைதியாக செய்ய வேண்டும் என்று எண்ணியபடி கண்மணியை அழைத்து கொண்டு வெளியே வந்தான்.
“ஜீவா உன் பிரெண்ட் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டியா? யாருனு கண்டுபிடிச்சிட்டாங்களாமா?” என்று ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் அவனிடம் கேட்டாள்.
அவன் ‘ஆம்’ என தலையசைக்கும் போதே அவளின் அலைபேசி ஒலித்தது.
திரையில் வெளிநாட்டு எண்கள் ஒளிரவும் தன்னவன் என்ற எண்ணத்தில் ஆறுதலை வேண்டுபவளாக ஆவலாக எடுத்து காதினில் வைத்தாள்.
மறுமுனை பேசிய நொடியில் அவள் முகம் தீயாய் தகித்தது.
“என்ன வக்கீலம்மா! உன் தங்கச்சியோட நிலைக்கு யார் காரணம்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?” என்று கேட்க
அந்த நொடியே கண்டு கொண்டாள் ‘அவன் தான்’ முழு முதற் காரணம் என்று.
அவள் அமைதியாக இருக்க,
“பரவாயில்லையே கண்டுபிடுச்சுட்டீங்க போல… க்ரேட்..” என்று அவன் நகைக்க
“அடச்சீ… நீயெல்லாம் ஒரு பிறவியா? பொண்ணுங்கன்னா உனக்கு எப்பவுமே இளப்பமா போச்சா? நீ யாரோ ஒரு பொண்ண தொட்டாலே உன் கைய வெட்டுவேன் நான்.. நீ என் தங்கச்சியையே தொட்டுட்ட உன்னை சும்மா விடுவேன்னு நினைச்சியா? குறிச்சிக்கோ உன்னோட சாவு என் கையால தான்..” என்று கர்ஜித்தாள்.
“நீயும் குறிச்சிக்கோ உன் புருஷனக்கு மட்டும் இல்ல… உன்னோட சாவும் என் கையால தான்..” என்று அவனும் பதிலுரைத்து விட்டு அணைத்தான்.
இங்கு கண்மணியின் கண்கள் கோபாவேசத்தில் கொதித்தது.
இப்போதே அந்த கயவனை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏறியது.
“கண்மணி.. போன்ல யாரு அந்த தேர்ட் ரேட் பொறுக்கியா?” என்று ஜீவா கேட்க அவளும் ‘ஆம்’ என்பதாய் தலையை அசைத்தாள்.
“என்ன சொன்னான்?” என்று கண்மணியின் கோபத்தில் கொஞ்சமும் குறையாமல் அவனும் கேட்க
“நம்ம அபியை இந்த நிலைக்கு ஆளாக்கினதே அவன் தான்.. அதை தைரியமா என் கிட்டயே சொல்றான்.. அவனை…” என்று அவள் பல்லை கடிக்க கேட்டு கொண்டிருந்த ஜீவாவிற்கும் அதே எண்ணம் தான்.
விட்டால் இருவரும் இப்போதே மலேசியா சென்று அவனை கொன்று புதைத்து விடுவர். அந்த அளவிற்கு கோபமும் ஆவேசமும் அவர்களின் முகத்தில் வழிந்தது.
அதற்குள் அவர்களின் நண்பன் சேகர் அவர்களிடம் வேண்டிய தகவலை கொடுத்திருந்தான்.
மலேசியாவில் இருப்பவனின் கைக்கூலியாக செயல்பட்டவன் அபியின் அலுவலக மேலாளர் மதன் என்ற செய்தியை அவர்களிடம் சேர்க்க…
“அந்த மலேசிய நாயை கவனிக்க முன்ன பக்கத்தில இருக்க இவனை முதல்ல போட்டுத் தள்ளனும்..” ஜீவா வார்த்தைகளை கடித்து துப்பியபடி கூற,
“ஆள் எஸ்கேப் ஆக பாத்தான்.. நான் தான் நம்ம சப்- இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வர சொல்லி இருக்கேன்..” என்று சேகர் கூற
“நல்ல காரியம் செஞ்ச… ஜீவா வா.. நாம உடனே ஆன்ட்டி கிட்ட சொல்லனும்..” என்றபடி இருவரும் பெண் காவலர்கள் இருவரை அபிக்கு துணையாக வைத்து விட்டு வித்யாவிடம் செல்ல…
அந்நேரமாக தலைமை மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் வித்யா.
அபிக்கு நீதி கிடைக்குமா? கண்மணி தன் தங்கைக்காக போராடி வெற்றி பெறுவாளா?
0 Comments