கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
-பாரதி
வேகமாக சென்ற ஜீவாவும், கண்மணியும் எதிரே வித்யா வருவதைப் பார்த்து நின்று விட்டனர்.
“ஆன்ட்டி டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கண்மணி வெறுமையான குரலில் கேட்க…
“அபி குடிச்ச டிரிங்க்ல மயக்க மருந்து கலந்திருக்காங்க. அதனால அவ சுயநினைவை இழந்துருக்கா. அவங்க பயன்படுத்துனது தடை செய்யப்பட்ட மயக்க மருந்து சட்டத்துக்கு விரோதமா பயன்படுத்தி இருக்காங்க. மயக்கத்துக்கு உட்பட்டவங்க கிட்டத்தட்ட அரை மயக்கநிலையில இருப்பாங்க. நடக்குறது என்னனு தெரிஞ்சாலும் அவங்களால எதிர்க்க முடியாது” என்று கூறிய மறுநொடியே, கண்மணியின் உடல் விறைத்தது.
ஆம், மலேசியாவில் அவளுக்கு ஏற்பட்டிருந்த அதே நிலை தான் தற்சமயம் அவள் தங்கைக்கும் ஏற்பட்டிருக்கிறது.
“மயக்கத்தோட வீரியத்தால அபிக்கிட்ட எதிர்ப்பு குறைஞ்சிருக்கு. அதனால குற்றவாளிகள் அவளை இலகுவா மடக்கிட்டாங்க. அபி உடல்ல காயங்கள் குறைவா தான் இருக்கு. ஆனா…” என்று இழுத்தவர், “க்கும்” என தொண்டையை கனைத்துக் கொண்டு,
“அபியை சோதனை பண்ணி பார்த்ததுல… உயிரணுக்கள் வேறுபாடை வச்சு மொத்தம் நாலு பேர் சேர்ந்து அபியை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்காங்கனு கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால அவளுடைய பெண்ணுறுப்பு பயங்கர சேதம் அடைஞ்சிருக்கு.
சிறுநீரை பரிசோதனை செஞ்சு பார்த்ததுல எந்த மாதிரியான மயக்க மருந்துனு தெரிஞ்சிருக்கு. இப்போதைக்கு அபி கண் விழிச்சாலும், அவளால சரியா எழுந்து அமரவோ, நடக்கவோ முடியாது.
இயற்கை உபாதை வெளியேற டியூப் மாட்டியிருக்காங்க. அவளை யாரும் தொந்தரவு செய்ய வேணாம். முக்கியமா அவளுக்கு முன்னாடி போய் சத்தம் போட்டு அழக்கூடாது. ஏன்னா அவ உடலளவுலயும், மனதளவுலயும் மோசமா பாதிக்கப்பட்டுருக்கா” என்று மருத்துவர் கூறியதை அழுத்தமான மனநிலையுடன் கூறினார் வித்யா.
அவர் பெண் பிள்ளையை பெறாவிட்டாலும், அவரும் ஒரு பெண் தானே! அபியின் நிலையைக் கண்டவரின் நெஞ்சம் ரத்தக் கண்ணீரை வடித்தாலும், தான் உடைந்து விட்டால், சிறியவர்களும் உடைந்து விடுவார்கள் என வெளியே திடகாத்திரமாக இருந்தார்.
கண்மணியும், ஜீவாவும் கை முஷ்டிகள் ஆத்திரத்தில் மடங்க, நாசி விடைக்க நின்றிருந்தனர்.
“அம்மா… அபியோட மேனேஜர் அந்த அயோக்கிய ராஸ்கலும் ஒரு விதத்துல அபிக்கு நடந்த இந்தக் கொடுமைக்கு காரணமா இருக்கலாம்னு சந்தேகப்பட்டு சேகர், அபியோட ஆபிஸ்க்கு போயிருக்கான். அங்க போய் செக்யூரட்டிகிட்ட விசாரிக்கும் போது அவன் சம்மந்தமில்லாம முன்னுக்குப் பின் முரணா பதில் சொல்லி இருக்கான். சேகர் ரெண்டு தட்டு தட்டிக் கேட்கவும் தான் அந்த மேனேஜர் மதன், அபியை மயக்க மருந்து கொடுத்து கார்ல தூக்கிட்டு போனதை சொல்லியிருக்கான். மதன் எங்கனு கேட்டதுக்கு தெரியலைனு சொன்னானாம். திரும்பவும் சேகர் போலீஸ் வேலையைக் காட்டவும் தான் இன்னைக்கு காலையில மதன் பெங்களூருக்கு தப்பிச்சு போகப் போறதா சொல்லியிருக்கான். உடனே சேகர், சப்- இன்ஸ்பெக்டருக்கு இன்பார்ம் பண்ணியிருக்கான்.
டோல்கேட்ல செக் பண்ண சொல்லி பார்டர்ல இருக்க போலிஸ்க்கும், ஹைவே ரோந்து போலிஸ்க்கும் தகவல் கொடுத்துருக்கான். ஆனா, மேலிடத்துல சரியான ஆதரவு கிடைக்கலையாம். இருந்தும் நம்பிக்கையானவங்களை வச்சு ஹைவேலயே மடக்கி பிடிச்சிருக்காங்கனு இப்போ தான் சொன்னான். நாம இப்ப உடனே அங்கப் போகணும்மா” என்று ஆத்திரத்தில் உதடு துடிக்கப் பேசிய மகனின் வார்த்தைகளை ஆமோதித்தவர்
“ம்ம்” என்ற தலையசைப்புடன் “வாங்க உடனே போகலாம்” என்றதும், மூவரும் அபியின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.
ஆனால், இவர்கள் அங்கு செல்வதற்குள் டிசிபி, கமிஷ்னர் என பெரிய இடத்திலிருந்து மதனை விடுவிக்குமாறு சேகருக்கு அடுத்தடுத்து அழுத்தம் கொடுக்கவே வேறு வழியின்றி அவனை விடுவிடுத்து விட்டான்.
“மிஸ்டர் சேகர். எந்த பாலியல் வழக்குல உடனே குற்றவாளியைக் கண்டுபிடிச்சு உள்ள போட்டுருக்கோம். சந்தேகத்தின் பேர்ல தானே அவரோட ஆபிஸ்க்கு போன? அந்தக் குடிகார செக்யூரட்டி ஏதோ உளருனானு பெரிய இடத்துல கைய வச்சிருக்க. அவரை ரிலீஸ் பண்ணி விடு. இன்னும் எஃப்.ஐ.ஆர் போடலைல. போட்டுருந்தாலும் பரவாயில்லை. அதை மாத்திரு. புகார் கொடுத்தவங்க வந்து கேட்டா இன்னும் குற்றவாளியை தேடிக்கிட்டு இருக்கோம்னு சொல்லு. மீறி தொந்தரவு பண்ணுனா பேருக்கு என் கிட்ட பேச சொல்லு” என்று கமிஷ்னர் கூறியவற்றை சேகர் பெருத்த கோபத்துடன் கூறிக் கொண்டிருக்க…
ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்த வித்யாவோ,
“இதையெல்லாம் நா ஏற்கனவே எதிர்பார்த்தது தான் சேகர். இந்நேரம் அவன் இந்த நாட்டை விட்டு தப்பிச்சிருந்தா கூட ஆச்சரியப்படுறதுக்கில்லை. இந்த மாதிரி எத்தனை வழக்குகள் நா பார்த்து இருப்பேன்.
காவல் துறையும், சட்டமும் பாதிக்கப்பட்ட மக்களை விட, குற்றவாளிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுறது தான் பெரும் வேதனையா இருக்கு. சரி விடு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்” என்று நிதானமாகக் கூற…
“என்னம்மா நீங்க? அந்தப் பொறுக்கி, தப்பிச்சு ஓடிப் போயிருக்கான் நீங்க என்னவோ நிதானமா பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று ஜீவா பொங்கியெழ…
“ஜீவா அமைதியாயிரு. ஆன்ட்டி இது போல எத்தனையோ வழக்கைப் பார்த்தவங்க. அவங்களுக்கும் நம்மளப் போல கோபமும், ஆவேசமும் இருக்கும் தான். ஆனா இந்த நேரத்துல வேகத்தை விட விவேகம் தான் முக்கியம்” என அழுத்தமான குரலில் ஜீவாவை அடக்கினாள் கண்மணி.
மூவரும் ஆழ்ந்த யோசனையுடனே காரில் மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது கண்மணியின் அலைபேசி ஒலித்தது. திரையில் ஒளிர்ந்த எண்களைப் பார்த்து கண்கள் கலங்க… அலைபேசியை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்தாள். “ஹலோ” என்றதும்,
எதிரே ஒலித்த “கண்ணம்மா” என்ற அந்த பதட்டம் நிறைந்த குரலைக் கேட்டவள் விம்மி வெடிக்க இருந்த தனது அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, “சொல்லுங்க” என்றாள்.
“கண்ணம்மா நா எல்லாம் கேள்விப்பட்டேன். ஜீவா போன் பண்ணும் போது நா முக்கியமான வேலையில இருந்தேன். இப்போ தான் அவனோட வாய்ஸ் மெசேஜ் பார்த்தேன்.
அந்த பொறம்போக்கு, தேர்ட் ரேட் கிரிமினல், ப்ளடி….. அவனை சும்மாவே விடக்கூடாது. நா அடுத்த ப்ளைட்டுக்கே கிளம்பி வரேன்” என்று ஆவேசமாகப் பேசியவன் சற்று நிதானித்து, “அபி இப்போ எப்படி இருக்கா?” என்றான் தழுதழுத்த குரலில்.
மாமா… மாமாவென நூறு முறை அவனை அழைத்து கொஞ்சிப் பேசி, குறும்பு செய்யும் ஒரே மச்சினி ஆகிற்றே…
“இருக்கா. இன்னும் அரை மயக்கத்துலயே இருக்கா” என்று டாக்டர் கூறியதை முழுதாக கூற சங்கடப்பட்டவள் நாசூக்காக கூறவும், புரிந்து கொண்டவன்,
“கண்ணம்மா இன்னைக்கு நைட் நா அங்க இருப்பேன்” என உறுதியளிக்க…
“வேணாங்க… அவன் என்னைய தான் குறி வச்சிருக்கான். அதனால தான் என்னைய சேர்ந்தவங்களை தாக்கி என்னை பலவீனப்படுத்தனும்னு முதல் அபியைத் தாக்கியிருக்கான். ஆனா, நா அதுக்கெல்லாம் அசர மாட்டேன். நீங்க என் பக்கத்துல இருந்தா எனக்கு அசுர பலம் வந்த மாதிரி இருக்கும்.
ஆனாலும், நான் இப்போ தனியாவே அவனை எதிர்த்து நிக்க துணிஞ்சிட்டேன். உங்க உதவி தேவைப்படும் போது நா கண்டிப்பா கூப்பிடுவேன்” என்றதும்,
“நீ என் உதவி வேணும்னு நினைக்குற மறு நிமிசமே நான் அங்க இருப்பேன்” என்றவன், ஜீவாவிடம் அலைபேசியை கொடுக்கச் சொல்லி சற்று அவனுடன் விரிவாகப் பேசி விட்டு அலைபைசியை அணைத்தான் கண்மணியின் கண்ணாளன்.
கார் மருத்துவமனை வளாகத்தை அடையும் போது மாலை நேரத்தை நெருங்கியிருந்தது. மூவரும் உள்ளே நுழையும் போதே எதிர்பட்ட அபியை கவனித்துக் கொள்ளும் செவிலியர், காவல் அதிகாரி விசாரணைக்காக வந்திருப்பதாகவும், பத்து நிமிடங்களுக்கு முன்பு தான் அபி கண் விழித்தாள் என்றதும் விரைந்து அவளறைக்குச் சென்றனர்.
ஜீவா, கண்மணிக்கு வேகமாக நடக்க உதவி செய்தபடி உடன் சென்றான்.
பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்கவும், தடயத்தை சேகரிக்கவும் பெண் அதிகாரி தான் செல்ல வேண்டும் என்பதால், ஒரு பெண் ஆய்வாளர் வந்திருந்தார்.
இவர்கள் உள்ளே நுழையும் போதே “உன் பேர் என்ன?” என்று அதட்டலாக அவர் கேட்டது மூவரின் காதுகளிலும் விழ வேகமாக அபியின் அருகே சென்று நின்றனர்.
அவர்களை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண் ஆய்வாளர், “விசாரணை பண்ணும் போது தேவையில்லாத ஆளுங்க உள்ள வரக்கூடாதுனு தெரியாதா?” என்று அதட்டவும்,
“நா அபிக்காக வாதாடப் போற வழக்கறிஞர் மற்றும் மாதர் சங்க உறுப்பினர் வித்யா. வல்லுறவுக்கு உட்பட்ட பெண்ணை விசாரிக்கும் போது அருகே ஒரு தன்னார்வலர் இருக்கணும்னு சட்டம் இருக்கே மேடம் உங்களுக்குத் தெரியும்ல?” என்றதும் முகம் இறுகியவர்,
“இவங்க?” என்றார் கண்மணியை கேள்வியாக பார்த்தபடி…
“இவங்க தான் அபியோட அக்கா. சட்டக் கல்லூரி மாணவி. இவங்களும் இங்க தான் இருப்பாங்க” என்றதும் வேறு வழியின்றி சம்மதித்தார். ஜீவா வெளியே சென்று நின்று கொண்டான்.
அபியினுடைய பெயரை கேட்டுத் தெரிந்து கொண்டவர், “நேத்து சாயங்காலம் எத்தனை மணிக்கு ஆபிஸ்ல இருந்து கிளம்புன?” என்றதும்,
“மேடம் பாதிக்கப்பட்டவங்க கிட்ட பரிவா பேசணும். அதட்டலா விசாரிக்கக் கூடாது அது தான் முறை” என்றதும், தன்னுள்ளே முனங்கிக் கொண்டவர், மீண்டும் சற்று பன்மையுடன் கேட்க…
அபி மிரட்சியுடன் கண்மணியைப் பார்க்க, தங்கையின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டவள், ‘சொல்லு’ என்பதாக தலையசைத்தாள்.
“நேத்து ஈவினிங் மேனேஜர் கொஞ்ச நேரம் எடுத்து வேலைய முடிச்சு கொடுத்துட்டு போக சொன்னாரு. அதனால நா ஆறு மணிக்கு மேல ஆபிஸ்ல இருக்க வேண்டியதா போச்சு. செக்யூரட்டி கிட்ட குடிக்க தண்ணி கேட்டேன் கொண்டு வந்து கொடுத்தாரு. அதுக்கப்பறம் என்ன நடந்ததுனு எனக்கு நினைவில்லை. ஆனா, யாரோ என்னைத் தூக்கிட்டு போனாங்க. ” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்பறம் என்ன நடந்ததுனு நியாபகம் இருக்கா. நினைவு படுத்தி சொல்லுங்க?” என்றதும்,
“கொஞ்ச நேரம் கழிச்சு எங்க மேனேஜரோட குரலும், அதைத் தொடர்ந்து ரெண்டு ஆண்குரல் கேட்டதை என்னால உணர முடிஞ்சது. ஆனா, கண் திறந்து பார்க்க முடியலை. என் டிரெஸ் மேல கைய வச்சாங்க…. அப்பறம்” என்று அவள் அழ ஆரம்பிக்க…
“வேணாம் அபி அழாத” என தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டு, கட்டிக் கொண்டாள் கண்மணி.
“ஆறு மணிக்கு மேல வரைக்கும் ஆபிஸ்ல இருந்ததா சொல்றீங்க. ஆனா, ஐந்து மணிக்கே நீங்க வெளில பொயிட்டதா சிசிடிவில காட்டுதே.
அது மட்டுமில்லாம நீங்க கிளம்பி கொஞ்ச நேரத்துலயே உங்க மேனேஜர் மதனும் கிளம்பி பொயிட்டாரு. அப்படி இருக்குறப்போ… அவர் எப்படி உங்களைக் கடத்தியிருப்பார்” என்றதும் கோபம் தலைக்கேறிய வித்யா,
“இங்கப் பாருங்க மேடம் மெடிக்கல் ரிப்போர்ட்ல இவ உடம்புல மயக்க மருந்து செலுத்தி இருக்கிறதை உறுதிபடுத்தியிருக்காங்களே! அதை நீங்க பார்க்கலையா? என்றார்.
“ஆமாம். மயக்க மருந்து செலுத்தியிருக்கிறதா இருக்கு தான். அதையே ஏன் இந்தப் பொண்ணு தன்னாலயே செலுத்தி இருந்திருக்கக் கூடாது.
சென்னையில தனியா ஹாஸ்டல்ல தங்கியிருக்கிற பெரும்பாலான காலேஜ் பொண்ணுங்களும் சரி, வேலைக்குப் போற பொண்ணுங்களும் சரி பெரும்பாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானவங்க தான்.
அந்த மாதிரி கூட இந்த பொண்ணும் போதை மருந்து எடுத்திருந்துருக்கலாம்” என்றதும்,
“மேடம் நிறுத்துங்க” என கண்மணி அலற…
“கத்தாதீங்க. போதை ஊசியை ஏத்திக்கிட்டு, பாய் பிரெண்டோட மட்டுமில்லாம அவனோட ப்ரெண்ட்ஸ் கூடவும் உல்லாசமா இருந்துட்டு வந்துருக்கா உங்க தங்கச்சி. போதை அதிகமாகி ரோட்டுல விழுந்து கிடந்துருக்கா. இது தான் நடந்திருக்கு” என்று தனது யூகத்தை நடந்தது போல அந்த ஆய்வாளர் கூறவும்,
“நீங்க பார்த்தீங்களா? அதுக்கு என்ன ஆதாரம்?” என வித்யா சீறவும்,
“இருக்கே… பாருங்க இவ உடம்புல காயம் ஒன்னும் பெருசா இல்லை. சும்மா சின்ன, சின்ன நகக்கீறல் தான் இருக்கு. அப்போ இவளோட சம்மதத்துல தான் அந்த உறவு நடந்திருக்கு. இவ ஒரு நடத்தை கெட்டவளா இருந்திருக்கா. உங்களுக்குத் தெரியலை” என்றார் ஈவு, இரக்கமின்றி தானும் ஒரு பெண் என்பதை மறந்து விட்டு.
“நோ… நா நடத்தைகெட்டவ இல்லை” என்று தனது தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலறியபடி, தலையை இருபக்கமும் ஆட்டி அபி அழ…
வித்யாவிற்கும், பெண் காவல் ஆய்வாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதமே நடக்க…
ஜீவா ஓடிச் சென்று மருத்துவரை அழைத்து வந்தான். எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு அபியை சோதனை செய்து, உறக்கத்திற்கான ஊசியை செலுத்தி விட்டு வெளியே வந்த மருத்துவர் அந்த காவல் ஆய்வாளரை ‘நீயும் ஒரு பெண்ணா?’ என்பதைப் போல் பார்க்க…
அதையெல்லாம் கண்டு கொண்டால் அவர் ஏன் இப்படி இருக்கிறார். மேலும், மருத்துவரிடம் சில கேள்விகளைக் கேட்டு தெளிந்து கொண்டு செல்ல…
முன்பு தாயின் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட ஜீவா, தற்சமயம் தாயை சமாதானப்படுத்தி ஓரிடத்தில் அமர வைத்தான்.
நேரம் இரவு பதினோரு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஜீவா வீட்டிற்கு சென்றிருக்க… வித்யாவும், கண்மணியும் அபியை பார்த்துக் கொள்ள மருத்துவமனையில் தங்கியிருந்தனர்.
“ஐயோ… ஆத்தி நா பெத்த மகளே!” என அந்நேரத்தில் கேட்ட தனது சித்தியின் குரலில், தங்கையின் அருகில் அமர்த்திருந்தவள் எழுந்து மெதுவாக ஊன்றுகோலின் உதவியுடன் வெளியே வர… வித்யாவும் பின்னே வந்தார்.
காலையில் அபிக்கு நடந்த கொடுமையை மருத்துவமனை ஊழியர்கள் மூலம் தங்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தியிருந்தாள் கண்மணி.
விசயத்தைக் கேட்டதும் துள்ளி, துடித்து அலறிக்கொண்டு வேணியும், வடிவும் சென்னைக்கு கிளம்ப… வரும் வழியில் எல்லா செய்திகளிலும் தனது மகள் குறித்து பேசவும் வயிற்றிலடித்துக் கொண்டு கதறியபடி வந்தார் வேணி. இருவரும் இங்கு வந்து சேர நள்ளிரவாகி விட்டது.
அவர்களது வேதனையை கண்மணி நன்கு அறிந்திருந்தாலும், தற்சமயம் இவர்களை உள்ளே அனுமதித்தால் தங்கையின் நிலை மோசமாகி விடும் என எண்ணியவள், அறை வாசலிலே அவர்களை தடுத்து நிறுத்த…
“நீ யாருடி எங்களை தடுத்து நிறுத்த நொண்டி சிறுக்கி… உன்னால தான்டி என் பேத்திக்கு இந்த நிலைமை வந்திருக்கு. அக்காவ தேடிப்போறேனு உன்னையத் தேடி வந்தாளே அவளைப் பழி வாங்கிட்டியே பாவி” என்று வடிவு அநியாயமாக பழி பேச…
“அப்பத்தா வாயை மூடுங்க. இல்லைனா வெளியில அனுப்ப சொல்லிருவேன்” என்று கண்மணி அவரை எதிர்த்து பேச…
“நீ என்னடி எங்களை விரட்டுறது. நீ முதல்ல வெளில போடி. அப்பவே உன்னையக் கொன்னுருந்தா எம்மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்காது. நீ நல்லாவே இருக்க மாட்ட… நாசமாப் போயிருவ…” என்று நெஞ்சிலும், வயிற்றிலும் மாறி மாறி அடித்தபடி வேணி சாபம் விட
“நல்லவங்க சாபமே இப்போ பலிக்கிறதில்லை சித்தி. வீணா கத்தாம ஒரு ஓரமாப் போய் உக்காந்திங்கனா அபியை பார்க்க ஏற்பாடு பண்ணுவேன். இல்லைனா ரெண்டு பேரையும் அடிச்சு துரத்த சொல்லிடுவேன்” என கடுமையான குரலில் கண்மணி எச்சரிக்க
மிரண்டு போன வடிவு, மருமகளை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
சிங்கம் வெல்லுமா? ஓநாய்கள் வெல்லுமா?
0 Comments