10. மின்சாரப் பாவை



இன்னுமொரு முறைசொல்வேன், பேதை, நெஞ்சே,

எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை;

முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;

முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;

-பாரதி

 ஒரு வாரத்திற்கு பிறகு அபியின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் காயம் பட்ட மனம் அவ்வளவு எளிதில் குணமாகுமா?

கண் விழித்து பார்த்தவள் முதலில் கண்டது தன் கைவளைவில் தன் கையை தாங்கி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கண்மணியைத் தான்.

“அக்…கா…” திணறியபடி அழைக்க…

அவளும் அபியைத் தான் பார்த்தாள்.

“உடம்பெல்லாம் வலிக்குதுக்கா… அங்க… அந்த….” பேச திராணியற்றவள் மெல்ல, மெல்ல தான் கொண்ட இன்னல்களை தாயைப் போல தன்னை பாதுகாத்துக் கொண்ட தமக்கையிடம் கூறினாள்.

கண்மணிக்குள்ளும் தாங்க முடியவில்லை.

அவளின் கைகளை அழுத்தி கொடுத்தவள்,

“அபி அழாதடா” என தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டவள், உனக்கு வலிக்க காரணமானவங்களோட வலியைப் பார்க்காம நா ஓயமாட்டேன் அபி. அதுவரைக்கும் இந்த வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கோடா” என அபியைத் தனது மடியில் சாய்த்து ஆறுதல் உரைத்தாள்.

“அக்கா இந்த உடல்வலியைக் கூட பொறுத்துப்பேன். ஆனா, மத்தவங்க பேசப்போற சொல்லோட வலியை எப்படிக்கா தாங்குவேன். அன்னைக்கு அந்த இன்ஸ்பெக்டர் பேசுனதைக் கேட்ட தானே!” என்று விசும்பியபடி ஆதரவு தேடும் சேயாய் அக்காளின் மடியில் படுத்துக் கொண்டு அவளது முகத்தை ஏறிட்டாள்.

“அபி… நம்ம வாழ்க்கையில எப்பவும் தேவையில்லாத அழுக்குகளையும் தீமைகளையும் மூட்டை கட்டி தோள்ல சுமந்துகிட்டு திரியக் கூடாதுனு நீ தான அடிக்கடி சொல்வ? அதே தான் உனக்கும் இப்ப சொல்றேன்… தேவையில்லாத எந்த எண்ணத்தையும் தூக்கி சுமக்காத…

உன்னோட இந்த நிலைக்கு ஒரு சதவீதம் கூட நீ காரணம் கிடையாது. அதை மனசுல பதிய வச்சுகிட்டு, தைரியமாக இரு. உன் கூட எப்பவும் இந்த அக்கா இருக்கேன்றத மறந்துடாத…” என்று மேலும் சில நிமிடங்கள் அவளுக்கு ஆறுதல் கூறி தங்கையின் உச்சியில் இதழ் பதித்தாள் கண்மணி.

இருவரும் பேசுவதை அமைதியாக வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஜீவாவும்

‘ஏற்கனவே டீமோட்டிவா ஃபீல் பண்ணிட்டு இருக்கா… இப்போ என்னைப் பார்த்தா மேற்கொண்டு குற்ற உணர்ச்சியாகிடுவா!!! அப்பறமா வரலாம்’… என எண்ணிக் கொண்டவன், அலைபேசியில் கண்மணிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வந்த வழியே சென்றான்.

அபியிடம் பேசி விட்டு அவளை தூங்க வைத்த பின் வெளியே வந்த கண்மணி, அவளுக்காக காத்திருந்த ஜீவாவோடு வித்யாவை காணச் சென்றாள்.

அலைபேசியில் வித்யா குறிப்பிட்டிருந்த முகவரிக்கு வந்திருந்தார்கள்.

காவலாளியின் அனுமதி பெற்று உள்ளே சென்றனர். பசுமை போர்த்திய புல்வெளியில், மூங்கிலால் வேயப்பட்ட நான்கு நாற்கலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு நாற்காலியில் வித்யாவும், எதிரே இருந்த நாற்காலியில் அறுபதின் இறுதியில் இருக்கும் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தனர்.

வித்யாவின் அருகே சென்ற கண்மணி, “ஆன்ட்டி..” என்று அழைக்க…

“வா கண்மணி இங்க வந்து உட்காரு” என அருகிலிருந்த இருக்கையைக் காட்டியவர்,

“கண்மணி உன் கிட்ட முன்னமே சொல்லி இருக்கேன்ல… சார் தான் என்னோட சீனியர். நேத்து தான் ஊருல இருந்து வந்தாங்க.. நம்ம அபி கேஸ் விஷயமா சார் கிட்ட ஆலோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். அதான் உன்னையும் வர சொன்னேன்” என்றவர்,

காவல் உயர் அதிகாரிகள் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், பெண் ஆய்வாளரின் மோசமான நடவடிக்கையையும், வழக்கை திரும்ப பெற கட்டாயப்படுத்துவதையும் விரிவாக விளக்கியவர்,

“நம்ம இத்தனை பேர் வழக்கறிஞர்களா இருந்தும், துணிச்சலா மிரட்டுறாங்கனா இதுக்குப் பின்னாடி பெரிய மாஃபியா இருக்கும்னு எனக்குத் தோணுது சார்.

அதுவுமில்லாம ஏற்கனவே மலேசியாவில கண்மணி விசயத்திலயும் இது போல வேறு மாதிரி நடந்துருக்கு” என்று விளக்கியவர், “அவன் தான் இதுக்கும் காரணம்னு நா உறுதியா சொல்லுவேன் சார்” என்றார்.

“வித்யா… காவல் துறை இந்த மாதிரி முழு வீச்சோட குற்றவாளிக்கு ஆதரவு கொடுக்க இறங்கி இருக்காங்கன்னா, கண்டிப்பா நீ சொன்ன மாதிரி இந்த குற்றத்துக்கு பின்புலமா ஒரு பெரிய கூட்டம் இருக்கும்.

அவங்களை நாம வெளிக் கொண்டு வரனும்னா கண்டிப்பா நமக்கு காவல்துறையில இருக்க சில நல்லவங்க உதவியும், ஊடகத்தோட உதவியும் வேணும். இந்த வழக்குல நியாயமான விசாரணை நடக்கனும்னா அதுக்கு நேர்மையான ஒரு அதிகாரி வேணும்” என்றதும்,

வித்யா, கண்மணி, ஜீவா மூவரும் அவரைப் புரியாமல் பார்க்க…

“ஆமா, அதற்கான நடவடிக்கையை நாம முதல்ல எடுக்கணும்.

முதல்ல மாதர் சங்க அமைப்பினரோட ஒத்துழைப்பும், ஊடகங்களோட ஒத்துழைப்பும் நமக்கு இருந்தா விசாரணைக்குழு அதிகாரிகளை மாத்துறதுக்கு எண்பது சதவிகித வாய்ப்பு இருக்கு” என்றார் அந்த அனுபவம் முதிர்ந்த வழக்கறிஞர் சண்முகம்.

“தாத்தா… நீங்க சொல்றது எனக்குப் புரிஞ்சிடுச்சு. அதற்கான வேலைகள்ல நாங்க உடனே இறங்குறோம்” என்று ஜீவா ஆமோதித்து பேச… கண்மணி தனக்கு இறைவன் அனுப்பிய தூதுவர்களாகவே மூவரையும் பார்த்தாள்.

“கண்மணி நாங்க இருக்கோம். என்ன நடந்தாலும் நீ கலங்கக் கூடாது. துணிஞ்சு நில்லு” என்று சண்முகம் கூற…

“சார் நா எதுக்காகவும் இந்த வழக்குல இருந்து பின் வாங்க மாட்டேன் சார். என் உயிரே போகிற நிலைமை வந்தாலும், என் தங்கைக்கு நீதி வாங்கிக் கொடுத்துட்டு தான் உயிரை விடுவேன். அபியை சீரழிச்ச அயோக்கியர்களுக்கு நாம சேர்ந்து வாங்கித் தரப்போற தண்டனையப் பார்த்து இனி எந்த பெண்ணுக்கும் தீங்கு விளைவிக்கனும்னு மத்த ஆண்கள் கனவுல கூட நினைக்கக் கூடாது” என சீறிய குரலில் சூளுரைத்தாள்.

ஊக்கம் கொண்ட உடலும் மனமும் மேலும் தெம்பாக நிமிர்ந்து கொண்டது.

கண்மணி கொஞ்சம் கொஞ்சமாக அபிக்கு சாதகமான ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்க… அவளின் கணவன், வித்யா, வித்யாவின் சீனியர், ஜீவா, இன்ஸ்பெக்டர் சேகர் என அனைவரும் அவளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

பத்து நாட்களுக்குப் பிறகு அபி டிஸ்சார்ஜ் ஆகி வித்யாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாள். மகளைப் பெற்ற தாயின் மனநிலையில், தனது சித்தியை வைத்துப் பார்த்த கண்மணி, வேணியும், வடிவும் சிறிது நாட்களுக்கு வித்யாவின் வீட்டிலேயேத் தங்க ஏற்பாடு செய்திருந்தாள்.

கொடுக்கும் மருந்துகள் அனைத்தும் உடலை மட்டும் குணமாக்கும்!!! மனதிற்கு??

கட்டிலில் அமர்ந்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்த அபியிடம் வேணி வர அவரை கண்டு திரும்பிக் கொண்டாள்.

“அபி…” அழுகையோடு அவர் அழைக்க…

“தயவு செஞ்சு வெளிய போறீங்களா??? என்னை தனியா இருக்க விடுங்க…” என்று பெருங்குரலில் கத்தினாள்.

சத்தம் கேட்டு வடிவு பாட்டியும் வர இருவரையும் புழுவாய் பார்த்தாள்.

அந்த பார்வையில் அங்கேயே இருவரின் ஜீவனும் செத்து போனதாய் உணர்ந்தனர்.

“அபி.. எங்களை மன்னிச்சுடுமா…” வடிவு கூற

“என்ன மன்னிப்பா?? நான் எதுக்கு உங்களை மன்னிக்கனும்.. உங்களை மன்னிக்க நான் யாரு?? உங்க சொந்தமா உறவா?” என்று அவள் கேட்க…

இருவரும் குற்ற உணர்வில் தலை கவிழ்ந்தனர். ஏற்கனவே அபியின் இந்த நிலைக்கு தாங்களும் ஒரு காரணம் என எண்ணி உள்ளே புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் அபியின் பேச்சால் வெந்து போனார்கள்.

“என்னை வச்சு தானே அக்காவை கஷ்ட படுத்துனீங்க.. இப்போ என்னை வச்சே கடவுள் உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டான் பாத்தீங்களா??? எப்படிமா என் வாழ்க்கை நல்லா அமையனும். அதுக்கு அக்காவோட வாழ்க்கை எந்த குழியில விழுந்தாலும் பரவாயில்லைனு தானே நினைச்சுட்டு இருந்தீங்க.. இப்போ என்னோட வாழ்க்கை ரொம்ப நல்லாவே மாறிடுச்சுல… இப்போ உங்களுக்கு சந்தோசமா???”

தீயாய் வார்த்தைகளை அள்ளி அவர்கள் மேல் இறைத்து கொண்டிருந்தாள் அபி.

அச்சூட்டில் இருவரும் வெந்து விழி நீரை சிந்தி கொண்டிருக்க அந்நேரம் அங்கு வந்த ஜீவாவை பார்த்தவள் ஏதும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

“அபி, ரிலாக்ஸ். ஏன் இப்படி ஸ்ட்ரையின் பண்ணிக்கிற?” என்றவன், “ஆன்ட்டி, பாட்டி ரெண்டு பேரும் கொஞ்சம் அவளைத் தனியா விடுங்க” என்றதும், இருவரும் மெல்ல வெளியேறினர்.

“எல்லாருக்கும் தான் சொல்றேன்.. எனக்கு யாரையும் பாக்க பிடிக்கல… யார் கூடவும் பேச பிடிக்கல…” என்று முகம் திருப்பாமல் பதில் சொன்னவள் அவன் புறம் திரும்பி,

“உங்களையும் சேர்த்து தான்… இங்க இருந்து கிளம்புங்க…” என்று ஜீவாவிடம் கூறிவிட்டு மீண்டும் முகம் திருப்பி கொண்டாள்.

“என்னையுமா? ஏன் அபி நா என்ன செஞ்சேன்?” புரியாமல் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“ஏன்னா நான்.. நான்… உங்களை வெ… றுக்க..றேன்.. உங்கள மட்டும் இல்ல… உங்க ஆண் வர்க்கத்தையே வெறுக்குறேன்… உங்களுக்கெல்லாம் பொண்ணுங்க யூஸ் அன்ட் த்ரோ பொருளா போயிட்டாங்க இல்ல.. பொண்ணுங்க வாழ்க்கை எப்பவும் உங்க காலுக்கு கீழ தான்னு நீங்களா முடிவு பண்ணிட்டீங்களா?? யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது? என் அக்காவோட வாழ்க்கையும் ஒரு ஆணால தான் சிதைஞ்சு போச்சு. இப்போ என்னோட வாழ்க்கையும் அப்படி தான் ஆகியிருக்கு… நீங்க யாரும் இல்லாத ஒரு உலகமா பார்த்து போயிடனும்.. தயவு செஞ்சு என் கண்ணு முன்னால நிக்காதீங்க… கிளம்புங்க… ப்ளீஸ்” என்று வாயிலை நோக்கி கை காட்டியவாறு கத்தினாள்.

அதற்கு மேல் பேச இயலாதவனாக எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினான்.

அவன் சென்றதன் பின் முகம் மூடி அழுது கொண்டிருந்தாள் அபி.

மாதர் சங்க நிர்வாகிகளைப் பார்க்க வெளியே சென்றிருந்த வித்யாவும், கண்மணியும் வீடு திரும்பிய போது அபியின் அழுகை சத்தம் தான் அவர்களை வரவேற்றது.

அவளை ‘என்ன சொல்லி சமாதானம் செய்வது?’ என்று தெரியாமல் நின்றிருந்த வடிவும், வேணியும்…

வித்யாவைக் கண்டதும் நடந்த அனைத்தையும் கூறி அழுக… கண்மணி அடுக்களைக்குச் சென்று உணவுத் தட்டுடன் வெளியே வந்தவள், தங்கையைக் காண அவளறைக்குச் சென்றாள்.

“அபி செல்லம், சாப்பிட வா. சாப்பிட்டு மாத்திரை எடுத்துக்கனும்ல” என்று கண்மணி கேட்க

“எனக்கு பசிக்கல அக்கா..” என்றாள் எங்கோ பார்த்தபடி.

அவளின் அருகில் போய் அமர்ந்து கொண்டவள்,

“அபி, இப்படி இருக்காத அபி.. என்னோட பழைய துறுதுறு அபியா மாறு.. இந்த அபி நல்லாவே இல்ல…” என்றாள்.

“நானும் அதே தான் அக்கா சொல்றேன்.. நான் தான் பழைய அபி இல்லையே!!! கற்பு கெட்டவள் அது தானே இப்போ எனக்கு கிடைச்ச பட்டம்” என்று கண்ணீர் வடிக்க…

அவளின் விழி நீரை துடைத்து விட்டவள்,

“யாரு சொன்னது அபி? இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வச்சு உன்னை நீ எப்படி இப்படி எடை போடலாம்? பொண்ணோட ஒழுக்கம் அவ கற்புல இருக்கிறது உண்மை தான்… ஆனா அது அவ உடம்புல இல்ல.. மனசுல இருக்கு தெரிஞ்சுக்கோ… மனசு அளவுல நீ இன்னும் பரிசுத்தமான பெண் தான்.. அதை முதல்ல நீ தான் நம்பனும்…” என்று புத்தி கூறினாள்.

அக்காவின் பேச்சுக்களை அமைதியாக கேட்டு கொண்டிருந்த அபி,

“எல்லா தப்புக்கும் தண்டனை அதை செஞ்சவனுக்கு சேரும் போது என்னை போல கற்பழிக்கப்பட்ட பொண்ணுகளுக்கு மட்டும் ஏன் தவறே செய்யாம அது எங்க தலை மேல விழுது?” விசும்பு கொண்டே கேட்டாள்.

“ஒரு விசயத்தை புரிஞ்சிக்கோ அபி. ஏற்கனவே நான் சொன்னது போல நீ பரிசுத்தமானவ. உன்னை நீயே கற்பழிக்கப்படவனு சொல்லாத. ஒரு பெண்ணோட உரிமையில்லாம அவளை உறவுக்கு ஈடுபடுத்துறது பெயர் வன்புணர்வு. கற்பழிப்பு இல்லை. என்னை நம்பு… இந்த அக்காவை கடைசி வரை நம்பு… உனக்கு அநீதி இழைச்சவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன்…” என்று உரக்க குரலில் கண்மணி கூற…

“எனக்கு நம்பிக்கைனு ஒன்னு இருக்குன்னு சொன்னா அது நீ மட்டும் தான்க்கா..” கண்மணியை கட்டிக் கொண்டு அழுதாள் அபி.

அவளை ஆதுரமாய் வருடி கொடுத்தவள்,

“ஜீவா என்ன தப்பு பண்ணுணான்? அவனை ஏன் உதாசீனப்படுத்துற?” என்று கேட்டாள்.

அபியோ பதில் கூறாமல் அமைதியாக இருக்க…

“சொல்லு அபி… எந்த தப்பும் செய்யாவதவனை தண்டிக்கிறது தப்பில்ல?” என்று கேட்க

“அவர் எந்த தப்பும் செய்யல அக்கா… நான் தான் பாவியாயிட்டேன்… அவருக்கு நான் சரியானவ இல்ல… அவர் வாழ்க்கை நல்ல விதமா அமையனும் அந்த எண்ணத்துல தான்.. என்னோட காதலைக் கொன்னு புதைச்சுட்டு அவர் கிட்ட அப்படி கடுமையா நடந்துகிட்டேன்… எனக்கும் தெரியும்.. அவர் என்னை கைவிட மாட்டார்னு… ஆனா?? எனக்கிருக்க குற்ற உணர்வே காலம் பூரா என்னை கொன்னுடும்… அவர் வாழ்க்கை நல்ல விதமா அமைஞ்சா தான் எனக்கு திருப்தி… என்னை இந்த ஒரு விஷயத்துல கட்டாயப்படுத்தாத அக்கா..” என்று கூற

அபியின் மனம் அதுவாக மாறும் வரை அவளை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணிய கண்மணியும் அதற்கு மேல் அவளிடம் ஜீவா பற்றிய பேச்சுக்களை எடுக்க வில்லை.

அபியின் மனதில் ஜீவா மீதான காதலின் ஆழம் தெளிவாக தான் தெரிந்தது.

ஆனால் சூரியனை மறைத்து நின்ற மேகமாக நடந்து முடிந்த கசப்பான சம்பவம் அவள் காதலை மறைத்து கொள்ள செய்தது.

காலமே காயத்திற்கு மருந்து.

தங்கையை சமாதானப்படுத்தி உறங்க வைத்தவள், நேரே ஹாலுக்கு வந்தாள். நீள் இருக்கையில் அமர்ந்திருந்த வித்யாவிடம் ‘ஜீவா எங்கே?’ என்று சைகையில் கேட்க, அவரும் ஜீவா வாசல்புறம் இருப்பதாக கைக் காட்டவும், வாசல் நோக்கிச் சென்றாள் கண்மணி.

வாசலை ஒட்டி இருக்கும் மாடிப்படியில், கைகளால் தலையைத் தாங்கிய படி அமர்ந்திருந்தவனைப் பார்க்க வேதனையாகத் தான் இருந்தது.

தன் தங்கையை விரும்புவதாக தன்னிடம் வந்து கண்ணியமாக சொன்னவனின் குரல் இன்னும் கண்மணியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இரண்டு உள்ளங்களும் காதலைச் சுமந்து நிற்க… ஒரு மனம் தவிப்புடனும், இன்னொரு மனம் தாழ்வு மனப்பான்மையிலும் துடிக்கிறதே! இந்த நிலை யாரால் என எண்ணியவளின் கண்கள் சினத்தைக் கொப்பளிக்க… பெரும் பிரயத்தனப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டவள்,

“ஜீவா” என்று மெதுவாக அவனது தோளைத் தொட… நிமிர்ந்து பார்த்தவனின் முகம் மிட்டாயைத் தவற விட்ட குழந்தையின் முகத்தை ஒத்திருந்தது.

“கண்மணி நா என்ன தப்பு செஞ்சேன் கண்மணி. ஆணா பொறந்தது என்னோட தவறா? இல்லை உன் தங்கைக்கு ஆறுதலா இருக்கணும்னு நினைச்சேனே அது என் தவறா?” என்று தழுதழுக்கும் குரலில் கேட்க… கண்மணிக்கு அழுகை வெடித்து விடும் போல் தோன்றியது.

‘எப்பொழுதும் குறும்புடன் சிரித்துப் பேசி வளைய வரும் வாலிபன் இன்று இப்படி சிறு குழந்தையாய் ஏங்குவது என் தங்கைக்காக தானே? ஆனால் அவளோ…’ என்று தங்கையின் வார்த்தைகளை எண்ணியவள்,

“ஜீவா உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றதும்,

‘கேள்' என்பதைப் போல் பார்த்தான்.

“இந்த நிலைமையிலையும் நீ அபியை விரும்புறியா?” என்றதும், வேற்றுகிரகவாசியையப் போல் அவளைப் பார்த்தவன்,

“எந்த நிலைமையில இருந்தாலும் அபி என்னோட அபி மட்டும் தான்” என உறுதியான குரலில் கூறியவனைப் பார்த்து புன்னகைத்தவள், தங்கையின் மனநிலையைப் பற்றி அவனிடம் கூறினாள்.

“உனக்கு அபி வேணும்னா நீ தான் அவ மனநிலையை உன் காதலால மாத்தி அவளை அடையணும்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ஜீவா தன் தூய அன்பை அபியிடம் கொடுத்து அவளின் மனதை மாற்றி அவள் மனதினுள் மீண்டும் நுழைவானா?

காதலா? கழிவிறக்கமா எது வெல்லும்?


Post a Comment

0 Comments