கடமை புரிவாரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
-பாரதி
ஜீவா ஒரு பக்கம் அபியின் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் அவளின் நிலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான்.
அதன் படி அவர்களின் நட்பு வட்டத்தில் பெரிதாக மதிக்கப்படும் அந்த பத்திரிகை அலுவலகத்தின் தலைமை நிருபரை நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தான்.
அவர்களிடம் அபிக்கு நடந்தவற்றை முழுதாக சொல்லி முடித்தவன்,
“இந்த கேஸை காவல்துறை சரியான முறையில எடுத்து நடத்த மாட்டேங்குறாங்க சார்… தட்டி கழிக்கிறாங்க.. கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க சொல்லி ரொம்ப பிரஷர் கொடுக்குறாங்க.. நாங்க அதுக்கு ஒத்து போறதா இல்ல… கண்டிப்பா எப்படியும் இதை மூடி மறைக்க தான் பார்ப்பாங்க… நாங்க இந்த வழக்கை கைவிடப் போறது இல்ல.. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்.. அதுக்கு உங்களை போல நேர்மையான மீடியாவோட சப்போர்ட் எங்களுக்கு வேணும்..” என்று கூற
சமீபத்தில் அதிகமாக பேசப்படும் விவகாரம் என்பதால், தங்கள் முழு ஒத்துழைப்பை அவர்களுக்கு தருவதாக கூறிட… தாங்கள் கொண்ட செயலில் கிடைக்கும் முதல் வெற்றி என அக மகிழ்ந்தான் ஜீவா.
இதே போல தான் வித்யாவும், கண்மணியும் ஆதரவு கேட்டு மாதர் சங்க நிர்வாகிகளை சந்திக்கச் சென்றிருந்தனர். வழக்கைப் பற்றிய பிண்ணனியையும், விபரங்களையும் தெளிவாக எடுத்து சொல்லவும், மாதர் சங்கம் சார்பில் தங்கள் பங்களிப்பைத் தருவதாக உறுதியளிக்கவும், அடுத்ததாக அவர்கள் திட்டத்தை செயல்படுத்தினர்.
வீதியில் போராட்டத்தில் அனைவரும் இறங்கிட, ஆரம்பத்தில் பெரிதாக ஏதும் பேசப்படாமல் இருந்தாலும் சிறிது சிறிதாக பரவ தொடங்கியது விவகாரம்.
ஒரு சில குறிப்பிட்ட பத்திரிகையில் மட்டுமே செய்தி வந்து கொண்டிருந்தது. இரண்டு, மூன்று என நாட்கள் விரிய மேலும் ஒரு வார காலமாக போராட்டம் நீண்டு கொண்டே சென்றது. அபியின் வழக்கில் பின்னிருந்து செயல்பட்ட முக்கிய புள்ளிகளுக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்தது. ஆனாலும், அவர்களும் அசரவில்லை.
ஒரு வழக்கையே திரும்பப் பெற வைக்க அழுத்தம் கொடுத்தவர்கள், தங்களுக்கெதிராய் போராட்டம் நடப்பதை அவ்வளவு எளிதில் அனுமதித்து விடுவார்களா என்ன?
அபியின் வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கவும், குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரியும் மாதர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் செய்ய… காவலர்கள் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து பத்து நாட்களும் இதே நிகழ்வு நடைபெற, கைது செய்து கூட விடுவித்தனர். அப்போதும் பெண்கள் ஆர்பாட்டத்தை கைவிட மறுக்கவே, இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் பெற ஆரம்பித்தது.
இறுதியில் தீயாக பரவிய அபியின் வழக்கில், விசாரணை குழு மாற்றப்பட்டு இவர்களது போராட்டத்தின் விளைவாய் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கமிஷனர் பணி நீக்கம் செய்யப்பட்டது அவர்களுக்கான பெரும் வெற்றி தான்.
புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட கமிஷ்னரின் சைரன் பொருந்திய வாகனம் சைரன் ஒலிக்க கமிஷ்னர் அலுவலகத்திற்குள் நுழைய… கையில் ஒலிவாங்கியுடன் தயாராக இருந்த நிருபர்கள் வாகனத்தை நோக்கி ஓடி வர… ஆறடி உயரத்தில், கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, காக்கி உடையில் விறைத்து நின்ற உடற்கட்டோடு வாகனத்தை விட்டு இறங்கினான் கதிரவன் ஐ.பி.எஸ்.
நிருபர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
“சார் அபிநயா பலாத்கார வழக்குல குற்றவாளியை கண்டுபிடிச்சு கைது பண்ணுவிங்களா? இந்த வழக்குக்கு பின்புலமா ஒரு பெரிய மாஃபியா செயல்படுறதா சொல்றாங்க. அவங்களை கண்டறிந்து தண்டனை வாங்கிக் கொடுப்பிங்களா?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, தனது குளிர் கண்ணாடியை கழட்டிவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“கைது பண்ணுவிங்களா? கண்டுபிடிச்சுடுவிங்களானே கேட்குறீங்களே! அதுக்குத் தானே நா மாற்றல்ல இங்க வந்துருக்கேன். ஒரு வேளை இந்த கேஸ் எனக்கு ரொம்ப சவாலா இருக்கும்னு மறைமுகமா சொல்ல வர்றிங்களா? சவால்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சீக்கிரமே இந்த கதிரவனோட அதிரடிய பார்க்கத் தானே போறீங்க. ஸ்டே ட்யூன்ட்” என்றவன், சிரித்தபடி கண்ணாடியை கண்களில் பொருத்தியபடி அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டான்.
காவலர்களின் கலந்தாலோசனையில் கலந்து கொண்டவன், அபியின் வழக்கிற்காக நியமிக்கப்பட்ட தீபிகா என்ற பெண் ஆய்வாளருடனும், சசிக்குமார் என்ற உதவி ஆய்வாளருடனும் விசாரணைக்குக் கிளம்பினான்.
விசாரணையின் முதல் படியாக, மூவரும் அபியின் அலுவலகத்தில் இருந்தனர்.
ஏற்கனவே சேகரின் சேவையால் முகம் லேசாக வீங்கிப் போய் இருந்த செக்யூரட்டி வேலுவிடம் கண்காணிப்பு கேமரா பற்றிய விபரங்களை கேட்டான் கதிர்.
காக்கி உடையை கண்டதும் கை, கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தான். ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தவன், மீண்டும் அலுவலகத்திற்கு காவலர்கள் வரவும் நடுங்கிய படியே அவர்கள் கேட்ட விபரங்களை கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த கதிர்,
“இன்ஸ்பெக்டர் தீபிகா.. வீடியோவை செக் பண்ணிங்களா? ஏதாவது க்ளூ கிடைச்சதா?” என்று கேட்க,
“சார், செக் பண்ணியாச்சு சார்.. ரிப்போர்ட்ல இருக்க மாதிரி அந்த பொண்னு அஞ்சு மணிக்கே ஆஃபிஸை விட்டுப் போன மாதிரி தான் இருக்கு..” என்கவும் தனது தாடையை நெருடினான்.
“அப்படியா? அப்போ அந்த பொண்ணு சொன்னது…!!” என்று தனக்குள் கேட்டுக்கொண்டவன்,
“சசி, நீங்க இவனை நம்ம கஸ்டடிக்கு கூட்டிட்டுப் போங்க.. தீபிகா நீங்க என்னோட அபி வீட்டுக்கு வாங்க.. அவங்க கிட்ட கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டி இருக்கு..” என்று கூற அவன் சொல்படி சசி வேலுவைத் தங்கள் இருப்பிடத்திற்கும், தீபிகா கதிரவனோடு கண்மணியின் வீட்டிற்கும் சென்றனர்.
கண்மணியின் வீட்டில் வித்யா மற்றும் கண்மணியிடம் தங்களை பற்றித் தெரிவித்தவர்கள் அபியை அழைத்து வர சொல்ல… வித்யா அவளை அழைத்து வந்து ஹால் சோபாவில் அமர வைத்தார்.
சென்ற முறை நடந்த விசாரணையின் காட்சிகள், கண்ணுக்குள் வலம் வர… தேகம் நடுங்க அமர்ந்தவளின் கைகளை ஆதரவாக பற்றி அழுத்தம் கூட்டி ‘பயப்படாத’ எனும் வகையில் அவள் எதிரே அமர்ந்தாள் தீபிகா.
“சொல்லுங்க அபி.. உங்க ஆபிஸ்ல இருந்து நீங்க 5 மணிக்கே கிளம்பி போயிட்டதா சிசிடிவி புட்டேஜ்ல இருக்கே.. அப்பறம் எப்படி உங்க மேனேஜர் உங்களை கிட்னாப் பண்ணி இருக்க முடியும்? அன்னைக்கு என்ன நடந்துச்சுனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..” என்றாள்.
சிறிது நேரம் யோசித்தவள் பின்,
“இல்ல மேம்.. மதன் தான் நான் ரெடி பண்ணிட்டு இருந்த ப்ராஜக்ட் விஷயமா க்ளைண்ட் கிட்ட இருந்து முக்கியமான டீடைல்ஸ் வாங்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பினது.. நான் டீடைல்ஸ் வாங்கிட்டு திரும்பி வரும் போது அவரே எனக்குக் கால் பண்ணி ஆபிஸ் ஃப்ரண்ட் எண்ட்ரன்ஸ்ல ஒயரிங் ஒர்க் போயிட்டு இருக்கு நீங்க பேக் டோர் வழியா வந்துடுங்கனு சொன்னான்… நானும் அவன் ரொம்ப நல்லவன்னு நம்புனதால சரினு பேக் டோர் வழியா உள்ள போயிட்டேன்..” என்றதும்,
“உங்க ஆபிஸ் பேக் சைட்ல செக்யூரிட்டி கேமரா கிடையாதா?” என்று தீபிகா கேட்க…
“இருக்கு மேடம்.. ஆனா அது கொஞ்ச நாளா அவுட்ஆஃப் சர்வீஸ்ல இருந்துச்சு..” என்றாள் அபி.
கதிரவன் தீபிகாவை பார்க்க…
‘வேலு கிட்ட கேட்டப்ப இத தான் சொன்னான்..’ என்று விழியால் அவனிடம் கூற,
ஒரு நீண்ட மூச்சை வெளி விட்டவன் எழுந்து நின்று கொண்டு, “இந்த வண்புணர்வு குற்றத்துக்கு பின்புலமா யாரும் இருக்கிறதா நீங்க யாரையும் சந்தேகப்படுறீங்களா?” என்று பொதுப்படையாக கேட்க…
“ஆமா சார்” என்ற கண்மணி,
மலேசியாவில் அவளுக்கு நடந்த அநீதி, அதனைத் தொடர்ந்து அவள் சென்னை வந்தது, சட்டம் பயில்வது அபி சென்னைக்கு வந்த காரணம், அபி மருத்துவமனையில் இருக்கும் போது, மலேசியாவிலிருந்து வந்த போன் கால் மிரட்டல் அதனைத் தொடர்ந்து மதனின் தலைமறைவு என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.
“ம்ம்” என்பதாக தலையசைத்தவன், “இது பெரிய சங்கிலித் தொடரா நீளும் போல இருக்கே! ஒவ்வொரு முனையா தான் பிடிச்சு முன்னேறனும்” என்றவன்,
“தீபிகா நீங்க மத்த டீடைல்ஸ் கேட்டு ரெக்கார்ட் பண்ணிட்டு ஸ்டேஷன் வாங்க…” என்றபடி அவர்களிடம் கூறிக்கொண்டு வெளியேறினான்.
தன்னுடைய காருக்கு வந்து கதவை அடைத்தவன் முகம் சினத்தில் சிவக்க, காரின் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.
“ஒரு பொண்ணை பழிவாங்க இன்னொரு பொண்ணை சூறையாடி இருக்கானுங்க. இன்னும் எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கைய சீரழிச்சானுங்களோ! இந்த மாதிரி சீப் ரோக்கர்ஸ்ஸோட ……. கட் பண்ணனும்” என்ற படி ஜீப்பை கிளப்பினான்.
அவன் சென்ற பின் அபியிடம் திரும்பிய தீபிகா,
“அப்பறம் என்ன நடந்தது சொல்லுங்க?” என்ற படி கையில் இருந்த சிறு கையடக்க ரெக்கார்டரில் பதிவு செய்யத் தொடங்கினாள்.
“அன்னைக்கு ரிப்போர்ட் வாங்கிட்டு பேக் டோர் வழியா வந்ததுக்கப்பறம் வீட்டுக்கு கிளம்ப ரெடியானேன். அப்போ மதன் வந்து அந்த ரிப்போர்ட் உடனே வேணும்னு கேட்டதால சரி முடிச்சுட்டு போகலாம்னு இருந்தேன். அப்பறம் எங்க செக்யூரிட்டி வந்து ஏதாவது வேணுமா மேடம்னு கேட்கும் போது என் பாட்டிலைக் கொடுத்து தண்ணி பிடிச்சிட்டு வர சொல்லி வாங்கிக் குடிச்சேன். அவ்வளோ தான் எனக்கு நினைவு இருந்துச்சு.. அந்த தண்ணீய குடிச்சதுக்கு அப்புறம் உடம்புல ஏதோ வித்தியாசமா ஏதோ வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.. அப்பறம் நடந்ததெல்லாம் ஏதோ கனவுல இருக்க மாதிரி.. என்னை யாரோ எங்கயோ தூக்கிட்டு போற மாதிரியும்… அப்பறம் அப்பறம்… என் ட்ரெஸ…” என்று முடிக்க முடியாமல் அவள் விசும்பிட சுற்றி இருந்தவர்களும் முடியாமல் தலை கவிழ்ந்தனர்.
பின் ஒரு நெடு மூச்சோடு நடந்தவைகளை அபி கூற
“என்னால அவங்களை தடுக்க புத்தி சொன்னாலும் உடம்பு அசையாம அப்படியே அப்படியே…” என்று முகம் மூடி அழுதாள்.
“சரி எத்தனை பேர் அங்க இருந்தாங்க உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கா?” என்று தீபிகா கேட்க
“மூணு இல்ல நாலு பேர் நினைக்கிறேன்.. சரியா தெரியல..” என்றாள் அபி.
“அவங்கள்ல உங்க மேனஜர் தவிர வேற யாரையாவது இதுக்கு முன்னாடி பாத்த மாதிரி.. ஐ மீன் அவங்க வாய்ஸ் இதுக்கு முன்ன கேட்ட மாதிரி இருந்துச்சா?”
“இல்ல எனக்கு பெருசா எதுவும் நியாபகம் இல்ல..” என்றாள். ன்
“கொஞ்சம் நல்ல யோசிங்க அபி.. நீங்க கொடுக்க போற ஒவ்வொரு இன்பர்மேஷனும் இந்த கேஸுக்கு ரொம்ப இம்பார்ட்டன்ட்…”
தீபிகா கேட்க சிறிது நேரம் யோசித்தவள்,
அன்று முழுவதும் தான் ஒரு மாய உலகில் இருப்பது போன்ற பிரம்மை மட்டுமே நினைவில் இருந்தது. தீபிகா கேட்டதும் நீண்ட நேரம் யோசித்து பார்த்தவள்
“ஹான்.. யெஸ் மேடம்.. அவங்கள்ல ஒருத்தனோட வாய்ஸ் எங்கயோ கேட்டு இருக்கேன்..” என்றதும் தீபிகா
“அப்படியா?? யார் அது யோசிச்சு சொல்லுங்க..” என்றாள்.
“அது மதனோட ஃபிரண்ட்னு சொல்லி எங்க ஆபீஸுக்கு அடிக்கடி வர ஒருத்தன் அவன் பேர் சரத்.. அவனோட வாய்ஸ் மாதிரி இருந்தது…” என்று கூறினாள்.
“அப்படியா?” என்று குறித்து கொண்டவள்,
“வேற யாரோட குரலாச்சும் நினைவுக்கு வருதா…” என்று கேட்க
“இல்ல மேடம்.. அவ்ளோவா நினைவு இல்ல.. இது கூட சரத் மதனை எப்பவும் மதனு… ன்னு இழுத்து சொல்வான்.. அதை வச்சு தான் அவன்னு கெஸ் பண்ணேன்..” என்று கூறினாள்.
“இதை தவிர வேற ஏதாவது முக்கியமான க்ளூ ஏதாவது உங்களால நினைவு படுத்தி சொல்ல முடியுமா?” என்று கேட்க
சிறிது நேரம் அமைதியாக இருந்த அபி பின்,
“இல்ல மேடம் எனக்கு வேற எதும் நியாபகம் இல்ல…” என்று கூற
“ஓகே… ஏதாவது நினைவு வந்தா மறக்காம எங்களுக்கு சொல்லுங்க…” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டாள் தீபிகா.
அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அவள் கிளம்பிட அடுத்த அரை மணி நேரத்தில் கதிரவன் முன் அபியின் வாக்கு மூலத்தை சமர்ப்பிக்க வந்தாள்.
இங்கு, கதிரவனோ லாக்கப்பில் இருந்த வேலுவை ‘பளீர்’ என்று லத்தியால் அடி வெளுத்திட அவன் சுற்றி போய் தள்ளி விழுந்தான்.
“ஏன்டா பொறுக்கி.. திட்டம் போட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாண்டு இருக்கீங்க இல்ல… உங்களை எல்லாம் ரோட்ல ஓட விட்டு நாய் மாதிரி சுட்டா தான் அடுத்து வரவன் ஒரு பெண்ணை தொடவே யோசிப்பான்..” என்று அவன் மீண்டும் எட்டி உதைக்க
அவன் கால்களை பற்றிக் கொண்ட வேலு,
“சார், சார்… என்னை மன்னிச்சுறுங்க சார்… என் தங்கச்சி கல்யாணத்துக்கு மதன் சார் கிட்ட பணம் கேட்டு இருந்தேன்… அவர் தான் அவர் சொல்றபடி செஞ்சா ஒன்னுக்கு ரெண்டா போட்டுத் தரேணு சொன்னார்.. அதுக்காக தான் செஞ்சேன்.. என்னை மன்னிச்சுறுங்க சார்..” என்று கதறினான்.
“ஏன்டா நாயே உன் வீட்டு பொண்ணுக்கு வாழ்க்கை கிடைக்க அடுத்த வீட்டு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்குவியா?” என்று கேட்டபடி மேலும் தன் கோபம் குறையுமட்டும் அவனை அடித்து உதைத்து தள்ள…
அடிகளை வாங்கிய வேலுவிற்கோ,
‘இதுக்கு அந்த சேகர் அடி எவ்ளோவோ பரவாயில்ல.. அந்த ஆளாச்சும் உள்காயம் மாதிரி தான் அடிச்சான்.. இந்த ஆளு அடிச்ச அடியில ஒரு பக்கமே முகம் திரும்பிக்கிச்சு..’ என்று எண்ணி கொண்டு முகம் வீங்கிய படி கதிரை பார்த்துக் கொண்டிருந்தான்.
அடித்த கைகளை முறுக்கிக் கொண்டபடி நாற்காலியில் அமர்ந்த கதிரவன்,
“என்ன சசி, இந்த வேலு கொடுத்த அட்ரஸை வச்சி, அந்த மதனை கண்டுபிடிக்க சொன்னேனே? என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“சார், அவன் கொடுத்த அட்ரஸ்ல போய் விசாரிச்சப்ப.. அவன் கொஞ்ச நாளா வீட்டுக்கு வரதில்லனு சொன்னாங்க சார்.. சேகர் ரிலீஸ் பண்ணதுக்கு அப்பறம் எங்க போனான்.. என்ன ஆனான்னு எதுமே தெரியல சார்..” என்று கூறினான் சசி.
“என்ன சொல்ல வரீங்க? யாராவது அவனை கிட்னாப் பண்ணி இருப்பாங்கன்னா?” என்று கதிரவன் கேட்க..
“ஊர்ஜிதம் இல்ல சார்.. ஆனா யூகமா சொல்ல போனா… அவன் நம்ம கிட்ட உளறிட்டா தங்களோட ரகசியங்கள் வெளிப்பட்டு, அவங்க பேரும் கெட்டுட்டும்னு இந்த கேஸ்ல பின்னாடி இருந்து செயல்படுற சில முக்கிய புள்ளிகள் கூட பயந்து அவனைக் கடத்தி இருக்கலாம் சார்.. அப்படி இல்லனா போலீஸ் கேஸ்க்கு பயந்து போய் அவனே கூட தலைமறைவாகி இருக்கலாம் சார்...” என்றான்.
அவன் கூறுவதும் சரி தான் என்பதைப் போல் தலையசைத்த கதிரவன் முன் இப்போது,
“மதன் எங்க?” என்ற கேள்வி பூதாகரமாக விரிந்தது.
0 Comments