விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
-பாரதி
அன்று தன் அலுவலக அறையில் அமர்ந்து இருந்த கதிரவனிடம் தீபிகா வந்தாள்.
“சார், அபியோட வாக்குமூலம் வச்சும் அன்ட் அவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட் வச்சும் குற்றவாளிகள் மொத்தம் நாலு பேருன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது சார்… அண்ட் அதுல ஒருத்தன் மதனோட ஃபிரண்டா இருப்பானோன்னு அபி சந்தேகமா சொல்லி இருக்காங்க.. அதனடிப்படையில மதனோட கால் ரெக்கார்ட்ஸ் செக் பண்ணோம் சார்.. இதோ அதோட ரிப்போர்ட்” என்றபடி ஒரு கோப்பை அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பார்த்தவாறே அவளை மேலும் தொடர செய்தான்.
“இதோ இந்த சில நம்பருக்கு மட்டும் அவன் இந்த சம்பவம் நடக்குறதுக்கு முன்ன சில வாரமா நிறைய போன் கால் பண்ணி இருக்கான்.. அண்ட் ஒன் மோர் திங்க்.. இந்த நம்பரெல்லாம் இப்போ நாட் ரீச்சபில்.. சோ இவங்கள தேட சொல்லி டீம் செட் பண்ணியாச்சு சார்.. அதோட இந்த நாலு நம்பரையும் ட்ராக் பண்ண சொல்லி இருக்கு.. பை சான்ஸ் ஏதாவது ஒன்னு ஆக்டிவேட் ஆனாலும் நமக்கு யூஸ் ஆகும் சார்..” என்றாள்.
“குட், தீபிகா.. நீங்க போகலாம்..” என்று கதிர் கூறவும் அவனுக்கு சல்யூட் அடித்தவள் வெளியேறினாள்.
சில நிமிடங்கள் டேபிளில் பரத்தி வைத்திருந்த அபியின் வழக்கு விவரங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
மதனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல், அதனோடு அவனுடைய நண்பர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு என்பதை சட்டத்தின் முன் நிறுத்த தகுந்த ஆதாரம் தேடிக் கொண்டிருந்தான்.
“மே ஐ கமின் சார்” என்ற குரலில் நிமிர்ந்தவன்,
“எஸ்.. வாங்க சசி” என்றான்.
“சார்..” என்றபடி அவனிடம் ஒரு சில பேப்பர் கற்றைகளை கொடுத்தான்.
“அந்த மதனோட எம்.டி பத்தி டீடைல்ஸ் விசாரிக்க சொன்னேனே!! என்ன ஆச்சு?” என்று கதிர் கேட்க,
“எஸ் சார்.. அபி கலீக்ஸ் எல்லார் கிட்டயும் இன்வெஸ்டிகேட் பண்ணதுல.. அவங்க யாரும் அந்த எம்.டிய இது வரை பார்த்தது இல்லன்னு சொல்றாங்க சார்.. ஆபீஸ்ல இருக்க சில முக்கியமானவங்க.. அதாவது மதன் போல சில மேனேஜர் மட்டும் தான் அவர அடிக்கடி போய் பாத்துட்டு வருவாங்கன்னு சொன்னாங்க..” என்றான் சசி.
“இசிட்.. அப்போ அவனை தவிர இந்த ஆபீஸ்ல வேற யாரும் அவரைப் பார்த்தது இல்லையாமா?” என்று கேட்டான்.
“எஸ் சார்.. இந்த கம்பெனி மொத்தம் அஞ்சு ப்ரான்ச் வச்சுருக்காங்க.. சோ மதன் கூட இன்னும் நாலு அஞ்சு பேர் தான் அவங்க எம்டி இருக்கிறதா சொல்லப்படுற மலேஷியாக்கு அடிக்கடி வீடியோ கான்ஃபரன்ஸ்ல மீட்டிங் அப்பறம் டைரக்ட் காண்டாக்ட் வச்சு இருந்ததா சொல்லப்படுது..” என்றான்.
“அப்போ மத்த ப்ரான்ச்ல பேசிப் பார்க்க வேண்டியது தான?” என்று கதிர் கேட்க,
“சார்.. மத்த ப்ரான்ச் மேனேஜர்ஸ கூட இப்போ காண்டாக்ட் பண்ண முடியல.. ரெண்டு பேர் மட்டும் ஆபிஸக்கு வரதாகவும், இன்னும் ரெண்டு பேர் கொஞ்ச நாளா ஆபீஸ் வரது இல்லைனும் சொல்றாங்க..” என்றான்.
“அப்படியா?” என்று பேப்பர் வெயிட்டை உருட்டியவன்,
“ஏன் சசி.. மதனோட ஃ பிரண்ட்ஸ் மிஸ்ஸிங். இந்த ரெண்டு மேனேஜர்களும் ஆபிஸ் வரல.. ஏதாவது சிங் ஆகுதா?” என்று கையில் இருந்த பேனாவை வைத்து டேபிளில் வட்டமிட்டுக் கொண்டே கூற…
“எனக்கும் அதே டவுட் உண்டு சார்.. ஆனா தீபிகா மேம் கொடுத்த மதன் ஃப்ரண்ட்ஸ் நம்பரும் இந்த மேனேஜர்கள் நம்பரும் வேற வேற சார்.. அதோட இந்த நாலு மேனேஜர்களும் இது வரை மதனை ஒரு தடவ கூட மீட் பண்ணது கிடையாதுனு சொல்றாங்க.. அதான் எனக்கும் விளங்கல..” என்றான்.
“ஒரு வேலை இந்த ஊருக்குத் தெரியாம வச்சிருக்க பொண்டாட்டி மாதிரி.. ஊருக்கு தெரியாத ஃப்ரண்ட்ஷிப்பா இருக்குமோ என்னவோ? இந்த பன்னாடைகள்லாம் நல்லதுக்காக ஒன்னு கூடுவாங்களோ இல்லையோ.. கேடித்தனம் பண்ண ஒன்னு கூடுவாங்க.. யார் கண்டா இந்த மேனேஜர்கள் ரெண்டு பேரும் அந்த நாலு பேர்ல ரெண்டு பேராக் கூட இருக்கலாம்.. இல்லாமையும் இருக்கலாம்.. நீங்க இவங்கள டிராக் பண்ணுங்க..” என்று கூறிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவன்,
“அப்பறம்.. அந்த எம்டி.. அவன் மேல எனக்கு பெரிய டவுட் இருக்கு.. தன்னோட ஆபீஸ்ல பெரிய ஒரு விஷயம் நடந்து இருக்கு.. அப்பவும் அவன் வெளிய வராம புதருக்குள்ள இருக்குறது ரொம்பவே டவுட்டா இருக்கு.. அதனால அவனைப் பத்தி எந்த இன்பர்மேஷன் வந்தாலும் இமீடியட்டா எனக்கு சொல்லுங்க” என்று கூறினான்.
“சார் அப்பறம் வேலுவை ‘வச்சு’ விசாரிச்சதுல மதனோட கார் எங்க இருக்குனும், அவனோட கெஸ்ட் ஹவுஸ் எங்க இருக்குனும் சொல்லிட்டான் சார்” என்று சிரிப்புடன் சசி கூற, தீபிகாவையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றனர்.
பொதுவாக ஊருக்கு வெளியே புறநகர்ப் பகுதியில் தான் குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும். ஆனால், மதன் பிடித்திருந்த வீடோ, சென்னை மாநகருக்கு மையத்தில் இருந்தது.
பூட்டியிருந்த கேட்டை இழுத்துப் பார்த்த சசி, ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைத்தான்.
கைகளில் கையுறை மாட்டிக் கொண்டு மூவரும் வீட்டைச் சுற்றி பார்வையை செலுத்த, வீட்டிற்கு பின்னால் நின்ற பெரிய வேப்பமரக் கிளைகள் படர்ந்து சாய்ந்து நிற்க, கிளைகளுக்குப் பின்னால் நின்றது அந்த சிவப்பு வண்ணக்கார்.
வேலு வாங்கிய அடியில் கார் சாவி இருந்த இடத்தை கூறி இருந்தான். ஆகையால், கதிர் சாவியைப் போட்டு கார்க் கதவைத் திறக்க… மூவரும் காரின் முன்பக்கம், பின்பக்கம், டிக்கி என அலசி ஆராய்ந்ததில் ஒரு சில தடயங்கள் கிடைத்தன. அவற்றை சேகரித்துக் கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றனர்.
நான்கு காலி மதுபாட்டில்கள், சைடிஸ்கள் கலைந்து போன படுக்கை விரிப்பு, கசங்கிய உடைகள் என தனது கையில் இருந்த கேமிராவில் படம் பிடித்துக் கொண்ட தீபிகா,
“சார் இங்கப் பாருங்க. சுவத்துல கொஞ்சம் இரத்தம்” என்றதும், சுவற்றை உற்றுப் பார்த்த கதிர்,
“சசி இந்த ப்ளட்டோட சாம்பிள கலெக்ட் பண்ணிக்கோங்க” என்றான்.
மேலும் ஒரு சில சிறிய தடயங்களையும் சேகரித்துக் கொண்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.
‘குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவே அவன் உள் மனம் உரைக்க அவர்களை கைது செய்யும் நாளுக்காக காத்திருந்தான் கதிரவன்.
அபியின் வழக்கில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அபியின் மனம் அதே கிணற்றில் போட்டக் கல்லாகவே, பிரச்சினைக்குள் அமுங்கிப் போய் கிடந்தது.
ஜீவாவை விட்டு ஒதுங்கியே இருப்பாள்.
அவன் வீட்டில் இருக்கும் நேரம் அறையில் அடைந்து கிடப்பவள், அவன் வெளியே சென்ற பிறகே வெளி வருவாள்.
அன்றும் அப்படியே அவன் கார் வெளியே சென்ற பின்பே அறையில் இருந்து வெளி வந்தவள் வீட்டின் வரவேற்பு அறையில் அவன் அமர்ந்திருப்பதை கண்டதும் மீண்டும் தன் அறைக்குத் திரும்பினாள்.
அவன் விடுவதாக இல்லை. அவளுக்காக தானே அவன் அங்கு காத்திருந்தது!!
“ஒரு நிமிஷம் எனக்கு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான்
அவளோ பதில் கூறாமல் செல்ல…
“அபிநயா.. உன் கிட்ட தான் சொன்னேன்..” என்று குரலில் அழுத்தம் கொடுத்து அவன் அழைக்க,
“என்ன பேசணும்.. நமக்கு நடுவுல பேச எதுவும் இல்லை.. என்னை தொந்தரவு செய்யாதீங்க..” என்று சிடுசிடுத்தாள்.
“இருக்கே.. நிறைய இருக்கு.. நமக்கு நடுவுல.. ஆனா??” அவன் நிறுத்த அவன் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவள் அமைதியாகி விட, அவனே தொடர்ந்தான்..
“ஆனா நான் அதை பத்தி பேச வரல.. என்னைப் பத்தியோ என் காதலை பத்தியோ கண்டிப்பா நான் பேச மாட்டேன்.. இது வேற.. என்னை நம்பலாம்.” என்று கூறினான்.
எப்போதும் அவன் பேச்சில் இருக்கும் ஒட்டுதல் இல்லாது அந்நியமாக அவன் பேசவும் மனதில் வலி சுமந்தாள் அபி.
அமைதியாகப் போய் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் அவனைப் பார்த்தபடி.
“என்ன பேசனும்? சொல்லுங்க…” என்று கேட்க, அவன் அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.
“இப்படியே எத்தனை நாளுக்கு இருப்ப அபி?” என்று.
அவளோ பதில் கூறாமல் அமைதியாக இருக்க…
“அபி இது கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கை.. இதுல எந்த கஷ்டமும் இல்லாம சந்தோசமா வாழ்ந்துட்டு போயிட்டா அவனை மறந்துடுவோம்ன்றதால… இறைவனை நினைச்சுகிட்டே இருக்கனும்னு கஷ்டத்தை நமக்கு அனுபவிக்க சொல்றான் போல.. அந்த நிலையிலும் நாம அந்த கசப்ப கடந்து எப்படி முன்னேறுறோம்னு தான் பாக்கணும். நீ மட்டும் இல்லை எல்லாரும் ஏதோ ஒரு வகையில துன்பத்தை அனுபவிக்க தான் செய்றோம்.. ஏன் எங்க அம்மாவை எடுத்துக்கோ.. உன்னை போல எங்க அம்மாவும் ஒரு வகையில பாதிக்கப்பட்டவங்க தான். சாதிக்கொடுமையால உயிருக்கு பயந்து போய் தன் ஊரை விட்டே ஓடி வந்தவங்க தான்.. உன்னை போல அவங்க எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்னு நினைச்சு இருந்தா அவங்களால இந்த உயரத்துக்கு வந்திருக்க முடியாது..” என்றான்.
அவள் கேள்வியாக அவனைப் பார்க்க அவன் வித்யாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து பேசத் தொடங்கினான்.
இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு…
“தேனிக்கு பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன விவசாய கிராமத்துல பிறந்தவங்க தான் எங்கம்மா வித்யா. அந்த காலத்துல பொண்ணுங்களை அடிப்படைக் கல்விக்காக பள்ளிக்கு அனுப்புறதே பெரிய விசயம். ஆனா, எங்க தாத்தா, எங்கம்மாவை சட்டம் படிக்க கல்லூரி வரைக்கும் அனுப்பியிருக்காரு. அதுவும் மதுரைக்கு.
அங்க பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல தான் அப்பா ஆசிரியரா இருந்திருக்காங்க. பேச்சுவாக்குல ரெண்டு பேருக்கும் பழக்கமாகி, ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க.
எங்கம்மா கேட்ட எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்த எங்க தாத்தா, எங்க அப்பாவோட அம்மாவை சேர்த்து வைக்க ஒத்துக்கலை. காரணம் சாதி. அப்பா வேற சாதிங்கிறதால தாத்தா கடுமையா எதிர்த்திருக்காரு.
அம்மா வீட்டை விட்டு வெளில வந்து அவங்க சீனியர் சண்முகம் தாத்தாவோட உதவியால அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.
இதை தனக்கு பெருத்த அவமானமா நினைச்ச தாத்தா, அம்மாவை கொல்ல வழி பார்த்துகிட்டு இருந்தாராம். அம்மாவுக்கு கல்யாணமாகி ஆறு மாதம் நடந்தப்போ அம்மா ஐந்து மாதக் கருவை சுமந்துகிட்டு இருந்தப்போ… பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. நீங்க ரெண்டு பேரும் வந்து பார்த்துட்டு போகனும்னு சொல்லி மாமா ரெண்டு பேரும் வலுக்கட்டாயமா அழைச்சுட்டு போக…
அங்கப் போனா அம்மாவையும், அப்பாவையும் கட்டிப்போட்டு… அம்மா கண் முன்னாலயே அப்பாவை உருட்டுக்கட்டையால அடிச்சிருக்காங்க. இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க முடியாத எங்க பாட்டி தாத்தாவோட போராடி ரெண்டு பேரோட கட்டையும் அவிழ்த்து விட, கர்ப்பமாக இருந்ததோட அம்மா ஓடி வந்திருக்காங்க. அப்பவும் விடாம மாமா ரெண்டு பேரும் ஆளுங்களோட அப்பாவையும், அம்மாவையும் துரத்திக்கிட்டு வர… அங்கையே கல் தடுக்கி அம்மா கீழ விழுந்து கரு அழிஞ்சுப் போச்சாம். அந்த வலியையும் பொறுத்துக் கிட்டு ஒளிஞ்சு, ஒளிஞ்சு சண்முகம் தாத்தா வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.
திரும்பவும் விடாம நா பிறந்த பிறகும், என்னையும், அப்பாவையும் கொல்ல நிறைய சதி செஞ்சு இருக்காங்க.
சொந்தப் பேரன் தானேன்னு ரத்தம் துடிக்காம, நம்ம சாதியில்லைனு தாத்தாவுக்கு ரத்தம் கொதிச்சிருக்கு. பதினைஞ்சு வருசமா அவங்க ஓயாம கொலை முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்து ஒரு வழியா பத்து வருசத்துக்கு முன்ன அப்பாவைக் கொலை பண்ணிட்டாங்க. அப்பவும் ஆத்திரம் அடங்காம என்னைக் கொல்ல முயற்சி செஞ்சு இப்போ உள்ள கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. பிள்ளைங்களுக்கு பாசத்தை ஊட்டி வளர்க்காம சாதியை ஊட்டி வளர்த்ததோட பலன் இது.
எங்கம்மா என்னடா வாழ்க்கை இது. செத்து, செத்து வாழறதுக்கு ஒரேடியா செத்துப் போயிரலாம்னு நினைச்சிருந்தா இன்னைக்கு நாங்க ரெண்டு பேருமே உயிரோட இருந்திருக்க முடியாது.
அம்மா ஒத்தை ஆளா இருந்து என்னை வளர்த்தது மட்டுமில்லாம, மாமாக்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்காங்க.
எந்தக் காதலுக்காக எங்க அப்பவோட வாழனும்னு அம்மா வந்தாங்களோ அந்த அப்பாவை, அவங்க அப்பாவோட சாதி வெறியால இழந்துட்டாங்க. இருந்தாலும் எங்கம்மாவோட தன்னம்பிக்கையும், உறுதியும் குறையவே இல்லை” என்று கண்ணீரோடு வித்யாவின் தந்தையின் ஜாதி வெறி பற்றியும் அதனால் வித்யாவிற்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் ஜீவா கூற, கேட்டுக் கொண்டிருந்த அபிக்கும் கண்கள் குளம் கட்டியது.
அவள் அறிந்த அந்தப் ‘பெண் சிங்கத்தின் வாழ்க்கையில் இத்தனை துயரங்களா?’ என்று பிரமிப்பும் எழாமல் இல்லை.
“எங்க அம்மா மட்டும் ஊருக்கும் உயிருக்கும் பயந்து போய் இருந்தா நான் அவங்களுக்கு மகனா பிறந்து இருக்க மாட்டேன் அபி.. தைரியமா இருக்கவங்களுக்கு தான் சோதனையும் அதிகம் வரும்னு சொல்லுவாங்க.. அப்படி தான் எங்க அம்மாவுக்கும்.. எங்க அப்பா மட்டும் தான் மொத்த உலகமும்னு நினைச்சு வாழ்ந்து வந்தவங்க ஒரு நாள் அப்பா எங்களை விட்டு போனதும் துடிச்சுட்டாங்க.. என் வாழ்க்கையில எங்க அம்மா அப்படி அழுது அன்னைக்கு தான் பாத்தேன்..” என்று வளர்ந்த குழந்தை போல அவனும் கண்ணீர் சிந்த அபி அவன் கைகளை அழுத்தி ஆறுதல் கொடுத்தாள்.
“ஆனா கொஞ்ச நாள்லயே இது எனக்கு எழுதப்பட்ட விதி.. கணவன் இறந்ததும் உலகமே இருண்டு போனதா நினைக்கும் மத்த பொண்ணுங்க மத்தியில என்னை போல மத்த பொண்ணுங்களுக்கு நானே ஒரு பாடமாக இருக்கணும் சொல்லி இன்னும் இன்னும் தன்னை தைரியப்படுத்திக்கிட்டாங்க.. எத்தனையோ பொண்ணுங்களுக்கு எங்க அம்மா ஒரு எடுத்துக்காட்டு.. இதை சொல்றதுல எனக்கு அவ்வளவு பெருமை… இதை ஏன் உனக்கு நான் சொல்றேன் புரியுதா?” என்று அவளை பார்த்து கேட்க
அவளோ ‘புரிந்தது’ என்பது போல அமைதியாக இருந்தாள்.
“இந்த உலகத்துல ஒவ்வொரு மூலையிலயும் ஏதோ ஒரு பெண். உன்னைப் போல பாதிக்கப்பட தான் செய்றாங்க.. அவங்களுக்கு நீ ஒரு எடுத்துக்காட்டா இருக்கணும்னு நான் விரும்புறேன் அபி.. உனக்கு நடந்த கொடுமையை நினைச்சு உனக்கு அழனும் தோணுச்சுனா அழு நல்லா அழு.. ஆனா அழுது முடிச்சுட்டு உன்னையே ஒரு வழிகாட்டுதலா எடுத்து கொண்டு முன்னே போ.”
“நீ ஏன் கூனிக்குறுகிப் போற. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குன அந்தப் பொறுக்கிகள் தான் நிமிர்ந்து பார்க்கவே வெட்கப்பட்டு நிற்கனும். உன்னைப் போல இன்னொரு பெண் பாதிக்கப்படக் கூடாதுனா… நீயும் உங்க அக்கா கண்மணி போல எழுந்து வா” என்று கூறிவிட்டு அவன் எழுந்து செல்ல அந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள் அபி.
இனி அபியின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கதிர் ஒருபுறம் விசாரணையை முடுக்கி விட்டிருக்க… ஜீவாவும், கண்மணியும் மற்றொரு புறம் மதனின் அலுவலகத்தின் பின்புறம் உள்ள வீதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகளை அனுமதியுடன் பார்வையிட்டனர்.
மதனின் அலுவலகத்தில் விட்டுப் போயிருந்த காட்சிகள் பலவும் அவர்களுக்கு கிடைத்தது. கிடைத்த காட்சிகள் வழக்கிற்கு மேலும் பலம் சேர்ப்பவையாக அமைந்திருந்தது.
அன்று தனது அறையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த மகனின் அருகே சென்று அவனது தலையைக் கோதிக் கொடுத்தார் வித்யா.
கண்களைத் திறவாமலே “அம்மா” என்று அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் ஜீவா.
“ஏன்டா ஒரு மாதிரி இருக்க. அபி உன் கூட பேச மாட்டேங்குறாளா? கொஞ்ச நாள் காத்திரு. அவளோட மனநிலை மாறட்டும். அவ இப்போ உடலளவுலயும் மனதளவுலயும் ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பா. கொஞ்சம், கொஞ்சமா தான் வெளி வருவா. புரியுதா?” என்றதும்,
“புரியுதுமா” என அன்று அபியுடன் பேசியவற்றைக் கூறியவன், “ஏம்மா இத்தனை நாள் வரைக்கும் நான் உங்ககிட்ட இதைப் பத்தி கேட்கவே இல்லை. நா அபியைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்குறதுல உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே!” என்று தாயின் கண்களைப் பார்த்து கேட்க…
“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்று அவனது தலையை ஆட்டியவர், “எனக்கு அபி மருமகளா வரதுல ரொம்ப சந்தோசம் தான். ஆனா, அவ பழையபடி குறும்பான, துறுதுறுப்பான அபியாத் தான் வரணும்னு நினைக்கிறேன். அவ எதையோ இழந்த உணர்வை விட்டு ஒழிச்சிட்டு, உன்னை முழு மனசா ஏத்துக்கிட்டு வரணும்னு நினைக்குறேன்” என்றதும், “என் செல்ல அம்மா” என அவரின் கன்னத்தைப் பிடித்து ஆட்டினான்.
மகனது புன்னகையைக் கண்டு திருப்தியுடன் வெளியே சென்றார் வித்யா. கதவுக்கு அருகே நின்று கொண்டு அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அபியின் கண்கள் கண்ணீரை சொரிந்தது.
‘என்ன தாய் இவர்? தனது மருமகள் கடந்த காலத்தில் யாரோ ஒருவனை விரும்பியதை அறிந்தால் கூட வீட்டை இரண்டாக்கி விடும் மாமியார்கள் இருக்கும் காலத்தில், தனது மகன் விரும்பும் பெண் இழக்கக் கூடாததை இழந்திருந்தும் கூட, மகிழ்ச்சியுடன் தன் மகனை மணந்து கொள்ள வேண்டும் என நினைப்பாரா? இவர்களுக்காகவாவது நான் சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்’ என எண்ணிக் கொண்டே அபி நகர எத்தனிக்க…
கதவில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் ஜீவா. இவள் அப்படியே சமைந்து நிற்க, சிற்பத்தை தீண்டிய உளியைப் போல… அவளது கன்னங்களைத் தீண்டி கண்ணீரைத் துடைத்தது அவனது கரம்.
அவள் திரும்பிச் செல்ல எத்தனிக்க… “வா அபி” என தனதறைக்குள் அழைத்துச் சென்றவன், அவளைத் தன் மார்பில் சாய்த்து கூந்தலை வருடிக் கொடுக்க…
பசு மடி நிறைந்து பால் சுரந்தது போல… அவள் கண்கள் அவனது எல்லையற்ற அன்பால் நிறைந்து கண்ணீரைப் பொழிந்தது.
விம்மி, வெடித்து அழுதாள். அன்றுடன் அவளது துக்கம் அவளைக் கடந்து போகட்டும் என்ற எண்ணத்தில் ஜீவாவும் தனது தோள் கொடுத்தான்.
‘பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமா?
தீ மீது வீணை
போய் விழுந்தால் பாடுமா?’
இரண்டு நாட்கள் கழிந்தது.
காவல் நிலையத்தில் நுழைந்து கொண்டிருந்த கதிரின் எதிரில் அவசரமாக ஓடி வந்தாள் தீபிகா.
“சார் ஒரு முக்கியமான விஷயம்..” என்று கூற அவளையும் சசியையும் தன் அறைக்கு அழைத்து சென்றவன் என்னவென்று விசாரிக்க..
“சார் நாம ட்ராக் பண்ண நாலு நம்பர்ல ஒரு நம்பர்ல இருந்து இன்னொரு நம்பருக்கு நைட் 3 மணிக்கு கால் போய் இருக்கு..” என்றாள்.
“இசிட்.. எங்க கேட்போம்?” என்றான்.
“இதோ சார்..” என்றபடி கையில் இருந்த சிறு ரெக்கார்டரை ஒலிக்க விட்டாள்.
“என்னடா மதனு… இந்த அபி கேசு நமக்கு ரொம்ப இழுவையா போச்சு.. பாஸ் போன் ஏதாவது பண்ணாறா? எத்தனை நாளைக்குத் தான் நாம இங்க தங்குறதாம்.. நாலு பேரும் ஒண்ணா இருந்தா கூட பரவாயில்லை.. நாங்க இங்கயும் நீங்க அங்கயுமா ஏதோ பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க மாதிரி இருக்கேடா..” என்றான் ஒருவன்.
“சார் ஐ திங் இது சரத்..” என்று சசி கதிரிடம் முணுமுணுத்தான்.
“சரத்து.. பாஸ் கொஞ்ச நாளுக்கு இருக்க சொல்லி இருக்காருடா.. அவர் சில பேர் கிட்ட பேசிட்டு தான் இருக்காராம். நம்ம கேஸ்ல ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க அந்த கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூணு பேத்தையும் பத்தி தான் கோவமா பேசிட்டு இருக்கார்.. என் கையில மட்டும் அந்த கமிஷனர் சிக்குனான்… மவன உரிச்சு ஊறுகாயா போட்டு சைடிஷ்க்கு தொட்டுப்பேன்…” என்று மதன் கூற
‘யார் யார் கையால ஊறுகாயா ஆகப்போறோம்னு பாக்கலாம்டா..’ என்று கதிர் மனதில் கடுகடுத்தான்.
“ஆமா.. பாண்டி எங்க? ஒழுங்கா தான இருக்கான்.. இல்ல இந்த சிக்கல்லயும் பொண்ணு குட்டினு பெனாதிட்டு இருக்கானா?” என்று மதன் கேட்க
“எங்கடா.. வரும் போது ஏதாவது குட்டியை தள்ளிட்டு வந்திருந்தா பொழுது போய் இருக்கும்னு புலம்பிட்டு தான் இருக்கான்.. அங்க அந்த சைக்கோ சந்தோஷ் என்ன சொல்றான்.. பாவிப்பய அவன் தான்டா அந்த அபி உடம்பெல்லாம் கீறி புண்ணாக்கினான்.. இவனை எல்லாம் ஒரு பொண்ணு கட்டிக்கிட்டா அவ பாடு அவ்ளோ தான்..” என்று சரத் கூற
தீபிகா, கதிர், மற்றும் சசி மூவரின் கண்களும் தீயாய் ஜொலித்தது.
எத்தனை பெரிய ஈனப் பிறவிகள் இவர்கள்.. இவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை விட பார்த்த இடத்தில் கொன்று புதைப்பதே சரியென்று தோன்றியது அந்த கடமை தவறா காவலர்களுக்கு.
“அது சரி ஏதாவது லாயர், கீயர் ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்காராமா?” என்று சரத் கேட்க…
“ஆமாடா பெரிய லாயரா தான் ஏற்பாடு பண்ணி இருக்காராம். கேஸ் கோர்ட்டுக்கு வர அன்னைக்கி நாம நாலு பேரும் சேரந்து நேரா கோர்ட்டுக்கு போனா போதும்னு சொன்னாரு. அதுவரைக்கும் அவசரப்படாம இருங்க” என்று மதன் பேசியதுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
உள்ளுக்குள் கொதித்த கோபத்தீயை அடக்கியபடி,
“இந்த நம்பர் எந்த லொகேஷன் காட்டுது தீபிகா?” என்று கேட்டான் கதிரவன்.
அவளும் அந்த இடத்தை குறிப்பிட அடுத்த அரை நாள் பொழுதில், அவர்களை கைது செய்திருந்தார்கள் மூவரும்.
பத்திரிகை எல்லாம் பளிச்சென்று ஒளி எழுப்பிய படியும் ஒலியை தாங்கிய படியும் கதிரவனை சுற்றி வளைத்தனர்.
“சார், அபி கேஸோட குற்றவாளிகளை பிடிச்சுட்டதா சொல்றாங்களே உண்மையா?” நிருபர்களில் ஒருவன் கேட்க
“ஆமா அரெஸ்ட் பண்ணியாச்சு.. கேஸ் இன்வெஸ்டிகேட் போய்ட்டு இருக்கு.. அது வரை எதுவும் சொல்ற மாதிரி இல்ல..கொஞ்சம் டைம் கொடுங்க..” என்றபடி அவன் உள்ளே சென்று விட்டான்.
லாக்கப்பில் இருந்த நால்வரும் குற்றுயிரும் குலையுயிருமாய் வாங்கிய அடியில் முகம் வீங்கிப் போய் விகாரமாக கிடந்தனர்.
அதிகமாக பேசப்பட்ட அபியின் வழக்கு அனைவரின் பார்வையில் அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளும் வந்தது.
நம் மின்சாரப் பாவையான கண்மணி, கண்களில் ஆத்திரத்துடனும், மனதில் வெறியுடனும் நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
0 Comments