சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ – நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? – நன்னெஞ்சே
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்ச
-பாரதி
ரத்தம் வழிந்த தலையை ஒரு கையால் பற்றிக் கொண்டு மறுகையால் தனது அலைபேசியை பற்றியிருந்த ஜீவா, எதிர்முனையில்,
“சொல்லு ஜீவா? எல்லாரும் நல்லா இருக்கீங்கள?” என்றதும்,
“இல்லை சார். கண்மணியை ஒரு கூட்டம் வந்து கடத்திட்டுப் போயிட்டாங்க சார். தடுத்த எங்களை எல்லாம் அடிச்சுப் போட்டுட்டாங்க சார்” என்றான் பதறிய குரலில்.
“ஓ ஷிட்… இதெல்லாம் அந்த ப்ளடி ராஸ்கல் அவனோட வேலையா தான் இருக்கும். நான் இன்னும் ஐந்து மணி நேரத்துல சென்னைல இருப்பேன். நீ முதல்ல எல்லாரையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ” என்றவன், “அபி சேஃப்பா இருக்காளா?” என்று ஜீவாவிற்கு குறையாத பதட்டத்துடன் கேட்டான்.
“அபி தூங்கிட்டு இருந்தா. அவனுங்க வந்த அதிரடியில முழிச்சுப் பார்த்தவளை, அடிச்சுப் போட்டுட்டாங்க சார். நீங்க எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வாங்க. கண்மணியை அவங்க எங்க கூட்டிட்டு போயிருக்காங்கனு தெரியலை. நா கதிர் சார்க்கு இன்பார்ம் பண்றேன்” என்று கூறி விட்டு ஜீவா அலைபேசியை அணைக்க…
அங்கே கண்மணியின் உயிரோ, தன்னுயிரை மீட்கும் வேகத்தில் உலோகப் பறவையில் பறந்து சென்னை வர ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
காரின் வேகம் குறைந்த போது ஒன்றும் புரியாமல் விழித்த கண்மணி, சிலர் வந்து தன்னைத் தூக்க முயற்சி செய்யவும்,
“டேய் என்னை விடுங்கடா. நீங்க யாருனு எனக்குத் தெரியும்டா. அந்தப் பொட்டைபய என்னைத் தூக்க இத்தனை பேரை அனுப்பினானா?” என கோபாவேசத்தில் பேச,
கடத்தல் கும்பலில் ஒருவன் அவளது செவிளைப் பார்த்து ஒரு அறை விட்டான். இன்னொருவன் பெரிய துணி ஒன்றை சுத்தி அவள் வாயை அடைத்தான். கண்மணி வழியெங்கிலும் திமிறிக் கொண்டே செல்ல, இருவர் அவளை அமுக்கி பிடித்துக் கொண்டனர்.
நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கின் விசாரணை நடைபெற இருந்ததால், தீபிகாவை அனுப்பி விட்டு, சசியுடன் நீதிமன்றத்தில் இருந்தான் கதிர்.
அந்நேரமாக அவனது அலைபேசி அழைத்தது. ஜீவாவின் எண்ணைக் கண்டு கொண்டவன்,
“சொல்லுங்க ஜீவா என்ன விசயம்?” என்று கூறி முடிக்கும் முன்பே, எதிர் முனையில் ஜீவா சொன்ன செய்தியில் ஆத்திரமடைந்தவன்…
“நீங்க அங்கேயே இருங்க. நா தீபிகாவை வர சொல்றேன். அந்த ஆம்னியோட நம்பரை நோட் பண்ணுனிங்களா?” என்று கதிர் கேட்க,
“ஆமா சார்” என்றவன், அந்த எண்ணைக் கூறி வாகனம் சென்ற திசையையும் கூற,
“ஜீவா, நா போய் பார்க்குறேன்” என்றவன் சசியை அழைத்துக் கொண்டு ஜீவா சொன்ன சாலையை நோக்கி விரைந்தான்.
ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அழைத்து ஆம்னி எண்ணைக் கூறி, அதன் உரிமையாளரைப் பற்றி விசாரித்தான்.
இரண்டு வாகனங்களின் விபரங்களையும் பெற்றுக் கொண்டவன், சோதனைச் சாவடிகளுக்கு தகவல் அனுப்பினான்.
ஒரு மணி நேர பயணத்தின் முடிவில் கண்மணி சென்னை மாநகருக்குள் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி தான். ஆனாலும், 'யார் எங்கே சென்றால் நமக்கென்ன?’ என்று செல்லும் நகர மக்களின் மனப்போக்கு இவர்களுக்கு வசதியாகி விட, முன்னால் ஒருவன், பின்னால் இருவர் என கண்மணியை நடுவே நிற்க வைத்து பிடித்துச் சென்றனர்.
அதனால், புதிதாகப் பார்ப்பவர்களுக்கு கூட சந்தேகம் வராது.
இரண்டு அறை கொண்ட அந்த வீட்டில், ஒரு அறையில் இருக்கையில் கண்மணியை அமர வைத்து, இழுத்துக் கட்ட முயற்சி செய்ய…
கண்மணி பேச முடியாமல் திமிறித் திமிறி தனது எதிர்ப்பைக் காட்ட… அவளை இழுத்து வைத்துக் கட்டியவர்கள் கதவை வெளியே தாழ் போட்டு விட்டு செல்ல… அறை முழுவதும் இருள் சூழுந்து கொண்டது.
மீண்டும் ஒரு இருள். அதே போன்ற சூழ்நிலை. ஆனால், கண்மணி பயப்படவில்லை. துணிச்சலாகவே அமர்ந்திருந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து கதவு திறந்தது. கையிலிருந்த கடிகாரத்தை வைத்து நேரக் கணக்கை அறிந்து கொண்டாள்.
கதவைத் திறந்து கொண்டு ஒரு ஆஜானுபாகுவான உயரம் கொண்ட அசுரனைப் போல ஒருவன் உள்ளே வந்தான்.
அறை விளக்கை ஒளிர விடவும், கண்மணி கண்கள் கூச திரும்பிக் கொண்டாள்.
மெல்ல அவளருகே சென்று அவள் வாயிலிருந்த துணியை எடுத்து விட்டவன்,
“வாடி என் நொண்டிச் சிந்து. ஏன் என் மூஞ்சியெல்லாம் பார்க்க மாட்டீங்களோ? லைட்டைப் போட்டதும் மூஞ்சியத் திருப்பிக்கிற? உனக்கெல்லாம் அந்த க”… எனும் போதே,
“நிறுத்துடா. பொம்பளைப் பொறுக்கி. உனக்கெல்லாம் என் புருசனோட பேரை சொல்லக் கூட அருகதை கிடையாது.
என்னைப் பழி வாங்குறதுனா, நேரா என் கிட்ட வந்து உன் வீரத்தைக் காட்ட வேண்டியது தானேடா? என் தங்கச்சியோட வாழ்க்கைய நாசம் பண்ணிட்டியேடா. உன்னை சும்மாவே விட மாட்டேன்” என்று ஆத்திரத்துடன் கத்த…
“பாருடா புருசன் பேர் சொல்லாத பத்தினையைப் பார்த்திருக்கேன். புருசனோட பேரையே சொல்ல விடாத பத்தினியை இப்போ தான் பார்க்குறேன்” என அவளை ஏளனம் செய்தவன்,
“உன்னை அடிச்சப்போ கூட உனக்கு வலிக்கலைடி. ஆனா உன் தங்கச்சி மேல கைய வைச்ச உடனே என்னையக் கொல்லனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சியே அந்த வெறி தான் எனக்கு வேணும்.
இப்போ உன் தங்கச்சி, அடுத்து உன் புருசன். அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னைக்கு வரப்போறதா தகவல் கிடைச்சது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்மணியின் கண்களில் உற்சாக மின்னல் மின்னியது.
“அவன் வந்து உன்னையக் காப்பாத்துவானு நினைக்காத. நா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சி இங்க வந்துருவான். ஆனா, உயிரோட திரும்பிப் போக மாட்டான். உன் புருசனோட சேர்த்து அந்த கமிஷ்னரையும் போட்டுத் தள்ளிருவேன்” என்றான்.
“ஹூம்… பகல் கனவு காணாத. மலேசியாவுல நடந்ததை மறந்துட்டனு நினைக்குறேன். அதை அவரே வந்து உனக்கு நியாபகப்படுத்துவாரு” என்றதும்,
“என்னடி சொன்ன நாயே!” என்று அவளது கன்னத்தில் அறைய அவனது கைத்தடம் அவளது கன்னத்தில் பதிந்தது. அதைக் கண்டு குரூர மகிழ்ச்சியடைந்தவன்,
“உன்னோட கடைசி நிமிசத்தை எண்ணிக்கோடி என் செல்லம் உன் புருசன் வந்ததும் உன் கண்ணு முன்னாடியே அவனைப் போட்டுத் தள்ளுறேன்” என்றபடி கதவை அடைத்து விட்டு வெளியே சென்றான்.
மாலை ஆறு மணி போல சென்னை அண்ணா விமான நிலையத்தில் தரையிறங்கியது மலேசிய விமானம். பரிசோதனைகளை முடித்துக் கொண்டவன் வேகமாக வெளியேற, தலையில் கட்டுடன் ஜீவா அவனை வரவேற்றான்.
“என்ன ஜீவா ஏதாவது தகவல் கிடைச்சதா கண்மணியை எங்க வச்சு இருக்காங்கனு தெரிஞ்சதா?” என்று கடகடவென பேசியபடி நடந்தவனுக்கு இணையாக ஈடுகொடுத்து நடந்த ஜீவா,
“கதிர் சார் விசாரணை பண்ணிட்டு இருக்காங்க. சென்னைய சுத்தி ஆளுங்களை அனுப்பியிருக்காங்க” என்றான்.
“ஓ… ஓகே நா அந்த கதிரவன் கூட பேச முடியுமா?” என்றதும்,
“ஓ பேசலாம் சார்” என்றவன், கதிரின் அலைபேசிக்கு அழைத்தான். எதிர்முனையில் ரிங் முடியப்போகும் தருவாயில் அலைபேசியை உயிர்ப்பித்த கதிர்,
“சொல்லு ஜீவா. ஆம்னியை பிடிச்சிட்டோம். அந்த ஷைலோவைப் பத்தி இந்த டிரைவர் கிட்ட விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்று கூற,
“சார், நம்ம கண்மணியோட ஹஸ்பன்ட் மலேசியாவில இருந்து வந்துருக்காங்க. அவரைப் பத்தி உங்க கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. அவர் உங்க கிட்ட பேசனுமாம் இதோ” என்றதும்,
“போனைக் கொடு ஜீவா” என்றான் கதிரவன்.
இருவரும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஏதோ பேசி முடித்த பின்னர், அலைபேசியை அணைத்தவன்,
“ஜீவா வந்து சீக்கிரமா காரை எடு. நாம கதிர் இருக்கிற இடத்துக்குப் போகணும்” என்றதும் விரைவாக அவனை காருக்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் அடுத்த அரைமணி நேரத்தில் கதிர் இருக்கும் இடத்தை அடைந்தனர்.
சென்னைப் புறநகர் பகுதியில் தன் ஜீப்பை சாலையோரமாக நிறுத்தியபடி நின்ற கதிர் “வாங்க” என்று பொதுவாக இருவரையும் அழைத்தான்.
“மிஸ்டர் கதிர், கண்மணியைக் கடத்துனது யாரா இருக்கும்னு உங்களால கெஸ் பண்ண முடிஞ்சதா?” என்றதும்,
“கன்பார்மா தெரியலை. பட் மதனோட பாஸ் மேல தான் எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு. மதனுக்கு ஆதரவா லாயரை ஏற்பாடு பண்ணுனது அவன் தான்னு மதன் பேசுன போன் காலை ட்ரேஸ் பண்ணும் போது தெரிஞ்சது.
இப்போ மதனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையை அறிவிக்கப் போறாங்கனு தெரிஞ்ச உடனே அவன் கண்மணியை கடத்தியிருக்கான். ஆனா, எனக்கு ஒன்னு மட்டும் புரியலை. பாதிக்கப்பட்டது அபி தான். ஆனா, அவளைக் கடத்தாம கண்மணியை ஏன் கடத்தியிருக்காங்கனு எனக்குப் புரியலை “ என்று கதிர் பின்னங்கழுத்தை நீவ…
“ஏன்னா.. அவன் அழிக்க நினைக்குறது கண்மணியைத் தான்” என மலேசியாவில் நடந்தவற்றைக் கூறிய கண்மணியின் கணவன்,
“அடிபட்ட பாம்பு விடாதுனு சொல்லுற மாதிரி, இவன் ஒரு அடிபட்ட மிருகம். மலேசியாவில பொண்ணுங்களைக் கடத்தி விக்கிறதோட மட்டுமில்லாம, மதன் மாதிரி சில அல்லக்கைகளை பிடிச்சுக்கிட்டு ஏதாவது ஒரு ஆபிஸ் நடத்துறோம்கிற பேர்ல போதை மருந்து சப்ளை பண்ணுறான்” என்றதும்,
“சார் அப்போ மதனோட எம்.டி தான் கண்மணியைக் கடத்தியிருக்கான். ஆனா, எங்க இருப்பானு…” என்று இழுத்த கதிருக்கு திடீரென மூளையில் மின்னல் வெட்டியது.
சட்டென சசியைத் திரும்பிப் பார்த்தவன், “சசி ஜீப்பை அன்னைக்குப் போன இடத்துக்கு விடுங்க” என்றதும் சசி எந்த இடமென புரிந்து கொண்டான்.
ஜீவாவும், கண்மணியின் கணவனும் புரியாமல் நிற்க, இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கே சென்றான் கதிர்.
ஆம் மதன், அபியை வண்புணர்வு செய்த அதே கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் இப்போது வந்திருந்தார்கள். கதிர், இரண்டு வீடுகளுக்கு முன்பே ஜீப்பை நிறுத்த சொல்லி, மற்றவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
அன்று பூட்டை உடைத்து தடயத்தை சேகரித்து விட்டு மீண்டும் சீல் வைத்து விட்டு சென்றிருந்தனர். ஆனால், தற்போது அந்த சீல் உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் அமர்ந்த படி அந்த ஆஜானுபாகுவான ஆள் தனது அலைபேசித் திரையில் வெளியே நிற்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென எழுந்தவன், உடன் இருந்தவர்களை கதவருகே நிற்க சொல்லிவிட்டு கண்மணி இருக்கும் அறைக்குச் சென்றான்.
“இங்கப் பாருடி என் செல்லமே… உன்னோட ராமன் இந்த சீதையை சாரி சாரி திரௌபதியைத் தேடி வந்துட்டான் பாரு” எனத் தன் அலைபேசியை அவளிடம் காட்டவும், முகம் மலர்ந்தவள்,
‘உன்னோட அழிவு ஆரம்பமாகிடுச்சுடா' என்று எண்ணியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். அவனும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான் அவளை சீண்டிப் பார்க்க… ஆனால், அவள் அசையவில்லை.
கதவிற்கு வெளியே நின்றவர்களில் ஜீவா, கதிரின் தோளை சுரண்டினான். அவன் ‘என்ன?’ என்பது போல் பார்க்க… அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவைக் காட்டினான்.
‘அன்னைக்கு நாம வந்துட்டு போனப்போ கேமிரா இல்லையே! இப்போ எப்படி வந்தது?’ என தன்னையேக் கேட்டு, பதிலையும் ஊகித்துக் கொண்டவன், மெதுவாக தனது பேண்ட் பாக்கெட்டில் சேப்டிக்காக வைத்திருந்த கட்டிங் ப்ளேடை எடுத்து சிசிடிவி வயரை நறுக்கிய மறுநொடி, கதவு பட்டென திறந்து கொண்டது. கதவுக்கு பின்னால் இருந்து இருவர் துப்பாக்கியால் சுட,
அதனை எதிர்பாராத நால்வரும் பரபரவென மறைவிடம் தேடிப் போய் ஒளிந்தனர்.
முன் பக்கத்தில் சசியுடன் நின்று கொண்டு, ஜீவாவையும் அவனையும் பின்பக்கம் செல்லுமாறு சைகை செய்த கதிர் தனது துப்பாக்கியை எடுத்தான்.
பின் பக்கமாக சென்ற ஜீவாவும், அவனும் கதவை உடைத்து உள்ளே செல்ல… கண்மணி இருந்த அறையை அடைந்தனர்.
“வாங்க… வாங்க ஒருத்தனுக்கு வலை போட்டா… சகலை சகிதமா ரெண்டு பேரும் வந்து மாட்டுறீங்களேடா. இன்னைக்கு எனக்கு எங்கையோ அதிர்ஷ்டம் இருக்கு” என்றவனின் கையிலிருந்த துப்பாக்கி கண்மணியின் நெற்றியில் இருக்க… இருவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினர்.
கண்மணி கண்களில் திரண்ட நீர்மணியுடன் கணவனை ஏறிட,
‘பயப்படாதே’ என்பது போல பார்வையால் ஆறுதல் அளித்தவன்,
“இங்கப் பாரு நீ செய்யுறது ரொம்ப பெரிய தப்பு. நமக்கு இடையில உள்ள பகையை நாம டீல் பண்ணிக்கலாம் கண்மணியை விடு” என்றான்.
“என்னடா பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் பொங்குதோ? அவ எனக்கும் பொண்டாட்டியா இருந்தவ தான் மறந்துராத” என்று அரக்கத்தனமாக சிரிக்க…
பல்லைக் கடித்துக் கொண்டு கொலை வெறியுடன் நின்றவனின் காலுக்கடியில் ஒரு சிறிய மரத்துண்டு கிடக்க… வேகமாக அதனை எட்டி உதைத்தான். அது சரியாக தரையோடு தரையாக சென்று எதிரே நிற்பவனின் காலை இடறி விட, அவனது கவனம் சிதறியது.
அதைப் பயன்படுத்தி அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டி விட அருகே செல்கையில் அவன் சுதாரித்து சுட எத்தனிக்கும் போது, பின்னிருந்து ஜீவா அவனைத் தாக்கி துப்பாக்கியை பறித்து விட்டான்.
ஓங்கி அவனது நெஞ்சில் ஒரு உதை விழ தள்ளிப் போய் விழுந்தான் அந்த அரக்கன் கண்ணன்.
கண்மணியின் கட்டுகளை அவிழ்த்து ஜீவா அவளை எழுப்பி நிற்க வைக்கும் போது, கதிர் வந்து விட்டான். சசிக்கு தோளில் குண்டடி பட்டிருந்தது.
கீழே விழுந்தவனின் நெஞ்சில் கால் வைத்து மிதித்தவன்
“இந்த பாரதியோட கண்ணம்மாவ தூக்குறதுக்கு அந்த எமனா இருந்தா கூட பயப்படனும்டா ஆனா நீ?” என்று அவனது கைகளை சரமாரியாக மிதித்து தனது ஆக்ரோசத்தைக் காட்டினான் பாரதி.
ஆம், கண்மணியின் கணவன் கவிபாரதி.
எழ முடியாமல் மூச்சித் திணறியவனை விடுத்து, கண்மணியின் புறம் திரும்பியவன், மெல்ல அவளைத் தனது கைப் பிடிக்குள் கொண்டு வந்தான்.
“கண்ணம்மா உனக்கு ஒன்னும் இல்லையேடா” என்று அவளது கன்னத்தை கவி பற்ற…
“ஸ்ஆஆ” என்று வலியில் முனகினாள். தனது கையை விலக்கிப் பார்க்க, அவளது கன்னம் விரல் தடம் பதிந்து, கன்றி சிவந்திருந்தது.
“டேய்..” என ஆத்திர மிகுதியில் கத்திய கவி, கண்ணனின் புறம் திரும்பிய மறுநொடி, கண்மணியை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி சட்டென குனிந்து அமர்ந்து அமர்ந்தான்.
துப்பாக்கி குண்டு அவர்களின் தலைக்கு மேலே சென்று, சுவற்றை துளைத்தது.
கதிர், தனது பிஸ்டலை எடுத்து கண்ணனின் காலில் குறி பார்த்து சுட்டு விட, அலறிக் கொண்டு கீழே விழுந்தவன்,
“டேய் கமிஷ்னர், கவி உங்க ரெண்டு பேரையும் நா சும்மா விடமாட்டேன்டா. திரும்பி வருவேன்” என சூளுரைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் விழுந்து கிடந்த தரைத்தளம் உள்ளே இறங்கியது.
மற்றவர்கள் அதிர்ச்சியில் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே… அவன் உள்ளே சென்று மறைந்தான்.
“கதிர் சார் அவனைப் பிடிங்க… சீக்கிரம்” என்று ஜீவா கத்திக் கொண்டே நகர,
அவனது கைகளைப் பற்றி தடுத்தவன், “போகட்டும் விடு ஜீவா. அவன் எங்க போனாலும் திரும்பி நம்ம கிட்ட தான் வரனும்” என்று அசால்ட்டாக உரைக்க…
“என்ன சார் இப்படி சொல்றீங்க?” என ஜீவா அதிருப்தியாக கேட்க…
தனது அலைபேசியை எடுத்து ஆம்பலன்ஸிற்கு அழைத்தவன், சசிக்கு சில முதலுதவிகளை செய்ய கோரினான். கவியும் அவனுக்கு உதவி செய்தான்.
ஆம்புலன்ஸ் வந்த பிறகு, சசியை அதில் ஏற்றி விட்டு, துணையாக இரு காவலர்களை அனுப்பியவன், சசியின் வீட்டினருக்குத் தகவலும் கொடுத்தான்.
“தீபிகா, இவனுங்க கிட்ட இருக்க வெப்பன்ஸை கலெக்ட் பண்ணிட்டு, இவனுங்களை ஜி.ஹெச்ல அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணிருங்க.
அப்பறம் நம்ம மாப்புள விருந்துக்கு வராரு. நம்ம பாணில வரவேற்பு குடுத்துருங்க” என்றதும், புரிந்து கொண்ட தீபிகா புன்னகையுடன் தலையசைத்து மற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தாள்.
ஆம், மதனின் கெஸ்ட் ஹவுசிற்கு சந்தேகத்தின் பெயரில் தான் வந்தனர். ஆனால், சீல் உடைக்கப்பட்டு உள்ளே சில கயவர்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டவன், உடனடியாக கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியிருந்தான்.
அவர்கள் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் கதவை உடைக்க முயற்சி செய்தான்.
இருபது முப்பது அடியாட்களை இரண்டு, மூன்று பேர் தாக்கி வெற்றி பெறுவது என்பது அசாத்தியம். அறிவின்மையும் கூட. கதிர் நினைத்தது போலவே மறைந்து தாக்கிக் கொண்டிருக்கும் போதே போலீசார் படையுடன் வந்துவிட்டனர். அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
அதனை உறுதி செய்த அடுத்த நொடியே கதிர் உள்ளே நுழைந்தான்.
தீபிகாவுக்கு உத்தரவு கொடுத்து விட்டுத் திரும்பியவன், குழப்பத்துடன் நின்ற ஜீவாவின் தோளில் கைபோட்டான்.
“ஹே மேன் ரிலாக்ஸ். நீ இப்போ என்ன யோசனையில இருக்கனு எனக்குப் புரியுது. இந்த வீட்டுக்கு வந்து அன்னைக்கு நாங்க சோதனை போடும் போதே இது இல்லீகல் பிசினஸ்க்காக பயன்படுத்துற வீடுனு கண்டுபிடிச்சிட்டோம்.
அதுவும் இல்லாம, இந்த வீட்டைப் பத்தி ரெண்டு, மூனு கம்ப்ளயின்ட்ஸ் பைல் ஆகியிருந்தது. ஆனா யாருமே ஆக்சன் எடுக்காம இருந்திருக்காங்க.
சிட்டிக்கு நடுவுல இருக்க இந்த வீட்டுல இல்லீகல் பிசினஸ் நடக்குறதை ஒருத்தர் கூடவா கண்டு பிடிக்கலைனு நா பழைய கம்பிளையின்ட்ஸ செக் பண்ண சொன்னப்போ எங்களுக்கு இந்த டீடெயில்ஸ் கிடைச்சது.
கம்பிளையின்ட் கொடுத்தவங்களோட அட்ரஸ விசாரிச்சு நேர்ல போய் பார்த்தப்போ ஒன்னு, ரெண்டு பேர்ல அங்க இல்லை. ஒரு ரெண்டு பேர் மட்டும் இந்த வீட்ல போதைப் பொருள் கடத்துறதா சொன்னாங்க. கம்பிளையின்ட் கொடுத்ததை தெரிஞ்சுகிட்டு, மதன் கொலை மிரட்டல் விடவும், வீட்டில பெண் குழந்தைகள் இருந்ததால பின் வாங்கிட்டதாகவும் சொன்னாங்க.
அப்பறம் தான் இந்த வீட்டோட இஞ்ச், இடுக்கெல்லாம் அலசி, ஆராய்ஞ்சதுல இந்த சப்வேயை கண்டுபிடிச்சோம். இது போல இந்த வீட்ல நாலு ரகசிய அறையும், ரெண்டு சப்வேயும் இருக்கு. சோ, இந்த சப்வே எங்க முடியுதோ அங்க எங்க ஆளுங்க நிப்பாங்க. மாப்பிளைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்று கதிர் சிரிக்க…
மிகுந்த ஆச்சரியப்பட்டு போனான் ஜீவா. அவனும் வக்கீல் தான் ஆனால் இந்த வேகம், நுண்ணறிவு சற்று குறைவு தான்.
“அசத்திட்டீங்க சார்” என்றவன், தனது நிலைப்பாட்டைக் கூற..
“ஜீவா நீ இப்போ ப்ராக்டிஸ் போற… இது போல நேரடியா எதிர்காலத்துல கேஸ் எடுத்து நடத்துறப்போ உனக்கும் இந்த வேகம் வந்துரும். நம்ம கவிபாரதி சார் மாதிரி” என்றதும், கவி புன்னகைத்தான்.
“ஆமா கவி சார், இந்த வீட்டுல இவ்வளவு கண்டுபிடிச்ச நா கண்ணன் இங்க தான் இருப்பானு யோசிக்காம விட்டுட்டேன். யோசிச்சாலும் அதுக்கு வாய்ப்பில்லைனு நினைச்சேன். ஆனா, நீங்க எப்படி சரியா கண்ணன் இங்க தான் இருப்பானு சொன்னீங்க?” என்று வியப்பாக கேட்க,
“கதிர் நாம க்ரிடிக்கலான கேஸ்ஸ்ல சில நேரம் நம்ம கைக்கு எட்டுற தூரத்துல இருக்க ஆதாரத்தை கவனிக்க மறந்துடுவோம். வேற வழியை தேடுறதுல முனைப்பாகிடுவோம். அது எவ்வளவு பெரிய புத்திசாலியா இருந்தாலும்… எனக்கு கூட இந்த மாதிரி சில தடவை நடந்து இருக்கு.. அப்போ என்னோட ஜூனியர்ஸ் இப்படி தான் எனக்கு எடுத்து குடுத்துருக்காங்க.
நீங்க இந்த வீட்டைப் பத்தி சொல்லும் போது, கண்ணனை நாம இந்த வீட்டை மட்டும் விட்டுட்டு ஊர் முழுக்க தேடுறோமே… அவன் இங்க இருக்க எண்பது சதவிகித வாய்ப்பு இருக்குனு நினைச்சேன். அது தான் நடந்திருக்கு” என்றதும்,
“க்ரேட் சார்” என்றபடி கவியின் கைகளைப் பற்றிக் குலுக்கிய கதிர்,
“ஆமா ஜீவா, நீ எதுல வீட்டுக்குப் போகப்போற? உன்னோட கார் கீயை கவி சார் கிட்ட குடுத்துட்டு என்னோட வா. நா உன்னை வீட்ல டிராப் பண்ணிடுறேன். காதல் கிளிகள் சுதந்திரமா வரட்டும். என்ன லாயர் சார்” என்றதும் கவி வெட்கப்பட்டு சிரித்தான்.
கதிரின் அலைபேசி ஒலித்தது. திரையில் எண்களைக் கண்டவன், “என்னோட கிளி அழைக்குது. ஜீவா ஃபாஸ்ட்” என்றபடி தனது வாகனத்திற்கு விரைந்தான்.
கண்மணியை தனக்குள் நுழைப்பவன் போல கவி இறுக்கி அணைத்துக் கொள்ள… இருவரும் மௌனமாக நின்றனர். தங்களது இணையை வெகு நாட்கள் கழித்து பார்த்த நிம்மதியும், மகிழ்ச்சியுமாக.
பிரிந்து விலகி நின்ற இருவரது கண்களும் ஆனந்தக் கண்ணீரை சுரந்தது.
தோள் வளைவில் கைத்தாங்கலாக கண்மணியை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தான்.
வித்யாவின் இல்லத்தை நோக்கி கார் பயணிக்க… மௌனமே காதலாகி அந்தக் காரை ஆக்கிரமித்திருந்தது.
கண்ணம்மா தனது பாரதியின் தோள்களில் சாய்ந்து பாரதிக்கண்ணம்மாவாக பரினயமாகி இருந்தாள்.
கவிபாரதி, கண்மணியின் காதல் சாத்தியமா? கண்ணனுக்கும், கண்மணிக்குமான திருமணம் என்னவானது?
0 Comments