15. மின்சாரப் பாவை



பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்

பேசிக் களிப்பொடு நாம்பாடக்

கண்களிலே யொளி போல வுயிரில்

கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.

கும்மியடி தமிழ் நாடு முழுதும்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி

-பாரதி

ஒன்றரை வருடங்களுக்கு முன் மலேசியாவில் சத்யா கண்மணியிடம் தப்பிக்க வழி செய்து கொடுப்பதாக கூறிய நாளில் இருந்து கருத்து புரிதலுக்காக காட்சிக்குள் செல்வோம்.

“நீ இங்க இருந்து தப்பிக்க நானே உனக்கு உதவி பண்றேன்” என்ற சத்யாவை ஏளனமாக பார்த்தாள் கண்மணி.

“அந்த சிசிடிவி காமிராவை உடைச்சு என்னை பரிசோதிச்ச மாதிரி, இது அடுத்த பரிசோதனையா?” என்று கேலியாக சிரித்தாள்.

“நா சொல்றது உண்மையா? பொய்யானு ஒரு வாரத்துல உனக்குப் புரிஞ்சிடும்” என்று கூறி வெளியேற போனவள் திரும்பி,

“அதுக்கு முன்ன நீ என் கூட ஒரு இடத்துக்கு வரணும்… நாளைக்கு போகலாம் ரெடியா இரு..” என்று கூறி விட்டுச் சென்றாள் சத்யா.

அவள் சென்ற பின் யோசனையோடு அமர்ந்து இருந்த கண்மணிக்கு,

‘வீட்டிற்கு செல்லப் போகிறோம் என்று மகிழ்வதா? இல்லை என்னை எப்போதும் போல ஏமாற்றி ஏதாவது செய்ய போகிறார்களா? என்ற பயம் கொள்ளவா?’ என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.

மறு நாள் கிளம்பி சத்யாவோடு செல்லும் நேரமெல்லாம் இதே மனநிலையில் தான் இருந்தாள்.

சத்யா காரை ஓட்டிச் செல்ல, அவள் அருகில் அமர்ந்து வந்த கண்மணி, சத்யா ஓர் மறைவான இடத்தில் காரை நிறுத்தவும் அவளைப் புரியாமல் பார்த்தவள்,

“என்னை என் வீட்டுக்காரர் கிட்ட தானே கூட்டிட்டு போறேனு சொன்னீங்க. திரும்பவும் என்னை ஏமாத்துறீங்களா?” என்று சத்தமாக பேச,

“ஷ்ஷ்… கொஞ்ச நேரம் எந்த சத்தமும் போடாம அமைதியா இரு..” என்று அவளிடம் சத்யா கூற காரினுள் அமைதி மட்டுமே குடி கொண்டது.

“ப்ச்.. எதுக்கு இங்க வந்திருக்கோம்.. இது என்ன இடம்?” என்று கண்மணி பொறுமையிழந்த கேட்க,

“நா சொல்றத அமைதியாக் கேளு. அப்பறம் இங்க நடக்கப் போறதைப் பாரு. உனக்கே எல்லாம் புரியும்” என்றவளை விளங்காமல் பார்த்தாள் கண்மணி.

“இது தான் கெடா மாநிலத்துல இருக்க லங்காவித் தீவு. இது ஒரு தீவுக்கூட்டமைவு. மலேசியாவில இருக்க சுற்றுலாத் தளத்துல இதுவும் ஒன்னு. சுற்றுலாப் பயணிகள் தங்குறதுக்கு வசதியா இங்க ப்ரைவேட் வில்லாக்கள் அதிகமா இருக்கும். மக்கள் நடமாட்டம் பெரிதாக காணப்படாத தூரத்தில் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்க இந்த வில்லாக்கள்ல தான் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடக்குது.

முக்கியமா பெண்களை கடத்திட்டு வந்து விக்கிறதும், போதைப் பொருள் சப்ளை செய்றதும் முக்கியத் தொழிலா இருக்கு.”

கண்மணியிடம் விபரம் கூறிய சத்யா, பின் வாயில் கை வைத்து “ஸ்ஸ்..” என்று சமிக்ஞை செய்தபடி இருபத்தைந்தடி தூரத்தில் தெரிந்த ஒரு காரைக் காட்டினாள்.

அந்தக் காரிலிருந்து இரண்டு பேர் இறங்க, அவர்களுடன் கண்ணனும் இறங்கிக் கொண்டிருந்தான்.

அவனை அங்கு கண்டதும் முதலில் ஆனந்தம் கொண்டாலும், பின் பலமான அதிர்வுடன் சத்யாவைப் பார்த்தாள்.

“கண்ணன்.. இங்க எதுக்கு வந்தார்?” என்று அவள் கேட்க அதற்கு சத்யா,

“பொண்ணுங்களை கடத்திட்டு வந்தா வழக்கமா விக்கிற இடத்துக்கு வந்து தான ஆகணும்..” பதில் சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவள் விழிக்க நம்பித் தான் ஆக வேண்டும் என்பது போல… அதற்கு அடுத்து வந்த காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல்,

பாதி மயக்க நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி கண்மணியின் கண்ணில் பட்டது.

“என்ன??? கண்ணன்… கண்ணன்.. பொண்ணுங்களை கடத்தி விக்கிற கும்பலை சேர்ந்தவரா?” என்று திக்கி திணறியபடி கேட்டாள் கண்மணி.

“ஆமா, மலேசியாவுல பொண்ணுங்கள கடத்தி விக்கிற மிகப் பெரிய கும்பலுக்கு தலைவனா இருக்கவனோட இடது கை தான் இந்தக் கண்ணன். இவனுக்கு மேல ஒருத்தன் இருக்கான். நீ நினைச்சுட்டு இருக்க மாதிரி கண்ணன் சாதாரண ஆள் கிடையாது. என் தம்பி கவி கடத்தல்க் காரன் கிடையாது.. அவன் உன்னை கடத்தலை.. கண்ணன் கிட்ட இருந்து காப்பாத்தி கொண்டு வந்தான்..” என்றாள்.

“கண்ணன் எப்பவும் பொண்ணுங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவங்களுக்கேத் தெரியாம கடத்தி வருவான். அவன் யூஸ் பண்ற ட்ரக் அது எப்படி வேலை செய்யும்னா… அதை உட்கொண்டவங்க ஏதோ கனவுல மிதக்குற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. அவங்களால சுத்தி நடக்குற எல்லாத்தையும் உணர முடியும் ஆனா எதுவும் செய்ய முடியாது. அவன் கிட்ட மாட்டுன நிறைய பொண்ணுங்க வாழ்க்கைய தொலைச்சுட்டு போதைக்கு அடிமையாகி வழி மாறிப் பொயிட்டாங்க. சில பேர் வாழ பிடிக்காம செத்து போயிட்டாங்க.. சில பேர் அவன் மிரட்டலுக்கு பயந்து போய் மாட்டிக் கிட்டு முழிக்கிறாங்க..” என்று சத்யா கூறக் கேட்டவள் காலடியில் பூமி நழுவி கொண்டிருப்பதாய் உணர்ந்தாள்.

“கவி நீ நினைக்கிற மாதிரி கிரிமினல் கிடையாது.. கிரிமினல் லாயர்.. கண்ணன் செய்ற குற்றங்களை எல்லாம் தகுந்த ஆதாரத்தை காட்டி அவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கணும்னு துடிச்சுட்டு இருக்கவன்.. ஆனா கண்ணனுக்கு எதிரா எங்க கிட்ட வலுவான ஆதாரம் எதும் இல்ல.. அவன் கடத்தின பொண்ணுங்கள்ள ஒருத்தர் கூட அவனுக்கு எதிரா சாட்சி சொல்ல முன் வரல.. மானம் கவுரவம்னு சொல்லி பாதி பேரும், சுயநினைவு இல்லாம சில பேரும் இருக்காங்க. அதையும் மீறி சாட்சி சொல்ல வரவங்களை அவன் கொலை பண்ணிடுவான்.

முதன்முதலா உன்னை ஏர்போர்ட்ல அந்தக் கண்ணனோட பார்த்துட்டு வந்து, கவி ரொம்ப வருத்தப்பட்டான். எப்பவும் இல்லாம உன்னை மீட்கனும்னு ரொம்ப உறுதியா இருந்தான்.

அன்னைல இருந்து உன்னைக் கண்காணிச்சுக்கிட்டு வந்தான்.” என்று சத்யா கூற அப்போது தான் அவளுக்கு உள் மனம் உரைத்தது.

‘யாரோ தன்னை பின் தொடர்வது போல தோன்றிய உணர்வு.. அது கவி தானா? என் பிரமை இல்லையா?’ என்று.

“உனக்கு நியாபகம் இருக்கா? ஒரு நாள் கண்ணன் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நீ வாந்தி எடுத்தியே?” என்று சத்யா கேட்க இவளோ அதிர்ச்சியில்…

“ஆமா.. ஆனா அது உங்களுக்கு எப்படி?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்படி தெரியும்னு கேட்குறியா? எனக்கு அது மட்டும் இல்ல.. இன்னும் நிறைய தெரியும்.. உனக்கு தான் தெரியாது.. அந்த சாப்பாட்டுல கண்ணன் மயக்க மருந்து கலந்து உனக்கு கொடுத்தான். நீ சாப்பிட்டு மயங்கினதும் உன்னை அவங்க இடத்துக்கு தூக்கிட்டு போக ரெடியா இருந்தான். ஆனா பாவம் அந்த சாப்பாட்டை நீ வாமிட் பண்ணதும் அவனுக்கு ரொம்ப ஏமாற்றமா போச்சு.. அன்னிக்கே முடிஞ்சு இருக்க வேண்டிய அவன் வேலை இன்னும் கொஞ்ச நாள் இழுத்துட்டு போச்சு…” என்றாள் சத்யா.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அவள் கேட்க

“நீங்க தங்கி இருந்த அபார்ட்மெண்ட்க்கு பின்னாடி இருக்க அபார்ட்மெண்ட்ல இருந்து தான் டெலஸ்கோப் மூலமா நானும், கவியும் உங்களை கண்காணிச்சுகிட்டு இருந்தோம்.. உன்னோட ஒவ்வொரு அசைவையும் கவி துல்லியமா கண்காணிச்சுட்டு இருந்தான்.” என்றாள்.

தன் வாழ்வில் தனக்கே தெரியாமல் நேரவிருந்த விபரீதம் குறித்து கேட்டவள் அச்சத்தோடு எதிரில் இருப்பவளைப் பார்த்தாள்.

“அபார்ட்மெண்ட் மட்டும் இல்ல.. அன்னிக்கு முருகன் கோயில்ல கூட கவி உன்னை ஃபாலோ பண்ணி வந்தான்.. நீ பார்க்க தைரியமான பொண்ணா இருந்தாலும், புதிய சூழ்நிலையைக் கண்டு மிரண்டு போய் இருந்தனு அப்போ தான் எங்களுக்கு புரிஞ்சது. உன்னை பார்க்கவே ஒரு பக்கம் பாவமா இருந்துச்சு. என்ன எதுன்னே தெரியாம ஒரு அரக்கன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டியேனு…” சத்யா இதமாக அவளின் தலையை வருடிக் கொடுத்தாள்.

ஒரு தாயின் பரிவு அந்த வருடலில் தெரிந்தது.

கண்மணியின் கண்கள் விடாமல் நீரை சிந்தியது.

“அன்னிக்கு லிப்டில ஒரு பொண்ணு உன்னை திட்டும் போது உன்னை பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு கண்மணி.. உன்னைப் போய் அந்த அம்மா தப்பான பொண்ணுன்னு சொல்லிடுச்சே.. கண்ணன் கூட கூத்தடிக்கும் பொண்ணுங்க கூட உன்னை சேர்த்து வச்சு பேசும் போது எதுவுமே விளங்காம அந்த பெண்ணை நீ பாக்கும் போது கவி ரொம்ப வருத்தப்பட்டான்.. கண்ணனை அங்கயே கொல்லனும்னு சொன்னான்.. நான் தான்,

அவனை கொல்றது சுலபம்.. ஆனா அவன் கூட்டத்தை கூண்டோட ஒழிச்சா தான அவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு நியாயம் கிடைச்ச மாதிரி இருக்கும்னு சொல்லி சமாதானம் செஞ்சேன்..” என்றாள் சத்யா.

“ஆனா எதுக்காக என்னை நீங்க மயங்க வச்சு ஆக்சிடெண்ட் பண்ணி கடத்திட்டு வந்தீங்க.. கடத்திட்டு வந்து ஏன் அத்தனை கஷ்டம் கொடுத்தீங்க..” என்று புரியாமல் கேட்டாள்.

“அன்னிக்கு நாங்க மயக்க புகை அடிச்சு உங்க ரெண்டு பேரையும் மயக்கமாக வச்சது என்னவோ உண்மை தான். ஆனா நாங்க அடிச்ச மயக்க மருந்தால நீ ரெண்டு மூணு நாள் முடியாம போகல.. கண்ணன் காருல வரும் போது உனக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தானே அதுல கலந்த மயக்க மருந்தால தான் நீ ரெண்டு நாள் முடியாம போன. அந்த ட்ரக் தான் அவன் வழக்கமா எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்குறது. அது தான் உன்னோட உடலை ரொம்ப வீக்கா ஆக்கிருச்சு.. நீ அதை குடிச்சுட்டு மயக்கமாகவும் நாங்க உங்களுக்கு புகை போடவும் சரியா இருக்க போய்.. நீ எங்களை தப்பா புரிஞ்சி கிட்ட. உன் கூட மயக்கம் போட்ட கண்ணன் எல்லாம் அன்னிக்கு நைட்டே மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சுட்டான்..” என்று கூறவும் இவள் விழிகள் அன்று அவன் கொடுத்த பழரசத்தை அருந்திய பிறகு அவள் தூக்கத்தில் சொக்கியது நினைவில் வந்தது.

‘இத்தனை நாட்களும் இவர்கள் கொடுத்த மயக்க மருந்து தான் தன்னை சுயநினைவு இழக்க செய்தது’ என்று எண்ணி கொண்டிருக்க இன்று உண்மை அறிந்து அவள் மனம் துடித்து போனது.

தனக்கு மாங்கல்யம் இட்ட கணவனின் உண்மை முகம் புரிய அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

அதே சமயம் காப்பாற்ற வந்தவர்களும் தன்னை கஷ்டப் படுத்தியதாகவே எண்ணினாள்.

அவள் மனவோட்டம் அறிந்த சத்யா,

“நீ நினைக்கிறது தப்பு கண்மணி. கவி உன்னை கஷ்டப்படுத்தல… அவன் உன்னை தைரியமான பொண்ணா மாத்த முயற்சி பண்ணுனான். உன்னை மாதிரியே எனக்கும் ஆரம்பத்துல கோபம் வந்துச்சு அவனோட நடவடிக்கையால. நான் ஒரு நாள் கோபத்துல கேட்டப்ப தான் இதை சொன்னான்.

உண்மையை சொல்லு.. நீ முன்ன இருந்த கண்மணியா? எனக்கு தெரிஞ்சு நீ அதிர்ந்து பேச தெரியாத ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவ. அப்படி இருந்த நீ எப்படி எங்களை எதிர்க்க துணிஞ்ச?

ஆபத்து வர வரைக்கும் தான் பயம்னு சொல்லுவாங்களே! அது போல உன்னோட பெண்மைக்கு ஒரு ஆபத்துன உடனே உன்னையறியாம எங்களை எதிர்க்க துணிஞ்சிட்ட. உன்னோட உருவத்தை குறித்து அடிக்கடி உன்னையே தாழ்வா நினைச்சுட்டு உன்னால நீந்த முடியாதுனு நீச்சல் கத்துக்காம இருந்த நீ.. உன்னை அவன் நீச்சல் குளத்துல பிடிச்சு தள்ளவும் பயந்து நடுங்கி தத்தளிச்ச… ஆனா மறு நொடியே தைரியமா துணிவா நீச்சலடிச்சு மேல வரல.. இப்படி ஒவ்வொரு செயல்லயும் அவன் உன்னை தைரியமா மாத்தினான்.” என்று கூறினாள்.

அவள் கூறியதன் பின்பே தனக்குள் தனக்கே தெரியாமல் மாறி இருக்கும் உண்மை நிலையை உணர்ந்து கொண்டாள் கண்மணி.

“அது மட்டுமில்ல.. எப்போ நீ சாப்பிடாம பத்து பதினஞ்சு நாள்னு பட்னி கிடந்தியோ அப்போலாம் அவனும் சாப்பிடல.. உன்னை ஒவ்வொரு நொடியும் கவனிச்சுட்டு இருந்தான். அவன் சொல்லி தான் நீ சாப்பாட்டு தட்டுல இருந்து தண்ணீர மட்டும் எடுக்குறதே எனக்கு தெரிஞ்சுது.. அந்த அளவுக்கு அவன் உன்னை வாட்ச் பண்ணான்.. எப்படியாவது நீ சாப்பிட மாட்டியானு தான் தண்ணீ கொடுக்காத சொன்னான்.. ஆனா நீ பிடிவாதத்துல அவனை மிஞ்சிற அளவுக்கு தண்ணீ கூட இல்லாம போகவும்.. உன்னை எப்படியாவது சாப்பிட வைக்க என் பொறுப்புல விட்டான்..” என்று சத்யா கூற…

“அது சரி நாயை விட்டு கடிக்க விட்டது. அந்தப் பொண்ணை வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போனாங்களே? அதெல்லாம் எதுக்காம்?” என்று சந்தேகம் தீராமல் கேட்ட கண்மணியை புன் சிரிப்புடன் பார்த்த சத்யா,

“சிசிடிவி காமிரா உடைஞ்சு போச்சுனு சொன்னா நீ தப்பிக்க முயற்சி பண்ணுவியா? மாட்டியானு சோதிக்கிறதுக்காக நாங்க செஞ்ச ஏற்பாடு தான் அது.

ஆனா, அந்த சமயத்துல நாய் ரெண்டும் அறுத்துக்கிட்டு ஓடி வந்துருச்சுங்க போல. கேமிரா பழுதானதால அதைப் பார்க்க முடியலை.

உன்னோட அறையில நீ இல்லைனு உறுதி பண்ணிகிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை பிடிக்கலாம்னு இருந்தப்போ தான் நாய் குரைக்கிற சத்தம் கேட்டு ஓடி வந்தோம். அதற்குள்ள உன்னை கடிச்சிருச்சுங்க.

உனக்குத் தெரியுமா? மறுநாளே அந்த நாய்களை காட்டுக்குள்ள விட்டுட்டு வந்துட்டான் கவி.

அப்புறம் அந்தப் பொண்ணு போதை மருந்தால பாதிக்கப்பட்டு இருந்தா. போதைக்கு அவளை அடிமையாக்கி வண்புணர்வு பண்ணியிருக்காங்க பொறுக்கி பசங்க.

அவளைக் காப்பாத்தி மருத்துவ உதவி பண்ணத் தான் கவி அவளை ஆளுங்களை வச்சு இங்க அழைச்சிட்டு வந்தது.

இந்த மாதிரி பாதிக்கப் பட்டவங்களுக்கு சிகிச்சை கொடுக்க ஒரு தன்னார்வ அமைப்பை நம்ம வீட்டுக்குள்ளயே பக்கத்து கட்டிடத்துல நடத்துறோம். அது தெரியாம தான் நீ கவியை பொம்பளை பொறுக்கினு சொல்லிட்ட.

ஆனா, வேதனையைக் காட்டிக்காம அமைதியா அவன் நிக்குறப்போ எனக்கு பயங்கர கோபம் வந்துருச்சு உன் மேல.

நீயெல்லாம் ஒரு அம்மாவானு என்னைக் கேட்டியே! நா ஒரு பொண்ணோட அம்மாவா இருந்ததால தான் உன்னைக் காப்பாத்த இவ்வளவு முயற்சியும் செஞ்சேன்” என்று நீண்ட விளக்கத்தை சத்யா கொடுக்க,

‘நடந்தவற்றை எல்லாம் இந்த கண்ணோட்டத்தைக் கொண்டும் பார்க்க முடியுமா?’ என்று எண்ணினாள் கண்மணி.

“எனக்கு இன்னொரு விசயமும் புரிஞ்சது. என்ன புரிஞ்சதுனா என் தம்பி கவி உன்னை விரும்புறான்னு.. முதல் நாள் உன்ன டாக்டர் பரிசோதனை செய்யும் போது உன்னோட தலைய பிடிச்சு கொடுக்கும் போது அவன் கண்ணுல தெரிஞ்ச வலி… பொதுவா எல்லா பொண்ணுங்க கிட்டயும் பரிவா நடந்துகிறவன் கவி.. ஆனா உன் கிட்ட பரிவு தாண்டி பாசமா நடந்துகிட்டானோனு தோணுச்சு.. ஆமா கண்மணி கவி உன்னை விரும்புறான்..” என்று சத்யா கூற கண்மணிக்கு இது மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இவள் பதில் பேசாமல் அமைதியாக வர இவளின் அமைதியை கலைக்க விரும்பாமல் சத்யா அவர்கள் இருப்பிடம் நோக்கி காரை செலுத்தினாள்.

அன்றும் சரி அதற்கு அடுத்து வந்த சில நாட்களும் சரி கண்மணி அமைதியாகவே அந்த வீட்டில் வலம் வந்தாள்.

முன்பு போல தடைகளும் இல்லை கண்காணிப்பும் இல்லை.. அந்த வீட்டின் எந்த மூலைக்கும் செல்லும் சுதந்திரம் பெற்றிருந்தாள். ஆனால் செல்ல தான் மனம் வரவில்லை அவளுக்கு.

அதே அமைதியோடு அமர்ந்து இருந்தவளிடம் வந்த சத்யா,

“என்ன கண்மணி? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.

“இல்லை.. அப்படியெல்லாம் இல்ல நல்ல தான் இருக்கேன்..” என்றாள்.

“கண்மணி உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..” என்று பீடிகையாக அவள் கேட்க கண்மணி என்னவென்பது போல பார்த்தாள்.

“உனக்கு… நீ கவியை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க கண்மணி அதிர்ந்தாள்.

என்ன தான் சத்யா கோடிட்டு காட்டிய பிறகு பார்த்ததில் கவியின் காதலை அவள் உணர்ந்து கொண்டாலும்.. ‘தான் எப்படி?’ என்று எண்ணினாள்.

‘கண்ணணுக்கு எப்படியோ? தனக்கு அது திருமணம் தானே!! தான் ஒருவனால் மாங்கல்யம் சூடப்பட்டவள் தானே!! அப்படியிருக்க எப்படி கவியை!!!!’ அவள் மனதோடு பேசி கொண்டாள்.

“நான் அவருக்கு தகுதியானவ இல்லைங்க.. நல்லவனா? கெட்டவனா என்றதை தாண்டி அவன் என்னை கல்யாணம் செஞ்சு இருக்கான்.. நான் இன்னும் அவனோட பொண்டாட்டி தானே?” என்று வலியோடு கூற சத்யா சிரித்தாள்.

“காமெடி பண்ணாத கண்மணி.. உனக்கு தாலி கட்டிட்டா நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகிருவியா? அப்படினா அவனுக்கு மொத்தம் எத்தனை பொண்டாட்டி தெரியுமா??” என்றவள், “கடவுளுக்கே இந்த பந்தம் பிடிக்காம இருந்திருக்கனும் போல… உன்னை இங்க தூக்கிட்டு வரும் போது, உன் கழுத்துல இருந்த மாங்கல்யம் தானாவே தவறி விழுந்துருச்சு. ஆனா, மேடம் என்னவோ, நாங்க தான் கழட்டி வச்சிருக்க மாதிரி சண்டைக்கு வந்தீங்க?” என்றாள்.

கண்மணி அமைதியாக இருக்க அவளே தொடர்ந்தாள்.

அவள் அப்படி தான் அத்தனை நாட்களும் நினைத்து இருந்தது. மேலும் அவர்கள் அவளிடம் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து இட்டால் இங்கிருந்து அனுப்புவதாக அன்று மிரட்டியதும் சேர்த்து அவளை அவர்கள் கண்ணனிடம் இருந்து பிரிக்கும் சதியாகவே பட்டுத் தொலைத்தது.

“கண்மணி கணவன் மனைவி உறவுன்றது வெறும் மஞ்சள் கயித்தை கழுத்துல கட்டுறதால முடிவாகிடாது.. ஒத்துக்குறேன் அதுவும் முக்கியம் தான்.. ஆனா அதை விட ரெண்டு பேருக்கும் நடுவுல வரும் பாரு ஒரு உணர்வு.. இது தான் என் கணவர் இவள் தான் என் மனைவி.. இந்த உறவு தான் இனி காலம் பூரா எங்க கூட வர போகுதுன்னு… அது தான் உண்மையான கணவன் மனைவிக்கான அடையாளம் அங்கீகாரம்.. அந்த அங்கீகாரம் உனக்கு கண்ணன் கட்டுன இந்த கயித்துல கிடைக்கவே இல்ல..”

“சொல்ல போனா அவன் இதை உனக்கு கட்டினத்துக்கு தேவ சாட்சியும் இல்ல.. பூலோக சாட்சியும் கிடையாது. ஊருக்கு தெரியாத உன்னோட பெத்தவங்க மட்டும் அவங்க கூடவே சேர்ந்து அவன் செட் பண்ண பெத்தவங்க… இவங்க எல்லாம் சேர்த்து நடத்தின இதுக்கு பேர் கல்யாணமா?” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு கண்மணியிடம் பதிலில்லை தான்.

“அதை விடு.. அவன் என்ன உன்னை மனைவின்ற பேர்லயா இங்க கூட்டி வந்திருக்கான்.. கல்யாணம் பண்ணுனதை சாட்சி இல்லாம பண்ணி இருக்கான். அவன் உன்னை வெறும் டூரிஸ்ட்ன்ற பேரில தான் இங்கே அழைச்சிட்டு வந்திருக்கான்.. சொல்ல போனா இந்த கவர்மெண்ட்க்கும் சரி இந்தியன் கவர்மெண்ட்க்கும் சரி நீ யாரோ அவன் யாரோ?” என்றாள்.

“உன்னை கட்டாய படுத்தல கண்மணி.. நீ ரொம்ப தெளிவான பொண்ணு.. உனக்கு எது நல்லது? எது கெட்டதுன்னு யாரும் எடுத்து சொல்ல வேண்டியதில்லை… தேவையில்லாத குழப்பத்தை மனசுல வச்சுக்கிட்டு கிடைக்கப் போற நல்ல வாழ்க்கையை கை விட்டுடாத.. இனிமே நீ தான் முடிவெடுக்கனும்..” என்றபடி எழுந்து கொண்டாள் சத்யா.

அவள் சென்ற பிறகு நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்தாள் கண்மணி.

அடுத்து வந்த நாட்களும் அதே மௌனத்தில் கழிய அன்று சத்யா அவளிடம் பரபரப்பாக வந்தாள்.

“கண்மணி இந்தா இந்த ட்ரெஸைப் பிடி. என்று கூற

“ஏன் எதுக்கு இந்த டிரஸ்?” என்றாள் புரியாமல்.

“இந்த ட்ரெஸ்ல ட்ரேக்கிங் சிப் ஒன்னு ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. அதோட கேமரா அண்ட் மைக்கும் தான்.. இதை போட்டுக்கிட்டு கண்ணன் கிட்ட நீ போ.. அவன் எப்படியும் உன்னை ஏதாவது செய்ய ட்ரை பண்ணுவான்.. அது தான் நமக்கான ஆதாரம்.. அவனை அரெஸ்ட் பண்ண இது தான் நமக்கு கிடைச்சு இருக்க பெரிய வாய்ப்பு..” என்று கூற

அவளும் அவர்கள் சொல் படி மறுநாள் கிளம்பி தயாராகி வந்தாள்.

கவி அவளுக்கு முன்பே அவர்கள் தங்கி இருந்த இருப்பிடத்தை அடைந்திருக்க அவனை தொடர்ந்து சத்யாவோடு காரில் தன் இருப்பிடம் வந்திருந்தாள் கண்மணி.

சத்யாவை கட்டி கொண்டு அழுதவளை ஆறுதலாக அணைத்து கொண்டாள் சத்யா.

“கவலைப்படாத கண்மணி.. நாங்க உன் பக்கத்துலயே தான் இருக்கோம்.. உனக்கு எதுவும் ஆக விடமாட்டோம்” என்று கூற இவள் தலையசைத்து விட்டு காரை விட்டு இறங்கினாள்.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவள் கண்கள் கரித்து கொண்டது.

‘இத்தனை நாளும் தனக்கு சொந்தமான இடம்’ என்று எண்ணி கொண்டிருந்த மனம் நொடியில் தன்னை ஏமாற்றி கடத்தவே அழைத்து வந்த இடம் என்று புரிய வைக்க கரித்த கண்களை ஒரு முறை மூடி திறந்து கொண்டாள்.

அழைப்பு மணியை அழுத்தி கண்ணன் வந்து கதவை திறக்க எதிரில் கண்மணியை கண்டவன் முதலில் திகைத்து பின் இத்தனை நாட்கள் தேடி திரிந்து அலைந்தவளை வாசலில் கண்டதும் மனம் கொள்ளா நிம்மதியோடு அவளை அணைத்து கொண்டான்.

“எங்க போன கண்ணம்மா?” என்று அவன் கேட்க

அன்று இரவில் கடத்தப்பட்டது முதல் சத்யா தனக்கு தப்பிக்க உதவியது வரை கூறினாள்.

“உங்களை பழி வாங்கணும் சொல்லி தாங்க என்னை கடத்திட்டு வந்ததா சொன்னாங்க… எனக்கு நம்பிக்கை இல்ல.. திரும்பி உங்களை பாப்பேன்னு.. தப்பிச்சு வந்தது பெரிய சாதனையா இருக்கு எனக்கு.. அவங்க உங்களை ஏதாவது பண்ணிடுவங்களோனு பயமா இருக்கு... இனிமே நாம இங்க இருக்க வேணாம். வாங்க நாம நம்ம ஊருக்கே போயிடலாம்..” என்று கூறினாள்.

அவனோ சிறிது நேரம் யோசித்து விட்டு,

“சரி கண்மணி… நாம ஊருக்கே போயிடலாம்.. நான் போய் டிக்கெட் புக் பண்ணறேன்.. ஒரு வாரத்துல நாம ஊருக்குப் போறோம்..” என்று அவளிடம் கூறிவிட்டு தன் கூட்டத்திற்கு அழைத்தான்.

“டேய்.. யாருன்னு தெரியல.. நமக்கு ஆகாதவங்க தான் அவளை நம்ம கிட்ட இருந்து கொண்டு போய் இருக்காங்க… இவளை வச்சு என்னை பிடிக்க முடியாதுனு விட்டுட்டானுங்க. அவன் கிட்ட இருந்து தப்பிச்சி திரும்ப என் கிட்ட வந்து மாட்டிக்கிட்டா.. இவ தெளிவாக யோசிக்கிறதுக்கு முன்ன இவளை கை மாத்தி விடணும்.. அந்த அஞ்சு பொண்ணுங்க லிஸ்ட்ல இவளையும் சேர்த்துக்கோ.. அங்க தான் வந்துட்டே இருக்கோம்..” என்று கூறிட அறைக்கு வெளியே நின்று அனைத்தையும் கேட்டு கொண்டாள் கண்மணி.

உள்ளத்தில் கோபம் அவ்வளவு மூண்டது..

ஆத்திரம் அறிவை கொல்லும் என்பதால் அமைதியாக அவன் பின்னால் சென்றாள்.

அவனோடு காரில் சென்றவள் அந்த கார் அன்று சத்யாவோடு வந்த வீட்டின் முன் நிற்கவும் அவனை ஏறிட்டாள்.

“எங்கங்க வந்திருக்கோம்?” என்று அவள் கேட்க

“தெரிஞ்ச ஒருத்தர பாக்க தான்.. பாத்துட்டு கிளம்பலாம் வா.” என்று அவளை உள்ளே அழைத்து சென்றான்.

உடையில் இருந்த கேமரா அங்கு நடக்கும் அனைத்தையும் படம் பிடித்து கொண்டிருக்க

அந்த வீட்டின் ஓர் மூலையில் சில நபர்கள் அமர்ந்து கொண்டு வெள்ளை நிறத்தில் சர்க்கரை போன்ற ஏதோ ஒன்றை சிறு பாக்கெட்டில் வைத்து அடைத்து கொண்டிருந்தனர்.

எதிரே இருக்கும் அறையில் இருந்து பெண்களின் அழுகை குரல் காதை கிழிக்க எட்டி பார்த்தாள் கண்மணி.

“என்ன பாக்குற கண்மணி?” என்று கண்ணன் கேட்க திடுக்கிட்டு விழித்தவள்,

“யா.. யார் இவங்கல்லாம்? எதுக்காக அந்த பொண்ணுங்க அழுறாங்க?” என்று கேட்க

“இவங்க எல்லாம் என் கிட்ட வேலை பாக்குறவங்க.. அந்த பொண்ணுங்க ஏன் அழுறாங்கன்னா கேட்ட. கடத்திட்டு வந்து கற்பழிச்சத்தும் இல்லாம வேற ஒரு இடத்துக்கு கொண்டு போக போறது தெரிஞ்சா அழாம சிரிக்கவா முடியும்?” என்று விகாரமாக சிரித்தான்.

“என்ன சொல்றிங்க நீங்க?” என்று அவள் ஏதும் அறியாதவள் போல கேட்டாள்.

அவன் வாய் திறந்து அத்தனையும் உளறி கொள்வதை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் கேட்க அவனும் தப்பாமல் கூறினான்.

தன்னை பற்றியும் தன் தொழில் பற்றியும்.

அவன் கூறியவற்றை அவனுக்கு எதிரான ஆதரங்களாக கவி மாற்றி கொண்டிருக்க

கண்மணி இப்போது சிரித்தாள்.

தன் காதில் பொருத்தப்பட்ட சிறு ப்ளூடூத்தில் கவி,

“கண்மணி, வெல்டன்.. நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல உள்ள இருப்பேன்” என்பதை கேட்டு

அவள் சிரிக்கவும் தன் சிரிப்பை தொலைத்த கண்ணன் அவளிடம் நெருங்கி,

“ஏய்… உன்னை கடத்திட்டு வந்துருக்கது தெரிஞ்சும் சிரிக்குற நீ என்ன பைத்தியமா?” என்று கேட்டான்.

“பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்து வாழுற நீயே சிரிக்கும் போது.. இவங்கள காப்பாத்த வந்த நான் ஏன் சிரிக்க கூடாதுடா பன்னாடை..” என்று அவள் சொல்லி முடிக்கவும்

துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க மலேஷிய போலீசார் சுற்றி வளைக்க நடுநாயகமாக நின்று கொண்டிருந்தான் கவி.

தேடப்படும் குற்றவாளியான கண்ணனை கைது செய்து கவி மற்றும் கண்மணிக்கு நன்றி தெரிவித்தவர்கள் அங்கிருந்த பெண்களை பாதுகாப்பாக அவரவர் தாயகம் திரும்ப செய்தனர்.

சில நாட்கள் கழித்து அன்று…

சத்யாவின் வீட்டு தோட்டத்தில் சத்யா, கவி மற்றும் கண்மணி அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

சத்யாவே முதலில் அமைதியை கிழித்து

“கண்மணி.. இப்போ நீ தான் சொல்லனும்.. கவிய கல்யாணம் பண்ணிக்க போறியா இல்லையான்னு? ஏன்னா கண்ணன் உன்னை இங்க இல்லீகலா அழைச்சிட்டு வந்து இருக்கான்.. இப்போ மலேசியா கவர்மெண்ட் அவங்க சட்டப்படி உன்னை இந்தியா திருப்பி அனுப்பி ஆக வேண்டிய நிலையில இருக்கு.. ஆனா கண்ணன் வழக்கில முக்கிய சாட்சியா நீ இருக்கறதால நீ இங்க திரும்பி வர வேண்டிய அவசியம் இருக்கும்.. நாங்க ஒரு வாரம் டைம் கேட்டு இருக்கோம். ஆனா மலேஷியா கவர்மெண்ட் ரூல்ஸ் படி நீ போகும் போதே பாஸ்போர்ட்ல ரெட் சீல் வாங்கிட்டு போனா உன்னால திரும்பி இங்க வர அஞ்சு வருசமாகும். நீ சாட்சி சொல்ல இங்க இருந்தே ஆகனும்” என்று சத்யா கூற அவள் கவியை பார்த்தாள்.

அவன் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தான்.

“இதுக்கு ஒரே வழி என்னன்னா நீ கவியை கல்யாணம் பண்ணி இந்த ஊரு சிட்டிசனா ஆகுறதுன்னு எனக்கு தோணுது.. இதுக்கு மேல உன் விருப்பம்.” என்று சத்யா கூறி விட்டு எழுந்து செல்லும் போது,

“இதுவும் ஒரு வழின்னு தான் சொன்னேன்.. தவிர உன்னை கட்டாயப்படுத்தல கண்மணி..” என்று வாஞ்சையாக கூறிவிட்டு சென்றாள்.

கவியும், கண்மணியும் மட்டும் அங்கு தனித்திருந்தனர். கண்மணிக்கு உள்ளே படபடப்பாக இருந்தது.

கண்மணியிடம் திரும்பிய கவி,

“கவலைப்படாத கண்மணி.. உன்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணல. நீ யோசிச்சு என்ன முடிவெடுத்தாலும் எனக்கும் சம்மதம்.. இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைனா விட்டுரு. நாம வேற வழி ஏதாவது யோசிப்போம். இல்லைனா இப்போதைக்கு சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ இந்தியா போறதா இருந்தாலும் எனக்கு ஓகே. இந்த கல்யாணம் எப்பவும் உன் கனவுக்கு குறுக்க நிக்காது.. உனக்கு பிடிக்கலைனா எப்ப வேண்டும்னாலும் நான் விவாகரத்து தர ரெடியா இருப்பேன்.. அதனால நீ என்னை தாராளமா நம்பலாம்..” என்று கூறினான்.

காதலை சொல்ல வேண்டிய காதலியிடம் விவாகரத்து தருவேன் என்று சொல்ல வேண்டிய தன் நிலை குறித்து அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை அவனுக்கு.

அவன் முடிவை அவளிடம் ஒப்படைத்து விட்டு எழுந்து செல்ல…

தனியே அமர்ந்திருந்த கண்மணி மனதில் ஆயிரம் கேள்விகள்..

‘தன் வாழ்க்கையை குறித்து தான் முடிவு எடுக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள்.

என்ன செய்ய வேண்டும்? எது நல்லது?’ என மீண்டும் மீண்டும் மனதோடு ஆயிரம் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாள்.

‘தனக்காக இல்லாவிடினும் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பற்ற வேண்டியாவது இந்த திருமணத்திற்கு சம்மதிக்கத் தான் வேண்டும்' என எண்ணியவள்,

மறு நாள் கவி மற்றும் சத்யாவிடம் கூறி இருந்தாள் திருமண சம்மதத்தை.

கவியின் மனம் மகிழ்ந்து கொண்டாலும் அவள் மனம் குறித்தும் கவலை கொண்டது.

அவளின் மனம் இரு தலை கொல்லி எரும்பாக இருப்பது அவனுக்கும் நன்றாக விளங்கியது.

எதாயினும் முதலில் அவளின் சம்மதமே போதும். பின் அவள் தன் மனதை தன் காதலை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.

பின் அந்த நாட்டின் சட்டப்படி எளிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் சத்யா மற்றும் கவியின் நண்பர்கள் கூறிய வாழ்த்தை புன்னகையோடு வாங்கி கொண்டனர்.

கண்ணன் குறித்து எழுந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தில் வந்தாள் கண்மணி.

கண்மணியின் இல்லீகள் விசிட் குறித்து எழுந்த கேள்விக்கு அவள் இப்போது கவியின் சட்டப்பூர்வமான மனைவி என்ற அடையாளம் பதில் அளித்தது.

நீதி மன்றம் கண்ணனுக்கு ஆயுள் வரை சிறையில் கிடக்க தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதன் பிறகு அன்று மாலையில் கண்மணியை விமான நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்த கவியிடம் எதையோ கேட்க விரும்பி பின் வேண்டாம் என மறுத்து தலையசைத்து தனக்குள் பேசிக்கொண்டு வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்த கவி அவளிடம்,

“என்ன கண்மணி என் கிட்ட என்ன கேக்கணும்?” என்று கேட்க அவன் ஊகித்ததை உணர்ந்து தனக்குள் வெட்கி கொண்டவள் அவன் மீண்டும்

‘என்ன?’ என்பதாய் விழியால் வினவ

“வந்து… எல்லாரும் உங்களை கவின்னு கூப்பிடறாங்களே.. உங்க முழு பேர் என்ன?” என்று கேட்க இவன் சத்தமாக சிரித்தான்.

பின் அவள் புறம் திரும்பி,

“கவிபாரதி” என்று கூறவும் இவளுக்குள் சிலிர்த்து போனது.

மற்றவரின் நலனுக்காக அவனை திருமணம் செய்து கொண்டவளின் மனம் மெல்ல, மெல்ல அவனது காதலால் அவன் புறம் சரிய ஆரம்பித்தது.


Post a Comment

0 Comments