16. மின்சாரப் பாவை



ரௌத்திரம் பழகு; லவம் பல வெள்ளமாம்

லாகவம் பயிற்சிசெய்; லீலை இவ் வுலகு

(உ)லுத்தரை இகழ்; வீரியம் பெருக்கு

வெடிப்புறப் பேசு; வேதம் புதுமைசெய்

வையத் தலைமைகொள்

-பாரதி

நிகழ்வுகளில் மீண்டும்,

மலேசியாவில் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அவன் தன் செல்வாக்கை பயன்படுத்தி சுதந்திரமாகத் தான் நடமடினான்.

என்ன தான் எந்த கஷ்டமும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வந்தாலும், தான் இருப்பது சிறை என்பதே அவனுக்குள் கோபத்தைக் கிளப்பியது.

அதற்கு காரணமான கண்மணியின் மீதும் கவியின் மீதும் கோபம் மலையளவு பெருகிட… ஒன்றும் அறியாதவள் போல நடித்துத் தனக்கு எதிராக மாறிய கண்மணியை பழி வாங்கத் துடித்தான்.

அதன்படியே அவ்வப்போது அவனை வந்து பார்த்து செல்லும் மதனின் கீழ் அபிக்கு வேலை கொடுத்து திட்டம் வகுத்தான்.

கண்மணியை பழி வாங்க அபியின் வாழ்க்கையை மதன் மற்றும் அவனின் நண்பர்களைக் கொண்டு அழித்தான்.

வித்யா கேட்டுக்கொண்ட படி மதனுக்கும், கண்ணனுக்குமான ஆதாரங்களை கவி திரட்டி கொண்டிருக்க… மதன் கதிரால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட கண்ணன் தன் லீலைகளை பயன்படுத்தி மறுநாளே இந்தியா வந்திருந்தான்.

வந்தவன் நேராக நீதிமன்றத்தில் இருந்து ஜீவா மற்றும் கண்மணி வந்து கொண்டிருந்த வாகனத்தில் மோதி கண்மணியை கடத்தி சென்றிருந்தான்.

ஏற்கனவே கவிபாரதி அத்தனை முறை ஜீவாவிற்கு பத்திரம் சொல்லி இருக்க…

இன்று கவி நினைத்தது போலவே கண்மணியை கடத்தி செல்லவும் அடுத்த நொடி ஜீவா கவியை அழைத்தான்.

தன் நட்பு வட்டத்தில் இருந்து ஏற்கனவே வந்திருந்த

“கண்ணன் ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான்” என்ற தகவலின் படி கண்ணன், மதன் இருவருக்கும் உள்ள தொடர்பான ஆதாரத்தோடு சேர்த்து கண்மணியை கண்ணன் கடத்தி சென்ற கோபமும் சேர்ந்து கொள்ள அடுத்த நான்கு மணி நேரத்தில் இந்தியா வந்து சேர்ந்தான் கவிபாரதி.

அடுத்த சில மணி நேரங்களில் கவியும், கதிரும் கண்மணியை காப்பாற்றி இருந்தனர்.

கண்ணன் அந்த சுரங்கப்பாதை வழியே தப்பி செல்லவும் கதிர் கூறிய படி சகல மரியாதையோடு கண்ணனை பிடித்தது கதிரவனின் கூட்டம்.

கண்மணியை அழைத்துக் கொண்டு கவி நேராக வீட்டிற்கு வரவும், வித்யா வந்து இருவரையும் வரவேற்க… தன் காயங்களையும் மறந்து எழுந்து வந்த அபி, “மாமா” என்று அழைத்தபடி அவனருகே செல்ல… வடிவும், வேணியும் குழம்பி நின்றனர் ‘வந்திருப்பவன் யார்?’ என.

வித்யாவைப் பார்த்து புன்னகைத்தவன், கண்மணியை கைத்தாங்கலாக சோபாவில் அமர வைக்க… வித்யா, கண்மணி பருக நீர் எடுத்துக் கொண்டு வந்தார்.

“கண்மணி இந்தா இந்த தண்ணியைக் குடி” என்றவர், அவளது கன்னத்து காயத்தைப் பார்த்து விட்டு, “பாவி புள்ளைய எப்படி அடிச்சிருக்கான்” என்று கொதித்தவர்,

“கவி நீ எல்லா ஆதாரத்தையும் எடுத்துட்டு வந்துருக்க தானே! அவனை சும்மாவே விடக்கூடாது. அடிபட்ட பாம்பு மாதிரி நம்மளையே சுத்தி வந்துருக்கான். இப்போ தான் ஜீவா போன் பண்ணுனான் கமிஷ்னர் அவனை பிடிச்சிட்டதா சொன்னான். நாளைக்கு கோர்ட்ல அந்த ராஸ்கலுக்கும், அவனோட கூட்டத்துக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்காம நா ஓய மாட்டேன்” என அவர் பேசிக் கொண்டே செல்ல…

“வித்யாம்மா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நாளை நமதே! ஊர்ல இருக்குற பொண்ணுங்க மேல அவன் கைய வச்சாலே நா துவட்டி எடுத்துருவேன். ஆனா, அவன் என் பொண்டாட்டி மேலயும், என் மச்சினிச்சி மேலயும் கைய வச்சிருக்கான். அவனை இனிமேலும் உயிரோட விடுவேன்னு நினைக்காதீங்க” என்றான்.

இவர்கள் பேசுவது புரியாமல் முழித்துக் கொண்டிருந்த வடிவு, “அபி யாருடி இவன்?” என்று மெலிதான குரலில் கேட்க,

திரும்பி வடிவை ஒரு ஏளனப் பார்வை பார்த்தவள், “எங்கக்காவோட புருசன்” என்றதும்,

“என்னடி சொன்னப் பாவி. இந்த நொண்டி சிறுக்கியோட புருசனா? ஊரறிய, உலகறிய ஒருத்தன் கையில இவளை புடிச்சிக் கொடுத்து ஏரோபிளேனு ஏத்தி அனுப்பி விட்டா… கொஞ்ச நாள்ல ஒத்தையா வந்து நின்னவ. இன்னைக்கு எவனோடயோ சோடி போட்டுக்கிட்டு வந்து புருசன்னு நிக்குறா? தரங்கெட்ட சிறுக்கி, கட்டினவனை விட்டுட்டு, எவனோடயோ ஒட்டிக் கிட்டு வந்திருக்கா?” என்று கண்மணியை அடிக்க கை உயர்த்த…

அதுவரை பொறுத்தது போதும் என வடிவின் கையை பிடித்து தடுக்க கவி எத்தனித்த வேளையில், கண்மணியின் கைக்குள் சிக்கியிருந்தது வடிவின் ஓங்கிய கை.

“பாட்டி இதுவரைக்கும் நா உங்களுக்கு மரியாதை கொடுத்து பேசாம இருந்தேன்னா… அது என்னை நீங்க வளர்த்த கடனுக்காக. இனிமே என் மேல கையை வச்சிங்க நடக்குறது வேற” என்றதும் வடிவு அதிர்ந்து போய் நின்றார். தனது கையை உதறி விலக்கிக் கொண்டவள்,

“ஊரறிய பார்த்து கட்டி வச்சோம்னு சொன்னீங்களே! அந்த நல்லவன் தான் இன்னைக்கு நானும், அபியும் ஊரு தூத்துற அளவு நிக்கிறதுக்குக் காரணம்.

எங்கம்மா இறந்த பிறகு உடல் குறைபாடோட பிறந்த நான் உங்களுக்கு பாரமா பொயிட்டேன். மகனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி அவரை குடும்பமா பார்க்கனும்னு நினைச்சீங்க. குடிகார மகனை நம்பி இருக்க முடியாதுனு ரெண்டாவதா வந்த மருமகளுக்கு ஜால்ரா தட்டிக்கிட்டு, அவருக்குப் பிடிக்காத என்னைக் கொடுமைப் படுத்திக்கிட்டு உங்க வாழ்க்கையை ஓட்டுனீங்க” என்றவள், வேணியின் புறம் திரும்பினாள்

“சித்தி பால்குடி மறக்குறதுக்கு முன்னமே அம்மா வாசத்தை தொலைச்ச நான், நீங்க கிடைச்சதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆனா, உங்களுக்கும் நா பாரமா பொயிட்டேன்.

ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டுட்டோங்குற கோபத்தை என் மேல காட்டுனீங்க. எங்க என் அப்பாவோட சம்பாத்தியமெல்லாம் எனக்கு சேர்ந்திடுமோனு பயந்து, அப்பத்தாவோட கை கோர்த்து என்னைக் கொடுமை படுத்துனீங்க. குடிகார புருஷனை நம்பி வாழ முடியாதுனு அவருடைய பணத்தை வாங்கி சேப்டி பண்ணிக்கிட்டு, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைனு அப்பத்தாவை உங்க கூடவே வச்சுக்கிட்டீங்க. என்ன மாதிரி சுயநலவாதிங்க நீங்க ரெண்டு பேரும்.

உங்க சுயநலத்தோட உச்சம் கண்ணன் வந்து பொண்ணு கேட்டப்போ… அவன் யாரு, என்னனு கூட விசாரிக்காம என்னை அவன் கிட்ட தள்ளி விட்டது.

ஆனாலும், நீங்க செஞ்ச ஒரே நல்லது அபியைப் பெத்தது தான் சித்தி. பாலைவனத்துல இருக்க சோலை மாதிரி, உங்க ரெண்டு பேரால இருண்டு போன என் வாழ்க்கைய குளிர் வைக்கவே பிறந்தவ.

ஆனா, கடவுள் அவ வாழ்க்கையும் வறண்ட சோலையா மாத்திட்டாரு.

ஏதோ கோடைக் காலத்துல துவண்டு சாகப்போற கொடிக்கு, சாரல் போல பொழிஞ்சு உயிர் கொடுத்த மழையைப் போல, கஷ்டங்கள் நிறைந்த எங்களோட வாழ்க்கைக்கு பக்கபலமா பாரதியையும் ஜீவாவையும் கடவுள் அனுப்பி வச்சிருக்காரு” என்றவள்,

“பாரதி தான் என்னோட புருசன். அந்தக் கண்ணன் இல்லை. எத்தனையோ அப்பாவிப் பொண்ணுங்களோட வாழ்க்கைய அழிச்ச அந்த பாதகன் எனக்கு ஒரு மஞ்சள் கயிறு கட்டிட்டா புருசனாகிட முடியுமா? ஒரு பெண் தன் வாழ்க்கையை மாற்றி அமைச்சுக்கனும்னா அவளை சார்ந்த முடிவுகளை அவளே தான் எடுக்கனும்னு சொல்லுவாங்க. என் வாழ்க்கைக்கான முடிவை நானே எடுத்திட்டேன். உங்க அனுமதியும் எனக்குத் தேவையில்லை. நீங்களும் எனக்குத் தேவையில்லை” என்று உரைத்து முடிக்க,

வேணியும், வடிவும் சர்வமும் நடுங்கியபடி நிற்க… அபி ஓடி வந்து கண்மணியைக் கட்டிக் கொண்டாள்.

“ஹே ஓல்ட் லேடி! என் கண்ணம்மா சொன்னது உனக்குப் பத்தலைனா சொல்லு. நா உன்னை வச்சு செய்ய ரெடியா இருக்கேன்” என்று கவி வடிவை சீண்ட,

“ஹா ஹா… மாமா அப்பத்தாவுக்கு இதுவே போதும். பாருங்க பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்குங்கிற மாதிரி, காலெல்லாம் நடுங்கிப் போயி நிக்கிறதை. இதுங்க ரெண்டும் முரட்டு பீசுங்க மட்டுமில்ல முட்டாள் பீசுங்க” என்றதும், கவி கலகலவென சிரித்தான்.

கண்மணியை வீட்டில் கொண்டு வந்து விட்ட கவிக்கு ஜீவாவின் மூலம் தகவல் வர அவனும்,

“இதோ வந்துட்டே இருக்கேன்..” என்றபடி கிளம்பினான்.

கதிரும் ஜீவாவும் முன்னமே சென்றிருந்தனர்.

அது காவல்துறை சில முக்கிய குற்றவாளிகளுக்காக தயார் படுத்தி வைத்திருக்கும் பிரத்யேக இடம்.

அங்கு தான் கண்ணன் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.

கை மற்றும் கால்களை கட்டி நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்த கண்ணன் திமிறி கொண்டிருந்தான்.

காவலுக்கு இருந்த இரு காவலர்களை அனுப்பி விட்டு கதிர், கவி, ஜீவா மட்டுமே உள்ளே சென்றனர்.

ஏற்கனவே தன்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் தனியொரு இடத்தில் அடைத்து வைத்திருக்கும் கோபத்தில் கத்தி கொண்டிருந்த கண்ணன் மூவரும் வருவதை பார்த்ததும் மேலும் கத்தத் தொடங்கினான்.

“சட்டத்தை மீறாத கடமை தவறாத கண்ணியவான்கள் என்னை கோர்ட்ல ஒப்படைக்காம இங்க எதுக்குடா கொண்டு வந்தீங்க… என்ன என் மேல பயமா? என்னை கோர்ட்ல ஒப்படைச்சாலும் தண்டனை வாங்கி கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சா?” என்றான் நக்கலாக.

“சின்ன சின்ன தப்பு பண்றவங்களுக்கு தான்டா கோர்ட்டு, கேஸு தண்டனை எல்லாம்.. நீ தான் ரொம்ப ஸ்பெஷல் ஆச்சே.. அதான் உனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்… இது என்ன இடம்னு நினைக்கிற… உன்னை போல சட்டத்துகிட்ட ரொம்ப வாலாட்டுன நல்ல உள்ளங்கள் எல்லாம் அமைதியா நித்திரை கொள்ளும் இடம்..” என்று ஜீவா கூறினான்.

அவன் கூற கேட்ட கண்ணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாமல்,

“ஏன்டா.. நான் என்ன அவ்வளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்னு என்னை சாகடிக்க துடிக்கிறீங்க.. பயன்படுத்தற வரை பயன்படுத்திட்டு நமக்கு உதவாதுன்னு தோணும் போது வளக்குற நாயையும் மாட்டையும் விக்குறது இல்ல.. அத மாதிரி தான நானும் செய்றேன்.. இதுல என்ன தப்பு கண்டீங்க.. எனக்கு மிருகமும் சரி பொண்ணுகளும் சரி ஒன்னுதான்..” என்றான் ஏளனமாக.

பெண்களை போற்றி பாதுகாக்கும் பாரதத்தில் இருந்து அவன் தரம் கெட்ட வார்த்தைகளை பேச ஆத்திரம் கொண்ட கவி, கை முஷ்டிகள் துடிக்க… இடது காலால் அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான்.

இருந்தும் கோபம் குறையாமல் கீழே விழுந்து கிடந்தவனை மேலும் சரமாரியாக மிதித்து துவைக்க கண்ணன் வலியில் துவண்டான்.

“ஏன்டா நாயே பொண்ணுங்க வாழ்க்கை உனக்கு அவ்வளோ மட்டமா போச்சா? பெண்கள் எப்பவும் ஆண்களுக்கு சளைச்சவங்க கிடையாது.. ஏன் அவங்க எல்லாம் ஆணோட ஒரு படி மேல் பலமானவங்க.. அதனால தான் பிரசவம்ன்ற ஒன்னுல மரணத்தையே ஜெயிச்சு இந்த உலகத்துக்கு ஒரு உயிரை கொடுக்குறாங்க.. அப்படி பட்டவங்க உனக்கு மிருகத்துக்கு சமமா? அப்படி ஒரு பெண் தெரியாமல் பெத்து போட்ட சாத்தான்டா நீ ” எனக் கூறிய படி அவன் மேலும் விடாமல் மிதித்துத் தள்ள…

கதிரும் ஜீவாவும் தான் அவனை பிடித்துக் கொண்டனர்.

“இப்போ சொன்ன இந்த வார்த்தையை நீ மட்டும் வெளிய யார் கிட்டயாவது சொல்லி இருந்தனு வையி… பெண்ணை மதிக்கிற இந்த நாட்டு மக்கள் எல்லாம் உன்னை நடு ரோட்டுல ஜட்டியோட ஓட விட்டு கல்லால அடிச்சு கொன்னு போட்டுருப்பாங்க… த்துஊஊ” என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தான் கதிர்.

தரையில் கிடந்தவனை தூக்கி வைத்தான் ஜீவா.

“ஏன்டா உன் மனசுல என்ன பெரிய சினிமா வில்லன்னு நினைப்பா? ஓவரா ஸீன் போடுற?” என்று அவன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை அழுத்திய படி கேட்ட கதிர்,

“கவி.. சொல்லுங்க இவனை என்ன பண்ணலாம்? இப்படியே ஒரே அழுத்து அழுத்திடவா?” என்று கேட்க கவி கண்ணன் முன் குனிந்து அமர்ந்தான்.

“ஏன்டா பன்னாடை… என்ன சொன்ன? என் பொண்டாட்டியோட திமிரை ஆணவத்தை அழிக்க போறியா?? அவ யார் தெரியுமாடா? புதுமைப் பெண்டா…

இந்த பாரதியோட புதுமை பெண்.. பெண் சிங்கம்டா அவ.. பொட்டத்தனமா அவளைக் கட்டிப் போட்டு அடிச்சா நீ எல்லாம் வீரன்னு ஆகிடுமா? அவ முன்னாடி ஒரு நொடி நின்னு நீ உன் வாய தொறந்து இருந்தா அப்போ தெரிஞ்சு இருக்கும்.. என் கண்மணி எப்படிப்பட்டவனு?” என்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட வாயிலிருந்து ரத்தம் சொட்டியது கண்ணனுக்கு.

சாவதைக் காட்டிலும் சாவின் வலியை அனுபவிப்பது கொடுமை என்பது போல

கண்ணன் உடலெங்கும் வலியால் துடித்து கொண்டிருந்தான்.

“கதிர், இந்த நாயை ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போங்க. நாளைக்கு கோர்ட்ல மீட் பண்ணுவோம்” என்ற கவி, ஜீவாவுடன் வீட்டிற்குச் சென்றான்.

இரவு உணவை முடித்துக் கொண்டு வடிவு, வேணியைத் தவிர மற்றவர்கள் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

“இந்தாங்க வித்யாம்மா இதுல கண்ணனும், மதனும் பேசிகிட்ட போன் கால் ரெக்கார்ட்ஸ், அவங்களோட தொடர்பு வச்சிருக்கவங்களோட போட்டோ, அவங்களால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களோட வாக்குமூலம் எல்லாம் இது இருக்கு” என்று வித்யாவிடம் ஒப்படைத்தவன், கண்மணியை அழைத்துச் சென்று அவளறையில் மஞ்சத்தில் அவளைப் படுக்க வைத்தவன், போர்வை போர்த்தி விட்டான்.

“விடியுற பொழுது எல்லாம் நல்லதாவே நடக்கும் கண்ணம்மா… நீ எதைப் பத்தியும் கவலைப்படாம நிம்மதியா நித்திரை கொள்” என்றவன், அவளது முன் நெற்றியில் அழுத்தமாக தனது காதலையெல்லாம் தேக்கி முத்தமாக கொடுத்து விட்டு விளக்கை அணைத்து வெளியே செல்ல… தன் கணவன் தனக்கு எல்லாமுமாய் ஆனவன் தன்னுடன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் சுகமாக நித்திரை கொண்டாள் கண்மணி வெகு நாட்களுக்குப் பிறகு.

அன்று தண்டனை அறிவிப்பு நாள். நீதிமன்றம் கூடியது. வழக்கமான செயல்பாடுகளுக்குப் பிறகு தனது வாதத்தை ஆரம்பித்தார் வித்யா.

மதன், கண்ணன் உட்பட ஐந்து குற்றவாளிகளும் ஒரே கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

“யுவர் ஹானர்! எனது கட்சிக்காரர் அபிநயாவின் வண்புணர்வு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மதன், இன்னும் பல வழக்குகளில் காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். அவர் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களை திரட்டி கொண்டு வந்துள்ளேன். அதை இங்கு கொடுக்க கடமைப் பட்டுள்ளேன்” என்றவர் கவி கொடுத்த ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

இங்கு குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்தக் கண்ணன் மலேசிய காவல்துறையால் தேடப்பட்டு வரும் “இன்டர்நேஷனல் கிரிமினல்” என்பதை இங்கு குறிப்பிட விளைகிறேன்.

தமிழகத்திலிருந்து மலேசியா சென்று அங்கு குடியுரிமை பெற்ற இவர், பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து அவர்களை விற்பதையே பிரதான தொழிலாக செய்து வந்துள்ளார்.

மாதம் ஒரு முறை என வருடத்தில் பன்னிரெண்டு முறை இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று, அங்கு மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் பெண்களை நல்லவன் போல் நடித்துத் திருமணம் செய்து, மலேசியா அழைத்துச் சென்று விற்று விடுவான்.

மேலும், இன்றைய தலைமுறையை சீரழிக்கும் மிக ஆபத்தான போதைப் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் முக்கிய கையாளாக இருப்பவன் இந்தக் கண்ணன்.

அவனுக்கு நேரடி ஏஜென்டை போல இந்திய-மலேசிய சட்டவிரோத தொழிலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட்டவன் தான் இந்த மதன்.

கணக்கு தணிக்கை அலுவலகம் ஒன்றை கண் துடைப்பிற்காக சென்னையில் கண்ணன் துவங்கியிருக்க, அதன் ஐந்து கிளைகளில் மூன்று கிளைகளில் மேலாளராக வேலை செய்வது போல கண்ணனுக்கு கடத்தலில் முக்கிய கைகளாக செயல்பட்டவர்கள் தான் இந்த மதன், சரத் மற்றும் பாண்டி.

இவர்களால் கடத்தி வரப்படும் பெண்களின் உடல்நிலையை ஆராய, மருத்துவ குற்றங்களுக்கு உடந்தையாக என உடன் இருந்தவன் இந்த சந்தோஷ்.

எனது கட்சிக்காரர் அபிநயாவின் அக்கா கண்மணியை ஏமாற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த கண்ணன் திருமணம் செய்து கொண்டு மலேசியா அழைத்துச் சென்றிருக்கிறான்.

இவனது திட்டத்தை பிரபல மலேசிய வழக்கறிஞர் கவிபாரதியின் உதவியுடன் முறியடித்து, சிறையில் தள்ளியிருக்கிறார் கண்மணி. அவரைப் பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த கண்ணன், அபிநயா வேலை தேடி மதன் மேலாளராக பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்றதை மதன் மூலம் அறிந்தவன், இரையை பொறி வைத்து பிடிக்கும் கழுகைப் போல…

மதனையும் அவனது கூட்டாளிகளையும் கொண்டு அபியை பாலியல் வண்புணர்வு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறான்.

அந்த திட்டத்தின் பேரில் அபியை வண்புணர்வு செய்த இந்த நால்வரும் அவளை சாலையில் தூக்கி வீசி விட்டுச் சென்றிருக்கின்றனர் யுவர் ஹானர்” என்று கூறி முடிக்கும் போது… கண்மணியின் உடல் இறுகியது. அவளது கைகள் ஆத்திரத்தில் நடுங்க, கவி அவளை அழுத்தமாக அணைத்து சமாதானம் செய்தான்.

“யுவர் ஹானர் பெண்களை தெய்வங்களாக வணங்கிய இதே இந்திய தேசம் தான் இன்று பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியில்லாத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகவும் வேதனையான வெட்கக்கேடான விசயமும் கூட.

பெண்களை பொழுது போக்கு சாதனங்களைப் போலவும், ஊசி விற்பது, பாசி விற்பது போல பெண்களை விற்பதும், கழிவறைக் காகிதங்களைப் போல் அவர்களை பயன்படுத்தி விட்டு கசக்கி எறிவதும் மிக வேதனையான விசயம்.

தாய், தங்கை, மனைவி, மகள் என்ற வேற்றுமையின்றி அனைத்து தரப்பு பெண்களையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது மட்டுமின்றி பலாத்காரமும் செய்வது மனிதத் தன்மையற்ற செயல்.

நமது இந்திய மண்ணை பாரதமாதா என பெண்ணாக பாவித்து மரியாதை செலுத்துகிறோம். உண்மையில் அந்த மாதாவிற்கு உருவம் இருந்திருக்குமேயானால் அவர் தனது பெண்மையுடன் தான் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே! அந்த அளவு பெண்களை சித்திரவதை செய்கிறது இன்றைய சமூகம்.

பாதுகாப்பான இடம் குடும்பமும், கல்வி மையமும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்த எண்ண பிம்பங்கள் எக்கு தப்பாய் சிதறிவிட்டது.

மகளை வண்புணர்வு செய்த தந்தை, மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் என தங்களைக் காத்துக் கொள்ள பெண்கள் எங்குமே ஓடி ஒளிந்து கொள்ள முடியாத அவலம்.

நலிந்து வரும் வேலைவாய்ப்பு, உயர்ந்து வரும் கல்விக் கட்டணம், அன்றாட பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை, பரவி வரும் வியாதிகள் இவற்றுடன் சேர்த்து தனது மானத்தையும் காத்துக் கொள்ள பெண் போராடுகிறாள்.

ஒழுக்கம் என்ற வரையறைக்குள் அவளை ஒடுக்கி வைக்க நினைத்து, அடிமைப் படுத்தும் ஆண் வர்க்கம், கட்டிப் போட்டு பெண்மையை சூறையாடும் அசுரர் கூட்டம், என்னைவிட ஏன் முன்னேறி மேலே சென்றாய் என குனிய வைத்து குமுறும் குடும்ப ஆண்கள், வஞ்சனையை தீர்த்துக் கொள்ள திராவகம் வீசும் தெருப் பொறுக்கிகள் என நித்தம், நித்தம் எத்தனை இன்னல்கள்.

உறங்கும் வேளையில் கூட பெண்மை பறி போய் விடுமோவென விழிப்புடன், தூக்கத்தைத் துறந்து திரிகிறார்கள் இன்றைய பெண்கள்.

மொட்டு பூவாகி, பூ காயாகி, காய் கனியான பின் அதனைப் பறித்து முறையாக பயன்படுத்தியதே அன்றைய நாகரீகம்.

ஆனால் மலராத மொட்டுக்களை கசக்கி தெருவில் எறிவதே இந்த கால நாகரீகம்.

ஒன்பது மாத குழந்தை முதல், பள்ளி செல்லும் பருவக் குமரி வரை என்ன பாவம் செய்தார்கள்? பெண்களாய் பிறந்ததைத் தவிர…

பாலியல் வன்கொடுமை, நீதி நிராகரிக்கப்படுதல், கொத்தடிமைத் தனத்திற்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படுகிறாள். ஒவ்வொரு 77 நிமிடத்திற்கு ஒரு முறை வரதட்சணை கொடுமையால் மரணம் நிகழ்கிறது. ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பெண் தனது உற்றார், உறவினர் போன்ற நெருக்கமானவர்களால் வண்புணரப்படுகிறாள் என அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது.

சட்டங்கள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது ஏட்டில் எழுதிய வாசகமாகவே உள்ளது இங்கே. நடைமுறையில் சாத்தியப்படுத்துவது உங்களைப் போன்ற நீதிமான்களுக்கு மட்டுமே சாத்தியம்.

சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அது என்னவெனில் பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவர்களுக்கு ‘கட்டாய ஆண்மை நீக்கம் செய்வது' செயற்கை முறையில் ஊசியின் மூலம் அவர்களது ஆண்மையைப் பறிப்பதே அந்த சட்டத்தின் நோக்கம். அது போன்ற ஆக்கப்பூர்வமான தண்டனையை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டுமென ஒரு பெண்ணாக எனது கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன்” என வித்யா தனது வாதத்தை முடித்துக் கொண்டார்.

ஆதாரங்களையும், வாதங்களையும் வைத்து தீர்ப்பை எழுதிய நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

“நாளுக்கு நாள் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை நமது நாட்டில் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணரும் போது மிகுந்த வேதனை கொள்கிறேன்.

அபிநயா மட்டுமின்றி மேலும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மதன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். மேலும், நால்வருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கிறேன்.

கண்ணன் சர்வதேச குற்றவாளயாக இருந்த போதும், அவர் இந்த நாட்டு குடிமகன் அல்லாத காரணத்தினால் அவரை மலேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிடுகிறேன்” என தீர்ப்பளித்த நீதிபதி தனது பேனா முனையை உடைத்து விட்டு எழுந்தார்.

காவல் துறையினர் மதன் மற்றும் அவனது கூட்டாளிகளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு,

கண்ணனை மலேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கும் பொறுப்பை கதிரிடம் கொடுத்திருந்தனர். கதிரும் அவனை ஒப்படைத்திருந்தான் காவல்துறயிடம் அல்ல எமனிடம்.

ஆம், போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் போது சுட்டுக் கொன்றதாக வழக்கமான பாணியைப் பயன்படுத்தி வழக்கை முடித்தான்.

இதுவரை பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன், இனியும் உயிரோடிருந்து என்ன பயன்? இனியும் பலர் வாழ்க்கையை அழிக்க கண்டிப்பாக முயற்சி செய்வான். ஆகவே கதிர் அவனுக்கு மேலோகப் பதவியை கொடுத்து விட்டான்.


Post a Comment

0 Comments