17. மின்சாரப் பாவை



காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

-பாரதி

இரண்டு மாதங்களுக்கு பிறகு:

வித்யாவின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஜீவாவும் அபிநயாவும் மண மக்களாய் தயாராகி கொண்டிருந்தனர்.

தன் ஒரே செல்ல மகனுக்கும் தான் பெரியதாய் நேசிக்கும் அபிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தில் கொஞ்சும் குமாரி போல நடமாடி கொண்டிருந்தார் வித்யா.

வித்யாவின் சொந்தங்களாக அவரின் சீனியர் குடும்பமும் அவர் தொழில் முறை நண்பர்கள் குடும்பமும் கலந்து திருவிழா போல வீடே நிறைந்து காணப்பட்டது.

கதிரவன், தீபிகா, சசியின் குடும்பங்களும் கண்மணி கவியின் சார்பில் வந்திருந்தனர்.

சுற்றி இருந்த அனைவரின் ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும் ஜீவா அபியின் கழுத்தில் தாலி கட்ட பெண்ணை பெற்ற வேணியின் மனம் குளிர்ந்து போனது.

மகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக நின்றதும் தாயாய் துடித்து கொண்டிருந்த வேணி கண்மணி அபியின் எதிர்காலத்தை சிறப்பாக்கி வைத்ததை எண்ணி பெருமையும் அதே சமயம் குற்ற உணர்வும் கொண்டார்.

அறையில் சேலை மடிப்பை சரி செய்து கொண்டு இருந்த கண்மணி அரவம் கேட்டு திரும்பி பார்க்க அவளின் சித்தியும் அப்பாத்தவும் நின்று கொண்டிருந்தார்.

“என்ன சித்தி.. என்ன வேணும்?” என்று கேட்டாள்.

அவளை தான் எந்த அளவுக்கு கொடுமை படுத்தி இருந்தாலும் அதையெல்லாம் பெரிதும் கருத்தில் கொள்ளாமல் அபியிடம் சிறு வயதில் இருந்தே பாசம் வைத்து வந்த கண்மணியின் குணம் அவளுக்கு அப்போது விளங்கியது.

ஒரு தாயாய் கண்மணிக்கு தான் கொடுக்க வேண்டிய பாசத்தை கண்மணி அபிக்கு கொடுத்து வந்தது மனதை குற்ற உணர்வில் வாட்டி எடுத்தது.

செய்த தவறுகளை எல்லாம் அசை போட்ட வேணி கண்கள் இரண்டும் குளம் கட்ட கண்மணியிடம் மன்னிப்பை வேண்டுவதாய் அவள் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள்.

அவரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத கண்மணி பதறி துடித்து விலக

அவளின் பாட்டியும் கண்மணியின் கைகளை பிடித்து கொண்டு அழுதார்.

“அச்சோ என்ன பண்றீங்க ரெண்டு பெரும்.. மொதல்ல எழுந்துறீங்க சித்தி.. எனக்கு சங்கடமா இருக்கு..” என்று கூறினாள்.

எழுந்தாலும் விடாமல் அவர் மன்னிப்பு கோரினார்.

“என்னை மன்னிச்சுறு கண்மணி.. நாங்க உனக்கு நிறைய கெடுதல் செஞ்சு இருக்கோம்.. ஆனா நீ எப்பவும் அதையெல்லாம் பெருசு படுத்தினது இல்ல. அபியோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்னு உன் மேல அநியாயமா பழி போட்டோம்.. ஆனா நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்கல.. அபிக்கு ரொம்ப பக்க பலமாக இருந்து அவளை தேத்தினது மட்டுமில்லாம அவளுக்கு இன்னிக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் அமைச்சு கொடுத்திருக்க…” என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

“என்ன சித்தி இது? அபி என்னோட தங்கச்சி.. அவ வாழ்கை நல்ல அமைஞ்சா தான எனக்கும் சந்தோஷம். அதோட ஜீவா அபி மேல உயிரே வச்சு இருக்கான்.. இந்த உலகத்துல எந்த மூலைல தேடினாலும் ஜீவா போல ஒருத்தன் அபிக்கு கிடைக்க மாட்டான்..” என்றாள் கண்மணி கண்களில் நண்பனை குறித்த பெருமிதத்துடன்.

எதிரில் நிற்கும் இருவரும் குற்ற உணர்வில் குறுகி போய் நிற்பதை கண்டவள்,

“சித்தி, அப்பத்தா… எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது.. சொல்ல போனா நீங்களும் அபியோட நல்லத்துக்காக தான் யோசிச்சீங்க.. அப்படி இருக்கும் போது உங்க மேல எனக்கு எப்படி கோபம் வரும் சொல்லுங்க..” என்றாள்.

அவளை அணைத்து கொண்ட இருவரும் பெருமிதத்துடன் அவள் நெற்றியில் முத்தமிட்டனர்.

“இத்தனை நாள் என் பொண்ணு அவ வாழ்க்கைன்னு சுயநலமா இருந்ததால தான் இறைவன் எனக்கு அவ வாழ்க்கைய வச்சே பாடம் புகட்டினான்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ கண்மணி.. அபி மட்டும் இல்ல… நீயும் எனக்கு பொண்ணு தான்.. நீ தான் என்னோட மூத்த மகள்… உனக்கு நான் சித்தி இல்ல.. அம்மா.. புரிஞ்சுதா?” என்று கூறினார் வேணி.

இத்தனை நாளும் மனதில் ஏதோ ஒரு மூலையில் இவர்கள் இருவரின் பாசத்திற்காக ஏங்கி இருந்த கண்மணியின் மனம் ஆனந்தமாக விழி வழி நீராய் வெளியேற அதை இருவரும் துடைத்து விட்டனர்.

“அட.. என்ன இது விஷேச வீட்டுல வச்சு ஆளாளுக்கு கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க.. இதெல்லாம் சரியில்லை.. கண்மணி.. நீ அழுறத என் தம்பி மட்டும் பாத்தான் வையி… எங்களை எல்லாம் உண்டு இல்லைனு பண்ணிடுவான்… நியாபகம் வச்சுக்கோ..” என்று அங்கு வந்த சத்யா செல்லமாக மிரட்டினாள்.

அவள் செய்கையில் விழிகள் நீரை திரையிட்டாலும் இதழ்கள் புன்னகைக்க

“அண்ணி…” என்று அவளை அணைத்து கொண்டாள்.

“உன் வாழ்க்கை இந்த நொடி பொழுது ரொம்ப சந்தோஷமா அமைஞ்சத நினைச்சு எனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா?” என்று அவள் கன்னம் வழிந்த நீரை துடைத்து விட்டு கூறினாள் சத்யா.

“அது போல என் தம்பி வாழ்க்கைக்கும் சந்தோஷம் கிடைக்குமா?” விழி சிமிட்டி சத்யா கேட்க கண்மணியின் முகம் வெட்க பூச்சு கொண்டது.

விருந்தினர் அனைவரும் கிளம்பிட இரு குடும்பங்கள் மட்டுமே இருந்தனர்.

 புதுமண தம்பதிகளுக்காக அறை அலங்காரம் நடைபெற்று கொண்டிருந்தது.

ஆயிரம் கேலி கிண்டலாக அபியை சிவக்க செய்த தோழியர் அவளை அறையில் கொண்டு வந்து விட்டனர்.

ஏற்கனவே பழகிய இடம் என்றாலும் ஜீவாவின் மனைவியாக இனி காலம் முழுவதும் இந்த வீட்டில் இருக்க போகிறாள்.

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு உண்டாகும் கடமைகளை தோளில் சுமந்து திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க மனமும் உடலும் தடதடக்க நின்று கொண்டிருந்த அறையில் ஜீவை தேடினாள்.

அவன் பால்கனியில் நின்று கொண்டிருப்பது தெரிய அவனிடம் சென்றாள்.

முந்தைய நாள் வரை காதலனாக இருந்தவன் இன்று தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு சொந்தக்காரன்.. என்ற உணர்வே அவளுக்குள் உவகையை கொடுத்தது.

லேசாக தொண்டையை செருமி அவனை அழைக்க அவனும் அதே உவகையை தான் கொண்டிருந்தான்.

ஆசைக்காதலி அவளை தன் புறம் விழியால் அழைத்தவன்

அவளை பின்னோடு சேர்த்து தன் அணைப்பில் கொண்டு வந்தான்.

“அபி… இந்த நிமிஷம் நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்றபடி அவளின் கழுத்து வளைவில் இதழ் பதிக்க பெண்ணிவள் மேனி சிலிர்த்து கொண்டது.

வார்த்தைகளை கூறாவிட்டாலும் அவளுக்கும் அதே சந்தோஷம் தான் என்பதை முகம் உணர்த்த இருவருக்கும் அந்த வான் நிலவும் வாழ்த்து கூறியது.

அபியை அனுப்பி வைத்த பின் தங்கள் அறைக்கு வந்த கண்மணி கவியை அங்கு காணாததால் தேடினாள்.

வீட்டின் எந்த பகுதியிலும் அவன் இல்லாமல் போக அவள் மனதில் திடீரென ஓர் மின்னல்..

மனம் சொல்ல கேட்டவள் தோட்டத்திற்கு வந்தாள்.

அவள் கணிப்பை பொய்யாக்காமல் அவன் அங்கு தான் அமர்ந்திருந்தான்.

“பாரதி.. இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

அவன் முகம் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்த்த

“என்ன யோசுச்சுட்டு இருக்கீங்க? சொன்னா நானும் உங்க கூட சேர்ந்து யோசிப்பேன்..” என்று கண்ணடித்து கூற

வெள்ளை நிலவொளியில் தகிக்கும் அவள் மேனியை கண்டு கிறங்கி போனவன்

பட்டென்று அவளை இழுத்து அணைத்திருந்தான்.

அவன் திடீரென அணைக்கவும் முதலில் புரியாமல் விழி விரித்தவள் மறு நொடி அவனோடு ஒன்றி கொண்டாள்.

இறுகி போன அணைப்பில் இருவரும் மூச்சுவிட கூட முடியாமல் போனது.

இருவருக்கும் இடையே செல்ல முயன்ற காற்றும் தோற்று போய் திரும்பிட

“கண்ணம்மா…” என்று காதலுடன் அவளின் முகமெங்கும் முத்தமிட்டு கொண்டிருந்தான் கண்ணம்மாவின் காதலன் பாரதி.

 காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்

  காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு

  தூற்றினை யொத்த இதழ்களும் -- நில

  வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து

  மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த

  வையத்தில் யானுள்ள மட்டிலும்- எனை

  வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்

  விண்ணவ னாகப் புரியுமே

அவளின் காதில் பாரதி கவிதையை மென் குரலில் கூறினான்.

கவிதையிலா? இல்லை அவன் மேல் கொண்ட காதலிலா?

இரண்டும் ஒரு சேர அவனோடு இணைந்து கொண்டாள் கண்மணி.

எபிலாக்:

சில மாதங்களுக்கு பிறகு…

கண்மணி பல்கலைக்கழக முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தன் நீண்ட நாள் கனவான வழக்கறிஞர் பட்டத்தை பெற மேடையேறினாள்.

கனவு வெறும் கனவாக மட்டுமே போய்விடும் என்று ஒரு நாள் எண்ணிக்கொண்டு இருக்க

அவளோடு சேர்த்து அவளின் கனவையும் காதலித்த கவி அவளையும்.. அவளின் கனவையும் கை கூட செய்து பெருமை படுத்தியிருந்தான்.

கண்கள் முழுதும் பெருமித கண்ணீர் பெருக்கெடுத்து ஓட தன் கணவனை பார்த்தாள் கண்மணி.

அவையோரில் அவனும் ஒருவனாக அமர்ந்து கொண்டு அவளுக்கு கரகோஷம் எழுப்பினான்.

அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கவியின் அருகில் போய் நின்றவளின் கண்களை கவி துடைத்து விட்டு

“இது உன்னோட கனவு கண்ணம்மா.. கண்ணுல தண்ணீ வர அளவுக்கு முகத்துல சிரிப்பும் வந்தா அடியேனுக்கு மகிழ்ச்சி..” என்று கூறி சிரித்தான்.

அவன் சிரிப்பில் தன்னையும் இணைத்து கொண்டாள் கண்மணி.

பின் அவளை அழைத்து கொண்டு காரில் செல்ல அது வழக்கமான வழியை விட்டு வேறு எங்கோ செல்லவும் அவனை புரியாமல் பார்த்தாள்.

“எங்க போறோம்?” என்று அவள் கேட்க

“பட்டம் வாங்கின என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேணாம்..” என்று குறும்பாக கண்ணடிக்க இவள் வெட்கத்தோடு தலை குனிந்தாள்.

கார் ஓரிடத்தில் நிற்கவும் இறங்கி பார்த்தவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

அவர்களின் மொத்த குடும்பமும் கூடியிருக்க அந்த திருமண மண்டபத்தை பார்த்தாள்.

“என்னங்க யாருக்காவது கல்யாணமா?” என்று அவள் கேட்க

 “ஆமா, திரு. கவிபாரதிக்கும், திருமதி. கண்மணிக்கும் சுற்றம் சூழ பெரியோர் வாழ்த்த இப்போ கல்யாணம் நடக்க போகுது..” என்று கூறினான்.

“ஓஹ்..” என்று தலையசைத்தவள் அவன் கூறிய வாக்கியத்தை உள் வாங்கி கொண்டு மறு நொடி அவனிடம்,

“ஹான்..” என்று புரியாமல் வினவ அவள் செய்கையில் சிரித்தவன் அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.

“என்னங்க விளையாடாதீங்க… எனக்கு எதுமே புரியல..” என்று அவன் காதருகில் கிசுகிசுத்து கொண்டே வந்தாள்.

“எல்லாம் போகப் போக புரியும்.. நீ போய் அதோ அந்த ரூம்ல உன் திங்ஸ் இருக்கு.. போய் குடுகுடுன்னு ரெடியாகி வா..” என்று கை காட்டினான்.

ஆனாலும் அவள் அப்படியே நிற்க “அடடா.. கல்யாண பொண்ணு வர இவ்ளோ நேரமா? கல்யாணத்துல மத்தவங்க லேட்டா வந்தா கூட பரவாயில்லை… நீங்க ரெண்டு பேருமே லேட்டா வந்தா விளங்குமா?” என்று அபி கூறிக் கொண்டே கண்மணியை மணமகள் அறைக்கு அழைத்து சென்றாள்.

இல்லை தள்ளி சென்றாள் என்பதே பொருந்தும்.

இன்னமும் பிரமை விலகாமல் கண்மணி இருக்க சில நிமிடங்களில் ஒப்பனைகளை முடித்து மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள்.

சுற்றி இருக்கும் அனைவரின் முகமும் சந்தோஷத்தில் வியாபித்திருக்க அவளுக்கு முன்னமே மணவறையில் அவளுக்காக காத்திருந்த கவி மயில் வண்ண பட்டில் பெண்மை ஜொலிக்க வந்து கொண்டிருந்த தன் மனைவியை விழி எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

தன் அருகே வந்து அமர்ந்த பின்னும் அவன் அவளையே பார்த்தபடி இருக்க ஜீவா அருகில் நெருங்கி,

“கவி அண்ணா… சுத்தி நாங்க எல்லாம் இருக்கோம்.. இருந்தும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படி சைட் அடிக்கிறீங்களே?” என்று அவன் முகத்தை துடைத்து விட்டு கொண்டே கூற

“என் பொண்டாட்டி நான் சைட் அடிக்கிறேன்.. உனக்கு வேணும்னா நீயும் உன் பொண்டாட்டிய சைட் அடி.. யார் கேக்க போறா.. போடா…” என்று அவன் குறும்பாக கூற அருகில் இருந்த கண்மணியின் செவிகளில் அவன் பேச்சு விழவும் முகம் சிவந்து போய் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“அது சரி.. ரொம்ப முன்னேறிட்டீங்க போங்க..” என்று ஜீவாவும் சிரித்து கொண்டே எழுந்து கொண்டான்.

அதன் பிறகு ஊரறிய சுற்றம் போற்ற கண்மணியை தன் ஆசை மனைவியாக்கி கொண்டான் கவிபாரதி.

இரவின் தனிமையில் அவள் அவனை அடித்து கொண்டிருக்க மயிலிறகால் வீசும் சாமரம் போல இதமாக வருடி கொடுப்பது போல இருந்தது அவனுக்கு.

அவள் அடித்த அடிகளை எல்லாம் வாங்கி கொண்டு சடுதியில் அவளின் கைகளை பற்றி அவளின் முகத்தருகே நெருங்கி அவள் விழியோடு தன் விழி கலந்தவன்

“நல்ல பாத்தா இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.. பொண்ணு மாதிரி அடக்கமா கொஞ்சி வெட்க படுறத விட்டுட்டு புருஷன போட்டு அடிக்கிறியே.. இதுவா தமிழ் பண்பாடு??” என்று குறும்பாக கேட்டான்.

நெருக்கத்தில் இருந்த அவன் முகம் கொடுத்த மோகத்தில் கண்ணிமைகளை துடித்து வெளியே துரத்தியவள் அவன் கேலி பேசவும் வெடுக்கென தள்ளி விட்டாள்.

சிரிப்போடு விலகியவனும்,

“இப்போ உனக்கு என்ன கோவம் சொல்லு கண்ணம்மா…” என்றான்.

“எதுவுமே சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு ஊர கூட்டி கல்யாணம்னு சொன்னா கோவம் வராம?” என்று முகத்தை திருப்பி கொண்டாள் கண்மணி.

அவளின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பியவன்,

“அபி-ஜீவா கல்யாணத்தப்போ உன் மனசுல என்ன ஓடுச்சு?” என்று அவன் கேட்க

இவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

விரிந்து நிற்கும் அவளின் இமைகளை விரலால் சுண்டி விட்டவன்

“நமக்கும் இந்த மாதிரி ஊர் கூட்டி கல்யாணம் நடந்து இருந்தா நல்ல இருக்கும்ல.. அப்படின்னு நீ நினைச்சது எனக்கு விளங்குச்சு.. உன் ஒவ்வொரு தேவையும் நிறைவேத்த தான கண்ணம்மா நான் இருக்கேன்… அதான் அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.. உன் படிப்பு முடிந்ததும் உன் விருப்பப்படி ஊர் கூடி வாழ்த்த கல்யாணம் பண்ணிக்கணும்னு.. அது தான் உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு முடிவு பண்ணி சொல்லல..” என்றான் சுண்டிய விழிகளில் இதழ் பதித்தபடி.

கண் மூடி இருந்தவள் கணவன் அன்பில் கட்டுண்டு கட்டியணைத்து கொண்டாள்.

காதலில் திளைத்த இரு உள்ளங்களும் கறை படியா அன்பில் காணாமல் போய் கொண்டிருந்தனர்.

ஜன்னல் திரை விலகி வாழ்த்திட வந்த வெண்ணிலவும் அவர்களுக்கான தனிமையை கொடுத்து மேக கூட்டத்தில் காணாமல் போனது.

***

மூன்று நாட்கள் கழித்து மதுரை விமான நிலையத்தில் மலேசியா செல்வதற்காக வந்து சேர்ந்தனர் கவிபாரதியும் கண்மணியும்.

வித்யா, ஜீவா, அபி, வேணி, வடிவு, கண்மணியின் தந்தை முத்து என அனைவரும் அவர்களை வழியனுப்ப வந்தனர்.

பின் குறிப்பாக கவியின் தூண்டுதலால் முத்து இப்போதெல்லாம் குடியை கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டு கொண்டு குடும்பத்தோடு ஒன்றி கொண்டிருந்தார் என்பதையும் சேர்த்து கொள்வோம்..

அனைவரிடமும் விடைபெற்று கொண்டு கிளம்பியவர்கள் தம்பதியர் சகிதமாக மலேசியாவில் வந்து தரையிறங்கினர்.

கொட்டும் இலையுதிர் காலம் என்பதால் இருவருக்கும் இயற்கை பூக்களை தூவி வரவேற்பு கொடுக்க

கணவனோடு கை கோர்த்தபடி தன் வாழ்க்கையில் நடை போட்டு கொண்டிருந்தாள் கண்மணி.

மின்சாரப் பாவைகள் ஓர் பார்வை:

நான்கு வருடங்களுக்கு பிறகு…

வித்யா எப்போதும் போல பெண் சிங்கமாக பெண்களுக்கு அநீதி இழைக்கும் ஆண்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி தக்க தண்டனை வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்.

“அம்மாடி நமக்கு நீதி கிடைக்கணும்னா அந்த வித்யா அம்மாவால மட்டும் தான் முடியும்..” என்று பரவலாக பேசப்பட்டு தன்னை நாடி வரும் ஏழை மக்களுக்கு நீதி பெற்று தந்தார்.

அபிநயா, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி இருந்தாள் ஜீவாவின் அறிவுரை படி.

அதில் பல பெண்களுக்கும் வேலை கொடுத்து பெண்கள் வன்புணர்வு, பாலியல் பலாத்காரம் போன்ற சமூக சீர்கேட்டால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயலும் ஒவ்வொரு பெண்களுக்கும் மருத்துவ ரீதியாக மட்டுமின்றி தகுந்த அறிவுரை வழங்கி அவர்கள் வாழ்க்கையில் தன்னால் முடிந்த அளவிற்கு சந்தோஷத்தை கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அறியா பெண்களின் மடமையை அடுப்பில் இட்டு கொளுத்திட செய்தாள்.

கண்மணி, கவியோடு நீதிமன்றத்தில் நீதி தேவதைக்கு ஒப்ப தவறு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாள்.

சத்யா கண்மணிக்கு முழு நேர அளவில் உறுதுணையாக இருக்க கண்மணி கடத்தப்படும் பெண்களுக்கு உதவியாகவும், கயவர்கள் காயப்படுத்தி சென்ற பெண்களுக்கு ஆறுதலாகவும் இருந்து வந்தாள்.

பாவை என்பவள் பூவை போன்று மென்மையானவள் தான் என்றாலும் பூவுக்குள் புயலும் உண்டு.. என்பதை போல

நம் பாவைகள் அனைவரும் பெண்களுக்கு எதிராக எழுப்பப்படும் எந்த குற்றத்திக்கும் சடுதியில் பாயும் மின்சாரமாக இருந்தனர்

தவறிழைத்த அனைவரும் மின்சாரத்தின் வெந்ததனழில் வெந்து போயினர்.

வீரத்தின் மறு பெயர் தமிழ் என்று சொல்வர்.

நம் தமிழ்ச்சிகள் சீறி பாய்ந்த சிறுத்தைகள் போல களத்தில் யாருக்கும் அஞ்சாமல் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றனர்.

“தட்டி கேட்டால் மட்டுமே தவறுகள் குறையும்” என்ற வாக்கை பொய்யாக்காமல் நம் மின்சாரப் பாவைகள் வீர குணத்தோடு தவறுகளை தட்டி கேட்டனர்.

அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவ்வொரு மின்சாரப் பாவைகளுக்கும் இக்கதை சமர்ப்பணம்.

“வாழ்க நிரந்தரம்

வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!”

-பாரதி

* முற்றும் *


Post a Comment

0 Comments