05. என் உள்ளம் உன் வசம்



சாவித்திரி , சிவராமனின் தாத்தா பாட்டி காலத்து வீடு ஒன்று . அதை கொஞ்சம் மாற்றி தோப்பு வீடாக உபயோகித்தனர்.

இங்கு தான் இவ்விருவரும் அடிக்கடி சந்திப்பது. ஆற்றங்கரை அருகினில் அந்த வீடு பார்க்கவே அழகாய் இருக்கும்.

அடிக்கடி ஆட்கள் வந்து சுத்தம் செய்து விட்டு செல்வதால் இன்னும் பழமை மாறாது நிற்கிறது.

நூறு முறையாவது அழைத்து இருப்பான் கார்த்திக்.

“ ரோஜா… இப்போ மட்டும் நீ பார்க்கல நான் இப்டியே கிளம்பி போய்ட்டே இருப்பேன்” எனவும் தான் ஏறிட்டு பார்த்தாள்.

குளம் கட்டி நின்ற அவளின் கண்களை கண்டவன் அவள் அருகில் வந்து அவளுக்கு அருகில் குனிந்து,

“ ஏய் ரோஜா என்னமா ஆச்சு ஏன் அழுற?”

அவனின் கழுத்தை கட்டி கொண்டவள் மீண்டும் குழந்தையாய் அழ ஆரம்பித்தாள்.

அவளின் முதுகை தட்டி கொடுத்தவன்…

“ என்ன ஆச்சுன்னு சொல்லு ரோஜா? அப்போதான் என்னால ஆனத செய்ய முடியும்” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் எடுத்து கூறினான்.

மெல்ல அழுகையை நிறுத்தி விட்டு,

“தெரியல மாமா ஏதோ பயமா இருக்கு… ஏதோ தப்பு நடக்க போறது மாறி”

முதலில் திகைத்தவன், பின் கடகடவென சிரித்தான்.

“ரோஜா, நம்ம ரெண்டு பேர் மட்டும் இருக்கிற இந்த வீட்ல நமக்குள்ள தப்பு நடந்துரும்னு பயப்புடுறியா?”

அவன் சொல்வது புரியாமல் முழித்தவள் பின் அவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள்.

“ என் மாமா அப்படி நடக்குற ஆள் இல்லையே ..ஏன்னா ? உன்ன பத்தி உன்னை விட எனக்கு நல்லா தெரியும் மாமா”

காதலாக சொன்னவள் நெற்றியில் இதமாய் முத்தம் வைத்தான்.

“பின்ன என்ன பயம் உனக்கு ?”

“ தெரியல மாமா கொஞ்ச நாளாவே கெட்ட கனவுகளா வருது. நம்ம கல்யாணம் எந்த இடைஞ்சலும் இல்லாம நடக்கும்ல”

சிறு பிள்ளை போல் வினவியவளின் கையை தன் கைக்குள் வைத்து கொண்டவன்,

“இது தான் உன் கவலைன்னா நான் சொல்றத கேட்டுக்கோ…

இன்னக்கி இல்ல இனி எத்தனை பிறவி எடுத்தாலும் நீயும் நானும் தான் கணவன் மனைவி.

உன்ன தவிர வேற யாரையும் நான் கனவுல கூட நினைக்க மாட்டேன். அது போல தான் நீயும். நம்மள யாராலும் பிரிக்க முடியாது.”

நீண்ட விளக்கம் சொன்னவன்,

“நாமளே நினைச்சா தான் உண்டு” என்று சிரித்தான்.

பின்னாளில் அவன் இதை நினைத்து எத்தனை முறை வருந்த வேண்டி வரும் என்று தெரிந்து இருந்தால் சொல்லி இருக்க மாட்டான்.

அவன் விளையாட்டாய் சொன்னது போல் அவர்கள் பிரிய வேறு யாரும் காரணமாய் இருக்கவில்லை. அவர்கள் இருவரை தவிர.

“ அதுசரி உனக்கு இப்படி வருத்தம் வர அளவுக்கு அப்படி என்ன கனவு ரோஜா.”

ஒரு அழகான தோட்டம்.

தோட்டம் என்றாலே அவளுக்கு மிகவும் பிடிக்கும். அது போன்றோர் தோட்டத்தில் அவள் அமர்ந்திருக்க,

அவளின் தோள் மேல் ஒரு கை விழ அது யாரென்று அவள் பார்க்காமலே தெரிந்தது. அந்த தொடுகை அவளின் அவனுடைய தொடுகை அல்லவா…

திரும்பாமலே அந்த கைக்கு ஒரு சிறு முத்தத்தை அவள் கொடுக்க , அதை வாங்கி கொண்டவனோ அவளின் தலையை தூக்கி அவளின் பிறை நெற்றியில் முத்தம் வைத்தான்.

கண் மூடி கிரங்கியவள் மெதுவாய் தன் கண்களை திறக்க “அவளின் அவன்” கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்ணை விட்டு மறைந்தான்.

“ மாமா…” அவளின் கத்தல் காற்றில் கலந்து மறைந்தது.

“ ஏன் என்னை விட்டு போன மாமா… ?” அழுது கொண்டே நெடு நேரம் அமர்ந்து இருந்தாள்.

திடுக்கிட்டு கண் விழித்த போது அவளின் கண்கள் நிஜத்தில் கண்ணீரை சிந்தியிருந்தது.

“ ஒரு வாட்டி இல்ல மாமா இதே போல தொடர்ந்து அஞ்சு ஆறு வாட்டி வந்திருக்கும்”

கேவி கொண்டிருந்தவளை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டான். அவளை சமாதானம் செய்ய அவனுக்கு நெடு நேரம் ஆகியது.

கார்த்திக் – கீர்த்தனா திருமண நிச்சயார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் ஒன்று கூடி இருந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் வரை நடைபெறும் அந்த வைபவம்.

முதல் நாள் மாப்பிள்ளைக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் புது துணிகளுடன் பெண் வீட்டார் இவர்களின் இல்லத்துக்கு வருகை தருவர்.

பின் இரண்டாம் நாள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு முன் சொன்னதை போல் செய்வர்.

மூன்றாம் நாள் இரு குடும்பத்துக்கும் பொதுவான ஒரு இடத்தில் வைத்து தட்டு மாற்றி இனி வரும் ஓர் நல்ல நாளில் இவர்கள் கணவன் மனைவி ஆக தம் வாழ்வை தொடர இதுவே அடித்தளம்… என்று முடிவு செய்வர்.

இது இந்த ஊரில் காலம் காலமாக நடந்து வரும் முறை.

அதன்படி,

கீர்த்தனாவின் வீட்டார் முதல் நாள் கார்த்திக் வீடு செல்ல,

எதிர் பட்ட சதா சிவத்திடம் கை கொடுக்க சிவராமன் முனைய இவரோ ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து நகர்ந்தார். சிவராமன் கொஞ்சம் ஆடிதான் போய்விட்டார்.

“இது முதல் அடி” என்று எண்ணி கொண்டார். “ இனி எத்தனை பட வேண்டி வருமோ?”

விருந்து முடிந்து அனைவருக்கும் தட்டில் புது துணிகளை வைத்து கொடுக்க சதாசிவம்- சாவித்திரி தம்பதியினர் அதை வாங்கி கொண்டனர்.

பெரியவர்கள் பேசி கொண்டிருந்த சபையில் வந்த வாசுகி ,

“ டேய் சதா தட்டுல மாப்பிள்ளைக்கு மோதிரம் வைக்கல டா… இதுக்கு தான் இந்த இடம் வேணாம்னு தல பாடா அடிச்சுகிட்டேன். யார் கேட்டா?” என்று சிவராமனை முறைத்து விட்டு சென்றார்.

அவசர அவசரமாக மோதிரம் கொண்டு வரப்பட்டது.

இது இரண்டாம் அடி , என்று பெரு மூச்சுதான் விட முடிந்தது அவரால்.

இரவினில் தன் துணையிடம் சொல்லி வருத்த பட்டு கொண்டார்.

“இனி என்னவெல்லாம் பட வேண்டி வருமோ ஜானகி”

“அதெல்லாம் ஒன்னுமில்ல… நீங்க வீணா கவலை படுறதை விடுங்க”

கணவருக்கு ஆறுதல் கூறினாலும் அவருக்குமே அது கவலையாய் தான் பட்டது.

முதல் முறையாக தாம் பெரிய தவறு செய்கிறோமோ. தன் கணவர் பயந்தது போல் மகளின் வாழ்வில் எந்த இடைகளும் வரக்கூடாது என்று வேண்டி கொண்டார்.

ஆனால் அவருக்கு தெரியவில்லை.

விதி தன் விளையாட்டை எப்போதோ தொடங்கி விட்டது என்று.

திருமண நிச்சயமாகும் வரை கார்த்திக் , கீர்த்தனா சந்திக்க தடை இடப்பட்டு உள்ளதால் போனில் கதை பேசி கொண்டு காலத்தை கடத்தினர்.

அப்படி கார்த்திக்கிடம் பேச அங்கு வந்த கீர்த்தனா தன் பெற்றோர் பேசியது கேட்க நேரிட்டது.

அவளுக்கு என்றும் இல்லாமல் அன்று கவலை கொள்ள மீண்டும் தன் மாமாவை நாடினாள்.

“ இதோ பார் ரோஜா , இது பெரியவங்க விஷயம். நாம இதுல தலையிடுறது சரியாக இருக்காது. மேலும் நான் இப்போ ஏதாவது பேசுனா அது உன்னை தான் தாக்கும். கொஞ்சம் பொறுமையா இரு. அதோட பெரியவங்களுக்குள்ள வர இந்த சண்டை இது முதல் தடவை இல்லையே. அவங்களா இத புரிஞ்சு கிட்டா தான் நலம். அன்பும் பாசமும் மன்னிப்பும் காதலும் சிபாரிசு பண்ணி வராது. அப்படியே வந்தாலும் அது நெடு நாள் நிலைக்காது.”

ஏதேதோ பேசி அவளை சமாளிக்க அவனுக்கு மூச்சு முட்டுவது போல் தோன்றியது.

“இந்த பாட்டியை…” என்று பல்லை கடித்தான்.

“போவதற்குள் இதுக்கு ஒரு வழி பண்ணணும்” என்று எண்ணி கொண்டான்.

பாவம் அவனின் இந்த கால தாமதம்… இவர்கள் பிரிய இதுவும் ஒரு காரணமோ.

இரண்டாம் நாள்…கீர்த்தனாவின் வீடு.

காபியில் சர்க்கரை அளவு சரியாக இல்லை என்பது தொடங்கி காலில் போடும் செருப்பை காணோம் வரை கீர்த்தனாவின் வீடு அவற்றை சமாளிக்க பெரும் பிரயத்தனம் பட வேண்டி இருந்தது.

மூன்றாம் நாள்..

இவர்களின் தோப்பு வீட்டில் வைத்து விமரிசையாக கொண்டாட பட்டது.

கார்த்திக் – கீர்த்தனா நடு நாயகமாக இருக்க பெரியோர்களால் தட்டு மாற்றி கொள்ளப்பட்டது.

அதன் பிறகே கார்த்திக், கீர்த்தனா, சாவித்திரி, சிவராமன், ஜானகியால் ஒழுங்காக மூச்சு விட முடிந்தது.

இனி எந்த பிரச்சனையும் வராது என்றே நம்பினர். இதன் பின் தான் பூகம்பம் இருப்பதே அறியாமல்.

கார்த்திக்கு நண்பர்களிடம் இருந்து அழைப்பு வர, அவன் பார்வையால் ரோஜாவின் சம்மதம் கிடைத்த பின் வெளியேறினான்.

தன் மருமகள் அருகில் வந்த சாவித்திரி,

“ அழகு தேவதையாக இருக்கிற செல்லம்”

என்று அவளுக்கு நெற்றி முறித்தார்.

“ஏய் சாவித்திரி இவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுடாத… ஒரே பொண்ணுன்னு நாங்க செல்லம் கொடுத்தது போதாதா. இப்போவே வாய் நீளம்… நீயாச்சும் அவ கிட்ட கண்டிப்பா இரு” என்று கூறினாலும் அவர் குரலிலும் சந்தோசமே.

“ போங்க அண்ணி … நான் ஏன் என் மருமகள கண்டிக்க போறேன்? எனக்கு மகள் இல்லைன்ற குறைய போக்க வந்தவ இவ. அதனால் நான் எப்பவும் எங்க கீர்த்துவ பேச விட்டு கேட்டு ரசிப்பேன்”

“அப்படி சொல்லுங்க அத்தை” என்று செல்லமாய் அவள் கழுத்தை சுற்றி கொண்டாள்.

எப்போதும் போல் கண்டிப்பு காட்டும் தாயை விட அத்தையிடம் சலுகையாய் ஒட்டி கொண்டாள்.

பேச்சும் சிரிப்புமாய் இருந்தவர்களின் அருகில் வந்த சிவராமன் ஜானகியை தனியே அழைத்து அவரிடம்,

“ஜானு, கையில பணம் வச்சு இருக்கியா” என கேட்க

அதிர்ந்து விட்டார் ஜானகி … தன் கணவரா தன்னிடம் பணம் கேட்டு நிற்பது.

அவர் அறிந்த சிவராமன் அப்படி இல்லையே… ஏதோ பெரிய விசயம் என்பது அவரின் சோக முகமே காட்ட அவரிடம் கேட்டார்.

“ ஏங்க என்ன ஆச்சு?”

“ மாப்பிள்ளை கிளம்பும் சமயம் அவருக்கு கவர்ல வச்சு கொடுக்கணும் “

“ என்னங்க இது புது கதை யார் அப்படி சொன்னது ?”

“நம்ம சாவித்திரியின் அத்தை தான் சொன்னாங்க. குறைந்தது 5000 மாச்சும் வைக்க வேணுமாம்”

“ஏங்க இப்படி. ஏற்கனவே எந்த குறையும் சொல்லிட கூடாதுனு சக்திக்கு மீறி செய்துட்டு இருக்கோம். இருந்தும் இது நொட்டை அது சொட்டனு சொல்லிட்டு தான் இருக்காங்க. இப்போ திடீர்னு இப்படி 5000 மாச்சும் வைக்கணும்னா நாம இப்போ என்ன பண்றது”

சொந்தங்களிடம் கேட்கலாம் தான்.

அதில் அவர்களுக்கு உடன் பாடு இல்லையே.

சிவராமன் தன் மகளின் நிச்சயதார்த்தம் அப்போ கைல 5000 கூட இல்லாம இருந்தார் … என்ற பேர் வருவதை அவர் விரும்பவில்லை.

அதனால் தான் தன்னிடம் வந்து கணவர் கேட்டுள்ளார், என்று புரிய துக்கம் தொண்டையை அடைத்தது.

பெற்றவர்களின் முகம் சரியில்லாததை கண்டு அவர்கள் அருகில் வந்த கீர்த்தனா,

“என்ன ஆச்சுப்பா ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ? என்ன பிரச்சினை மா ?”

“ வாடி இவளே, எந்நேரம் வாய திறந்தியோ கட்டுனா இவர தான் கட்டுவேன்னு… அன்னைல இருந்து அழுதுட்டு தான் இருக்கோம். இது பத்தாது இன்னக்கி 5000 கூட அழனுமாம்.

நீ மட்டும் வயசு பொண்ணா லட்சணமா வீட்டோட இருந்து... இந்த மாறி காதல் கீதல்னு இழுத்துட்டு வராம இருந்து இருந்தா இன்னக்கி இந்த நிலை வந்து இருக்குமா”

தாயின் குமுரலைக் கேட்ட கீர்த்தனா அதிர்ந்து நோக்க,

“ஜானகி…..” என்று சிவராமன் போட்ட அதட்டலில் பொங்கிய அழுகையை புடவையின் தலைப்பால் பொத்திவிட்டு நகர்ந்தார்.

“நான் என்னப்பா செஞ்சேன்”

மிரண்டு போய் கேட்கும் மகளை கண்டவருக்கு ஆற்றாமையாக இருந்தது.

“ஒன்னுமில்லைமா , அவ ஏதோ உலரிட்டு போறா .. நீ போமா அங்க எல்லாரும் உன்ன தான் தேடுவாங்க” என்று அனுப்பி வைத்தவரின் மனமோ,

' இப்போதைக்கு யாரிடமாவது வாங்கி கொடுக்கலாம்…. திங்கள் வங்கியில் இருந்து எடுத்து கொடுக்க வேண்டும் '

என கணக்கு போட்டது.

இருக்கையில் வந்து அமர்ந்தவள் மனமோ, தாயின் சொல்லை சுற்றியே இருந்தது.

அதுநேரம் வரை மணப்பெண்ணாக இருந்து விழாவை கண்டவள் அந்த நொடி ஒரு மூன்றாம் மனுசியாக மாறி சுற்றி இருப்பவற்றை காண தொடங்கினாள்.


Post a Comment

0 Comments