புதிதாக ஆரம்பிக்க பட்ட வேலைகள், அலுவலகத்தின் முக்கிய சில நபர்கள் மட்டும் கவனிக்க ஏற்கனவே போய் கொண்டிருக்கும் வேலைகளை மற்றவர்கள் செய்ய தொடங்கினர்.
கார்த்திக் புதிய ப்ராஜெக்ட்டில் தலையை விட்டுருப்பதால், மற்றவர்கள் செய்யும் வேலையை கீர்த்தனா மேற்பார்வை செய்து விட்டு கார்த்திக்கின் கையெழுத்துக்காக அவன் முன் வைக்க, அவனோ அதை பேருக்கு கூட பார்க்காமல் கையெழுத்து போட்டு விட்டு அவளிடம் கொடுப்பான்.
“ ஒருமுறை செக் பண்ணிக்கோங்க கார்த்திக்” என்றவளுக்கு,
“தேவையில்லை” என்றே பதில் கொடுத்தான்.
அதனால் ஒரு முறைக்கு இரு முறை அவளே செக் செய்துவிட்டு அவன் முன் வைப்பாள்.
அப்படி அவள் சரி பார்த்து கொண்டிருந்த சமயம் அவனை பார்க்க, அவன் அடிக்கடி தலையை பிடித்த வண்ணம் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான்.
சில நாட்களாகவே அவன் சரியாக தூங்கவில்லை என்பதும் புரிந்தது. அவனுக்கு இப்போது என்ன வேண்டும் என்பதை அவள் நன்கு அறிவாள். மெல்ல இருக்கையை விட்டு எழுந்தவள், தயங்கிய படியே அவனருகில் நின்றாள்.
சில நொடிகள் கழித்து அவளை ஏறிட்டவன், ஃபைலுக்காக கையை நீட்டினான். அதை அவளும் கொடுக்க , மறு பேச்சின்றி திருப்பி அவளிடம் கொடுத்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்தான்.
மேலும் சில நிமிடங்கள் கழிய அவள் இருந்த இடத்திலேயே கையை பிசைந்த வண்ணம் நின்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் , “என்ன ஆச்சு கீர்த்தனா ?” என்றான்.
“அது வந்து…” அவள் திக்கி கொண்டிருந்த சமயம் கடிகாரம் ஒரு முறை கூவி தன் இருப்பை உணர்த்த,
“ஓஹ், டைம் ஆச்சா? சரி நீ போய் சாப்பிட்டுட்டு வா” அவளிடம் இருந்த ஃபைலை வாங்கி தன் மேசையில் வைத்து விட்டு அவன் கூற,
“நீங்க போகலையா?” அவளும் பதிலுக்கு கேட்டாள்.
தன் கணினியை ஒரு முறை பார்த்தவன், “ கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு கிளம்புறேன்” அவளுக்கு பதில் கூறினான்.
வேறு வழியின்றி அவளும் நகர வேண்டியதாய் போனது.
ஆனாலும் தங்கள் அறைக்கு செல்லாமல் ஆஃபிஸ் பாய் மணியை தேடி சென்றாள்.
“மணி அண்ணா”
“சொல்லுங்க மேடம்”
“ஒஹ், சாரி சாப்பிட்டுட்டு இருக்கீங்களா”
“இதோ, முடிச்சு விட்டேன் என்னமா சொல்லுங்க”
அது, சார் உங்க கிட்ட சூடா இஞ்சி டீ வாங்கி வர சொன்னாங்க. லேட் பண்ணிடாதீங்க” என்று கூறி விட்டு நகரும் போது தான் அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
அதே சமயம்,
இருக்கையில் பின் தலையில் கை ஊன்றி கண் மூடி அமர்ந்து இருந்தவனுக்கு ' சூடாக டீ குடித்தால் தேவலாம் ' போல இருக்க, எண்ணிய கணம் அவன் நாசியில் டீயின் மணம் வீச கன் திறந்தான்.
என்ன? என்பது போல் அவன் மணியை பார்க்க,
“சார், டீ கேட்டிங்களாமே கீர்த்தனா மேடம் சொன்னாங்க” பவ்யமாய் பதில் கூறினான்.
நொடியில் மின்னியது கார்த்திக்கின் முகம்.அதை சரி செய்தவன்,
“ வச்சுட்டு போங்க” என்று அவனை அனுப்பினான்.
மணி நகரவும் கோப்பையில் இருந்த டீயை பார்தவனின் மனம், அவன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவனின் கடந்த கால காதல் நிகழ்வுகளை மேலே கொண்டு வந்தது.
0 Comments