19. என் உள்ளம் உன் வசம்



கீர்த்தனாவின் பாடலில் மனம் கணக்க, ஆண்களுக்கான அறையில் அமர்ந்தவன், சோபாவில் சாய்ந்து கண் மூடினான்.

அவன் மனம் அறிந்த விக்கியும் அவனை தொந்தரவு செய்யாமல் அவனே எல்லாவற்றையும் முடித்து விட்டு கிளம்பினான்.

விழா ஏற்பாட்டாளர் கார்த்திக்கை நெருங்கி,

“சார் எல்லாரும் கிளம்பியாச்சு. நீங்க வந்து மூணு ரூமையும் செக் பண்ணிட்டீங்கனா சாவியை ரிசப்ஷனில் வச்சுடலாம்” என்க

அவன் எழுந்து வெளியே வந்தான். வெளியே வந்தவன் கண்ட காட்சி, கீர்த்தனாவை இருவர் இழுத்து சென்றது தான்.

அவர்களிடம் இருந்து அவளை விடுவித்தவன்,

“நான் மட்டும் சரியான நேரத்தில் வரலனா என்ன ஆகி இருக்கும்?” பதறிய மனதை அடக்கி கொண்டு கேட்டான்.

அன்றைய நாளில் ஏற்பட்ட மனம் குமைச்சல், தான் பாடிய பாடலால் ஏற்பட்ட மன அழுத்தம், நெடு நேரம் அடைந்து கிடந்ததால் வந்த பயம்.. இவை எல்லாமும் சேர்ந்து கோபமாய் அவன் முன் வெடித்தது கீர்த்தனாவுக்கு.

“ என்ன ஆகி இருக்கும். உயிர் போயிருக்கும்” கோபமாய் கூறி முடிக்கும் முன் கார்த்திக்கின் கை அவள் கன்னத்தில் இறங்கியது.

“ஏய்” விரல் நீட்டி அவளை எச்சரித்தவன், தலையை அழுந்த கோரி கொண்டான்.

“ உன்ன யார் இங்க வர சொன்னது?” அவளின் பதில் தந்த கோபமும் அவன் குரலில் வெளிப்பட

பெண் மனமோ, ' உன்னை யார் என் வாழ்வில் திரும்ப வர சொன்னது ' என்ற கேள்வியை கேட்ப்பதாய் தப்பாக ஊகித்தது.

“ நானா ஒன்னும் வரலை. உங்க தம்பி தான் என்னை இங்க வர வச்சான். அவன் கிட்ட எவ்வளோ எடுத்து சொன்னேன். நாம ஒன்னு சேரவே முடியாதுன்னு. கேட்டானா? ஏதேதோ பேசி என் மனசை கலச்சிட்டான்.”

அவளின் சம்பந்தமில்லாத பதிலில் நெற்றி சுருங்க அவளை பார்த்தான். ஆனால் அவனுக்கு ஏதோ புரிவது போலும் இருந்தது.

இருந்தும் அவன் கண்ட கீர்த்தனாவின் நிலை மீண்டும் கண் முன் வர, இம்முறை அழுத்தமாக கேட்டான்.

“ நான் மட்டும் சரியான நேரத்தில் வராம போயிருந்தா?”

“ சந்தோசமா இருந்திருப்பேன்”

பாவி மனம் அப்போதும் அவன் கேள்வியை தப்பாக ஊகித்தது.

“ என்ன?” அவன் கண்களில் அடிபட்ட வலி.

அது அவளுக்கு நிம்மதியை தராமல் வருத்தம் கொடுக்க இளகிய மனதை அவனிடம் காட்டாமல் முகம் திருப்பினாள்.

“ ஆமா, நீங்க மட்டும் என் வாழ்க்கையில் வராம இருந்து இருந்தா நான் என் அப்பா அம்மாவோடு சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பேன். ஏன் என் வாழ்க்கையில் வந்தீங்க கார்த்திக்? ஏன் மனசை கலைச்சீங்க? ஏன் என்னை விட்டு போனிங்க? இப்படி பல ஏன்களை நான் எனக்குள்ளே கேட்காமலே இருந்து இருப்பேன். உங்க கிட்ட கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன். போய்டுங்க. என் வாழ்க்கையை விட்டு போயிடுங்க. அப்போவாச்சும் அந்த கடவுளுக்கு என் மேல் இரக்கம் வருதானு பாக்கலாம்.” வெடித்து சிதறி தரையில் அமர்ந்து அழ தொடங்கியவளை,

“ரோஜா” என்று தோள் தொட்டு எழுப்ப முயன்றான்.

அவன் கையை தட்டி விட்டவள், எழுந்து நின்று அவனை விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து ஓடினாள். அவளின் செய்கையில் அவன் தான் சிலையாய் நின்றான்.

கொஞ்சம் முன்பு புதுப்பூவாய் போனவள், இப்போது வாடிய கொடியாய் வரவே மனம் பதறிய மித்ரா,

“என்ன ஆச்சு கீர்த்தனா?” என்க

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெளியேற யாருக்கும் காட்டி பழக்கமில்லாதவள், வேகமாக படியேறி தன் அறைக்குள் அடைந்தாள்.

அவளின் செய்கையில் மனம் பதற அவசரமாய் தன் ' அவனை ' அழைத்தாள்.

“ டேய், எங்க இருக்க?”

“ வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்டி என்ன விசயம்?”

“இன்னக்கி என்ன ஆச்சு? கீர்த்தனா முகமே சரி இல்லை”

அன்றைய நிகழ்வுகளை பட்டியலிட்டு கூறினான் விக்னேஷ்.. மித்ராவின் காதலன்.

“ ஏற்கனவே டிப்ரஸ்ஸா இருந்தா. இதுல அவளை பாட சொன்னதும் தேடி பிடிச்சு பாடுனா பாரு ஒரு பாட்டு. அது கேட்டதுல இருந்து ரெண்டு பேர் முகமும் சரி இல்லை. கொஞ்சம் நேரம் கழிச்சு அவளை தேடினேன். ஆனால் அவ இல்லை. சரி மனசு சரியில்லாதனால வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சு விட்டுட்டேன்.”

“ என்னடா சொல்லுற. அவ அப்போவே கிளம்பிட்டாளா.. ஆனால் அவ இப்போ தானே வீட்டுக்கு வரா. ஒருவேளை கார்த்திக்கை பார்க்க போயிருப்பாளோ?”

“ இல்லையே கார்த்திக் நான் கிளம்பி வர வரைக்கும் ரூம் விட்டு வெளியே வரலையே.. அப்படினா…” மனம் ஏதோ தவறு நடந்து இருப்பதாய் உந்த.

“மிது” என்றான் பயந்தவனாக

“ஒன்னும் ஆகியிருக்காது வினு. நீ உடனே போய் கார்த்திக்கை பாரு. எனக்கு என்ன தோனுதுன்னா.. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ வாக்கு வாதம் போல அதான் கீர்த்து இப்படி வந்திருக்கா. இவள நான் பாத்துக்கிறேன். நீ கார்த்திக் கிட்ட போ. அவருக்கு இப்போ உன் உதவி அவசியம்.” அவனை துரித படுத்தினாள்.

செல்லை அணைத்தவன், காரை கார்த்திக்கின் வீடு நோக்கி திருப்பினான்.

கார்த்திக்கின் வீட்டில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


Post a Comment

0 Comments