கார்த்திக் வீட்டை அடைந்தவன், கதவில் கை வைக்க அது தானாக திறந்து அவனுக்கு வழிவிட்டது.
அங்கு அவன் கண்ட காட்சி, கையில் மது கோப்பையுடன் கட்டிலில் படுத்து அரை மயக்க நிலையில் இருந்த கார்த்திக்கை தான். வேகமாய் அவனருகில் ஓடினான்.
“கார்த்திக்”
“டேய் விக்கி தம்பி வாடா வா சொன்னாடா அவ சொன்னா…நீதான் அவளை வர வச்சியாமே… என்னை சொல்லிட்டு நீ செஞ்சிருக்கே… ஓஹோ எனக்காக தான் வர வச்சியா.. தேங்க்ஸ்டா ரொம்ப தேங்க்ஸ்..” குலறல் வாயோடு உலறலாய் அவன் கன்னம் தொட்டு கூறினான்.
அவன் கையை தட்டி விட்டவன்,
“ டேய், எத்தனை வாட்டி சொன்னேன்? படிச்சு படிச்சு சொன்னேனடா… இந்த கருமத்த குடிக்காதேன்னு… இதனால என்ன ஆகும்ன்னு சொன்னேனே.”
“ என்ன ஆகும்? உயிர் போகும் அவ்வளவுதானே… போனா போகட்டும்டா…அதான் அவ சொல்லிட்டாளே. என்னை அவ வாழ்க்கையை விட்டு போக சொல்லி…என்னால அது எப்படி முடியும்… நீ சொன்னதுக்காக தான் அவளைப் பார்க்காம இருந்தேன். இப்போ அவள என் கண் முன்னாடி வச்சுக்கிட்டு, என்னால எப்படி ஒதுங்கிப் போக முடியும்? அதுதான் ஒரேடியா போகலாம்னு..”
தலைக்கு மேல் உயர்த்திய அவன் கையை தட்டிவிட்டவன், அவனை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினான்.
மருத்துவமனையில் டாக்டர் விக்கியை பிலு பிலுவென்று பிடித்து விட்டார்.
“ ஏன் சார் எத்தனை முறை சொன்னேன்? அவர கவனமா பார்த்துகோங்க… அவர் இனிமே குடியை தொடக்கூடாது… அது அவர் உயிருக்கு ஆபத்துல போய் முடியும்னு”
“ சாரி டாக்டர் இவ்ளோ நாள் நல்லாதான் இருந்தான். இன்னிக்கி தான் இப்படி திடீர்னு…” பதில் கூற முடியாமல் தலையைக் கவிழ்த்தான்.
“என்ன சார் இவ்ளோ அஜாக்கிரதையா சொல்றீங்க? மனித உயிர்கள் உங்களுக்கு விளையாட்டா போயிடுச்சா? இது கடவுள் கொடுத்த உயிர் சார்.. அதை பறிக்க கடவுளுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.”
தொடர்ந்து அவனுக்கு அறிவுரைகளை வழங்கியவர் இறுதியாக, “ நாலு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் சார். இப்போ ட்ரிப்ஸ் போய்கிட்டு இருக்கு. நாளைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.” என்று முடிக்க எழுந்து கார்த்திக்கின் அறைக்குள் வந்து அவனருகில் சேரை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.
அவன் முன் ' இனி என்ன செய்யப் போகிறேன்?' என்ற பெரும் கேள்வி.
மறுநாள் காலையில் கண்விழித்த கார்த்திக் விக்கியை பார்ப்பதை தவிர்த்து தலைகுனிந்து கொண்டான்.
“சாரிடா” என்றவன் தோளை தட்டிக் கொடுத்தான்.
அவன் கைப்பற்றியவன் “தேங்க்ஸ்” என்க,
இவன் எதற்கு? என்று கேட்கவில்லை. அது தான் இரவு முழுதும் உலறி கொண்டே இருந்தானே.
இன்று ஞாயிற்றுக்கிழமை, அலுவலகம் செல்லவேண்டி இல்லாததால் கார்த்திக்கின் அருகிலேயே இருந்தவன் மாலை அவனை அழைத்துக்கொண்டு கார்த்திக் வீடு வந்து சேர்ந்தான்.
எப்போதும் போல் அவனுக்கு பல அறிவுரைகளை கூறியவன், “ நாலு நாள் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீஸ் வந்தா போதும்” என்று விடைபெற்றான்.
திங்களன்று காலை:
அறையில் அமர்ந்திருந்த விக்கியின் விழிகள் தன் முன் இருந்த கணினியின் திரையை வெறித்து பார்த்தது.
' அடுத்து என்ன செய்யப் போகிறேன்?' என்ற கேள்வி அவன் முன் சுழல, அருகில் நிழலாட விழி திரும்பினான். கீர்த்தனா தான் நின்று கொண்டிருந்தாள்.
“என்ன கீர்த்து?”
கையில் இருந்த கடிதத்தை அவன் முன் நீட்டினாள்.
“என்னதிது?”
“ என்னோட ராஜினாமா கடிதம்”.
இது அவன் எதிர்பார்த்ததுதான் என்பதால் அமைதியாய் இருந்தான்.
“ சரி அதை எதுக்கு என்கிட்ட கொடுக்கிற. உன்னை வேலைக்கு வச்சவன் கிட்ட கொடு.”
அவன் பதிலில் கோவம் வரவே கத்த ஆரம்பித்தாள்.
“ என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க அண்ணனும் தம்பியும்? என்னை சாவடிக்கணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?”
“ நாங்களா? இல்ல நீயா?”
“ என்ன நானா? நான் என்ன செஞ்சேன்?”
“ என்ன செய்யலை? என் அண்ணன் வாழ்க்கையை சாவடிக்கலையா? என் அண்ணன் உணர்வுகளோடு விளையாடிட்டு அவன விட்டு பிரியலை. இப்போ கூட அவனை வார்த்தையால் குத்தி கிழிச்சு அவனை உயிரோட கொல்லலை? இதை எல்லாம் இல்லைனு சொல்வியா?”
“ சொல்வேன். அடிச்சு சொல்வேன். என் மேல எந்த தப்பும் இல்லை. இந்த உலகத்திலேயே அவரை அதிகம் நேசிச்சது நான் தான். ஆனால் அதுக்காக என் அப்பாவோட மரியாதையை உங்க காலுக்கு கீழே போட்டுட்டு தான் நான் உங்க அண்ணாவோட வாழணும்ன்னா அதுக்கு நான் கடைசி வரை இப்படியே இருந்துட்டு போறேன்”
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ அப்போ நீ செஞ்சதை தானே அவனும் செய்தான். அவன் செய்தது தப்புன்னா அப்போ நீ செய்தது?”
“ என்ன உலர்ற? அப்போ உன் அண்ணா என்னை வேண்டாம்னு சொன்னது தப்பில்லை என்னு சொல்லுவியா?”
“ உலறலை உண்மையை தான் சொன்னேன். நல்லா யோசிச்சு பாரு கீர்த்து… அன்னக்கி அண்ணா சொன்னது உன்னையா இல்லை மாமாவையா?”
“ யாரை சொன்னா என்ன? என் அப்பாவுக்கு மகள் தானே நான்.”
“ அது போல அவனும் அவன் அப்பாவுக்கு மகன் தானே. அன்னைக்கு அவன் பார்த்தது… மாமா எங்க அப்பாவை அடிச்சதை தான். அந்த நிலையில அவன் ஒரு அப்பாவுக்கு மகனா தான் நடந்துக்கிட்டான். அவன் இடத்துல நீ இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்ப. இது நானா சொல்லலை கொஞ்சம் முன்னாடி நீ சொன்னது தான் என் அப்பாவோட மரியாதையை அடுத்தவர் காலில் போட்டு தான் வாழ்க்கை தொடங்கனும் என்ற அவசியமில்லைனு. இப்போ சொல்லு நீ செஞ்சது சரினா அப்போ அவன் செஞ்சதும் சரி தானே?”
இத்தனை நாட்கள் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை அவள் உணரவே இல்லையே. ‘ அப்படினா மாமா பேர்ல தப்பில்லையா?' மெல்ல அவள் மனம் இலக தொடங்க, மூளை முரண்டு பிடித்தது.
“ அது அன்னக்கி என்ன நடந்துச்சுன்னு தெரியாதனால தானே மாமா அவர் அப்பாக்கு சப்பொர்ட் பண்ணது. அதுக்கு அப்புறம் நடந்தது தெரிய வந்ததும் ஏன் எங்களை தேடி வரவில்லை?”
அத்தனை காலமாக தனிமையில் அவள் அவளிடமே கேட்டு கொள்ளும் அந்த கேள்வியை அவனிடம் கேட்க,
“ உனக்கு தெரியுமா? அவன் உன்னை தேடவில்லைன்னு”
அவனின் பதிலில் அதிர்ந்து போய் பார்த்தாள் கீர்த்தனா.
0 Comments