21. என் உள்ளம் உன் வசம்



அது விக்கி கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்த சமயம், கார்த்திக் – கீர்த்தனா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தது.

மதுரையில் இருந்து ஊருக்கு வந்தவனிடம் அன்று நடந்தவைகளை சாவித்திரி மூலம் தெரிந்து கொண்ட விக்கி கார்த்திக்கு எடுத்து சொல்லி கொண்டிருந்தான்.

உண்மை மனசை சுட, அமைதி வேண்டி தாயை நாட அவரோ அவனை தூர நிறுத்தினார். அவரின் எண்ணம் போல் அவனும் ஒதுங்க தொலைந்த கீர்த்தனாவை தேடினான்.

தனி ஒருவனாய் தொழிலையும் பார்த்து கொண்டு அவளையும் தேடி கொண்டிருந்தான். அவன் சினிமாவில் வரும் ஹீரோவா இல்லை சூப்பர் பவர் கொண்ட காமிக் நாயகனா? விரல் சுண்டும் நேரத்தில் அவளை கண்டு பிடிக்க?

ஆனாலும் பேய் போல் அலைந்தான் அவளை தேடி.

கான்ட்ராக்ட் விசயமாக அவன் பெங்களூர் வந்திருந்தவன், அந்த பெரிய மாலில் இருந்து வெளியே வர எதிரே சாலையின் அந்த பக்கம்,

'அதோ மஞ்சள் நிற சுடிதார் அது ரோஜாவா?' எண்ணி கொண்டே சாலையை கடந்து அதனை தொடர்ந்த மற்றொரு சாலையைக் கடக்க அவனுக்கு யுகம் கழிவது போல் தோன்றியது.

வேக மூச்சோடு அந்த பெண்ணை நெருங்கியவன், அவளின் தோள் பற்றி தன் புறம் திருப்ப அது அவன் ரோஜா இல்லை.

“ சாரி சாரி… நீ… நீங்க. என் ரோஜா இல்லை. ரோஜா இல்லை” என்று கவலை தோய்ந்த குரலில் ஏமாற்றம் தந்த வலியில் கூறி கொண்டே கடந்து வந்த சாலையை பின்னோக்கி கடக்க,

அதுவரை 'எவனோ முன் பின் தெரியாதவன் தன்னை தொட வந்தான்' என்று கோவத்தில் முறைத்து கொண்டிருந்த அந்த பெண் அவனின் செய்கையில் பதறி ,

“ சார்… சார் போகாதீங்க. அய்யோ பைக், லாரி..” அவள் கத்த தொடங்கும் முன்பே எதிரே வந்த லாரி அவனை தூக்கி வீசியது.

தொலைவில் போய் விழுந்தவனை கண்டு சிலையானாள்.

மறு நொடி அவனை நெருங்க, அவளின் கையை அழுத்தமாய் பற்றினான்.

“ரோஜா என்னை விட்டு போய்டாத. ப்ளீஸ்மா.” என்கவே

அவளும் அவன் கையை அழுத்தி கொடுத்து, “சரி சார் போகலை”

“ சார் இல்லைடா மாமா”

“சரி மாமா”

மருத்துவமனையில் அவளிடம் ஒப்படைக்க பட்ட அவனின் பொருட்களில் இருந்து அவன் மொபைலை எடுத்து அவன் கடைசியாக டயல் செய்த எண்ணை அழைத்தாள்.

“ டேய் அண்ணா, படிப்பு தான் முடிஞ்சு போச்சுல, பெட்டு படுக்கையை கெட்டி ஊரு வந்து சேருன்னு.. ஆரம்பிச்சுடாத. இன்னும் நாலு நாள் நான் பெங்களூர் விட்டு வரதா இல்லை.” விக்கி கூறவே,

ஓர் நொடி அமைதியான மறு முனையில் இருந்து அவள் பேசினாள்.

“சார் என் பேர் மித்ரா… உங்க அண்ணாக்கு ஆக்ஸிடென்ட் ஆய்டுச்சு. இங்க பெங்களூர்ல தான். நீங்க உடனே xxxxxxxxx மருத்துவமனைக்கு வர முடியுமா?”

பதட்டமடைந்தவன், “ என்ன? என்ன சொல்லுறீங்க? அய்யோ நான் உடனே வரேன்” என்று போனை வைத்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கூறிய மருத்துவமனையில் இருந்தான்.

வளாகத்திற்கு வந்தவன் மீண்டும் கார்த்திக் எண்ணை தொடர்பு கொண்டு “எந்த தளம்” என்று கேட்க மறுமுனை கூறிய முதல் தளம் ICU -க்கு விரைந்தான்.

“நான் தான் விக்கி.. விக்னேஷ்…போன்ல நீங்க பேசினது என் கிட்டத்தான். அண்ணா இப்போ எப்படி இருக்கான்?” பதட்டம் குறையாமல் அவன் கேட்க,

“தெரியலை. டாடர் கூப்பிட்டு விட்டாங்க. எனக்கு பயமா இருந்தது. அதான் நீங்க வந்ததும் போகலாம்னு இருந்தேன். வாங்க போகலாம்.” அவன் கை பற்றி அழைத்து சென்றாள்.

“ பேசண்ட்க்கு நீங்க என்ன வேணும்?”

“ அவனோட தம்பி டாக்டர். கார்த்திக்கு இப்போ பரவா இல்லை தானே.” கேட்க

“ உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும்..”

முன் சொன்ன பதிலில் அமைதியடைய போனவன், அவர் முடிக்காமல் விட்ட வார்த்தையில் துணுக்குற்றான்.

“என்ன டாக்டர்?”

“ தலையில அடி பட்டதுல மூளைக்கு கீழ பலத்த அடி. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததும் ரொம்ப பெரிய சிவியர் இல்லைனு எடுத்துக்கிட்டாலும் அவர் உயிர் பிழைக்க செய்ய எங்களால 50% முடியும்ன்னாலும் அவரோட ஒத்துழைப்பு 50% வேணும். காயம் குணமாகுற வரை மூளைக்கு அதிக ஸ்ட்ரெய்ன் கொடுக்காம இருந்தா தான் நல்லது.”

“ டாக்டர்” அவன் பதற,

“ ஈஸி சார். குணப்படுத்த முடியாதுன்னு சொல்லலையே. அதே சமயம் பொய்யான வாக்கும் கொடுக்க விரும்பலை. நாங்க எங்க கடமைய செஞ்சுட்டு தான் இருக்கோம். நீங்களும் அது கூட உதவுங்கன்னு தான் சொல்றேன். அப்புறம் அவருக்கு கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவும் இருக்கா?”

“ முன்பெல்லாம் இல்லை சார். இப்போ தான் கொஞ்சம் நாளாக” மனம் கூச தலை கவிழ்ந்தான்.

“ இனி தொட கூட அனுமதிக்காதீங்க. ஏன்னா? போதை நம்ம உடலில் போய் கலந்து கெட்ட நினைவுகளை எடுத்து காட்டும். அது கூட ஆபத்து தான்”

மருத்துவரின் அறையில் இருந்து வெளியே வந்த விக்கி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து முகத்தை கைகளால் மூடி கொண்டான்.

அவனின் தோளை மித்ரா அழுத்தி ஆறுதல் கூற அவளின் இடையை அணைத்தான்.

சிறு குழந்தை போல் கேவி கொண்டிருந்தவன் முதுகை வருடிக் கொண்டே,

“ விக்கி பயப்படாதீங்க… உங்க அண்ணாவுக்கு எதும் ஆகாது. அவர் சீக்கிரமே குணமாகி வருவார். நீங்களே பாருங்க” என்று ஆறுதல் கூறினாள்.

“ இல்லை மிது, நான் தப்பு பண்ணிட்டேன். கீர்த்து அவனை விட்டு போனதும், நான் எப்பாடு பட்டாவது அவங்களை சேர்த்து வச்சிருக்கனும். தப்பு பண்ணிட்டேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது. இத்தனை நாட்கள்ள ஒரு நாளாச்சு நான் இவன் கிட்ட எப்படி இருக்க? என்று ஒரு வார்தையாவது கேட்டு இருப்பேனா? நான் பாவி”

தலையில் அடித்து கொண்டு அழுபவனை சமாளிக்க அவளுக்கு நீண்ட நேரம் ஆகியது.

தன் வீட்டிற்கு போன் செய்து இங்குள்ள நிலையை எடுத்து கூறி தாய் வள்ளியை உடனுக்கு அழைத்தாள். அவரும் வந்து தன் பங்கிற்கு அவனை தேற்றி கார்த்திக்கை நல்ல முறையில் கவனித்து கொண்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வள்ளி தங்கள் வீட்டிற்கே அழைத்து சென்றார். கார்த்திக் மெல்ல தேறி வந்த சமயம் விக்கி அவனிடம்,

“ கார்த்திக் உன்னால எனக்கு ஒரு உதவி ஆகணும்”

“என்னதுடா?”

“ நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரணும்”

“ சத்தியமா? எதுக்கு?”

“ செய்வியா மாட்டியா?” அழுத்த குரலில் கேட்க

“ சரி சத்தியம்.. இப்போ சொல்லு என்னது?”

“நீ உன் வாழ்க்கையில் இருந்து ரோஜா என்ற பக்கத்தை மறக்கணும்” என்று கூற

“ டேய்” என்று பதறியவன் தன் பின் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்.

“ கோவிக்காத கார்த்திக். நிரந்தரமாக இல்லை. கொஞ்ச நாள் ரோஜா என்ற பெண் உன் வாழ்வில் இல்லைனு நினைச்சு கிட்டு உன் வேலையை பார். மத்த கவலைகள் எதுக்கும் முக்கியத்துவம் கொடுக்காத. உன் வாழ்க்கையை சரி செய்ய வேண்டியது என் கடமை. ஆனா அதுக்கு பரிசா எனக்கு என் அண்ணனை முழுதும் குணமானவனாய் திருப்பி கொடு அது போதும்” கண்கள் சிந்திய நீரை துடைத்து கொண்டு அவன் கேட்க கார்த்திக் மறுக்க முடியாமல் போனது.

அவனுக்கு கொடுத்த சத்தியதிற்காக ரோஜாவை தவிர்த்தான் கார்த்திக். அவளை சந்திந்த முதல் நாளும் விக்கியிடம் அதை பற்றி தான் சண்டையிட்டு கொண்டிருந்தான்.

என்ன தான் அவளை பார்க்காமல் தவிர்த்து வந்தாலும்… அவள் நேரில் வந்த நாளில் இருந்து அவளை நெருங்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அவன் தான் திண்டாடி போனான்.

கீர்த்தனாவின் பாடலில் தன்னை இழந்தவன், என்ன நடந்தாலும் இனி அவளை இழப்பதாய் இல்லை என்ற உறுதியோடு, அவளை நெருங்கும் வேளையில், கீர்த்தனா உதிர்த்த வார்த்தை அவனை உயிர் வாழ விரும்பாமல் செய்தது.

நினைவுகளை விட்டு வெளியே வந்தவன், தன் பின் தலையை ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டு,

‘ பேசாம அன்னைக்கே என் உயிர் போய் இருக்கலாம் ' என்று எண்ணி கண்ணீர் சிந்தினான்.

அதே நேரம், விக்கியின் முன் தன் முகம் மூடி விடாமல் விழிநீர் சிந்தி கொண்டிருந்தாள் கீர்த்தனா.


Post a Comment

0 Comments