22. என் உள்ளம் உன் வசம்



கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவன் மேல் பூக்குவியலாய் வந்து விழுந்த கீர்த்தனாவின் இடையை அனிச்சையாக தாங்கி கொண்டது கார்த்திக்கின் வலிய கரம்.

அழுகையில் குலுங்கி கொண்டிருந்தவள் முகம் நிமிர்த்தி,

“ ஏய், ரோஜா என்னமா? என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“ மாமா, என்னை மன்னிச்சிடு மாமா… மன்னிச்சிடு…”

“ ஏன்டா நீ என்ன தப்பு செஞ்ச மன்னிக்குற அளவுக்கு?” தன்மையாக கூறினான்.

அவனுக்கு தன் ரோஜா நொடியில் மீண்டு வந்து விட்டாள் என்று நிம்மதி.

“ இல்லை மாமா, நான் தப்பு பண்ணிட்டேன் அதனாலே என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் சொல்லு” குழந்தை போல் கூறி கொண்டே இருந்தாள்.

“சரி மன்னிச்சிட்டேன் போதுமா? அழாதே ”

“இல்லை உண்மையா உன் மனசால மன்னிச்சுட்டேன்னு சொல்லு… அப்போ தான் அழமாட்டேன்.”

“ அட கடவுளே, மன்னிச்சுட்டேன்றத மன்னிச்சுட்டேன்னு தான சொல்ல முடியும். வேற எப்படி சொல்ல? வேணும்னா இப்படி சொல்லவா?”

குனிந்து அவள் இதழில் மென்மையான முத்ததை வைத்தான்.

“ இப்போவாச்சும் நான் மன்னிச்சத ஒத்துக்குவியா இல்லை இன்னும் மன்னிக்கணுமா?” கண்ணடித்து கேட்டான்.

சிவந்த முகத்தை மறைக்க நிலம் பார்த்தாள்.

“ சரி, அப்போ நானும் தப்பு பண்ணிருக்கேனே.. நீயும் என்ன மன்னிக்கணும் தானே. அது தானே நியாயம்” அழகாய் நியாயம் பேசி அவள் முன் தன் முகத்தை காட்டினான்.

அவன் நியாயம் பேசிய அழகில் சிரித்தவள், குனிந்த அவன் தலையில் கொட்டினாலும் அவனை மன்னிக்கவும் மறக்கவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு விக்கியின் அறையில்:

முகம் மூடி அழுதவள் முன் கையை விலக்கிய விக்கி, “ அழாத கீர்த்து” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

இருக்கையை விட்டு எழுந்தவள் அவன் சட்டையை பற்றி அவன் கன்னத்தில் மாறி மாறி ' பளார் பளார் ' என்று அறைந்தாள்.

“ எரும மாடு, நாயே… மாமாக்கு ஆக்ஸிடென்ட் ஆன விசயத்தை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? அவ்வளோ பெரிய மனுசனா ஆயிட்டியா நீ? நீ யாருடா என் மாமாவை என்னை மறக்க சொல்லுறதுக்கு? உனக்கு என்ன உரிமை இருக்கு எங்க ரெண்டு பேரையும் பிரிக்க? நல்ல கேட்டுக்கோ, என் மாமா வாழ்க்கையில ரோஜான்றது வெறும் நினைவு இல்லை அதை மறக்க. நான் தான் அவரோட வாழ்கையே. என்ன மறக்க சொன்னினா அது அவர சாகடிக்குறதுக்கு சமம். அய்யோ மாமா…. விக்கி நான் மாமாவை பாக்கணும்..” கோபமாய் தொடங்கி அழுது கொண்டே அவன் மேல் சாய்ந்தாள்.

அடி வாங்கியவனோ அமைதியாய் அவளை தட்டி கொடுத்து கொண்டே சங்கரை அழைத்து அவனுடன் அனுப்பினான்.

அதன் பின் நடந்தவை தான் முன் சொன்னவை.

சோபாவில் அமர்ந்து இருந்தவன் கண்ணிமைக்காது தன்னவளையே பார்த்திருந்தான். நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று கதை பேசி கொண்டன.

அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள் கீர்த்தனா.

' இது.. இது தான் என்னவள். என் ஒரு பார்வையை கூட தாங்க முடியாமல் முகம் சிவக்கிறாள். இதனை நாளும் தன் இந்த முகத்தை ஒரு திரையின் பின் ஒளித்து வைத்து இருந்தாள்.'

அக்கணம் ஆண் மகனாக அவன் மனம் பெருமை கொண்டது.

“ரோஜா”

“ ம்ம்ம்” தலையை நிமிர்த்தி அவனை பார்க்க,

இரு கை நீட்டி அவளை அழைத்தான். அவளும் அவனோடு ஒன்றினாள்.

மாலையில் விக்கி அலுவலகம் முடிந்து வர அவனை புன்னகை முகமாய் வரவேற்றாள் கீர்த்தனா.

அவனை அழைத்து அமர வைத்து அவனைக்கு டீ போட சமையலறைக்கு சென்றாள். அவளையே கார்த்திக்கின் பார்வை பின் தொடர்ந்தது.

' இப்படி ஓர் நிகழ்வை காணத்தானே விரும்பினேன் ' என்று அவன் மனம் குளிர்ந்தான்.

நேரம் இரவை தொட, கார்த்திக்கை பிரிய வேண்டும் என்று கீர்த்தனாவின் மனம் சுணங்கியது.

அதை கண்டு கொண்டானோ என்னவோ? விக்கியிடம்,

“ எங்கேயாவது வெளிய போய்ட்டு வருவோமா?” எனக் கேட்க

கீர்த்தனாவின் கண்கள் மின்னியது.

“ஓ, போலாமே. ஆனா இப்படி பனியன் லுங்கியோடு போக முடியாது. அதனால் ரெடி ஆகி வா. நான் பார்க்கிங்ல வெய்ட் பண்றேன். கீர்த்து இவன கூட்டிட்டு வா “ என்று நகர்ந்தான்.

பத்து நிமிடத்தில் தயாராகி இருவரும் வர விக்கியை கார் ஓட்ட சொல்லி கார்த்திக் சொல்ல அவனோ, “ அய்யோ நான் ரொம்ப பிஸிப்பா” என்று கையில் மொபைலோடு பின் இருக்கையில் சாய்ந்தான்.

கீர்த்தனா அவனை முறைக்கவே,

“ ஏய் என்ன? நீ வேணும்னா அவன் பக்கத்துல உக்காந்து ஜாலியா கதை பேசிட்டு வா. எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை” பெரிய மனிதன் போல் விட்டு கொடுத்தான்.

அவனை முறைத்து கொண்டே கார்த்திக்கோடு முன்னே அமர்ந்தாள்.

“ அப்படி என்ன தான்டா பண்ணுற? ரொம்ப நேரமா அதுக்குள்ளே தலையை விட்டுட்டு இருக்க?”

ஒரு வார்த்தை கூட பேசாமல் மொபைலில் மித்ராவிற்கு தாங்கள் செல்லும் ஹோட்டல் முகவரியை தந்து கொண்டிருந்தான் விக்கி.

பொறுமையிழந்து கீர்த்தனா கேட்க,

“ ஏய் குட்டி பிசாசு, நீ உன் ஆள் கூட ரொமான்ஸ் பண்றத பத்தி நான் ஒரு வார்த்தை சொன்னேனா? நீ எதுக்கு என் கிட்ட வாய் கொடுக்குற. நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு. நான் என் வேலையை பாக்குறேன்” என்று செல்லில் கண் திருப்பினான்.

“ டேய் காண்டா மிருகம் யார பார்த்து குட்டி பிசாசுன்னு சொன்ன…உன்னை….” அவனோடு சண்டைக்கு போனவள் திரும்பி கார்த்திக்கிடம் புகார் செய்தாள்.

“பாரு மாமா இவனை” பல்லை கடித்துக்கொண்டு விக்கியை முறைத்தாள்.

கார்த்திக்கோ தலைக்கு மேல் கையுயர்த்தி, “ உன் பாடு அவன் பாடு” என்று கை விரித்தான்.

பேச்சும் சிரிப்புமாக ஹோட்டலை அடைந்தனர்.

“ எக்ஸ்கியூஸ் மீ.. நானும் உங்க கூட ஜாய்ன் பண்ணிக்கலாமா ?” என்ற குரலில் மூவரும் திரும்ப மித்ரா நின்று கொண்டிருந்தாள்.

“ வா மிது, உனக்கு இல்லாத இடமா ?” என்று அவன் நெஞ்சில் கை வைத்து விக்கி சொல்ல,

கீர்த்தனாவுக்கு பல்ப் எறிந்தது.

‘ விக்கியும் மித்துவும் முன்னமே பழக்கம் என்பது அவள் அறிவாள். ஆனால் இன்று அவள் காண்பது?'

“ ஏய் மித்து, அப்போ உன்னோட ஆள் இந்த விக்கி பய தானா? நான் கூட நீ கொடுத்த பில்டப்ல எதோ சினிமா ஹீரோ மாதிரில கற்பனை பண்ணேன். கடைசில போயும் போயும் இவன் தானா!!! ப்பு…” நக்கலாய் கூறினாள்.

“ மை இமேஜ் டோட்டல் டேமேஜ்… டேய், கார்த்திக் இதை எல்லாம் நீ என்னனு கேக்க மாட்டியா?” விக்கி கூறவும் தலைக்கு மேல் கையை தூக்கினான்.

“ எப்பா பர தேவா… ஆரம்பிச்சுடாத… உன் பாடு என் பாடுன்னு… உன்னை போய் கேட்டேன் பாரு என்னை சொல்லணும்” என்று இரு கன்னத்திலும் மாறி மாறி போட்டு கொண்டான்.

அவன் செய்கையில் சிரித்த கார்த்திக் மித்ரா பக்கம் திரும்பி,

“எப்படி இருக்க மித்ரா?” என கேட்க,

“ மாமா உங்களுக்கு மித்துவ முன்னாடியே தெரியுமா ?” என்று சந்தேகம் கேட்டாள்.

மித்ரா தான் நடந்தவற்றை விளக்க, ஓடி போய் அவளை கட்டி கொண்ட கீர்த்தனா,

“ மித்து நீ எனக்கு என் உயிரையே திருப்பி கொடுத்திருக்க. உனக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்.” கலங்கிய விழிகளோடு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

கனமான அந்த நிலையை கலைக்க எண்ணிய மித்ரா,

“ அய்யோ போதும் கீர்த்து.. அங்க பாரு நீ எனக்கு முத்தம் கொடுக்குறத பார்த்து உன் ஆள் முகமே தொங்கி போச்சு.” என்று கன்னத்தை தடவி கொண்டே கூறவும் மூவரின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது.

அதன் பின் பேச்சும் சிரிப்புமாய் உணவை ஆர்டர் செய்து உண்டனர். அப்போது தான் விக்கியின் கண் ஜாடையில் மித்ரா அந்த கேள்வியை கேட்டாள்.

“ ஏன் கார்த்திக் – கீர்த்தனா அதான் உங்களுக்குள்ள எல்லாம் சரியாயிட்டே. எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க? நம்ம நாலு பேரோட கல்யாணமும் ஒரே மேடைல நடக்கணும்னு நான் ஆசை படுறேன். நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று.

அதிர்ந்து போய் பார்த்தனர் இருவரும்.

' மித்ரா கேட்கும் வரைக்கும் திருமணம் என்ற ஒன்றை அவள் யோசிக்க கூட இல்லையே. அவள் நினைவெல்லாம் எங்கள் காதல் கை கூடியது என்பது மட்டும் தானே. என்ன தான் நானும் கார்த்திக்கும் சேர்ந்துட்டாலும், கல்யாணம்… அது நாங்க ரெண்டு பேர் மட்டும் சம்பந்த பட்ட விசயம் இல்லையே. இரு குடும்பமும் மனக்கசப்பு கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் ஓர் பிரிவை தாங்க முடியுமா?' சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் மித்ராவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எழுந்து கை கழுவ சென்றாள்.

அவள் சென்ற பின் மித்ராவின் பக்கம் திரும்பிய கார்த்திக்,

“ சாரி மித்ரா, அவ கொஞ்சம் அப்செட் ஆயிட்டா போல. அதான் பதில் சொல்லாம போயிட்டா. நீங்க ரெண்டு பேரும் நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள எல்லாமே சரி ஆயிட்டு. ஆனாலும் இன்னும் முழுசா சரி ஆகிட்டான்னு கேட்டா இரு குடும்பத்தையும் மனசுல வச்சுகிட்டு இல்லைன்னு தான் சொல்வேன். ஆனால் இதனால உங்க லைஃப்க்கு எந்த இடைஞ்சலும் வராது. நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.” விளக்கமாக எடுத்து கூறினான்.

“ டேய் விளங்காதவனே உன் பேச்சை கேட்டு கேள்வி கேட்டேன்ல என்னை சொல்லணும். இப்போ பாரு கார்த்திக் நம்மளை தப்பா நினைச்சுக்கிட்டார்.” விக்கியின் காதில் கடித்து விட்டு அவசரமாய் கார்த்திக்கு பதில் கூறினாள்.

“ அய்யோ கார்த்திக் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நான் எந்த சுயநலத்தோடும் சொல்லலை. இனிமேலும் எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பதற்காக தான் சொன்னேன்”

அதற்குள் கீர்த்தனா வரவே சிறிது நேரத்தில் கீர்த்தனா மித்ராவையும் அவர்கள் வீட்டில் விக்கி கொண்டு விட்டு விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.


Post a Comment

0 Comments