23. என் உள்ளம் உன் வசம்



அன்று வியாழக்கிழமை.

உடல்நிலை தேறி கார்த்திக் வரவிருந்தான். அதனால் கலகலப்பாக நடமாடி கொண்டிருந்தாள் கீர்த்தனா.

இரண்டு நாளாய் தேஜஸ்ஸோடு வலம் வந்தவளை கண்ட ப்ரியாவுக்கு இன்றைய அவளின் கூடுதல் முக பொலிவு மன அமைதியை கொடுக்க அது தந்த சுகத்தில் கீர்த்தனாவை கேலி செய்தாள்.

“ என்ன மேடம்? முகத்துல தௌசன் வாட்ஸ் பல்ப் எரியுது?” என்று.

அவளின் கேலியில் முகம் சிவந்தாள் கீர்த்தனா.

“ அய்யோ லேடி ஹிட்லர்க்கு வெட்க படக்கூட தெரியுதே!!” கன்னத்தில் கை வைத்து ஆச்சர்ய பட்டாள்.

அதற்குள் கார்த்திக் வர அவனின் பின்னோடு அறைக்குள் நுழைந்தாள்.

அன்றைய நாள் அவர்களுக்கு கொஞ்சல்களோடு நகர்ந்தது.

மதிய உணவு நேரம் போது, கார்த்திக்கை சாப்பிட கீர்த்தனா அழைக்க அவனோ, “ கொஞ்சம் வேலை இருக்கு ரோஜா… முடிச்சுட்டு சாப்படுறேன். நீ போய் சாப்பிட்டு வா” அவளை அனுப்ப பார்த்தான்.

உருட்டி மிரட்டி அவனை உண்ண வைத்த பின்பே தான் உணவருந்த சென்றாள்.

மாலை அலுவலகம் முடிந்து எல்லோரும் கிளம்ப, கார்த்திக்கின் அருகில் வந்தாள் கீர்த்தனா.

“ மாமா”

“ ம்ம்ம்” பைலை விட்டு பார்வையை விலக்காமல் கேட்டான்.

“ மாமா” மீண்டும் அழுத்தி அழைக்கவே, நிமிர்ந்து அவளை பார்த்தான். கையை பிசைந்த வண்ணம் தயங்கிய படியே நின்று கொண்டிருந்தாள்.

கண்களால் அவளை அழைத்து மடியில் இருத்தி கொண்டான்.

“ சொல்லு ரோஜா”

“ வந்து… கோவிலுக்கு போகணும்”

“ சரி போய்ட்டு வா” அசால்ட்டாக அனுமதி அளித்தவனை முறைத்தாள்.

“ அது எனக்கு தெரியாதா? நீயும் வான்னு சொன்னேன்”

“ ரொம்ப வொர்க் இருக்கு ரோஜா..இன்னக்கி நீ மட்டும் போய்ட்டு வா. நாம இன்னொரு நாள் சேர்ந்து போகலாம்”

அவள் எவ்வளவு முயன்றும் அவன் வர மறுக்க… உதட்டை சுழித்து அவனிடம் பலிப்பு காட்டி விட்டு சென்றாள்.

அறையை விட்டு வெளியே வந்த கீர்த்தனாவை எதிர் கொண்ட விக்கி,

“ வா கீர்த்து கோவிலுக்கு தானே போற. நான் கூட வரேன்” என்றான்.

அவள் எப்படி தெரியும் என்று கேட்கவில்லை. காலையில் மித்ராவிடம் சொல்லி வந்தது தான் விக்கியின் காதுக்கு வந்திருப்பது.

அதனால் பதில் எதும் பேசாமல் அவனோடு சென்றாள்.

“ டேய் என்னடா இங்க கூட்டி வந்திருக்க? இது நான் வழக்கமாக வரும் இடம் இல்லையே” என்றவளுக்கு.

“ எப்போவும் ஒரே கோவிலுக்கு தான் போகணுமா? ஒரு சேஞ்சுக்கு இங்க வந்தேன். சரி வா” அவளை உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே சென்றவளின் பார்வை சந்தோசத்தில் விரிந்தது.

அது வழக்கமாக சாவித்திரி செல்லும் கோவில். இன்றும் அவர் வந்திருந்தார்.

சோகம் வழியும் விழியோடு…

“ அத்தை” என்று ஓடி போய் அவர் முன் நின்றாள் கீர்த்தனா.

திக்கை வெறித்தவரின் பார்வை கீர்த்தனாவின் மேல் பட்டு அந்த நொடியில் உயிர் கொண்டது.

“ அம்மாடி” அவளை கட்டி கொண்டவர் கண்களில் நீர் வந்த வண்ணம் இருக்க… அதை கீர்த்தனா தான் தட்டி விட்டாள்.

“ போடி, என் கூட பேசாத. உனக்கு இந்த அத்தையை பார்க்க இவ்வளோ நாள் ஆச்சுதா? கார்த்திக் தான் வேணாம்ன்னா நானும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா?” முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டார்.

“ அய்யோ அத்தை அப்படிலாம் இல்லை. மேலே படிச்சுட்டு இருந்ததால உங்களை பார்க்க முடியலை” அவள் சமாதானமாக கூறினாலும். உண்மை அது இல்லையே.

நெடு நேரம் சாவித்திரியால் கோபம் கொள்ள முடிய வில்லை. அவரே கீர்த்தனாவின் கன்னங்கள் பற்றி மாறி மாறி முத்தம் வைத்த வண்ணம் இருந்தார்.

அவரின் போன உயிர் மீண்டதை போன்று.

தன் தாயின் விழியில் தெரிந்த உயிர்ப்பில் கண் கலங்க அவரையே பார்த்திருந்தான் விக்கி.

அவனை கண்ட கீர்த்தனாவிற்குள் கோபம் வந்து குடி கொண்டது.

“போங்க அத்தை நான் உங்க மேல கோவமா இருக்கேன்”

“ ஏன் அம்மாடி?”

“ பின்ன என்ன அத்தை மாமாவை எப்படி நீங்க தனியா போக அனுமதிக்கலாம்?”

' நல்ல பொண்ணு… இவளுக்காக நான் அவன் கூட சண்டை போட்டா. இவ அவனுக்கு ஏத்துகிட்டு என் கூட சண்டைக்கு வராளே!!' என்று எண்ணி சிரித்து கொண்டவர்,

“ செய்த தப்புக்கு தண்டனை வேணாம். அதான்…”

“ என்ன?”

“ ஆமா அம்மாடி, கையில கிடைச்ச நல்ல வாழ்க்கையை தெரிஞ்சே தொலைச்சானே… அந்த தப்புக்கு தண்டனை கொடுக்கணுமா இல்லையா?”

“ அத்தை” என்றவளின் கண்கள் கலங்கியது.

தனக்காக தான் பெற்ற பிள்ளையை ஒதுக்கினார் என்று நினைக்கும் போது அந்த தாயின் மேல் தன் மேல் அவர் கொண்ட நேசத்தின் மேல் பாசம் பொங்கியது இவளுக்கு.

“ அவரை பார்க்கணும்னு தோணவே இல்லையா அத்தை.”

“ பாக்காம இருந்தா தானேமா”

“ என்ன அத்தை சொல்லுறீங்க?”

“ ஹா ஹா, திருடன் என்னை பாக்கனும்னு தூரமா நின்னு பார்த்துட்டு போவான். அப்போ நானும் பாத்துக்குறது தான்”

“ உங்களுக்கு தெரியுமா? அத்தை”

“ நான் அவனை பெத்தவமா… எனக்கு தெரியாதா அவனைப் பத்தி?”

“ தெரியாது அத்தை. உங்களுக்கு மாமா பத்தி முழுசா தெரியாது.”

“ என்ன அம்மாடி சொல்லுற?”

“ ஆமா அத்தை, என்னை பிரிஞ்ச வருத்தமும்.. நீங்க ஒதுக்கிய வருத்தமும் மாமாவ எங்க கொண்டு போய் விட பாத்துச்சு தெரியுமா?. ஒரே நேரத்துல மாமா விரும்புற நாம ரெண்டு பேருமே அவங்க பக்கத்துல இல்லைன்னு ஆனதும் … கடவுளே…”

காதை பொத்தி அழ தொடங்கியவளை தோள் அணைத்து அமைதி படுத்தினான் விக்கி.

“ என்னடாமா சொல்லுற?” முழு பதட்டத்தோடு அவர் கேட்க,

அழுது கொண்டே அனைத்தையும் கூறினாள். இவள் சொன்ன செய்தியை கேட்ட தாயின் உடல் அதிர்ச்சியில் உறைந்தது.

“ கார்த்திக்…” அதிர்ந்து போய் கத்தி அழ தொடங்கி விட்டார்.

“ அத்தை, அழாதீங்க… நேத்து தான் டாக்டர் கிட்ட செக் அப் கூட்டிட்டு போனேன். பயப்படும் படி ஒன்னும் இல்லை… இதே மனநிலையோடு ஒரு மாதம் இருந்தா… முழுதும் குணமாகிடும்னு சொல்லிட்டாங்க. நாமளும் நம்புவோம் மாமா குணமாகிடுவார்ன்னு” (நாமும் நம்புவோம்)

“ அம்மாடி சரியான நேரத்துல அந்த கடவுள் உன்னை இங்க வர வச்சிருக்கான். இல்லைனா. என் பிள்ளை நிலைமை?”

“ அதுக்கு நீங்க விக்கிக்கு தான் நன்றி சொல்லணும்” எனவும்,

“ யாருக்கு இவனுக்கா? என் கிட்ட இருந்து எவ்வளோ பெரிய விசயத்தை மறைச்சு இருக்கான்… இவன அவ்வளோ சீக்கிரம் மன்னிகுறதா இல்லை. இவனுக்கு சரியான பனிஷ்மெண்ட் இருக்கு” அவனை முறைத்து கொண்டே கூறினார்.

“ ஆமா அத்தை.. கார்த்திக்கை சரியான நேரத்தில் காப்பாத்துன அந்த மித்ராவையே… இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம். அது தான் இவனுக்கு சரியான பனிஷ்மெண்ட்.” என்கவும் அவனை விழி விரித்து பார்த்தார்.

“ டேய் சின்னவனே அவ்ளோ பெரிய மனுசனா ஆயிட்ட போல அம்மாக்கு தெரியாம நிறைய பண்ணிருக்க!!”

“ அடியே மாமன் மகளே வந்த வேலை முடிஞ்சதுல.. இப்போ உனக்கு திருப்தியா? நல்லா இருடி” அவளை கையெடுத்து கும்பிட்டு விட்டு தலைக்கு மேல் கை வைத்து ஆசிர்வாதம் பண்ணினான்.

அதன் பின் உள்ளே சென்று கடவுளை தரிசித்து விட்டு சிறிது நேரம் அங்கே அமர்ந்து விட்டு வெளியே வந்தனர்.

விடை பெற போன கீர்த்தனாவோடு சேர்த்து சாவித்திரியும் இணைந்து கொண்டு அவள் வீடு சென்றார்.

சாவித்திரியை போட்டோவில் பார்த்திருந்த படியால் மித்ரா அவரை இன் முகத்தோட வரவேற்றாள்.

கீர்த்தனா, சாவித்திரியின் காதில் ஏதோ முணுமுணுக்க அவர் மித்ராவின் கையை பற்றி கொண்டார்.

“ ரொம்ப தேங்க்ஸ்மா, நீ மட்டும் அங்க இல்லாம போயிருந்தா?!!!.” அவர் உடல் ஒரு முறை அதிர்ந்து குலுங்கியது.

“ நீ கார்த்திக்கை மட்டும் இல்லைமா எங்க குடும்பத்தையே காப்பாத்தி இருக்க. உனக்கு நான் ரொம்பவே கடமை பட்டிருக்கேன்.”

“ அய்யோ என்ன ஆண்டி இது சின்ன குழந்தை மாறி அழுதுகிட்டு?, நான் ஒரு மனுசியா என் கடமையை தான் செஞ்சேன். என் இடத்தில வேற யார் இருந்தாலும் இதை தான் செஞ்சி இருப்பாங்க”

“ இல்லமா, உனக்கு தெரியாது. நீ கார்த்திக் உயிர மட்டும் இல்லை. எங்க ரெண்டு குடும்பத்தோட உயிரையும் காப்பாத்தி இருக்க. கார்த்திக் இல்லைனா இவளும் இல்லை. நானும் இல்லை. நாங்க இல்லைனா எங்க குடும்பமும் இல்லை. எந்த ஜென்மத்தில் நான் செஞ்ச புண்ணியமோ நீ எனக்கு மருமகளா கிடைச்சிருக்க…” தன் சம்மதத்தை கோடிட்டு காட்டி விட்டார் சாவித்திரி.

“ தேங்க்ஸ் ஆண்டி”

“ அழகா அத்தைன்னு கூப்பிடுமா” என கூற

கலங்கிய கண்ணீரை துடைத்து கொண்டே “ சரி அத்தை” என்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றாள்.

தந்தை இறந்த பின்பு தந்தை இல்லாத குறையை தாய் பார்த்துக் கொண்டார். அவரின் மறைவுக்குப் பின் தனக்கென்று யாருமில்லையே!!! என்று வருத்தம் இல்லாதவாறு விக்கி பார்த்துக் கொண்டான்.

ஆனாலும் அவன் இல்லாத சில தனிமைகளில் அவள் மனம் உறவுகளுக்கு ஏங்கத் தொடங்கியது. அந்த ஏக்கத்தை போக்க வந்தது போல கீர்த்தனாவும் அவள் பெற்றோர்களும் தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மனம் பூரித்தது.

இன்று தன் அத்தையின் வாயால் இப்படி ஒரு வார்த்தை கேட்க அவளுக்கு சந்தோசத்தில் கண்கள் கரித்தது என்றே சொல்லலாம்.


Post a Comment

0 Comments